Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

வேங்கடம் முதல் குமரி வரை 3
குன்றக்குடி அடிகளார்


 



வேங்கடம் முதல் குமரி வரை

(பாகம் - 3)

– காவிரிக் கரையிலே –

கலைமாமணி

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

கலைஞன் பதிப்பகம்

10 கண்ணதாசன் சாலை

தியாகராய நகர்

சென்னை - 600017



RS. 95.00

VENKATAM MUTHAL KUMARI VARAI Part - 3

by

Τho. Μu. ΒΑSΑΚΑRΑ ΤΟΝDΑΙΜΑΝ

First Edition : 1961

Second Edition : 2001

Published by

KALAIGNAAN PATHIPAGAM

10 Kannadhasan Salai

T. Nagar, Chennai - 600 017

Typeset by : Vignesh Laser

⁠⁠Chennai- 5.

Printed at: Sakthi Printers

⁠⁠Chennai - 600 021.

முன்னுரை

“வேங்கடம் முதல் குமரிவரை” என்ற தொடரின் மூன்றாவது புத்தகம் இது. 'பாலாற்றின் மருங்கிலே' என்ற முதல் புத்தகத்தையும், 'பொன்னியின் மடியிலே' என்ற இரண்டாவது புத்தகத்தையும் தமிழ் அன்பர்கள் ஆவலோடு வரவேற்று ஆதரித்தனர். அது காரணமாகவே இந்த மூன்றாவது புத்தகத்தைக் 'காவிரிக் கரையிலே' என்ற தலைப்போடு வெளியிட முற்படுகிறேன் நான்.

தமிழ் நாட்டில் கோயில்கள் பல இடங்களிலும் பரந்து கிடந்தாலும், காவிரியின் இருகரையிலும் தான் அவை அதிகமாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன என்பதை அன்பர்கள் அறிவார்கள். இந்த மூன்றாவது புத்தகத்தில் கும்பகோணத்திலிருந்து தல யாத்திரை துவங்குகிறது. தெற்கே திருப்பெருந்துறைவரை சென்று மேற்கு நோக்கித் திரும்பி, கொங்குநாட்டுத் தலங்களுக்கு எல்லாம் சென்று கோவையை அடுத்த போரூரில் தலயாத்திரை நிறைவுறுகிறது. அடுத்த நான்காவது புத்தகம் பழநியில் துவங்கி பாண்டி நாட்டுத் தலங்கள் வழியாக, கன்னியாகுமாரியில் நிறைவுறும்.

கட்டுரைகள் தொடர்ந்து கல்கியில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் பாராட்டி எழுதும் அன்பர் பலர். குறை கூறுவாரும் இல்லாமல் இல்லை. அதிலும் ஒன்றிரண்டு ஸ்ரீ வைணவர்கள், நான் சைவத்தையே உயர்த்திப் பேசுகிறேன் என்றும் வைணவத்தைத் தாழ்த்துகிறேன் என்றுகூடக் கருதுகிறார்கள். நான் சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்ற வேறுபாடுகளை எல்லாம் பாராட்டாதவன். எம்மதமும் சம்மதமே என்ற கொள்கையுடையவன். கலைகளைக் கொண்டே கடவுளரை எல்லாம் கண்டு களிப்பவன். ஆதலால் இந்த ஆதாரமற்ற புகாருக்கு எல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை.

சமீபத்தில் டில்லியில் இருந்து தென்னாடு வந்திருந்த தமிழ் அன்பர் ஒருவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதி வந்து திரும்பியிருக்கிறார். அவர் டெல்லி திரும்பியபின் கல்கியில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலைப் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. அதனைப் படித்துவிட்டு 'அடடா! இக்கட்டுரை முன்னரே வராமல் போய்விட்டதே! கட்டுரையைப் படித்தபின், அக்கோயிலில் பார்க்க வேண்டியவை என்ன என்னவோ இருக்கிறதே! அத்தனையையும் பாராமல் அல்லவா திரும்பிவிட்டோம்' என்று ஆதங்கத்தோடு கடிதம் எழுதியிருக்கிறார். உண்மைதான். கட்டுரைகள் அடங்கிய புத்தகத்தை வைத்துக்கொண்டு சென்றிருந்தால் பார்க்கவேண்டியவைகளை எல்லாம் பார்த்து அனுபவித்திருப்பார். இப்போது தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது; ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, அந்த மாதத்தில் வெளிவந்த நான்கைந்து கோயில்களையும் பார்த்து வருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டு தலயாத்திரை துவங்குகிறார்கள் இவர்கள். இவர்களுக்கு எல்லாம் இப்புத்தகம் மிக உதவியாக இருக்கும் அல்லவா!

இந்த மூன்றாம் தொகுதிக்கு, ஒரு நல்ல முன்னுரையை, கலைமகள் ஆசிரியர், நண்பர் திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. சில மாதங்களுக்கு முன் அவர்கள் என்னிடம், உன் கட்டுரைகளை யார் யார் எல்லாம், படிக்கிறார்கள் தெரியுமா? காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரிய சுவாமிகள் ஒழுங்காய்ப் படிக்கிறார்கள்; பாராட்டுகிறார்கள் என்றார். இதைக்கேட்டு நான் அப்படியே மூர்ச்சித்துவிட்டேன். நாட்டில் ஆஸ்திகத்தை வளர்க்கவும் சமய அறிவைப் பரப்பவும் குருமூர்த்தியாக எழுந்தருளிய ஆச்சார்ய சுவாமிகளே படிக்கிறார்கள் என்றால் அதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு. இந்தப் புத்தகத்தை ஜகத்குரு ஆச்சார்ய சுவாமி அவர்களுக்கே சமர்ப்பித்து அதனால் மகிழ்ச்சி அடைகிறேன்.

புத்தகம் வெளியிடுவதில் ஆர்வம் காட்டிய அன்பர்கள், புத்தகத்தை அழகாக அச்சிட்டுக் கொடுத்த பிரசுரகர்த்தர்கள், எல்லாவற்றிக்கும் மேலாக இக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தக உருவாய் வெளியிட அனுமதி தந்த கல்கி ஆசிரியர் எல்லோருக்கும் என் அன்பும் நன்றியும்.

இத்தொகுதியின் வெளியீட்டைப் பெரிய விழாவாகவே நடத்தத் திட்டமிட்டுள்ள கோவை நன்னெறிக் கழகத்தாருக்கும் என் நன்றியும் வணக்கமும்.

சித்ரகூடம்

திருநெல்வேலி

17-9-61 தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்.

முகவுரை

தல யாத்திரை செய்வதென்பது இந்த நாட்டுக்கே உரிய நல்ல பழக்கங்களில் ஒன்று, மற்ற நாடுகளில் உல்லாச யாத்திரை போவதுண்டு. தல யாத்திரை அவர்களுக்குத் தெரியாதது. மற்ற நாடுகள் இருக்கட்டும்; நம்முடைய பாரத நாட்டிலே கூட வட நாட்டுக்குப் போனால் தீர்த்த யாத்திரை தான் நன்றாகச் செய்ய முடியும். ஏதோ அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகச் சில தலங்கள் உண்டு. அவற்றிற்கும் எத்தனையோ சிறப்புக்கள் இருக்கின்றன. இருந்தாலும் அங்கே போனால், மற்றவர்கள் துதிப்பதைக் கொண்டும் மனத்தில் மதிப்பும் பக்தியும் உண்டாகி வழிபட வேண்டும். -

ஆனால் தமிழ் நாட்டுத்தலங்கள் அப்படியா இருக்கின்றன? கோவிலின் தோற்றமே ஆளைப் பிரமிக்கவைத்து விடுகிறது, எத்தனை மேல் நாட்டினர்கள் தஞ்சாவூர்ப் பெரிய கோயிலைக் கண்டு வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்கிறார்கள்!

கோயிலைக் கட்டுவதும் சிற்பங்களைக் கொட்டுவதும் கல்லெழுத்து வெட்டுவதும் இந்த நாட்டு அரசர்களுக்கெல்லாம் பரம்பரை வழக்கங்களாக இருந்து வந்துள்ளன. முன்பேதான் கோயில் இருக்கிறதே என்று இராமல் மேலும் மேலும் பின்வந்த அரசர்கள் கோயில்களை விரிவாக்கினார்கள், தங்கள் தங்கள் காலத்து வரலாற்றுக்கு ஆதாரமான கல்வெட்டுக்களைப் பொறித்தார்கள். ஊர் சிறியதாக இருந்தாலும் கோயில் பெரியதாக இருப்பதைப் பார்த்தால் “அந்தக் காலத்தில் இதை எப்படிக் கட்டினார்கள்!” என்று வியப்படையத்தான் தோன்றும்.

தமிழ் நாட்டு நாகரிகமே கோயிலைச் சுற்றி வளர்ந்தது என்று சொல்லிவிடலாம். சிற்பக்கலை, இசைக்கலை, நாட்டியக் கலை, காவியக்கலை, அலங்காரக்கலை, பூத்தொடுக்கும் கலை - ஏன், மடைப்பள்ளிக்கலை கூடத்தான் - கோயில்களிலே வளர்ந்தன. கோயிலில் ஊர்ச்சபை கூடியது; உடையவர் பண்டாரமாகிய கிராமப் பாங்கி இருந்தது; கல்விச்சாலை நடைபெற்றது. தேவாரமும் திவ்யப் பிரபந்தமும் இந்தக் கற்கோயில்களின் பெருமையை இலக்கியச் சுவையும் பக்திச் சுவையும் இணைந்த பாக்களால் புலப்படுத்தும் சொற்கோயில்களாக விளங்குகின்றன.

அயல் நாட்டினர் வந்து இவற்றைக் கண்டால் வியக்கிறார்கள்; படம் பிடிக்கிறார்கள் ; புத்தகம் எழுதுகிறார்கள்; நாம் அவர்கள் எழுதியதைக் கண்டு, 'அப்படியா' என்கிறோம். கோயிலுக்குள்ளே புகுந்து தீபாராதனையைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு விபூதி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும் அளவில் நம் வழிபாடு நிற்கிறது. திருக்கோயில்களில் உள்ள கலையுருவங்களைக் காணக் கண்ணும் அவற்றின் பெருமையைக் கேட்கக் காதும் எல்லோருக்கும் இருப்பதில்லை.

ஆனால், சில காலமாகக் 'கல்கி' பத்திரிகையில் வாரந்தோறும். திரு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் எழுதி வரும் 'வேங்கடம் முதல் குமரி வரை' என்ற தொடர் கட்டுரைகளைப் படித்து வருகிறவர்களில் பலர் கோயிலுக்குப் போனால் தீபாராதனை கண்டு கன்னத்தில் போட்டுக் கொள்வதோடு நிற்பதில்லை. அந்தக் கோயிலில் என்ன என்ன விக்கிரகங்கள் இருக்கின்றன, என்ன சிற்பங்கள் இருக்கின்றன என்று சிறிது ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள். பிறகு மறுபடியும் வந்து, "இதுவரையில் இவற்றைத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது பிசகு' என்று கன்னத்திலும் போட்டுக் கொள்கிறார்கள்.

கோவிலில் உள்ள கலை அழகை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதை அன்பர் பாஸ்கரன் அவர்களுடைய கட்டுரை நன்றாக நமக்குக் காட்டுகிறது. அவர் எழுதும் கட்டுரைகளைப் படித்தால் நாமே அவருடன் அங்கங்கே சென்று எல்லாவற்றையும் காண்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது.

இந்தக் கட்டுரைகளை இப்போது தொகுத்துப் புத்தகமாக வெளியிடுவது மிகவும் உபகாரமான காரியம். இது மூன்றாம் தொகுதி.

தொண்டைமானவர்கள் ஒவ்வொரு கோயிலாக நமக்கு அறிமுகப்படுத்தும் பாணி அவருக்கு என்றே அமைந்தது. ஊருக்குச் செல்லும் வழிகளைச் சொல்லி அழைத்துச் சென்று கோயில் முன் நிறுத்துகிறார். கோபுரம் முதலிய அமைப்புகளைக் காட்டுகிறார். புராணக் கதைகளை ரசமாகச் சொல்கிறார். அங்கே உள்ள சிற்பவடிவங்களின் சிறப்பைச் சுட்டிக்காட்டுகிறார். தேவாரத்தையும் திவ்யப் பிரபந்தத்தையும் எடுத்துச் சொல்கிறார்.

புராணங்களில் காணாத பலகதைகளையும் வழக்கங்களையும் பழமொழிகளையும் அங்கங்கே சொல்கிறார். இது மிக மிகப் பயனுள்ள தொண்டு சொல்வதைச் சுவைபட நுட்பமான நகைச் சுவை சில இடங்களில் மலர, சொல்கிறார்.

இந்தத் தொகுதியில் நாம் எத்தனையோ மூர்த்திகளைத் தரிசித்துக் கொள்கிறோம்; எத்தனையோ தீர்த்தங்களில் நீராடுகிறோம், புராண புருஷர்களையும் சரித்திரத்தில் வரும் மக்களையும் சந்திக்கிறோம். 'கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் கச்சிதமாக அமைந்து ஒரு சிற்ப வடிவைப்போலக் கட்டுரையை ஆக்குகின்றன.

தலங்களைப் பற்றிப் பல நுட்பமான உண்மைகளையும், மூர்த்திகளின் அமைப்பிலுள்ள சிறப்பான பகுதிகளையும் சொல்கிறார். இவற்றை, பல முறை அவற்றைத் தரிசித்தவர்கள் கூட அறிந்து கொள்வதில்லை.

குடந்தைக் கீழ்க் கோட்டமாகிய நாகேசுவரன் கோயிலில் சித்திரை மாதத்தில் மூன்று நாட்களில் சூரியன் கருவறையில் தன் கதிர்களை வீசுகிற உண்மையை ஓரிடத்தில் சொல்கிறார்; கும்பேசுவர சுவாமி கோயிலில் உள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்ற சிறப்பைப் புலப்படுத்துகிறார். சுவாமி மலையில் மகாமண்டபத்தில் வடக்குச் சுவர்ப்பக்கம் ஒரு பீடத்தில் சபாபதி என்ற பெயரோடு இருப்பவர் நடராஜர் அல்ல, பாகுலேய மூர்த்தி என்று தெரிவிக்கிறார். தாராசுரத்தில் அர்த்தநாரி உருவத்தில் மூன்று தலைகளுடன் நிற்பவர் விசுவரூப மூர்த்தி என்று காட்டுகிறார். நாச்சியார் கோவில் கல்கருடன், கண்ணமங்கையிலுள்ள தேன்கூடு, திருவாரூரில் மூக்குத்தி தீர்த்தம் என்று வழங்கும் முக்தி தீர்த்தம், சூர சங்காரத்துக்கு முதல் நாள் முகத்தில் வேர்வை அரும்பும் சிக்கல் சிங்காரவேலன், ஆவுடையார் கோயிலில் பதினோரு கரத்தோடு வீற்றிருக்கும் வல்லப கணபதி - இப்படிப் பலவற்றைப் பற்றிய நுட்பமான செய்திகள் இதில் வருகின்றன.

வரலாற்றோடு பொருந்திய பலகதைகளை விசாரித்து அறிந்து நயமாகச் சொல்கிறார். செம்பியன் மாதேவியின் வரலாறு, வடுவூருக்கு. ராமன் வந்த கதை, தஞ்சையில் தளிக்குளத்துப் பெருமான் பெரிய கோயிலைப் பெற்றது, கிழவி நிழலில் பெருவுடையார் எழுந்தருளியது, துலுக்க நாச்சியார் சரிதை, பவானியில் காரோ என்ற ஆங்கிலேயர் வேதநாயகியை வணங்கியது முதலியவற்றைக் காண்க.

கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகள், கோயில் கட்டிய மன்னர்களின் பெருமை, புராணங்களில் வரும் வரலாறுகள், கர்ண பரம்பரைச் செய்திகள், தலத்தின் பெருமையைப் பற்றிய பாடல்கள் முதலிய பலவற்றையும் கோவையாக இணைத்துப் படிக்கப் படிக்க இனிக்கும் வகையில் இந்தக் கட்டுரைகள் ஓடுகின்றன. அந்த ஓட்டத்தைத்தானே விறுவிறுப்பு என்று இக்கால எழுத்தாளர்கள் சொல்கிறார்கள்?

இந்தப் புத்தகத்தைக் கோயிலுக்குப் போவதற்கு முன்பு படித்தால் ஒருவகை இன்பம் உண்டாகும்; போய் விட்டு வந்து படித்தால் அந்த இன்பம் பின்னும் பன் மடங்காகும். வெறும் ஆராய்ச்சியானால் அலுப்புத் தட்டும்; புராணமானால் சுவை இராது. சமய நூலானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றும்; சரித்திர நிகழ்ச்சியானால் அவசியமானபோது புரட்டிப் பார்க்கலாம் என்று வைத்து விடுவோம்; பாடல்களானால் அமைதியாக இருந்து பார்த்தால் தான் விளங்கும் என்ற அச்சம் உண்டாகும். இந்த நூலில் இவை எல்லாம் இருக்கின்றன. ஆனால் படித்து முடித்து விடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றன; படித்த பிறகோ பல தலங்களுக்குப் போய்ப் பல மூர்த்திகளை வழிபட்டு வந்த மனநிறைவு உண்டாகிறது. காசு இல்லாமல், பிரயாண அலுப்பு இல்லாமல், தேங்காய்பழம் இல்லாமல் இந்தப்பயன் நமக்குக் கிடைக்கிறது. நாம் அங்கே போய்த் தரிசித்தாலும் இத்தனை விவரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைக்காது.

நாவுக்கரசருக்குத் திருவையாற்றில் சிவபெருமான் கைலத் தரிசனம் காட்டியதை, 'இந்த விஞ்ஞானிகளுக்கெல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான். நம்மிடையே அவன் யார்?" என்று கேள்வி கேட்டுக்கொண்டு விளக்குகிறார். நாவுக்கரசராவது திருவையாற்றுக்குப் போய்க் கைலைக் காட்சியைக் கண்டார். நாமோ இருந்த இடத்தில் இருந்தபடியே இத்தனை தலங்களையும் காணுகிறோம்; சொல்லால் படித்துச் சொல்வது போதாதென்று அழகழகாகப் படங்களையும் எடுத்து இணைத்திருக்கிறார் அன்பர் திரு. பாஸ்கரன்.

இவருக்கு நாம் என்ன கைம்மாறு செய்ய இயலும்? மனமார நாவார, “சபாஷ்” என்று ஆனந்தப் பொங்கலுக்கு அறிகுறியாக ஒரு வார்த்தையைச் சொல்வதையன்றி வேறு ஒன்றும் செய்யத் தோன்றவில்லை.

சென்னை

30-8-61

கி. வா. ஜகந்நாதன்.

ஆசிரியர் கலைமகன்

சமர்ப்பணம்

காஞ்சி

காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமி அவர்களுக்கு

பொருளடக்கம்

1. குடந்தைக் கும்பேசுரர்

2. குடந்தை கிடந்த ஆரா அமுதன்

3. சுவாமிமலை சுவாமிநாதன்

4. தாராசுரத்து ஐராவதேசுரர்

5. பழையாறை பட்டிச்சுரர்

6. விண்னகர் ஒப்பிலியப்பன்

7. நாச்சியார் கோயில் நாச்சியார்

8. திருச்சேறை சாரநாதன்

9. கண்ணமங்கை பக்தவத்ஸலன்

10. திருவாருர் தியாகேசர்

11. கீழ்வேளூர் கேடிலியப்பர்

12. சிக்கல் சிங்கார வேலவர்

13. கடல் நாகைக் காரோணர்

14. செம்பியன்மாதேவிக் கயிலாயர்

15. மறைக்காடுறை மணாளர்

16. சீரார் பெருந்துறையான்

17. மன்னார்குடி ராஜகோபாலன்

18. வடுவூர் கோதண்டராமன்

19. தஞ்சைப் பெரு உடையார்

20. ஐயாறப்பன்

21. மழபாடி மாணிக்கம்

22. தென்னரங்கத்து இன்னமுதன்

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி


வேங்கடம் முதல் குமரி வரை

(பாகம் - 3)

- காவிரிக் கரையிலே -

1. குடந்தைக் கும்பேசுரர்

'லண்டன் டைம்ஸ்' பத்திரிகையோடு தொடர்புடைய ஆங்கிலேயர் ஒருவர் இந்தியாவுக்கு வருகிறார், கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்பு. தூத்துக்குடியில் கப்பலில் இறங்கி மதுரை எல்லாம் கடந்து 'மெயில் ரயிலிலே' சென்னைக்குப் பிரயாணம் செய்கிறார் முதல் வகுப்பிலே. அந்த முதல் வகுப்புப் பெட்டியிலே ஒரு தமிழ்ப் பிரமுகரும் பிரயாணம் செய்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளவில்லை. இரவு பத்துப் பதினோரு மணிக்கு ரயில் தஞ்சையைக் கடந்து செல்கிறது. தமிழ்ப் பிரமுகர் கும்பகோணத்தில் இறங்கி விடுகிறார். ஆங்கில நண்பரோ சென்னை செல்கிறார். சென்னை எழும்பூர் சென்றதும் பார்த்தால், கும்பகோணத்தில் இறங்கியவர் தம் பெட்டியை ரயிலில் விட்டுவிட்டு, ஆங்கிலேயரது பெட்டியை எடுத்துக் கொண்டு நடந்திருக்கிறார். அவர் வேண்டுமென்று செய்திருக்கமாட்டார். ஏதோ பெட்டிகள் ஒரே விதமான பெட்டிகளாக இருந்திருக்க வேண்டும். பெட்டிகள் மாறிவிட்டன. ஆங்கிலேயர் தம் பெட்டியைப் பெற எவ்வளவோ முயன்று பார்த்தார்; கிடைக்கவில்லை. இந்த ஏமாற்றத்துடனே தம் தாய்நாட்டுக்குத் திரும்பினார். லண்டன் சென்று சேர்ந்ததும், 'கும்பகோணம் பிஸினஸ்' என்ற தலைப்பிலே தாம் பெட்டியைப் பறிகொடுத்த விவரத்தை “லண்டன் டைம்ஸ்' பத்திரிகையிலே எழுதினார். அன்று முதல் கும்பகோணத்துக்கு ஓர் அவப் பெயர். கும்பகோணம் என்றாலே ஏதோ தகிடுதத்தம் செய்கிற ஊர் என்றாகிவிட்டது. ஏதாவது ஏமாற்றுக் கச்சவடம் செய்கிறவர்களைப் பார்த்து 'என்ன கும்பகோண வேலையைக் காட்டுகிறாய்?” என்று சொல்கின்ற பழக்கமும் வந்துவிட்டது. ஏன்? கும்பகோணம் என்றாலே ஏமாற்றுதல் என்ற பொருள் என்று ஆக்ஸ்போர்ட் அகராதிக்காரர்களும் எழுதிவைத்து விட்டார்கள். கும்பகோணம் இப்படிப் பிரபலமடைந்துவிட்டது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலே. ஆனால் கும்பகோணம் எவ்வளவு கற்பகோடி காலமாகப் புராணப் பிரசித்தி, சரித்திரப் பிரசித்தி எல்லாம் பெற்ற ஊர் என்பதைக் கும்பகோண மகாத்மியத்தைப் புரட்டிப் பார்த்தவர்கள் அறிவார்கள்.

கும்பகோணம், தஞ்சை ஜில்லாவில், தலை நகராம் தஞ்சையைவிடப் பெரிய ஊர். அந்த நகரின் மத்தியிலே காவிரி ஓடுகிறது. அந்தக் காவிரியின் கரையிலே நெல்லும் வாழையும் செழித்து வளர்கின்றன. அங்கே தான் தென்னிந்தியக் கேம்பிரிட்ஜ் என்ற பெயர் பெற்ற சர்க்கார் கலாசாலை இருக்கிறது. சர். பி. எஸ். சிவசாமி அய்யர், சர். சி. பி. ராமசாமி அய்யர், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பேரறிஞர்கள் படித்த கல்லூரி அது. கணித மேதை ராமானுஜம் படித்ததும் அங்கே தான் என்பார்கள், காஞ்சி காமகோடி பீடத்தின் தலைமைக் காரியாலயமும் இங்கே தான். கும்பகோணம் என்றாலே அறிவின் பிறப்பிடம், மேதைகளை வளர்க்கும் பண்ணை என்றெல்லாம் புகழ். கும்பகோண வக்கீல் என்றாலே வல்லடி வழக்கில், அகடவிகட சாமார்த்தியத்தில் எல்லோரையும் விஞ்சியவர்கள் என்ற பிரபலம். இவையெல்லாம் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் காலூன்றியபின் கும்பகோணம் - பெற்ற பெருமை. ஆனால் பக்த கோடிகளிடையே அது கோவில்கள் நிறைந்த ஊர் என்றுதான் பிரசித்தம். தமிழ் நாட்டில் தெய்வ மணம் கமழும் திருநகராக இருப்பது காஞ்சி. அதற்கு அடுத்த ஸ்தானம் வகிப்பது கும்பகோணம் என்னும் குடந்தையே, ஆனால் காஞ்சியைப் போல் இங்கு சிவனும் விஷ்ணுவும் ஊரைப் பங்கு போட்டுக் கொள்ளவில்லை. எல்லோரும் அடுத்து அடுத்தே வாழ்கிறார்கள்.

ஊருக்கு நடுவில் சாரங்கபாணி என்றால் அவரைச் சுற்றியே கும்பேசுரர், சோமேசுரர் எல்லாம். இவர்கள் தவிர சக்ரபாணி, கோதண்டராமர் வேறே. இன்னும் குடந்தைக் கீழ்க்கோட்டனார், குடந்தை காரோணத்தார் வேறே. மேலும் வீதிக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு கோபுரம் என்று ஊர் முழுவதும் கோயில்களாக நிரம்பிக் கிடக்கும் தலம் அது. இந்தத் தலத்தையும் இங்குள்ள மூர்த்திகளையும் விடப் பிரபலமானது அங்குள்ள தீர்த்தம். பன்னிரண்டு வருஷங்களுக்கு ஒருதரம் இந்தக் கும்பகோணத்தில் நடக்கும் மகா மகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பலர் அங்குள்ள மகாமகக் குளத்தைப் பார்த்தும் இருப்பீர்கள். இந்த மகாமகத் தீர்த்தம் எப்படி ஏற்பட்டது என்று முதலில் தெரிந்துகொள்ளலாமே.

மாசி மாதத்தில் மக நட்சத்திரம் விசேஷமானது. அதிலும் குரு சிம்ம ராசியில் இருக்கும் காலம் மிக மிக விசேஷமானது. அப்படி வருவது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே. அந்த மகாமக தினத்தன்று கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நருமதை, சிந்து, காவேரி, வேகவதி என்னும் ஒன்பது நதிகளுமே இங்கு கூடுகின்றன. பாவதாரிகளான மக்கள் எல்லாம் இந்நதிகளிலே தனித் தனியாக மூழ்கித் தங்கள் பாவங்களைக் கழுவிக் கொள்ள, அந்த மக்கள் பாவங்களையெல்லாம் ஏற்பது காரணமாக இந்த நவகன்னியருமே பாபகாரிகளாக மாறுகின்றனர். சிவபெருமானை வணங்கி இந்தப் பாபங்களைப் போக்கிக் கொள்ளும் வகை வேண்ட, அவரும் இந்தக் காவிரிக் கரையில் உள்ள தீர்த்தக் கட்டத்துக்கு குரு சிம்மராசியில் இருக்கும் நாளன்று வரச் சொல்கிறார். அன்று இங்குள்ள மகாமகக் குளத்துக்கு நவ கன்னியரும் வந்து சேர்ந்து கூடிக் கும்மாள மிடுகின்றனர். அந்தக் கும்மாளத்தோடு கும்மாளமிட்டுக் குளிக்கும் மக்கள் பாவமுமே கரைந்து விடுகிறது என்பது வரலாறு. இத்தகைய பிரசித்தி உடைய தீர்த்தம் இருக்கும் கும்பகோணத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கும்பகோணம் போக, எந்த ஊரில் இருந்தும் டிக்கட் வாங்கலாம். நேரே ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கலாம். ஸ்டேஷனைக்கூட இப்பொழுது விஸ்தரித்துக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஸ்டேஷனில் இறங்கியதும் வண்டி பிடித்துக் கொள்ளலாம். ஊருக்குள் செல்ல இரண்டு வழி உண்டு. ஒன்று வட பக்கமாகவும், மற்றொன்று தென் பக்கமாகவும் செல்லும். நாம் தென் பக்கமாகச் செல்லும் பாதையிலேயே போகலாம். - கும்பகோணத்தில் நாம் முதல் முதல் காண வேண்டியது மகாமகக் குளந்தானே. வண்டியில் ஏறி நான்கு பர்லாங்கு தூரம் கடந்ததுமே நாம் மகாமகக் குளக்கரை வந்து விடுவோம்.

இந்தக் குளம் பெரிய குளம். கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து ஏக்கர் விஸ்தீரணத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நல்ல படிக்கட்டுகளுடன் கட்டப்பட்டிருகிறது. இதன் நான்கு கரைகளிலும் பதினாறு சிவ சந்நிதிகள் இருக்கின்றன. இக்குளத்தின் மத்தியில் ஒன்பது கிணறுகள் இருக்கின்றன. இந்த ஒன்பது கிணறுகளின் தான், முன் சொன்ன நவகன்னியர் மகாமகத்தன்று எழுகிறார்கள் என்ற நம்பிக்கை. இந்தத் தீர்த்தத்துக்கு இந்தப் புனிதம் ஏற்பட்டதற்குக் காரணம் இதில் அமுதம் தங்கியது என்று ஒரு வரலாறு. அந்த வரலாற்றிலே தான் இந்தத் தலத்தின் பெயராம் குடமூக்கு, அத்தலத்தில் : உள்ள மூர்த்தியாம் கும்பேசுரரைப் பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

பிரம்மதேவருக்கு அவருடைய சிருஷ்டித் தொழிலுக்கு உதவியாக இருந்திருக்கிறது இறைவன் அருளிய அமுதக் குடம். அந்தக் குடத்தைப் பத்திரமாக அவர் மகாமேரு பர்வதத்தில் வைத்திருந்திருக்கிறார், பிரளய காலத்தில் உலகமே பிரளயத்தில் முழுகிய போது, இந்தக் குடம் வெள்ளத்தில் மிதந்திருக்கிறது. வெள்ளம் வடிகிற போது, இந்தக் குடம் ஓர் இடத்திலே வந்து தங்கி இருக்கிறது. பிரமனது வேண்டுகோளின்படி, சிவபெருமான் வேட வடிவத்தில் வந்து அம்பு எய்து இந்தக் குடத்தைச் சோதித்திருக்கிறார். குடத்தினின்றும் அமுதம் வழிந்து ஓடியிருக்கிறது. உடைந்த குடத்து ஓடுகளையும், சிந்திய அமுதத்தையும் சேர்த்துச் சிவலிங்கமாக ஸ்தாபித்திருக்கிறார் சிவபெருமான். கும்பத்திலிருந்து தோன்றிய பெருமான் ஆனதினாலே கும்பேசர் என்ற பெயர் பெற்று அங்கே நிலைக்கிறார். ஊருமே கும்பகோணம் என்று பெயர் பெறுகிறது.

குடத்திலிருந்து சிந்திய அமுதம் வழிந்த இடத்திலேதான் மகாமகக் குளம் இருக்கிறது. அதனால்தான் அங்கு பெருகும் தீர்த்தத்திற்கு அத்தனை மகிமை; ஆதலால் நாமும் ஒரு முழுக்குப் போடலாம் அங்கே. அதற்குத் துணிவு இல்லாதவர்கள், மகாமகக் குளத்து நீரைத் தலையில் பரோக்ஷித்துக் கொண்டே கிளம்பிவிடலாம், ஊரில் உள்ள கோயில்களைக் காண, ஒருநாளை சிவனுக்கு என்றும் ஒருநாளை விஷ்ணுவுக்கென்றும் ஒதுக்கி வைத்து விடலாம். முதலில் மகாமகக் குளத்தின் வடகரையில் உள்ள குடந்தைக் காயாரோகணத்தாரையே வணங்கிவிட்டு மேல் நடக்கலாம். இவரையே காசி விசுவநாதர் என்று மக்கள் அழைக்கிறார்கள்.

இராவணாதி அரக்கர்களை வதம் செய்யப் புறப்பட்ட ராமன் அத்தொழிலை நன்கு நிறைவேற்றத் தம்மிடம் ருத்திர அம்சம் இல்லை என்பதைக் காண்கிறார். அந்த அம்சம் பெறவேண்டிக் காவிரிக் கரையிலே காசி விசுவநாதரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார். ராமன் விரும்பிய வண்ணமே ராமனது உடலில் சிவன் ஆரோகணிக்கிறார். அதனால் இராவண வதம் முட்டின்று முடிகின்றது என்பது புராணக் கதை, ராமனது. காயத்தில் ஆரோகணித்தவர் ஆதலால் காயாரோகணர் என்ற பெயர் பெறுகிறார். இந்தக் காயாரோகணத்தார் சந்நிதி மேற்கு பார்த்து இருக்கிறது. சிறிய கோயில்தான். கோயிலில் நுழைந்ததும் வடபுறம் உள்ள ஒரு மண்டபத்தில் நதிகளாகிய நவகன்னியரும் நின்று கொண்டி ருக்கிறார்கள். தல முக்கியத்துவம் வாய்ந்தவளான காவிரி வாயிலுக்கு நேரே நின்று கொண்டிருக்கிறாள். மற்றவர்கள் பக்கத்துக்கு நால்வராக ஒதுங்கிக் கொள்கிறார்கள். எல்லாம் சுதையாலான வடிவங்களே.

மகாமக உற்சவத்தில் எழுந்தருளச் செய்வதற்காகச் செப்புச் சிலை வடிவிலும், இந்த நவ கன்னியரைச் சிறிய உருவில் சமீப காலத்தில் செய்து வைத்திருக்கிறார்கள். இந்தச் செப்புப் படிமங்கள் ஒதுக்குப் புறத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். அவர்களைத் தேடித்தான் பார்க்க வேண்டும். இனிக் கோயிலுள் இருக்கும் விசுவநாதரையும் விசாலாக்ஷியையும் வணங்கலாம். இந்தக் கோயிலுக்கு சம்பந்தர் வந்து காயாரோகணத்தாரைப் பாடிப் பரவி இருக்கிறார். சம்பந்தர் குறிப்பிடாத மகாமகத் தீர்த்த விசேஷத்தைச் சேக்கிழார் கூற மறக்கவில்லை . 'பூமருவும் கங்கை முதல் புனிதமாகப் பெருதீர்த்தம் மாமகந்தான் ஆடுதற்கு வந்து வழிபடுங் கோயில்' என்றல்லவா பாடுகிறார்.

இந்தக் குடந்தைக் காரோணத்தாரைக் காண மறந்தாலும், இவரது கோயிலுக்கு மேற்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள குடந்தைக் கீழ்க் கோட்டனாரைக் கண்டு தரிசிக்காமல் மேல் நடத்தல் கூடாது. இது ஒரு கலைக் கோயில். இங்கு கோயில் கலையின் பலபடிகளைப் பார்க்கலாம். இங்கு கோயில் கொண்டிருக்கும் நாகேசுவரனை இந்திரனும் சூரியனும் வழிபட்டதாக ஐதீகம். இந்திரன் வழிபட்டானோ என்னவோ? சூரியன் இன்றும் வழிபடுகிறான், ஒவ்வொரு வருஷம் சித்திரை மாதம் 10, 11, 12 தேதிகளில் காலை ஆறு மணிக்கெல்லாம் கோயில் வாயில், கொடி மரம், நந்தி, பலிபீடம் எல்லாவற்றையும் கடந்து சூரியன் கருவறைக்குள் புகுந்துவிடுகிறான். அந்த அறையை ஒளிமயமாக் ஆக்குவதோடு தன் ஒளியாகிய கரங்களாலே லிங்கத் திருவுருவத்தைத் தழுவி வழிபடுகிறான். இந்த வழிபாடு ஓர் அற்புதக் காட்சி. இக்காட்சி அமையும் வகையில், கட்டிடம் கட்டிய சிற்பிகளுக்கு நமது தலை தானாகவே வணங்கும். இன்னும் வெளி முற்றத்தைக் கடந்து நடந்தால் கல் தேர் போல் அமைந்த ஒரு பெரிய மண்டபத்தைப் பார்ப்போம். அதுதான் நடராஜர் சந்நிதி, அந்தக் கல்தேர் சக்கரங்கள், அதனை இழுக்கும் குதிரைகள் எல்லாம் அழகானவை. உள்ளே சென்றாலோ, 'அறம் வளர்த்தாள் தாளம் ஏந்த' அதற்கேற்ப நடனமிடும் நடராஜர் திருக் கோலத்தைக் காணலாம். கோயிலுள் சென்று நாகேசுவரனை வணங்கி வலம் வந்தால் எண்ணரிய கலைச்செல்வங்களை மாடக் குழிகளில் காணலாம். கல்லிலே வடித்த கட்டழகியும் அவள் பக்கத்திலேயே முற்றும் துறந்த பௌத்த பிக்ஷவும் நிற்பார்கள் தென் பக்கத்திலே.

மேற்கு நோக்கியமாடத்திலே அழகான அர்த்தநாரீசுரர் வடிவம், இக்கோயில் ராஜராஜன் காலத்துக்கும் முந்தியது என்று பாறைசாற்றிக் கொண்டு நிற்கும். கலை உலகிலே ஓர் அற்புத சிருஷ்டி அது. இடப்பாகத்தில் இருக்கும் பெண்ணின் இடையைப் பெரிதாக்கி அதற்கேற்றவாறு ஒரு நெளிவு கொடுத்துச் சிற்பி அச்சிலா உருவத்தைச் சமைத்திருப்பது பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தக்கது. வட பக்கத்துக் கோஷ்டங்களிலோ பிரம்மா, துர்க்கை எல்லாம்; இதோடு ஒரு பொந்துக்குள்ளே அழகிய பிக்ஷாடனர் ஒருவர். இந்த நாலைந்து சிலைகளை மட்டும் பார்த்துவிட்டால் போதும், சோழர் கலை வளத்தை உலகுக்கு அறிவிக்க. இந்தச் சிலைகளைச் செய்தமைத்த கலைஞர்களுக்கும் வணக்கம் செய்துவிட்டுத் திரும்பலாம் நாம். வரும் வழியிலே தெற்கு நோக்கிக் கோயில் கொண்டிருக்கும் பெரிய நாயகியையும் வணங்கலாம்.

அவகாசம் இருந்தால், பிராகாரங்களில் உள்ள மற்றச் சுற்றுக் கோயில்கள் அங்குள்ள மூர்த்திகளையும் கண்டு தரிசிக்கலாம் இக்கோயில் வாயிலிலிருந்து வடக்கே வந்து மேற்கே திரும்பி நடந்தால், ஒரு சிறு கோபுர வாயிலில் கொண்டு வந்து விடும். இதுதான் ஏழைச் சோமேசர் கோயில். இவர் ஏழை என்பதைக் கோயில் தெற்குச் சுவரில் உள்ள விளம்பரங்களே சொல்லும். இங்கு காணவேண்டிய கலை அழகுகள் ஒன்றும் இல்லைதான். இங்குள்ள சோமேசர், தேனார் மொழியாள் இருவரையும் வணங்கி விட்டு இன்னம் மேற்கு நோக்கி நடந்து இடையில் உள்ள பொற்றாமரைக் குளத்தையும் கடந்தால் இத்தலத்தின் பிரதான சிவன் கோயிலான கும்பேசுரர் சந்நிதிக்கு வந்து சேரலாம். பெரிய கோயில். ஆண்டவன் கும்பவடிவிலே லிங்கத் திருவுருவாக அமைந்திருக்கிறார். இவருக்குத் தங்கக் கவசம் சாத்தியே அபிஷேகம் முதலியன நடக்கின்றன. உடைந்த கும்பத்தின் துண்டுகளைச் சேர்த்து அமைக்கப்பட்ட திருஉருவந்தானே.

இங்குள்ள அம்பிகை மந்திர பீடேசுவரி மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். வணங்குபவர்களுக்குச் சர்வ மங்களத்தையும் அளிக்க வல்லவள் என்று நம்பிக்கை. அம்பாள் சந்நிதிக்கருகில் வேட வடிவங்கொண்ட சிவபெருமான் வேறே எழுந்தருளியிருக்கிறார். இவருக்குப் பூஜை முதலியன நடைபெறுகின்றன. இக்கோயில் துவஜ ஸ்தம்பத்துக்கு அருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமானும் இடம் பிடித்து உட்கார்ந்திருக்கிறார். இங்குள்ள சிலா உருவங்களில் அழகானது வீரபத்திரன் திருக்கோலம். சிவனை அவமதித்த தக்ஷனைத் தன் காலால் மிதித்து மடக்கித் தலை கொய்யும் வீரபத்திரனின் நிலை அச்சம் தருவதொன்று. ஆனால் ஐயகோ! வீரபத்திரனின் கையிரண்டும் பின்னமுற்றல்லவா கிடக்கிறது. சம்பந்தர் காரோணத்தாரை மட்டும் பாட, அப்பர் கீழ்க் கோட்டாத்தாரை மட்டும் பாட, இந்தக் கும்பேசுரர் மட்டும் இருவராலும் பாடப் பெற்றிருக்கிறார். அதிர்ஷ்டக்காரர்தான்,

நங்கையாள் உமையாள் உறைநாதனார் அங்கையாளோடு அறுபதம் தாள்சடைக்

கங்கையாள் அவள் கன்னி எனப்படும்

கொங்கையாள் உறையும் குடமூக்கிலே

என்பதுதான் அப்பர் தேவாரம். -

இத்தலத்தில் இப்படிப் பாடப்பெற்ற மூவர் மாத்திரமே இருக்கிறார்கள் என்றில்லை. இன்னும் அபிமுகேசுரர், ஆதி விசுவேசுரர், பாணபுரி ஈசுவரர், காளகஸ்திநாதர், ஏகாம்பர நாதர் எல்லோருமே இருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே மகாமக ஸ்நானத்துக்கு வந்தவர்கள் போலும். இனி, இத்தலத்தில் உள்ள விஷ்ணு கோயிலைக் காணப் புறப்படலாம்.

2. குடந்தைகிடந்த ஆரா அமுதன்

தில்லைச் சிற்றம்பலவன் கோயில் கொண்டிருக்கும் சிதம்பரத்துக்குப் பக்கத்திலே வீரநாராயணபுரம் என்று ஒரு வைஷ்ணவ க்ஷேத்திரம். அங்கு நாதமுனிகள் என்று ஒரு பெரிய யோகி. ஆழ்வார்களுக்குப் பின் தோன்றிய வைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரையிலே முதல் ஸ்தானம் வகிப்பவர் இவரே, இவர் சங்கீதத்தில் நல்ல நிபுணர். இந்த நாதமுனிகள் குடும்ப சகிதம் யாத்திரை செய்கிறார். வடமதுரை, பிருந்தாவனம், துவாரகை, கோவர்த்தனம், அயோத்தி,பத்ரிகாச்சிரமம் முதலிய வடநாட்டுத் தலங்களைத் தரிசித்த பின், தென்னாட்டில் அகோபிலம், திருப்பதி, காஞ்சி, ஸ்ரீரங்கம் முதலிய தலங்களையும் தரிசித்து விட்டுக் கும்பகோணத்தில் சாரங்க பாணியைத் தரிசிக்க வந்து நிற்கிறார். அப்போது அங்கு வந்திருந்த வைஷ்ணவ யாத்திரிகர்களில் ஒருவர்.

ஆரா அமுதே அடியேன் உடலம்

நின்பால் அன்பாயே

திராய் அலைந்து கரைய

உருக்கு கின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரிவிசும்

செழுநீர்த் திருக் குடந்தை

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்

கண்டேன் அம்மானே,

என்று துவங்கும் நம்மாழ்வார் பாசுரங்களைப் பாடுகிறார். பாட்டிலும், பாட்டின் பொருளிலும் உள்ளம் பரவசமாகி மெய்மறந்து நிற்கிறார். நாத முனிகள். யாத்ரிகர் பாடிக் கொண்டேயிருக்கிறார். கடைசியில் ‘குருகூர்ச் சடகோபன் குழல் மலியச் சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும் மழலைதீர்வல்லார் காமர் மானேய நோக்கியர்க்கே' என்று முடித்ததும் யாத்திரிகரை நோக்கி, இப்பிரபந்தம் முழுதும் தங்களுக்கு வருமோ என்று கேட்கிறார் நாதமுனிகள். யாத்ரிகரோ அந்தப் பத்துப் பாடல்களுக்கு மேல் தெரியாது என்கிறார்.

அன்றே நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் தேடிப் பிடிக்க முனைகிறார் நாதமுனிகள். நம்மாழ்வார் அவதரித்த குருகூருக்கு வருகிறார். நம்மாழ்வாரின் சிஷ்யராக இருந்த மதுர கவியாழ்வாருடைய பரம்பரையிலே வந்த ஒருவரைக் கண்டுபிடித்து நம்மாழ்வார் பாடல்களையெல்லாம் திரட்டுகிறார். அதன் மூலமாகவே மற்ற ஆழ்வார்களது பாசுரங்களையும் தேடிச் சேகரித்து நாலாயிரப் பிரபந்தமாகத் தொடுக்கிறார். அந்த நாலாயிரம் பாடல்களே இன்று திவ்யப் பிரபந்தம் என்று வழங்குகிறது நம்மிடையே. இப்படித்தான் நமக்குத் திவ்யப் பிரபந்தம் கிடைத்திருக்கிறது.

இந்தத் திவ்ய பிரபந்தத்தைத் திரட்டித் தந்தவர் நாதமுனிகள். அந்த நாதமுனிகளை இப்பணியில் ஈடுபடுத்தியவன் ஆரா அமுதன். அந்த ஆரா அமுதன் கோயில் கொண்டிருப்பது கும்பகோணத்திலே. அவனது கோயில்தான் பிரசித்தி பெற்ற சாரங்க பாணி கோயில், அக்கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று. நாம்தான் கும்பகோணத்தில் உள்ள முக்கியமான சிவன் கோயில்களையெல்லாம் பார்த்துவிட்டோமே, இன்று சாரங்கபாணியைக் கண்டு தரிசிப்பதோடு அவன் சகாக்களான - சக்கரபாணி, கோதண்டபாணியையும் தரிசித்து விடலாம்.

கும்பகோணத்தின் பழம் பெயர் குடமூக்கு என்பதை முன்னரே தெரிந்து கொண்டோம். பிரம்மாவின் அமுதம் வந்து தங்கிய தலம் அல்லவா?, மேலும் இத்தலமே சூடடத்தின் மூக்கைப்போல் அமைந்திருக்கிறதாம். . அத்துடன் ஆயிரம் வாய்ப் பாம்பணையில் படுத்துக்கிடந்தவன் அல்லவா பரந்தாமன், அந்தப் பரந்தாமன் இந்தக் குடமூக்கைத் தேடி வந்திருக்கிறான் என்பார், முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்.

படமூக்கின் ஆயிரவாய்ப் பாம்பணைமேல் சேர்ந்தாய்

குடமூக்குக் கோயிலாய்க் கொண்டு

என்று பாடுகிறார் அவர். இவரோ கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே இருந்தவர் - மற்றைய ஆழ்வார்கள் நாயன்மார்கள் காலத்துக்கெல்லாம் முந்தியவர். அவர் இந்தப் பாம்பணையானைப் பாடியிருக்கிறார் என்றால் இவனும் பழம்பெருமை வாய்ந்தவனாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால்தானோ என்னவோ ஊருக்கு மத்தியில் நட்ட நடுவில் இவன் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறான், அமுதக் குடத்தால் அமைந்த கும்பேசுரர் கூட ஊருக்கு மேல் பக்கமாக ஒதுங்கி விடுகிறார், குடந்தைக் கீழ்க் கோட்டத்துக் கூத்தனும் காரோணத்தானும் கீழ்ப்பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சாரங்கபாணி எல்லோருக்கும் நடுநாயகமாக இருந்து கொண்டிருக்கிறார். இது மட்டுமா? இவரது கோயிலே மற்ற எல்லோருடைய கோயிலையும் விடப் பெரியது. கோபுரமும் அப்படியே, பதினோரு மாடத்தோடு கூடிய அந்தக் கோயிலின் கோபுரத்தை நிமிர்ந்து பார்த்தாலே நம் கழுத்து வலிக்கும். பெருமாள் சந்நிதியும் முன் மண்டபங்களும் ரதம்போல் அமைக்கப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நான்கு பக்கங்களிலும் சக்கரங்கள். அவைகளை இழுத்துச் செல்லும் குதிரைகள். இதனால்தானோ என்னவோ திருமங்கைமன்னன் திருஎழுக்கூற்றிருக்கை என்று ஒரு ரதபந்தமே தனியாகப் பாடியிருக்கிறார்.

ஹேம ரிஷியின் தவத்தை மெச்சித் திருமால் கையில் சாரங்கம் ஏந்தி எழுந்தருளினார் என்றும் கோமளவல்லித் தாயாரை மணந்து கொண்டார் என்றும் தலவரலாறு. கோயிலின் பின்புறமுள்ள ஹேம் புஷ்கரணிக் கரையில் ஹேம முனிவருக்கு ஒரு சிறிய சந்திதி இருக்கிறது. இந்தச் சாரங்கபாணியை ஏழு ஆழ்வார்கள் மங்களா சாஸனம் செய்திருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார் இத்தலத்துக்கு வந்திருக்கிறார். ஆரா அமுதனை வணங்கியிருக்கிறார். ஆரா அமுதன் அயர்ந்த நித்திரையில் இருந்திருக்கிறான். தான் வந்து நிற்பதை அவன் அறிந்து கொண்டதற்கு யாதொரு. குறிப்பும் இவருக்குத் தெரியவில்லை. 'ஐயோ! அவனுக்கு என்ன அலுப்போ ?' என்று அவர் எண்ணியிருக்கிறார். பாடியிருக்கிறார்.

நடந்த கால்கள் நொந்தவோ?

நடுங்கும் ஞாலம் ஏனமாய்

இடந்தமெய் குலுங்கவோ?

விலங்குமால் விடைச்சுரம்

கடந்தகால பரந்த காவிரிக்

கரைக் குடந்தையுள்

கிடந்தவாறு எழுந்திருந்து

பேசு ஆழிகேசனே.

படுக்கையினின்றும் எழுந்திருக்கும் கோலத்திலேயே காட்சி கொடுக்கிறான். இதனையே உத்தான சயனம் என்கிறார்கள். ஆழ்வார் சொல்லிய வண்ணம் செய்ததால் பெருமாளுக்கு ஆரா அமுதாழ்வார் என்று பெயரும் சூட்டியிருக்கிறார்கள். திருமழிசை ஆழ்வார், பிறந்து வளர்ந்ததுதான் திருமழிசையே தவிர அவர் தங்கியிருந்து தவம் இயற்றிப் பெருமாளின் திருவடி சேர்ந்தது. இந்தக் குடந்தை நகரிலேதான். அதனாலேதான் இந் நகரைத் திருமழிசைப், பிரான் உகந்த இடம் என்று வைணவர்கள் போற்றுகிறார்கள், அவரைக் குடமூக்கின் பகவர் என்றும் தமிழ் இலக்கியங்கள் போற்றுகின்றன.

ஆரா அமுதனை நம்மாழ்வார் எப்படிப் பாடிப் பரவினார் என்பதை முன்னரே பார்த்தோம். ஆண்டாளுக்கும் ஆரா அமுதனிடத்து அளவு கடந்த ஈடுபாடு என்று அறிகிறோம், கண்ணன் என்னும் கருந்தெய்வக் காட்சியில் தன் வயம் இழந்து கிடந்த அந்த ஆண்டாள்,

ஆரே உலகத்து ஆற்றுவார்?

ஆயர்பாடி கவர்ந்து உண்ணும்

காரேறு உழக்க உழக்குண்டு

தளர்ந்து முறிந்தும் கிடப்பேனை,

ஆரா அமுதம் அனையான்தன் -

அமுதவாயில் ஊறிய

நீர்தான் கொணர்ந்து புலராமே

பருக்கி இளைப்பை நீக்கீரே.

என்றல்லவா பாடுகிறார். இப்படித்தான் குடந்தை கிடந்த குடமாடியிடம் நீலார் தண்ணத் துளாய்க்கு ஏங்கிக் கிடக்கிறாள் ஆண்டாள். இப்படியெல்லாம் நம்மாழ்வார், திருமழிசை ஆழ்வார், ஆண்டாள் எல்லாரும் பாட, திருமங்கைமன்னன் கம்மா இருப்பாரா? திரு அழுந்தூர் - சென்று அங்குள்ள திருவுக்கும் திருவாகிய செல்வனைக் - கண்டபோது,

பேரானைக் குடந்தைப்

பெருமானை, இலங்குஒளி

வாரார் வனமுலையாள்

மலர் மங்கை நாயகனை,

ஆரா இன்னமுதை,

தென் அழுந்தையில் மன்ளிநின்ற

காரார் கருமுகிலைக்

கண்டு களித்தேனே.

என்று எக்களிப்போடு பாடுகிறார். இந்த ஆரா அமுதனையும் அவனது துணைவியாம் கோமளவல்லியையும் தொழுதபின்பு அங்குள்ள மற்ற சந்திதிகளிலும் வணங்கி எழலாம். பெரிய கோயில்தான் என்றாலும் குறிப்பிடத்தக்க சிற்பச் செல்வங்கள் ஒன்றுமே இங்கு இல்லை என்றுதான் கூற வேண்டியிருக்கிறது.

சாரங்கபாணியைப் பார்த்த விறுவிறுப்பிலே கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்து சக்கரபாணியையும் வணங்கி விடலாம். சக்கரபாணி கோயில் காவிரியின் தென்கரையில் இருக்கிறது. மாடக் கோயில் அமைப்பு. ஒரு சிறிய கட்டுமலை மேல்தான் சந்நிதி இருக்கிறது. சுதர்சன சக்கரம் என்று பெருமாள் ஏந்தியிருக்கும் சக்கரத்துக்குள்ளேயே எழுந்தருளி யிருக்கிறார். உற்சவ விக்கிரகம் உக்கிரமானதாகவே இருக்கும். இச் சக்கர பாணியைப் பற்றி வேறு விரிவாகச் சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் சிவனுக்கு நாகேசுரர் கோயில் என்று ஒரு கலைக்கோயில் அமைந்ததுபோல் பெருமாளுக் கும் ஒரு கலைக்கோயில் தான் ராமசாமி கோயில். கும்பேசுரர் கோயிலுக்கும் சாரங்கபாணி கோயிலுக்கும் இடையே உள்ள வீதி வழியாய்க் கண்ணை மூடிக்கொண்டு தெற்கு நோக்கி நடந்தால் ராமசாமி கோயில் வந்து சேருவோம்.

கோயில் பழைய கோயில் அல்ல. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேதான் எழுந்திருக்க வேண்டும். ராமன், சீதா லக்ஷ்மண பரத சத்துருக்கன ஆஞ்சநேய சமேதனாகப் பட்டாபிஷேகக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறான். எல்லாம் நல்ல கம்பீரமான செப்பு வடிவங்கள், இவைகள் எல்லாம் பக்கத்தில் உள்ள தாராசுரப் பகுதியில் புதைந்து கிடந்தன என்றும், ராமனே தஞ்சை மன்னர் அச்சுத நாயக்கன் கனவில் தோன்றித் தான் இருக்கும் இடத்தை அறிவித்தான் என்றும் அதன் பின்னரே அச்சுத நாயக்கன் அந்த விக்கிரகங்களை எடுத்துக் கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்தான் என்றும் அறிகிறோம்.

இக்கோயிலில் நுழைந்ததுமே, அங்குள்ள மகாமண்டபம் ஒரு பெரிய கலைக்கூடம் என்பதைக் காண்போம். மண்டபம் முழுவதும் பிரும்மாண்டமான தூண்கள். எல்லாம் நுணுக்க வேலைப்பாடு அமைந்தவை. ஒரு தூணின் நான்கு பக்கத்திலும், பக்கத்துக்கு ஒருவராக ராமன், லக்ஷ்மணன், சீதை, அனுமன் காட்சி கொடுக்கிறார்கள். நல்ல கருங்கல் உருவிலே கம்பீரமான திருஉருவங்கள் அவை. இவை தவிர ராம பட்டாபிஷேகம், விபீஷண பட்டாபிஷேகக் காட்சிகள் வேறே அடுக்கடுக்காய் இருக்கின்றன; விஷ்ணுவின் பல அவதாரக் கோலங்கள், திரிவிக்கிரமன் தோற்றம் எல்லாம். இன்னும் மன்மதன், ரதி, எண்ணற்ற பெண்ணுருவங்கள் எல்லாம் கல்லில் வடிக்கும் கட்டழகு எப்படி இருக்கும் என்பதைக் காட்டும். இந்தக் கலைக்கூடத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் பலமணி நேரம். மகா மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் ராமாயணக் கதை முழுவதையும் 200 சித்திரங்களில் தீட்டி வைத்திருக்கிறார்கள். இவைகள் எல்லாம் சமீபகாலத்தில்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

இங்குள்ள சித்திரங்களெல்லாம் அஜந்தா, சித்தன்ன வாசல் சித்திரங்களோடு வைத்து எண்ணப்படத் தக்கவை - அல்லதான் என்றாலும் ராமசாமி கோயில் என்பதற்கேற்ப, ராமாயணச் சிற்பங்கள் இருப்பது பொருத்தமானதே. இன்னும் கடந்து கருவறை சென்றால் ராமனைப் பட்டாபிஷேகக் கோலத்தில் பார்க்கலாம்.

அரியணை அனுமன் தாங்க

அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன் வெண்குடை கவிக்க

இருவரும் கவரிவீச

விரிகடல் உலகம் ஏத்தும்

வெண்ணெய் மன் சடையன்வன்மை

மரபுளோன் கொடுக்க வாங்கி

வசிட்டனே புனைந்தான் மௌலி

என்பது கம்பன் காட்டும் பட்டாபிஷேகக் கோலம்-இந்தக் கோலத்தில் இல்லை இந்தப் பட்டாபிராமன். அஞ்சலி ஹஸ்தனாக 'ஏவல் கூவப் பணிசெய்யும்' பான்மையில் இருக்கிறான் அனுமன், பரதன், சத்துருக்கனன், லக்ஷ்மணன் எல்லோரும் நிற்கிறார்கள். இவர்களுடன் கோலாகலமாக நிற்கிறான் ராமன். நிறையப் பட்டும் பட்டாடையுமாக, அணிபல அணிந்து நிற்பார்கள் இவர்கள், அணிகளையும் ஆடைகளையும்களைந்து பார்த்தால் செப்புச் சிலை வடிவின் அழகெல்லாம் தெரியும் அதற்குக் காலமும் நேரமும் இடந்தராதே. ஏதோ சாரங்கபாணியாம் ஆரா அமுதனைக் காணும் விருப்பத்தோடு வந்த நமக்குச் சக்கரபாணியையும், கோதண்டபாணியையும் கண்டு தரிசிக்கக் கொடுத்து வைத்திருந்ததே, அந்தப் பாக்கியத்தைத் எண்ணிக் கொண்டே குடந்தையை விட்டுக் கிளம்பலாம் வீடு நோக்கி.

3. சுவாமிமலை சுவாமிநாதன் தசரதச் சக்கவரவர்த்தி அயோத்தியிலிருந்து அரசாள்கிறார். சக்கரவர்த்தித் திருமகனான ராமன் மிதிலை சென்று வில்லொடித்து ஜனகனது மகளாகிய சீதையை மணம் முடித்துத் திரும்புகிறான். வரும் வழியில் எதிர்த்த பரசுராமனது கர்வத்தையும் அடக்கி, வெற்றி காணுகிறான். இதனால் எல்லாம் மகிழ்ச்சியுற்ற தசரதர், தமக்கு வயது முதிர்ந்துவிட்டது என்ற காரணம் காட்டி ராஜ்ய பாரத்தைத் தம் சீமந்த புத்திரனான ராமனிடம் கொடுத்துவிட்டுக் காடு சென்று தவம் செய்ய விரும்புகிறார்.

அதற்காகக் குலகுருவாகிய வசிட்டர், சுமந்திரர் முதலான மந்திரி பிரதானிகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கிறார். ராமனுக்குப் பட்டம் சூட்டுவதற்கு எல்லாரும் ஏகமனதாகச் சம்மதம் தெரிவிக்கிறார்கள். 'அறத்தின் மூர்த்தியாயிற்றே அவன், மன்னுயிர்க்கு ராமனிற் சிறந்தவர் உண்டோ ?' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். இதனைக் கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைகிறார், ராமனைப் பெற்ற நாளிலும், அவன் அன்று அரனது வில்லை ஒடித்துத் தன் வீரத்தைக் காட்டிய நாளிலும், ஏன், பின்னர் பரசுராமனது கர்வத்தை அடக்கிய நாளிலும் பெற்ற மகிழ்ச்சியைவிடத் தம் மந்திரிக் கிழவர்கள் அவனைப் பாராட்டியபோது பெற்ற மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. இதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான்.

மற்று, அவன் சொன்ன

வாசகம் கேட்டலும்; மகனைப்

பெற்ற அன்றினும், பிஞ்ஞகன்

பிடித்த அப் பெருவில்

இற்ற அன்றினும் எறி

மழுவாளன் இழுக்கம்

உற்ற அன்றினும், பெரியது ஓர்

உவகையன் ஆனான்.

இந்தப் பாட்டைப் படிக்கும்போது, வள்ளுவர் சொன்ன,

ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் - தன் மகனைச் .

சான்றோன் எனக் கேட்ட தாய்!

என்ற குறள் ஞாபகத்துக்கு வராமல் போகாது. இப்படிப் பெற்ற தாய் மகிழ்கிறாள்; பெற்ற தந்தை மகிழ்கிறார், தம் மகனைப் பிறர் சான்றோன் என்று சொல்லக் கேட்டபோது. ஆனால் தம் பிள்ளையையே குருவாக ஏற்றுக் கொண்ட தந்தை ஒருவரும் உண்டு. அவரைப் பற்றி இந்த வள்ளுவரும் கம்பனும் ஒன்றுமே சொல்கின்றார்கள் இல்லை. 'தம்மில் தம் மக்கள் அறிவுடையராக' இருப்பதைப் பெற்றோர் விரும்புவது இயல்பு. ஆனால் பிள்ளையே தனக்குக் குருவாக முனைந்து எழுவதை எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. ஆனால் இறைவனாகிய தந்தை எல்லாத் தந்தைகளுக்கும் மேம்பட்டவராயிற்றே.

இறைவனாகிய தந்தைக்கும் பிரணவத்தின் பொருள் உரைக்கிறேன் என்று குமரனாம் பிள்ளை .கூறியபொழுது, 'சரி அப்பா! நீ குருவாகவும் நான் சீடனாகவும் இருந்து கேட்கிறேன்' என்று சொன்னவர் அல்லவா? இப்படி மகன் குருவாகவும், தந்தை சீடனாகவும் அமைந்த கதை ரஸமான ஒன்று. கதை இதுதான், சிருஷ்டித் தொழில் செய்கிறவன் பிரமன். அவன் குமரனைச் சிறு பிள்ளை தானே என்று மதிக்காமல் நடக்கிறார். குமரனோ பிரமனை அழைத்து, பிரவணப் பொருளுக்கு உரை கேட்கிறான். பிரமன் விழிக்கிறான். உடனே குமரன் பிரமனைக் குட்டிச் சிறையிருத்தி விட்டுத் தானே சிருஷ்டித் தொழிலை நடத்துகிறான்.

இதை அறிகிறார் சிவபெருமான். குமரனை அழைத்து, பிரமனைச் சிறையில் அடைத்ததற்குக் காரணம் கேட்கிறார். 'அவனுக்குப் பிரணவப் பொருள் தெரியவில்லை. அவனை வைத்து என்ன பண்ணுவது?' என்கிறான். இறைவனோ 'அப்போ உனக்குத் தெரியுமா? என்கிறார். 'ஓ! தெரியுமே' என்கிறான் குமரன். 'அதைச் சொல்லு, பார்ப்போம்' என்று கேட்கிறார். ஓ! உமக்குமே தெரியாதா? அதைத் தெரிய வேண்டுமானால் நீர் முறைப்படி சீடனாக அடங்கி நின்று கேட்டால் சொல்லுவோம்' என்கிறான். அப்படியே நின்று கேட்கிறார். முருகனும் பிரணவப் பொருளை இறைவனாகிய தந்தைக்கு உபதேசிக்கிறான். இப்படித்தான் சாமிக்கும் நாதனாக அமைந்து அந்தச் சாமிநாதன் குருமூர்த்தியாக, ஞானப் பண்டிதனாக இருந்தருளுகிறான். இந்தச் சாமிநாதனைக் கண்டு தொழுது, நாமும் பிரணவப் பொருள் தெரிந்து கொள்ள - விரும்பினால் சுவாமிமலைக்குச் செல்லவேண்டும் அந்தச் சுவாமிமலை என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

சுவாமிமலை தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்துக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். கும்பகோணத்தில் இறங்கி, கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் மூன்று மைல் மேற்கு நோக்கிச் சென்றாலும் தலத்துக்கு வந்து சேரலாம். ரயிலில் செல்பவர்கள் எல்லாம் சுவாமிமலை ஸ்டேஷனிலே இறங்கி ஒரு. மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். நாம் ரயிலிலேயே போகலாம். அதுதானே சௌகரியமானது. ஸ்டேஷனில் வண்டிகள் கிடைக்கும். வண்டியைவிடக் கால் வண்டியே சிறப்பானது. காலாலே நடந்து சென்றால் இன்னொரு கோயிலையும் பார்த்து விடலாம். தம்பியைக் கண்டு தரிசிக்கப் போகிறவர்கள் அண்ணனைத் தரிசிக்காமல் போகலாமா? அப்படி நேரே வருவதைச் சுவாமிநாதனே விரும்ப மாட்டானே, அவன் சூடு கண்ட பூனையாயிற்றே. வள்ளியை மணக்க விரும்பிய போது அண்ணனை மறந்தது காரணமாகத்தானே. அவனுக்கு இடையூறுக்குமேல் இடையூறு நிகழ்ந்தது. பின்னர் அண்ணன் விநாயகரை வணங்கியபின்தானே காதலில் வெற்றி பெறவும் முடிந்தது.

ஆதலால் நாமும் வழியில் உள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்கி விடை பெற்று மேல் நடக்கலாம். இங்குள்ள விநாயகர் சுவேத விநாயகர் என்னும் வெள்ளை நாயகர், மூர்த்தி சிறிதுதான் என்றாலும் கீர்த்தி பெரிது. அமுதக்கலசம் கொண்டு வந்தவர் என்ற புகழ் பெற்றவர். தேவேந்திரன் ஏரண்ட முனிவர் முதலியோர். வணங்கி அருள் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் காவிரி அங்கு வலம் சுழித்துச் சென்றிருக்கிறது. அதனால் வலஞ்சுழி என்று பெயர் பெற்றிருக்கிறது.

வெள்ளை விநாயகர் கோயில் மண்டபம் எல்லாம் மிக்கச் சிற்ப வேலைகள் நிறைந்தது. மண்டப வாயிலில் கல்லிலே செய்திருக்கும் வேலைகளை யெல்லாம் தூக்கி அடிப்பதாய் இருக்கிறது. இந்த விநாயகர் நிழலிலேயே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள கற்பகநாதரும் பெரியநாயகியும், இத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

என்ன புண்ணியம் செய்தனை

நெஞ்சமே! இருங்கடல் வையத்து

முன்னம் நீ புரி நல்வினைப்

பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ்திரு

வலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி ஆதரித்து ஏத்தியும் -

வழிபடும் அதனாலே!

என்று பாடியிருக்கிறார். நாமும் என்ன என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ, வலஞ்சுழி வாணனையும் அவனுக்கும் முந்தி வாயில் முகப்பிலேயே வரவேற்கும். வெள்ளை விநாயகனையும் கண்டு தொழ? இனிமேல் நடக்கலாம் சோமசுந்தரனையும் முந்திக்கொண்டு குரு மூர்த்தியாக நிற்கும் சாமிநாதனைக் காண. போகும் வழியிலே அரசிலாறு காவிரியை எல்லாம் கடக்கவேண்டும், காவிரியையும் அதில் ஓடும் தண்ணீரையும் கண்டால் ஒரு முழுக்குப் போடத் தோன்றும். ஆதலால் காவிரியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மேலும் நடந்தால், தெற்கு வீதியில் உள்ள கோயில் வாயிலை வந்து அடையலாம்.

கோயிலின் சந்நிதி வாயில் அது அல்ல. கீழ்ப் புறம்தான். ஆனால் அது எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து கோயிலைப் பார்த்தால் ஏதோ ஒரு பங்களா மாதிரி இருக்குமே தவிர கோயிலாகத் தெரியாது. அதனால் தான் இந்தத் தெற்கு வாயிலில் சுவாமிநாதன் ஒரு கோபுரம் அமைத்து அதனையே பிரதான வாயிலாக அமைத்திருக்கிறார்கள். நிர்வாகிகள். மேலும் இந்த வாயிலையும் அதற்கடுத்த கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால், அன்னை மீனாட்சி நம்மை எதிர்நோக்கி வரவேற்பாள். பெரும்பெயர் முருகனாம். அவளது பிள்ளையைத் தரிசிக்க வருபவர்கள் ஆயிற்றே. அதனால்தான் பரிவோடேயே தன் பிள்ளையிருக்கும் மேல் தளத்துக்கும் வழிகாட்டுவாள்.

இத்தக் கோயில் உண்மையில் ஒரு மலை அல்ல, கல்லினால் கட்டப்பட்ட ஒரு கட்டு மலை. கோயில் மூன்று பிராகாரங்களுடன் விளங்குகிறது. மலையின் அடித் தளத்திலே சோமசுந்தரனும், மீனாட்சியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சோமசுந்தரனை மதுரையரசன் வரகுண பாண்டியன் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அவன் பிரமஹத்தி தோஷம் நீங்கத் திருவிடைமருதூர் செல்லும் வழியில் ஒருநாள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறான், தினசரி தன் குலதெய்வமான சோமசுந்தரனையும் மீனாட்சியையும் வழிபடுபவன் ஆயிற்றே. ஆதால் இருவரையும் இங்கு பிரதிஷ்டை பண்ணி வணங்கிவிட்டே மேல் நடந்திருக்கிறான். சோம சுந்தரர் கீழ்த்தளத்திலேயே இருந்து கொள்கிறார். மகன் குருநாதன் ஆயிற்றே. ஆதலால் அவனுக்குச் சமானமாய் மேல் தளத்திலேயே எப்படி இருப்பது என்று நினைத்துவிட்டார் போலும்!

நாம் இந்தச் சோமசுந்தரரை வணங்கிவிட்டு மலை ஏறலாம் என்றால் அர்ச்சகர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'முதலிலே வணங்க வேண்டுவது சாமிநாதனையே. அவனை வணங்கிவிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆதலால் கோயிலின் கீழ்ப்புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறலாம். மொத்தம் 60 படிகள் அங்கு பிரபவ முதலிய அறுபது வருஷங்களை அவை குறிப்பிடுகின்றன. பாதிப்படிகளை ஏறிக் கடந்ததும் ஒரு திறந்த வெளிப் பிரகாரம் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு கீழ்ப்புறம் உள்ள மண்டபத்துக்கு வந்து கிழக்கே திரும்பினால் அதற்கும் கொஞ்சம் கிழக்கே சுதையால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் தெரியும். இதற்கு வாயில் ஒன்று அமைத்து அதைப் பூட்டி வைத்திருப்பார்கள். செல்கிறவர்கள் செல்வாக்கு உடையவர்கள் என்றால் ஆள் அனுப்பிச் சாவி பெற்றுக் கதவைத் திறந்து அங்குள்ள சிற்ப வடிவங்களைக் காணலாம்.

சிவபெருமான் மடிமீதிருந்து சாமிநாதன் தந்தைக்குப் பிரணவப் பொருள் உபதேசிக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார்கள். முன்னர் அங்கிருந்த சுதை வடிவில் சாமிநாதன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், சிவபிரான் அவன் காலடியில் கைகட்டி வாய் பொத்தி நின்று உபதேசம் கேட்பதாகவும் அமைந்திருந்தது. இப்போதுள்ள நிர்வாகிகள் உட்கார வைத்து அவர் மடியில் சாமிநாதனை இருத்தியிருக்கிறார்கள் (அவர்கள் பக்திக்கு நான் கோயில் வாயில் தலை வணங்குகிறேன்). ஆனால் தந்தையே மகனைக் குருமூர்த்தி என்று ஒப்புக் கொண்டபின், அந்தச் சாமிநாதன் காலடியில் இறைவன் நின்று உபதேசம் கேட்பதுதான் சரி என்றுபடுகிறது எனக்கு; உங்களுக்கு என்ன படுகிறதோ? இந்தச் சாமிநாதனைப் பார்த்தபின் இன்னும் படி ஏறினால், நாம் தெற்கு நோக்கி இருக்கும் நேத்திர விநாயகர் சந்நிதி வந்து சேருவோம். இவரையே கண் கொடுத்த விநாயகர் என்பர். கொங்கு நாட்டுப் பிறவி குருடன் ஒருவன் வந்து வணங்கியபொழுது அவனுக்குக் கண் திறந்து வைத்தவர் ஆனதால் அவரைக் கண் கொடுத்த விநாயகர் என்று தலவரலாறு கூறுகிறது. -

கொங்கு நாடு மாத்திரம் என்ன, ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவர்கள் எத்தனை பேர்? அத்தனை பேரும் கண் பெறவேண்டுமானால் (ஊனக் கண்ணையல்ல-ஞானக் கண்ணையே) சென்று வணங்க வேண்டுவது இந்த நேத்திர விநாயகரையே. அவரை வணங்கி விட்டுக் கோயிலுள் நுழைந்து மகா மண்டபத்துக்குள் வந்து நின்றால் கருவறையில் கம்பீரமாக நிற்கும் சுவாமிநாதனைக் கண்குளிரக் காணலாம்.

'சிவனார் மனம் குளிர உபதேச மந்திர மிகு, செவிமீதினும் பகர்செய் குருநாதன்' கோவணாண்டியாகத் தண்டேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது சந்நிதியில் வழக்கமாக இருக்கும் மயில் இல்லை. தேவேந்திரன் வழிபட வந்தபோது தன் ஐராவதத்தையே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறான். சாமிநாதன் நல்ல ஆறு அடி உயரத்தில் உள்ள ஆஜானுபாகு. உயர்ந்த பீடத்திலே ஏறி நின்று கொண்டிருக்கிறார். முருகன் சிலைவடிவில் இவ்வளவு உயரமாக இருப்பது இங்குதான். இவனைவிட நீண்டு உயர்ந்து நிற்பவன் ஒருவன் இன்றையக் கன்னியா குமரி மாவட்டத்திலே உள்ள குமார கோயிலில் நிற்கிறான் என்பர். இப்படி ஆண்டியாக நிற்பவனை அழகொழுகும் ஆணழகனாக 'எல்லாம் அலங்காரம் பண்ணுவர். அதிலும் ‘ராஜ கம்பீர நாடாளும் நாயகனாக' அலங்காரம் பண்ணிப் பார்த்தால் நமது இதயம் குளிரும். ஏதோ அவன் ஆண்டிபோல வேஷமிட்டாலும் நல்ல நிறைந்த செல்வந்தனே. தங்கக் கவசம், கிரீடம், வைரவேல் எல்லாம் உடையவன்தான். ஆம் அத்தனையையும் உதறிவிட்டு ஆண்டியாக மாறி நின்றே, நாம் கேட்பதையெல்லாம் நமக்கு வாரி வாரிக் கொடுக்கிறான். அவன் நம்மிடம் கேட்கும் குருதக்ஷிணை கொடுப்பதில் நாம் ஏன் பிந்த வேண்டும்? இந்தச் சாமி நாதனை அருணகிரியார் கசிந்து கசிந்து பாடியிருக்கிறார், இங்கு அவர் வந்தபோதுதான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைக்கிறான். அவரும் சாமிநாதன் அருளால் அவனை வாதில் வென்று வாகை சூடியிருக்கிறார். அவனது திவ்ய பாத தரிசனமும் கண்டிருக்கிறார்.

தகையாது எனக்கு உன்

அடிகாண வைத்த

தனி ஏரகத்தின் முருகோனே!

என்று பாடிப் பரவி இருக்கிறார்.

வரும்போது மகா மண்டபத்திலே வடக்குச் சுவர்ப் பக்கம் ஒரு பீடத்தில் ‘சபாபதி' என்ற பெயரோடு ஒரு மூர்த்தி நிற்பார், செப்புச் சிலை வடிவில் கேட்டால் மகனாம் குருநாதன் முன்பு காலைத் தூக்கவே அஞ்சி நிற்கிறார் நடராஜர் என்பார்கள். இது தவறு. இவரே பாகுலேய மூர்த்தி. சூர சம்ஹாரம் முடித்துத் தேவ குஞ்சரியை மணம் செய்து கொண்ட கோலத்திலே எழுந்தருளியிருக்கிறார். எடுத்திருப்பது போர்க்கோலம். பக்கத்தில் நிற்பவள் தேவயானை. இந்தக் கோயிலில் வள்ளி தெய்வயானைக்குத் தனி சந்நிதி இல்லை. இருவரும் வடக்குப் பிரகாரத்தில் அறுமுகன் பக்கத்தில் செப்புச்சிலை வடிவில் இருப்பதோடு திருப்தி அடைந்திருக்கிறார்கள். இங்குள்ள பிரகாரத்தில் கல்லிலே கஜலக்ஷ்மியும், சரஸ்வதியும் இருக்கிறார்கள். செப்புச்சிலை வடிவிலே வள்ளி, அவளை மணக்கவந்த வேடன் எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின் படிகளில் இறங்கி அடித்தளத்தில் உள்ள சோமசுந்தரர் மீனாக்ஷியம்மை இவர்களையும் தரிசித்து விட்டுத் திரும்பலாம். 4. தாராசுரத்து ஐராவதேசுரர்

திருக்குடந்தை மான்மியம் என்று ஒரு புத்தகம். அதில் தாரேச்சுரப் படலம் என்று ஒரு படலம். அப்படலத்தில் ஒரு வரலாறு. தாரன் என்று ஓர் அசுரன். அவன் தேவர்களை அடக்கி ஆள விரும்புகிறான். அதற்குச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகிறான். அவன் மாத்திரம் என்ன அவனுடைய மனைவியர் நூறு பேருமே இறைவன் திருவடிகளைப் பூசிக்கின்றனர். அவர்கள் எல்லாம் விரும்பிய சிவலோக வாழ்வை அளிக்கிறார் இறைவனும். பலம் மிக்க அந்தத் தாரன் என்ற அசுரன் பூசித்த தலம் தாரேச்சுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. தாரன் மாத்திரம் என்ன அவன் மகன் மேகதாரனும் அத் தலத்திலிருந்தே அரசாண்டு சாயுஜ்ஜியம் பெற்றிருக்கிறான் என்று மான்மியம் கூறுகிறது.

ஆனால் சரித்திரம் இதை ஒத்துக் கொள்வதில்லை. தாராசுரம் என்ற பெயர் வந்ததற்குச் சரித்திரம் கூறும் காரணம் வேறு. சோழ மன்னனான இரண்டாம் ராஜராஜன் இங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அவன் ஆண்ட காலம் 1146 முதல் 1163 வரை பதினோழு வருஷங்கள். அவனே இரண்டாம் குலோத்துங்கன் புதல்வனான பரகேசரி ராஜராஜன். கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்வரை இவன் ராஜ்யம் பரவியிருக்கிறது. கொங்குநாடு கங்கநாடு எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. இவன் முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கிறான். பின்னர் பழைய பழையாறையைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அந்தப் பழையாறையை ‘எண்டிசைத் தேவரும் புகுதும் ராஜராஜபுரி' என்றே தன் பெயரால் அழைத்திருக்கிறான்.

அவன் காலத்தில் போர் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் தமிழ், சமஸ்கிருதம் கற்பதிலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறான். 'முத்தமிழுக்குத் தலைவன்' 'ராஜ பண்டிதன்' என்ற விருதுப் பெயர்கள் பெற்றிருக்கிறான். அந்தப் பழையாறை வட்டத்தில் வடகீழ்ப் பகுதியில் ஒரு கோயில் எடுப்பித்து அதை ராஜராஜேச்சுரம் என்று அழைத்திருக்கிறான். அங்கு பிரதிஷ்டை செய்த இறைவனை. ராஜராஜேச்சுரமுடையார் என்றே வணங்கி யிருக்கிறான்,

ஒரு மருங்குடைய மூல நாயகி

ஒற்றை வெள்விடை ஊர்திமேல்

இரு மருங்கு மறை தொழ

எழுந்தருள் இராசராசபுரி ஈசனே

என்று அவனது அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் இந்த இறைவனைப் பாடியிருக்கிறார். இந்த ராசராசபுரி ஈசுவரரே புராணம் பாடியவர்களால் ஐராவதேசுவரர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார். ராஜேசுவரமே நாளடைவில் ராராசுரம் என்று திரிந்து பின்னர் தாராசுரம் ஆயிற்று. இது தலத்தைப் பற்றிச் சரித்திரம் கூறும் செய்தி. நாம் சரித்திரத்துக்கே மதிப்புக் கொடுக்கலாம். அதையே நம்பலாம். இந்தத் தாராசுரம் என்ற தலத்தில் உள்ள ஐராவதேசுவரரைக் காணவே இன்று சொல்கிறோம் நாம்.

தாராசுரம் செல்வது மிகமிக எளிது. கும்பகோணத்துக்கு அடுத்த தென்பக்கம் இருக்கும் தாராசுரம் ஸ்டேஷனில் இறங்கினால் அங்கிருந்து கூப்பிடு தொலையிலேயே கோயில் இருக்கிறது. கோயிலை இனம் கண்டு பிடிப்பதும் எளிது. கலசம், ஸ்தூபி எல்லாம் இல்லாத விமானத்தோடு அந்த வட்டாரத்தில் இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இதை அடையாளமாக வைத்துக்கொண்டு இடையில் இருக்கும் தோப்பைக் கடந்தால் கோயில் வாயில் வந்து சேர்ந்து விடலாம். கோயில் எடுப்பித்த காலத்தில் பல பிராகாரங்கள் எல்லாம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு மதில் சிதைந்து கோயில் வாயிலுக்குக் கிழக்கே இன்றும் இருக்கிறது. இடிந்து கிடக்கும் அந்த மதிலைப் பார்த்தே அது எவ்வளவு கம்பீரமாக எழுந்திருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

இக்கோயில் வாயில் எப்போதும் திறந்திருக்காது. அர்ச்சருக்குச் சொல்லி விட்டுத்தான். அவரை வருவிக்சு வேண்டும். அதுவரை கோயில் வாயிலுக்கு வெளியே இருக்கும் பலிபீடத்தையும் நந்தியோடு கூடிய மண்டபத்தையும் பார்க்கலாம். நந்தி எழுந்து எங்கே ஓடி விடுகிறதோ என்று மூங்கில் தட்டி வைத்துக் கட்டிப் பதனப்படுத்தியிருப்பார்கள். அர்ச்சகர் வந்து நாம் கலை அழகைக் காண வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டால், அந்தப் பலி பீடத்தையே பல இடங்களில் தட்டி அதில் சப்த ஸ்வரமும் பேசுகிறது என்பார். நமக்கு ஸ்வரங்களில் எல்லாம் வித்தியாசம் தோன்றாது. 'இது கூடத் தாரன் கதை போலத்தானோ?' என்று எண்ணத் தோன்றும். ஆனால் கோயிலுள் நுழைந்தால் எவ்வளவோ அதிசயம் காத்து நிற்கும். கோயிலுள் கருவறையில் இருப்பவர் ஐராவதேசுவர்.

துர்வாச முனிவர் சாபத்தால் தேவேந்திரனது ஐராவதத்தின் நிறம் மாற அதனால் மனக் கவலையுற்ற ஐராவதம் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூசித்துப் பேறுபெற்றிருக்கிறது. அன்று முதல் இறைவனே ஐராவதேசுவரர் என்ற பெயரில் நிலைத்து விடுகிறார். மேலும் முனிவர்களது கோபத்துக்கு ஆளாகிய அந்த யமதருமனுக்கு வெம்மை நோய் வர, அந்நோய் தீர அவன் பல தலங்களுக்குச் சென்று அலைந்து கடைசியாக இங்கு வந்து சிவபெருமானின் திரிசூலம் ஊன்றிய இடத்தில் தோன்றிய திருக்குளத்தில் மூழ்கி வெம்மை நோய் தீர்ந்தான் என்று புராணம் கூறும்.

இந்தப் புராண வரலாறுகளைத் தவிர வேறு சிறப்பான வரலாறு இந்தக் கோயிலைப்பற்றி இல்லைதான். ஆனால் கோயில், கோயில் அமைப்பு, அங்குள்ள சிற்பச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாளில் பார்த்து அனுபவித்து விட்டுத் திரும்பி விடக் கூடியவை அல்ல. பல நாட்கள் அங்கே தங்கியிருந்து ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்துக்களிக்க வேண்டியவை. ஆதலால் கொஞ்சம் ஆற ஆமரவே இருந்து பார்க்கலாம் இச்சிற்ப வடிவங்களையெல்லாம்.

கோயில் வாயிலில் நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்றுவிட முடியாது. கோயில் ஒரு சிறிய அளவில் மாடக் கோயிலாக இருக்கும். கோயில் மாடத்தில் ஏறத் தெற்கு நோக்கிக் கொஞ்சம் நடந்து, அதன் பின்னரே மேற்கு நோக்கிப் படிகளில் ஏறவேண்டும். தெற்கு நோக்கி நடக்கும்போதே கிழக்கே பார்த்த ஒரு மாடத்தில் ஒரு கற்சிலை நிற்கும், பார்த்ததும் அதனை அர்த்தநாரியின் வடிவம் என்று கருதுவோம். இடப்பக்கம் மாத்திரம் விம்மிப் புடைத்திருக்கும் மார்பகத்தைக் கண்டு: கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்வுருவுக்கு மூன்று தலைகள் இருப்பதும் தெரியும். இது என்ன புதிதாக இருக்கிறதே? என்று அர்ச்சகரைக் கேட்போம். அவரும் நம்மைப் போலவே திரு திரு என்று விழிப்பாரே ஒழிய விளக்கம் சொல்ல மாட்டார்.

சிறிது சிந்தித்தால் தேவர் மூவரையும் அவர்களுடன் பராசக்தியையும் சேர்த்து அமைத்துக் காட்டிய விசுவரூபம் என்று தெரியும். இப்படி ஒரு அற்புதமான சிலை வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. அற்புதம் மாத்திரம் அல்ல; நல்ல அழகான சிலையும் கூட. அந்தச் சிலையின் அழகிலேயே மெய்மறந்து விடாமல் மேலும் நடந்து தெற்கு நோக்கிப் படி ஏறினால் ராஜகம்பீரன் மண்டபம் வந்துசேரலாம். அந்தப் படிக்கட்டு ஏறும்போதே வடக்குச் சுவரில், மூக்குப்போன அகத்தியர், அஞ்சுதலை ஆதிசேஷன் இவர்களின் உருவையும் காணலாம்.

பிறகு ராஜ கம்பீரன் மண்டபத்துத் தூண்களை, சுவரை, விதானத்தையெல்லாம் பார்த்தால் அப்படியே மலைத்து விடுவோம். ஒரு அங்குல இடங்கூட விடாமல் அத்தனை இடத்தையும் சிற்ப வடிவங்களாலேயே நிறைத்திருக்கிறான் ராஜராஜன். நர்த்தன விநாயகரே அவனது முத்திரையாக அமைந்திருக்கிறார். சிற்பிகள் ஒரு அங்குல விநாயகர் முதல், ஒரு முழ விநாயகர் வரை (பலர் நடம் ஆடிக்கொண்டே ) தூண்களை நிறைந்திருக்கிறார்கள். இன்னும் அத்தூண்களில் செதுக்கியிருக்கும் அழகு, அத்தூண்களில் வடித்திருக்கும் வடிவங்கள் எல்லாம் எவ்வளவோ வரலாறுகளைச் சொல்லும். இந்த மண்டபத்தின் வட பகுதிக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அங்கு தெற்கு நோக்கிய சந்நிதி வாயிலில் சாமரை ஏந்தி நிற்கும். பெண்கள் இருவர், அவர்களோடு யாதொரு தொடர்பும் கொள்ளாத ஒரு சிற்பவடிவம்-உச்சிஷ்ட கணபதி ஒன்றும் இருக்கும். இவை சாதாரணமானவை.

இனி மேற்கு நோக்கிக் கோயிலுள் நுழைய விரும்பினால் நாம் உடனே போய்விட முடியாது. மூன்று அற்புதமான சிலைகள் வழி மறிக்கும். வாயிலுக்குத் தென் பக்கத்தில் உள்ள அன்னபூரணி, வடபக்கத்தில் உள்ள அதிகார நந்தி, கண்ணப்பர் எல்லாம் நான்கு அடி உயரத்தில் உள்ள அழகிய கற்சிலைகள். அதில் அன்னபூரணி ஓர் உயிர் ஓவியம். கையிலே அவள் அமுத கலசம் ஏந்தி நிற்கிற ஒயில் ஒன்றே போதும். அவளைப் பிரார்த்தித்துக் கொண்டே கோயிலுள் நுழையலாம். நேரே கருவறைக்கே செல்லலாம். கருவறை வாயிலிலே கல்லில் ஒரு சிலை. செம்பிலே ஒரு படிமம் முன்னையது கார்த்திகேயன். பின்னையது போக சக்தி அம்மன். இரண்டும் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை. இவர்களைக் கண்டு களித்தபின் ஐராவதேசுவர ரையும் வணங்கிவிட்டு வெளியே வந்து ஒரு சுற்றுச் சுற்றலாம். ராஜ கம்பீரன் மண்டபத்தின் உள் தோற்றத்தைப் பார்த்தோம் முன்னால். வெளித் தோற்றம் ஒரு தேர் போலவே இருக்கும். தேர்ச்சக்கரங்கள் உருளும்; குதிரைகள் ஓடும். மேலும் ஒவ்வொரு வரிசையிலும் எண்ணிறந்த சிற்பவடிவங்கள், யாழ் வரிசைகள் எல்லாம் மிக்க அழகோடு அமைந்தவை. மேலும் நடந்தால் ஒரு மாடத்தில் அக்கினி உட்கார்ந்திருப்பார், இன்னொரு மாடத்தில் வீரபத்திரர் ஆடிக்கொண்டிருப்பார் திரிபுவனத்தில் கண்ட சரபர் வேறே ஒரு சிறு கோயிலுள்.

இவை தவிர யானை சிங்கம் போர், யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம். இன்னும் சிற்ப உலகிலே எண்ணிறந்த வின்னியாசங்கள். ஒரே வடிவிலே யானையும் எருதும் என்றெல்லாம். இக்கோயில் வடபக்கத்து மண்டபத்திலேதான் பிக்ஷாடனரும், அவருடைய . அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் எல்லாம் நல்ல கல்லுருவில் ஆஜானுபாகுவாக நின்றிருக்கிறார்கள். இவர்கள் தலையில் மண்டபங்கள் விழுந்து விடக் கூடாதே என்று பக்குவமாக அவர்களை அடிபெயர்த்துத். தஞ்சையில் உருவான கலைக்கூடத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள். தஞ்சை செல்லும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனையும் பார்த்துவிட்டோமே, இங்கே அம்பிகை கோயில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அம்பிகையாம் தெய்வநாயகிக்குத் தனியாக ஒரு கோயில் வடக்கே நூறு கஜ தூரத்தில் இருக்கிறது. இது நிரம்பப் பெரிய கோயில் அல்ல. சிற்ப வடிவங்கள் நிறைந்ததும் அல்ல. செல்வத்தையெல்லாம் தான் அள்ளிக் கொட்டி விட்டானே, ஐராவதேசுவரர் கோயிலிலேயே.

இக்கோயிலில் 52 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் பெரும்பாலானவை இரண்டாம் 'ராஜராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியன் காலத்தியவையாகும். இவைகளை ஆராயுமிடத்து, இக்கோயில் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டுப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் செப்பனிடப்பட்டிருக்கவேண்டும். கோயில் திருமாளிகைச் சுற்றுப் பகுதியில் கீழ்ப்புறம், இக்கோயிலை எழுப்பிய இரண்டாம் ராஜராஜன் அவனுடைய பட்டமகிஷி புவன முழுதுடையாள் இவர்களது சிலைகள் இருந்திருக்கின்றன. அவர்களையுமே எடுத்துச் சென்று விட்டார்கள் இந்தத் தஞ்சைக் கலைக்கூடத்தார். கோயிலின் கருவறையின் புறச்சுவரில் 63 நாயன்மார் வடிவங்களும் சைவ ஆச்சாரியார் 108 வடிவங்களும் இருக்கின்றன. பெரிய புராண வரலாறுகளை ஆராய்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

ஐராவதேசுவரர் பாடல் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்லர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களுக்கோ தலங்களில் அக்கறை இல்லை. அவர்கள் அக்கறை எல்லாம் அரசர்களிடத்தே. அதனால் அவர் பாடல் பெறாமலே நின்று விட்டார். ஆனால் அவரை உருவாக்கிய ராஜராஜன் பாடல் பெற்றவன், அதுவும் அவனது தந்தையின் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தராலேயே. ராஜராஜன் உலாவிற்கு கண்ணிக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசு கொடுத்திருக்கிறான் அரசன். இதுதவிர, இவனுக்கும் இவனது மனைவிக்கும் நேர்ந்த பிணக்கைத் தீர்க்கவும் பாடியிருக்கிறார் அவர். இதைப்பற்றி ஒரு ரஸமான வரலாறு. இரண்டு நல்ல பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அரசி அரசனோடு ஊடி அக்கோபத்தில் தன் அந்தப்புர வாயிலை அடைத்துக் கொள்கிறாள். அரசன் போய்க் கதவைத் தட்டினால் திறக்கிற வழியாகக் காணோம். அவைப் புலவர் ஒட்டக்கூத்தர் போகிறார்.

நானே இனி உனை வேண்டுவதில்லை

நளின மலர்த்

தேனே! கபாடம் திறந்திடுவாய்;

திறவா விடிலோ

வான் ஏறு அனைய இரவி

குலாதியன் வாயில் வந்தால்

தானே திறக்கும் நின் கைத்

தலம் ஆகிய தாமரையே.

என்று பாடுகிறார். தேவியோ இன்னும் கொஞ்சம் கோபமுற்று, “ஆ! அப்படியா சங்கதி? நானா திறப்பேன்! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்” என்று மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொள்கிறாள். அரசியுடன் வந்த சீதனக் கவிஞனான புகழேந்தி வருகிறார் பின்னால்,

இழை ஒன்று இரண்டு வகிர்செய்த

நுண்ணிடை ஏந்து வள்ளைக்

குழை ஒன்று இரண்டு விழி அணங்கே!

கொண்ட கோபமென்னோ!

மழை ஒன்று இரண்டு கை

மானாபரணன் உன்வாயில் வந்தால்

பிழை ஒன்று இரண்டு பொறாரோ?

குடியில் பிறந்தவரே!

என்று பக்குவமாகப் பாடுகிறார். கதவைத் திறக்கிறாள் அரசி. ஊடல் தீர்கிறது அவளுக்கு. இவ்விரண்டு பாட்டும் எந்தச் சோழ மன்னனைப் பற்றியது என்று பாட்டிலிருந்து தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. குலோத்துங்கனைப் பற்றி இருந்தால் என்ன? சுவையோடு அனுபவிக்கத் தகுந்தவைதானே.

3. சுவாமிமலை சுவாமிநாதன்

தசரதச் சக்கவரவர்த்தி அயோத்தியிலிருந்து அரசாள்கிறார். சக்கரவர்த்தித் திருமகனான ராமன் மிதிலை சென்று வில்லொடித்து ஜனகனது மகளாகிய சீதையை மணம் முடித்துத் திரும்புகிறான். வரும் வழியில் எதிர்த்த பரசுராமனது கர்வத்தையும் அடக்கி, வெற்றி காணுகிறான். இதனால் எல்லாம் மகிழ்ச்சியுற்ற தசரதர், தமக்கு வயது முதிர்ந்துவிட்டது என்ற காரணம் காட்டி ராஜ்ய பாரத்தைத் தம் சீமந்த புத்திரனான ராமனிடம் கொடுத்துவிட்டுக் காடு சென்று தவம் செய்ய விரும்புகிறார்.

அதற்காகக் குலகுருவாகிய வசிட்டர், சுமந்திரர் முதலான மந்திரி பிரதானிகளையெல்லாம் அழைத்து அவர்களிடம் கலந்து ஆலோசிக்கிறார். ராமனுக்குப் பட்டம் சூட்டுவதற்கு எல்லாரும் ஏகமனதாகச் சம்மதம் தெரிவிக்கிறார்கள். 'அறத்தின் மூர்த்தியாயிற்றே அவன், மன்னுயிர்க்கு ராமனிற் சிறந்தவர் உண்டோ ?' என்றெல்லாம் பாராட்டுகிறார்கள். இதனைக் கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைகிறார், ராமனைப் பெற்ற நாளிலும், அவன் அன்று அரனது வில்லை ஒடித்துத் தன் வீரத்தைக் காட்டிய நாளிலும், ஏன், பின்னர் பரசுராமனது கர்வத்தை அடக்கிய நாளிலும் பெற்ற மகிழ்ச்சியைவிடத் தம் மந்திரிக் கிழவர்கள் அவனைப் பாராட்டியபோது பெற்ற மகிழ்ச்சி பெரிதாக இருந்தது. இதைக் கவிச் சக்கரவர்த்தி கம்பன் அழகாகப் பாடுகிறான்.

மற்று, அவன் சொன்ன

வாசகம் கேட்டலும்; மகனைப்

பெற்ற அன்றினும், பிஞ்ஞகன்

பிடித்த அப் பெருவில்

இற்ற அன்றினும் எறி

மழுவாளன் இழுக்கம்

உற்ற அன்றினும், பெரியது ஓர்

உவகையன் ஆனான்.

இந்தப் பாட்டைப் படிக்கும்போது, வள்ளுவர் சொன்ன,

ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும் - தன் மகனைச் .

சான்றோன் எனக் கேட்ட தாய்!

என்ற குறள் ஞாபகத்துக்கு வராமல் போகாது. இப்படிப் பெற்ற தாய் மகிழ்கிறாள்; பெற்ற தந்தை மகிழ்கிறார், தம் மகனைப் பிறர் சான்றோன் என்று சொல்லக் கேட்டபோது. ஆனால் தம் பிள்ளையையே குருவாக ஏற்றுக் கொண்ட தந்தை ஒருவரும் உண்டு. அவரைப் பற்றி இந்த வள்ளுவரும் கம்பனும் ஒன்றுமே சொல்கின்றார்கள் இல்லை. 'தம்மில் தம் மக்கள் அறிவுடையராக' இருப்பதைப் பெற்றோர் விரும்புவது இயல்பு. ஆனால் பிள்ளையே தனக்குக் குருவாக முனைந்து எழுவதை எந்தத் தந்தையும் விரும்புவதில்லை. ஆனால் இறைவனாகிய தந்தை எல்லாத் தந்தைகளுக்கும் மேம்பட்டவராயிற்றே.

இறைவனாகிய தந்தைக்கும் பிரணவத்தின் பொருள் உரைக்கிறேன் என்று குமரனாம் பிள்ளை .கூறியபொழுது, 'சரி அப்பா! நீ குருவாகவும் நான் சீடனாகவும் இருந்து கேட்கிறேன்' என்று சொன்னவர் அல்லவா? இப்படி மகன் குருவாகவும், தந்தை சீடனாகவும் அமைந்த கதை ரஸமான ஒன்று. கதை இதுதான், சிருஷ்டித் தொழில் செய்கிறவன் பிரமன். அவன் குமரனைச் சிறு பிள்ளை தானே என்று மதிக்காமல் நடக்கிறார். குமரனோ பிரமனை அழைத்து, பிரவணப் பொருளுக்கு உரை கேட்கிறான். பிரமன் விழிக்கிறான். உடனே குமரன் பிரமனைக் குட்டிச் சிறையிருத்தி விட்டுத் தானே சிருஷ்டித் தொழிலை நடத்துகிறான்.

இதை அறிகிறார் சிவபெருமான். குமரனை அழைத்து, பிரமனைச் சிறையில் அடைத்ததற்குக் காரணம் கேட்கிறார். 'அவனுக்குப் பிரணவப் பொருள் தெரியவில்லை. அவனை வைத்து என்ன பண்ணுவது?' என்கிறான். இறைவனோ 'அப்போ உனக்குத் தெரியுமா? என்கிறார். 'ஓ! தெரியுமே' என்கிறான் குமரன். 'அதைச் சொல்லு, பார்ப்போம்' என்று கேட்கிறார். ஓ! உமக்குமே தெரியாதா? அதைத் தெரிய வேண்டுமானால் நீர் முறைப்படி சீடனாக அடங்கி நின்று கேட்டால் சொல்லுவோம்' என்கிறான். அப்படியே நின்று கேட்கிறார். முருகனும் பிரணவப் பொருளை இறைவனாகிய தந்தைக்கு உபதேசிக்கிறான். இப்படித்தான் சாமிக்கும் நாதனாக அமைந்து அந்தச் சாமிநாதன் குருமூர்த்தியாக, ஞானப் பண்டிதனாக இருந்தருளுகிறான். இந்தச் சாமிநாதனைக் கண்டு தொழுது, நாமும் பிரணவப் பொருள் தெரிந்து கொள்ள - விரும்பினால் சுவாமிமலைக்குச் செல்லவேண்டும் அந்தச் சுவாமிமலை என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

சுவாமிமலை தஞ்சை ஜில்லாவில் கும்பகோணத்துக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். கும்பகோணத்தில் இறங்கி, கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் மூன்று மைல் மேற்கு நோக்கிச் சென்றாலும் தலத்துக்கு வந்து சேரலாம். ரயிலில் செல்பவர்கள் எல்லாம் சுவாமிமலை ஸ்டேஷனிலே இறங்கி ஒரு. மைல் வடக்கு நோக்கிச் சென்றாலும் சென்று சேரலாம். நாம் ரயிலிலேயே போகலாம். அதுதானே சௌகரியமானது. ஸ்டேஷனில் வண்டிகள் கிடைக்கும். வண்டியைவிடக் கால் வண்டியே சிறப்பானது. காலாலே நடந்து சென்றால் இன்னொரு கோயிலையும் பார்த்து விடலாம். தம்பியைக் கண்டு தரிசிக்கப் போகிறவர்கள் அண்ணனைத் தரிசிக்காமல் போகலாமா? அப்படி நேரே வருவதைச் சுவாமிநாதனே விரும்ப மாட்டானே, அவன் சூடு கண்ட பூனையாயிற்றே. வள்ளியை மணக்க விரும்பிய போது அண்ணனை மறந்தது காரணமாகத்தானே. அவனுக்கு இடையூறுக்குமேல் இடையூறு நிகழ்ந்தது. பின்னர் அண்ணன் விநாயகரை வணங்கியபின்தானே காதலில் வெற்றி பெறவும் முடிந்தது.

ஆதலால் நாமும் வழியில் உள்ள வலஞ்சுழி விநாயகரை வணங்கி விடை பெற்று மேல் நடக்கலாம். இங்குள்ள விநாயகர் சுவேத விநாயகர் என்னும் வெள்ளை நாயகர், மூர்த்தி சிறிதுதான் என்றாலும் கீர்த்தி பெரிது. அமுதக்கலசம் கொண்டு வந்தவர் என்ற புகழ் பெற்றவர். தேவேந்திரன் ஏரண்ட முனிவர் முதலியோர். வணங்கி அருள் பெற்றிருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் காவிரி அங்கு வலம் சுழித்துச் சென்றிருக்கிறது. அதனால் வலஞ்சுழி என்று பெயர் பெற்றிருக்கிறது.

வெள்ளை விநாயகர் கோயில் மண்டபம் எல்லாம் மிக்கச் சிற்ப வேலைகள் நிறைந்தது. மண்டப வாயிலில் கல்லிலே செய்திருக்கும் வேலைகளை யெல்லாம் தூக்கி அடிப்பதாய் இருக்கிறது. இந்த விநாயகர் நிழலிலேயே ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள கற்பகநாதரும் பெரியநாயகியும், இத் தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

என்ன புண்ணியம் செய்தனை

நெஞ்சமே! இருங்கடல் வையத்து

முன்னம் நீ புரி நல்வினைப்

பயனிடை முழுமணித் தரளங்கள்

மன்னு காவிரி சூழ்திரு

வலஞ்சுழி வாணனை வாயாரப்

பன்னி ஆதரித்து ஏத்தியும் -

வழிபடும் அதனாலே!

என்று பாடியிருக்கிறார். நாமும் என்ன என்ன புண்ணியம் செய்திருக்கிறோமோ, வலஞ்சுழி வாணனையும் அவனுக்கும் முந்தி வாயில் முகப்பிலேயே வரவேற்கும். வெள்ளை விநாயகனையும் கண்டு தொழ? இனிமேல் நடக்கலாம் சோமசுந்தரனையும் முந்திக்கொண்டு குரு மூர்த்தியாக நிற்கும் சாமிநாதனைக் காண. போகும் வழியிலே அரசிலாறு காவிரியை எல்லாம் கடக்கவேண்டும், காவிரியையும் அதில் ஓடும் தண்ணீரையும் கண்டால் ஒரு முழுக்குப் போடத் தோன்றும். ஆதலால் காவிரியில் இறங்கி ஒரு முழுக்குப் போட்டுவிட்டு மேலும் நடந்தால், தெற்கு வீதியில் உள்ள கோயில் வாயிலை வந்து அடையலாம்.

கோயிலின் சந்நிதி வாயில் அது அல்ல. கீழ்ப் புறம்தான். ஆனால் அது எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருக்கும். அங்கிருந்து கோயிலைப் பார்த்தால் ஏதோ ஒரு பங்களா மாதிரி இருக்குமே தவிர கோயிலாகத் தெரியாது. அதனால் தான் இந்தத் தெற்கு வாயிலில் சுவாமிநாதன் ஒரு கோபுரம் அமைத்து அதனையே பிரதான வாயிலாக அமைத்திருக்கிறார்கள். நிர்வாகிகள். மேலும் இந்த வாயிலையும் அதற்கடுத்த கல்யாண மண்டபத்தையும் கடந்து சென்றால், அன்னை மீனாட்சி நம்மை எதிர்நோக்கி வரவேற்பாள். பெரும்பெயர் முருகனாம். அவளது பிள்ளையைத் தரிசிக்க வருபவர்கள் ஆயிற்றே. அதனால்தான் பரிவோடேயே தன் பிள்ளையிருக்கும் மேல் தளத்துக்கும் வழிகாட்டுவாள்.

இத்தக் கோயில் உண்மையில் ஒரு மலை அல்ல, கல்லினால் கட்டப்பட்ட ஒரு கட்டு மலை. கோயில் மூன்று பிராகாரங்களுடன் விளங்குகிறது. மலையின் அடித் தளத்திலே சோமசுந்தரனும், மீனாட்சியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சோமசுந்தரனை மதுரையரசன் வரகுண பாண்டியன் பிரதிஷ்டை செய்திருக்கிறான். அவன் பிரமஹத்தி தோஷம் நீங்கத் திருவிடைமருதூர் செல்லும் வழியில் ஒருநாள் அதிகாலையில் இங்கு வந்திருக்கிறான், தினசரி தன் குலதெய்வமான சோமசுந்தரனையும் மீனாட்சியையும் வழிபடுபவன் ஆயிற்றே. ஆதால் இருவரையும் இங்கு பிரதிஷ்டை பண்ணி வணங்கிவிட்டே மேல் நடந்திருக்கிறான். சோம சுந்தரர் கீழ்த்தளத்திலேயே இருந்து கொள்கிறார். மகன் குருநாதன் ஆயிற்றே. ஆதலால் அவனுக்குச் சமானமாய் மேல் தளத்திலேயே எப்படி இருப்பது என்று நினைத்துவிட்டார் போலும்!

நாம் இந்தச் சோமசுந்தரரை வணங்கிவிட்டு மலை ஏறலாம் என்றால் அர்ச்சகர்கள் சம்மதிக்க மாட்டார்கள். 'முதலிலே வணங்க வேண்டுவது சாமிநாதனையே. அவனை வணங்கிவிட்டு வாருங்கள்' என்று சொல்லி அனுப்பி விடுவார்கள். ஆதலால் கோயிலின் கீழ்ப்புறம் உள்ள படிக்கட்டுகளில் ஏறலாம். மொத்தம் 60 படிகள் அங்கு பிரபவ முதலிய அறுபது வருஷங்களை அவை குறிப்பிடுகின்றன. பாதிப்படிகளை ஏறிக் கடந்ததும் ஒரு திறந்த வெளிப் பிரகாரம் இருக்கும். அதைச் சுற்றிக்கொண்டு கீழ்ப்புறம் உள்ள மண்டபத்துக்கு வந்து கிழக்கே திரும்பினால் அதற்கும் கொஞ்சம் கிழக்கே சுதையால் செய்யப்பட்ட சிற்ப வடிவங்கள் தெரியும். இதற்கு வாயில் ஒன்று அமைத்து அதைப் பூட்டி வைத்திருப்பார்கள். செல்கிறவர்கள் செல்வாக்கு உடையவர்கள் என்றால் ஆள் அனுப்பிச் சாவி பெற்றுக் கதவைத் திறந்து அங்குள்ள சிற்ப வடிவங்களைக் காணலாம்.

சிவபெருமான் மடிமீதிருந்து சாமிநாதன் தந்தைக்குப் பிரணவப் பொருள் உபதேசிக்கிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அடக்க ஒடுக்கமாக நிற்கிறார்கள். முன்னர் அங்கிருந்த சுதை வடிவில் சாமிநாதன் கால்மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதாகவும், சிவபிரான் அவன் காலடியில் கைகட்டி வாய் பொத்தி நின்று உபதேசம் கேட்பதாகவும் அமைந்திருந்தது. இப்போதுள்ள நிர்வாகிகள் உட்கார வைத்து அவர் மடியில் சாமிநாதனை இருத்தியிருக்கிறார்கள் (அவர்கள் பக்திக்கு நான் கோயில் வாயில் தலை வணங்குகிறேன்). ஆனால் தந்தையே மகனைக் குருமூர்த்தி என்று ஒப்புக் கொண்டபின், அந்தச் சாமிநாதன் காலடியில் இறைவன் நின்று உபதேசம் கேட்பதுதான் சரி என்றுபடுகிறது எனக்கு; உங்களுக்கு என்ன படுகிறதோ? இந்தச் சாமிநாதனைப் பார்த்தபின் இன்னும் படி ஏறினால், நாம் தெற்கு நோக்கி இருக்கும் நேத்திர விநாயகர் சந்நிதி வந்து சேருவோம். இவரையே கண் கொடுத்த விநாயகர் என்பர். கொங்கு நாட்டுப் பிறவி குருடன் ஒருவன் வந்து வணங்கியபொழுது அவனுக்குக் கண் திறந்து வைத்தவர் ஆனதால் அவரைக் கண் கொடுத்த விநாயகர் என்று தலவரலாறு கூறுகிறது. -

கொங்கு நாடு மாத்திரம் என்ன, ஏனைய தமிழ்நாட்டுப் பகுதிகளிலும் கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவர்கள் எத்தனை பேர்? அத்தனை பேரும் கண் பெறவேண்டுமானால் (ஊனக் கண்ணையல்ல-ஞானக் கண்ணையே) சென்று வணங்க வேண்டுவது இந்த நேத்திர விநாயகரையே. அவரை வணங்கி விட்டுக் கோயிலுள் நுழைந்து மகா மண்டபத்துக்குள் வந்து நின்றால் கருவறையில் கம்பீரமாக நிற்கும் சுவாமிநாதனைக் கண்குளிரக் காணலாம்.

'சிவனார் மனம் குளிர உபதேச மந்திர மிகு, செவிமீதினும் பகர்செய் குருநாதன்' கோவணாண்டியாகத் தண்டேந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அவரது சந்நிதியில் வழக்கமாக இருக்கும் மயில் இல்லை. தேவேந்திரன் வழிபட வந்தபோது தன் ஐராவதத்தையே நிறுத்தி விட்டுப் போயிருக்கிறான். சாமிநாதன் நல்ல ஆறு அடி உயரத்தில் உள்ள ஆஜானுபாகு. உயர்ந்த பீடத்திலே ஏறி நின்று கொண்டிருக்கிறார். முருகன் சிலைவடிவில் இவ்வளவு உயரமாக இருப்பது இங்குதான். இவனைவிட நீண்டு உயர்ந்து நிற்பவன் ஒருவன் இன்றையக் கன்னியா குமரி மாவட்டத்திலே உள்ள குமார கோயிலில் நிற்கிறான் என்பர். இப்படி ஆண்டியாக நிற்பவனை அழகொழுகும் ஆணழகனாக 'எல்லாம் அலங்காரம் பண்ணுவர். அதிலும் ‘ராஜ கம்பீர நாடாளும் நாயகனாக' அலங்காரம் பண்ணிப் பார்த்தால் நமது இதயம் குளிரும். ஏதோ அவன் ஆண்டிபோல வேஷமிட்டாலும் நல்ல நிறைந்த செல்வந்தனே. தங்கக் கவசம், கிரீடம், வைரவேல் எல்லாம் உடையவன்தான். ஆம் அத்தனையையும் உதறிவிட்டு ஆண்டியாக மாறி நின்றே, நாம் கேட்பதையெல்லாம் நமக்கு வாரி வாரிக் கொடுக்கிறான். அவன் நம்மிடம் கேட்கும் குருதக்ஷிணை கொடுப்பதில் நாம் ஏன் பிந்த வேண்டும்? இந்தச் சாமி நாதனை அருணகிரியார் கசிந்து கசிந்து பாடியிருக்கிறார், இங்கு அவர் வந்தபோதுதான் சம்பந்தாண்டான் அவரை வாதுக்கு அழைக்கிறான். அவரும் சாமிநாதன் அருளால் அவனை வாதில் வென்று வாகை சூடியிருக்கிறார். அவனது திவ்ய பாத தரிசனமும் கண்டிருக்கிறார்.

தகையாது எனக்கு உன்

அடிகாண வைத்த

தனி ஏரகத்தின் முருகோனே!

என்று பாடிப் பரவி இருக்கிறார்.

வரும்போது மகா மண்டபத்திலே வடக்குச் சுவர்ப் பக்கம் ஒரு பீடத்தில் ‘சபாபதி' என்ற பெயரோடு ஒரு மூர்த்தி நிற்பார், செப்புச் சிலை வடிவில் கேட்டால் மகனாம் குருநாதன் முன்பு காலைத் தூக்கவே அஞ்சி நிற்கிறார் நடராஜர் என்பார்கள். இது தவறு. இவரே பாகுலேய மூர்த்தி. சூர சம்ஹாரம் முடித்துத் தேவ குஞ்சரியை மணம் செய்து கொண்ட கோலத்திலே எழுந்தருளியிருக்கிறார். எடுத்திருப்பது போர்க்கோலம். பக்கத்தில் நிற்பவள் தேவயானை. இந்தக் கோயிலில் வள்ளி தெய்வயானைக்குத் தனி சந்நிதி இல்லை. இருவரும் வடக்குப் பிரகாரத்தில் அறுமுகன் பக்கத்தில் செப்புச்சிலை வடிவில் இருப்பதோடு திருப்தி அடைந்திருக்கிறார்கள். இங்குள்ள பிரகாரத்தில் கல்லிலே கஜலக்ஷ்மியும், சரஸ்வதியும் இருக்கிறார்கள். செப்புச்சிலை வடிவிலே வள்ளி, அவளை மணக்கவந்த வேடன் எல்லோரும் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தரிசித்த பின் படிகளில் இறங்கி அடித்தளத்தில் உள்ள சோமசுந்தரர் மீனாக்ஷியம்மை இவர்களையும் தரிசித்து விட்டுத் திரும்பலாம்.

4. தாராசுரத்து ஐராவதேசுரர்

திருக்குடந்தை மான்மியம் என்று ஒரு புத்தகம். அதில் தாரேச்சுரப் படலம் என்று ஒரு படலம். அப்படலத்தில் ஒரு வரலாறு. தாரன் என்று ஓர் அசுரன். அவன் தேவர்களை அடக்கி ஆள விரும்புகிறான். அதற்குச் சிவபெருமானை நோக்கித் தவம் புரிகிறான். அவன் மாத்திரம் என்ன அவனுடைய மனைவியர் நூறு பேருமே இறைவன் திருவடிகளைப் பூசிக்கின்றனர். அவர்கள் எல்லாம் விரும்பிய சிவலோக வாழ்வை அளிக்கிறார் இறைவனும். பலம் மிக்க அந்தத் தாரன் என்ற அசுரன் பூசித்த தலம் தாரேச்சுரம் என்று பெயர் பெறுவதாயிற்று. தாரன் மாத்திரம் என்ன அவன் மகன் மேகதாரனும் அத் தலத்திலிருந்தே அரசாண்டு சாயுஜ்ஜியம் பெற்றிருக்கிறான் என்று மான்மியம் கூறுகிறது.

ஆனால் சரித்திரம் இதை ஒத்துக் கொள்வதில்லை. தாராசுரம் என்ற பெயர் வந்ததற்குச் சரித்திரம் கூறும் காரணம் வேறு. சோழ மன்னனான இரண்டாம் ராஜராஜன் இங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அவன் ஆண்ட காலம் 1146 முதல் 1163 வரை பதினோழு வருஷங்கள். அவனே இரண்டாம் குலோத்துங்கன் புதல்வனான பரகேசரி ராஜராஜன். கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், நெல்லூர்வரை இவன் ராஜ்யம் பரவியிருக்கிறது. கொங்குநாடு கங்கநாடு எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டு இருந்திருக்கின்றன. இவன் முதலில் கங்கை கொண்ட சோழபுரத்தையே தலை நகராகக் கொண்டு ஆண்டிருக்கிறான். பின்னர் பழைய பழையாறையைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து அரசாண்டிருக்கிறான். அந்தப் பழையாறையை ‘எண்டிசைத் தேவரும் புகுதும் ராஜராஜபுரி' என்றே தன் பெயரால் அழைத்திருக்கிறான்.

அவன் காலத்தில் போர் ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால் தமிழ், சமஸ்கிருதம் கற்பதிலும், கலை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டியிருக்கிறான். 'முத்தமிழுக்குத் தலைவன்' 'ராஜ பண்டிதன்' என்ற விருதுப் பெயர்கள் பெற்றிருக்கிறான். அந்தப் பழையாறை வட்டத்தில் வடகீழ்ப் பகுதியில் ஒரு கோயில் எடுப்பித்து அதை ராஜராஜேச்சுரம் என்று அழைத்திருக்கிறான். அங்கு பிரதிஷ்டை செய்த இறைவனை. ராஜராஜேச்சுரமுடையார் என்றே வணங்கி யிருக்கிறான்,

ஒரு மருங்குடைய மூல நாயகி

ஒற்றை வெள்விடை ஊர்திமேல்

இரு மருங்கு மறை தொழ

எழுந்தருள் இராசராசபுரி ஈசனே

என்று அவனது அவைக்களப் புலவர் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணியில் இந்த இறைவனைப் பாடியிருக்கிறார். இந்த ராசராசபுரி ஈசுவரரே புராணம் பாடியவர்களால் ஐராவதேசுவரர் என்று பாராட்டப்பட்டிருக்கிறார். ராஜேசுவரமே நாளடைவில் ராராசுரம் என்று திரிந்து பின்னர் தாராசுரம் ஆயிற்று. இது தலத்தைப் பற்றிச் சரித்திரம் கூறும் செய்தி. நாம் சரித்திரத்துக்கே மதிப்புக் கொடுக்கலாம். அதையே நம்பலாம். இந்தத் தாராசுரம் என்ற தலத்தில் உள்ள ஐராவதேசுவரரைக் காணவே இன்று சொல்கிறோம் நாம்.

தாராசுரம் செல்வது மிகமிக எளிது. கும்பகோணத்துக்கு அடுத்த தென்பக்கம் இருக்கும் தாராசுரம் ஸ்டேஷனில் இறங்கினால் அங்கிருந்து கூப்பிடு தொலையிலேயே கோயில் இருக்கிறது. கோயிலை இனம் கண்டு பிடிப்பதும் எளிது. கலசம், ஸ்தூபி எல்லாம் இல்லாத விமானத்தோடு அந்த வட்டாரத்தில் இருக்கும் கோயில் இது ஒன்றுதான். இதை அடையாளமாக வைத்துக்கொண்டு இடையில் இருக்கும் தோப்பைக் கடந்தால் கோயில் வாயில் வந்து சேர்ந்து விடலாம். கோயில் எடுப்பித்த காலத்தில் பல பிராகாரங்கள் எல்லாம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதில் ஒரு மதில் சிதைந்து கோயில் வாயிலுக்குக் கிழக்கே இன்றும் இருக்கிறது. இடிந்து கிடக்கும் அந்த மதிலைப் பார்த்தே அது எவ்வளவு கம்பீரமாக எழுந்திருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.

இக்கோயில் வாயில் எப்போதும் திறந்திருக்காது. அர்ச்சருக்குச் சொல்லி விட்டுத்தான். அவரை வருவிக்சு வேண்டும். அதுவரை கோயில் வாயிலுக்கு வெளியே இருக்கும் பலிபீடத்தையும் நந்தியோடு கூடிய மண்டபத்தையும் பார்க்கலாம். நந்தி எழுந்து எங்கே ஓடி விடுகிறதோ என்று மூங்கில் தட்டி வைத்துக் கட்டிப் பதனப்படுத்தியிருப்பார்கள். அர்ச்சகர் வந்து நாம் கலை அழகைக் காண வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டால், அந்தப் பலி பீடத்தையே பல இடங்களில் தட்டி அதில் சப்த ஸ்வரமும் பேசுகிறது என்பார். நமக்கு ஸ்வரங்களில் எல்லாம் வித்தியாசம் தோன்றாது. 'இது கூடத் தாரன் கதை போலத்தானோ?' என்று எண்ணத் தோன்றும். ஆனால் கோயிலுள் நுழைந்தால் எவ்வளவோ அதிசயம் காத்து நிற்கும். கோயிலுள் கருவறையில் இருப்பவர் ஐராவதேசுவர்.

துர்வாச முனிவர் சாபத்தால் தேவேந்திரனது ஐராவதத்தின் நிறம் மாற அதனால் மனக் கவலையுற்ற ஐராவதம் இத்தலத்துக்கு வந்து இங்குள்ள இறைவனைப் பூசித்துப் பேறுபெற்றிருக்கிறது. அன்று முதல் இறைவனே ஐராவதேசுவரர் என்ற பெயரில் நிலைத்து விடுகிறார். மேலும் முனிவர்களது கோபத்துக்கு ஆளாகிய அந்த யமதருமனுக்கு வெம்மை நோய் வர, அந்நோய் தீர அவன் பல தலங்களுக்குச் சென்று அலைந்து கடைசியாக இங்கு வந்து சிவபெருமானின் திரிசூலம் ஊன்றிய இடத்தில் தோன்றிய திருக்குளத்தில் மூழ்கி வெம்மை நோய் தீர்ந்தான் என்று புராணம் கூறும்.

இந்தப் புராண வரலாறுகளைத் தவிர வேறு சிறப்பான வரலாறு இந்தக் கோயிலைப்பற்றி இல்லைதான். ஆனால் கோயில், கோயில் அமைப்பு, அங்குள்ள சிற்பச் செல்வங்கள் எல்லாம் ஒரு நாளில் பார்த்து அனுபவித்து விட்டுத் திரும்பி விடக் கூடியவை அல்ல. பல நாட்கள் அங்கே தங்கியிருந்து ஒவ்வொன்றையும் அங்குலம் அங்குலமாகப் பார்த்துக்களிக்க வேண்டியவை. ஆதலால் கொஞ்சம் ஆற ஆமரவே இருந்து பார்க்கலாம் இச்சிற்ப வடிவங்களையெல்லாம்.

கோயில் வாயிலில் நுழைந்ததும் நேரே கருவறைக்குச் சென்றுவிட முடியாது. கோயில் ஒரு சிறிய அளவில் மாடக் கோயிலாக இருக்கும். கோயில் மாடத்தில் ஏறத் தெற்கு நோக்கிக் கொஞ்சம் நடந்து, அதன் பின்னரே மேற்கு நோக்கிப் படிகளில் ஏறவேண்டும். தெற்கு நோக்கி நடக்கும்போதே கிழக்கே பார்த்த ஒரு மாடத்தில் ஒரு கற்சிலை நிற்கும், பார்த்ததும் அதனை அர்த்தநாரியின் வடிவம் என்று கருதுவோம். இடப்பக்கம் மாத்திரம் விம்மிப் புடைத்திருக்கும் மார்பகத்தைக் கண்டு: கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் அவ்வுருவுக்கு மூன்று தலைகள் இருப்பதும் தெரியும். இது என்ன புதிதாக இருக்கிறதே? என்று அர்ச்சகரைக் கேட்போம். அவரும் நம்மைப் போலவே திரு திரு என்று விழிப்பாரே ஒழிய விளக்கம் சொல்ல மாட்டார்.

சிறிது சிந்தித்தால் தேவர் மூவரையும் அவர்களுடன் பராசக்தியையும் சேர்த்து அமைத்துக் காட்டிய விசுவரூபம் என்று தெரியும். இப்படி ஒரு அற்புதமான சிலை வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. அற்புதம் மாத்திரம் அல்ல; நல்ல அழகான சிலையும் கூட. அந்தச் சிலையின் அழகிலேயே மெய்மறந்து விடாமல் மேலும் நடந்து தெற்கு நோக்கிப் படி ஏறினால் ராஜகம்பீரன் மண்டபம் வந்துசேரலாம். அந்தப் படிக்கட்டு ஏறும்போதே வடக்குச் சுவரில், மூக்குப்போன அகத்தியர், அஞ்சுதலை ஆதிசேஷன் இவர்களின் உருவையும் காணலாம்.

பிறகு ராஜ கம்பீரன் மண்டபத்துத் தூண்களை, சுவரை, விதானத்தையெல்லாம் பார்த்தால் அப்படியே மலைத்து விடுவோம். ஒரு அங்குல இடங்கூட விடாமல் அத்தனை இடத்தையும் சிற்ப வடிவங்களாலேயே நிறைத்திருக்கிறான் ராஜராஜன். நர்த்தன விநாயகரே அவனது முத்திரையாக அமைந்திருக்கிறார். சிற்பிகள் ஒரு அங்குல விநாயகர் முதல், ஒரு முழ விநாயகர் வரை (பலர் நடம் ஆடிக்கொண்டே ) தூண்களை நிறைந்திருக்கிறார்கள். இன்னும் அத்தூண்களில் செதுக்கியிருக்கும் அழகு, அத்தூண்களில் வடித்திருக்கும் வடிவங்கள் எல்லாம் எவ்வளவோ வரலாறுகளைச் சொல்லும். இந்த மண்டபத்தின் வட பகுதிக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறேன். அங்கு தெற்கு நோக்கிய சந்நிதி வாயிலில் சாமரை ஏந்தி நிற்கும். பெண்கள் இருவர், அவர்களோடு யாதொரு தொடர்பும் கொள்ளாத ஒரு சிற்பவடிவம்-உச்சிஷ்ட கணபதி ஒன்றும் இருக்கும். இவை சாதாரணமானவை.

இனி மேற்கு நோக்கிக் கோயிலுள் நுழைய விரும்பினால் நாம் உடனே போய்விட முடியாது. மூன்று அற்புதமான சிலைகள் வழி மறிக்கும். வாயிலுக்குத் தென் பக்கத்தில் உள்ள அன்னபூரணி, வடபக்கத்தில் உள்ள அதிகார நந்தி, கண்ணப்பர் எல்லாம் நான்கு அடி உயரத்தில் உள்ள அழகிய கற்சிலைகள். அதில் அன்னபூரணி ஓர் உயிர் ஓவியம். கையிலே அவள் அமுத கலசம் ஏந்தி நிற்கிற ஒயில் ஒன்றே போதும். அவளைப் பிரார்த்தித்துக் கொண்டே கோயிலுள் நுழையலாம். நேரே கருவறைக்கே செல்லலாம். கருவறை வாயிலிலே கல்லில் ஒரு சிலை. செம்பிலே ஒரு படிமம் முன்னையது கார்த்திகேயன். பின்னையது போக சக்தி அம்மன். இரண்டும் பார்த்துப் பார்த்து அனுபவிக்கத் தகுந்தவை. இவர்களைக் கண்டு களித்தபின் ஐராவதேசுவர ரையும் வணங்கிவிட்டு வெளியே வந்து ஒரு சுற்றுச் சுற்றலாம். ராஜ கம்பீரன் மண்டபத்தின் உள் தோற்றத்தைப் பார்த்தோம் முன்னால். வெளித் தோற்றம் ஒரு தேர் போலவே இருக்கும். தேர்ச்சக்கரங்கள் உருளும்; குதிரைகள் ஓடும். மேலும் ஒவ்வொரு வரிசையிலும் எண்ணிறந்த சிற்பவடிவங்கள், யாழ் வரிசைகள் எல்லாம் மிக்க அழகோடு அமைந்தவை. மேலும் நடந்தால் ஒரு மாடத்தில் அக்கினி உட்கார்ந்திருப்பார், இன்னொரு மாடத்தில் வீரபத்திரர் ஆடிக்கொண்டிருப்பார் திரிபுவனத்தில் கண்ட சரபர் வேறே ஒரு சிறு கோயிலுள்.

இவை தவிர யானை சிங்கம் போர், யானையின் மத்தகத்திலே பாய்ந்து அதனைக் கிழிக்கும் சிங்கம் எல்லாம் தத்ரூபம். இன்னும் சிற்ப உலகிலே எண்ணிறந்த வின்னியாசங்கள். ஒரே வடிவிலே யானையும் எருதும் என்றெல்லாம். இக்கோயில் வடபக்கத்து மண்டபத்திலேதான் பிக்ஷாடனரும், அவருடைய . அழகில் மயங்கிய ரிஷிபத்தினிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு திரிபுராந்தகர், கஜசம்ஹாரர் எல்லாம் நல்ல கல்லுருவில் ஆஜானுபாகுவாக நின்றிருக்கிறார்கள். இவர்கள் தலையில் மண்டபங்கள் விழுந்து விடக் கூடாதே என்று பக்குவமாக அவர்களை அடிபெயர்த்துத். தஞ்சையில் உருவான கலைக்கூடத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள். தஞ்சை செல்லும்போது அவர்களைப் பார்த்துக் கொள்ளலாம்.

இத்தனையும் பார்த்துவிட்டோமே, இங்கே அம்பிகை கோயில் இல்லையா? என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. அம்பிகையாம் தெய்வநாயகிக்குத் தனியாக ஒரு கோயில் வடக்கே நூறு கஜ தூரத்தில் இருக்கிறது. இது நிரம்பப் பெரிய கோயில் அல்ல. சிற்ப வடிவங்கள் நிறைந்ததும் அல்ல. செல்வத்தையெல்லாம் தான் அள்ளிக் கொட்டி விட்டானே, ஐராவதேசுவரர் கோயிலிலேயே.

இக்கோயிலில் 52 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளுள் பெரும்பாலானவை இரண்டாம் 'ராஜராஜன், இரண்டாம் ராஜாதி ராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீரபாண்டியன் காலத்தியவையாகும். இவைகளை ஆராயுமிடத்து, இக்கோயில் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டுப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் செப்பனிடப்பட்டிருக்கவேண்டும். கோயில் திருமாளிகைச் சுற்றுப் பகுதியில் கீழ்ப்புறம், இக்கோயிலை எழுப்பிய இரண்டாம் ராஜராஜன் அவனுடைய பட்டமகிஷி புவன முழுதுடையாள் இவர்களது சிலைகள் இருந்திருக்கின்றன. அவர்களையுமே எடுத்துச் சென்று விட்டார்கள் இந்தத் தஞ்சைக் கலைக்கூடத்தார். கோயிலின் கருவறையின் புறச்சுவரில் 63 நாயன்மார் வடிவங்களும் சைவ ஆச்சாரியார் 108 வடிவங்களும் இருக்கின்றன. பெரிய புராண வரலாறுகளை ஆராய்பவர்க்குப் பெரிதும் பயன்படும்.

ஐராவதேசுவரர் பாடல் பெறும் பாக்கியம் பெற்றவர் அல்லர். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களுக்கோ தலங்களில் அக்கறை இல்லை. அவர்கள் அக்கறை எல்லாம் அரசர்களிடத்தே. அதனால் அவர் பாடல் பெறாமலே நின்று விட்டார். ஆனால் அவரை உருவாக்கிய ராஜராஜன் பாடல் பெற்றவன், அதுவும் அவனது தந்தையின் அவைக்களப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தராலேயே. ராஜராஜன் உலாவிற்கு கண்ணிக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசு கொடுத்திருக்கிறான் அரசன். இதுதவிர, இவனுக்கும் இவனது மனைவிக்கும் நேர்ந்த பிணக்கைத் தீர்க்கவும் பாடியிருக்கிறார் அவர். இதைப்பற்றி ஒரு ரஸமான வரலாறு. இரண்டு நல்ல பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அரசி அரசனோடு ஊடி அக்கோபத்தில் தன் அந்தப்புர வாயிலை அடைத்துக் கொள்கிறாள். அரசன் போய்க் கதவைத் தட்டினால் திறக்கிற வழியாகக் காணோம். அவைப் புலவர் ஒட்டக்கூத்தர் போகிறார்.

நானே இனி உனை வேண்டுவதில்லை

நளின மலர்த்

தேனே! கபாடம் திறந்திடுவாய்;

திறவா விடிலோ

வான் ஏறு அனைய இரவி

குலாதியன் வாயில் வந்தால்

தானே திறக்கும் நின் கைத்

தலம் ஆகிய தாமரையே.

என்று பாடுகிறார். தேவியோ இன்னும் கொஞ்சம் கோபமுற்று, “ஆ! அப்படியா சங்கதி? நானா திறப்பேன்! ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்” என்று மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொள்கிறாள். அரசியுடன் வந்த சீதனக் கவிஞனான புகழேந்தி வருகிறார் பின்னால்,

இழை ஒன்று இரண்டு வகிர்செய்த

நுண்ணிடை ஏந்து வள்ளைக்

குழை ஒன்று இரண்டு விழி அணங்கே!

கொண்ட கோபமென்னோ!

மழை ஒன்று இரண்டு கை

மானாபரணன் உன்வாயில் வந்தால்

பிழை ஒன்று இரண்டு பொறாரோ?

குடியில் பிறந்தவரே!

என்று பக்குவமாகப் பாடுகிறார். கதவைத் திறக்கிறாள் அரசி. ஊடல் தீர்கிறது அவளுக்கு. இவ்விரண்டு பாட்டும் எந்தச் சோழ மன்னனைப் பற்றியது என்று பாட்டிலிருந்து தெரியவில்லை. அதனால் பரவாயில்லை. குலோத்துங்கனைப் பற்றி இருந்தால் என்ன? சுவையோடு அனுபவிக்கத் தகுந்தவைதானே.

5. பழையாறை பட்டீச்சுரர்

வாழ்வில் ஏழைமை மிகவும் கசப்பானது. உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாமல் தவிக்கும் நிலை விரும்பத்தகாததொன்று மாத்திரம் அல்ல, வருந்தத் தக்கதொன்றும்தான். ஆனால் அந்த வாழ்வைக் கலைக்கு ஒரு பொருளாக பாட்டாக வடித்தோ, சித்திரமாகத் தீட்டியோ காட்டினால் ரஸிகர்கள் அனுபவிக்கிறார்கள்; ஆனந்தம் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் இன்றையத் திரை வானிலே இந்த ஏழை எளியவர்கள் வாழ்வே அதிகம் இடம் பெறுவானேன்? 'அம்மா பசிக்குதே, ஐயா பசிக்குதே' என்று ஒரு பிச்சைக்காரன் - ஆம்-குஷ்டரோகியும், நொண்டியுமான பிச்சைக்காரனது பாட்டு பிரபல மடைவானேன்? ஆனால் இப்படி எளிய வாழ்வைக்கூட, பார்ப்பவர்கள் உள்ளத்தில் விரசம் தோன்றாதவாறு நல்ல கலை அழகோடு காட்டலாம் என்று நினைக்கிறார் ஒரு கவிஞர்.

அவர் பெயர் தெரியவில்லை . ஆனால் ஊர் தெரிகிறது. அவர் பிறந்து வளர்ந்தது சக்திமுற்றத்தில். அதனால் சக்திமுற்றப் புலவர் என்றே பெயர் பெறுகிறார். இந்தப் புலவர் வறுமையால் வாடிப் பாண்டி நாடு வருகிறார். உண்ண உணவு கிடைக்கவில்லை. உடுக்க உடையில்லை. அடங்கி ஒடுங்கி ஒரு தேர் முட்டியில் விழுந்து கிடக்கிறார். இரவு நடுச்சாமம். வான வீதியில் நாரைகள் தெற்கு நோக்கிப் பறந்து செல்வதைப் பார்க்கிறார். கவிதை பிறக்கிறது உள்ளத்தில். சுரக்கும் கவிதை ஊற்று வற்றி விட வில்லையே. தம் நிலையைப் போய்ச் சக்திமுற்றத்தில் இருக்கும் தம் மனைவிக்குச் சொல்ல வேண்டுகிறார் நாரையை. பாட்டு இதுதான்:

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!

நீயும் நின் மனையும் தென்திசைக் குமரியாடி

வடதிசைக்கு ஏகுவீராயின்,

எம்மூர் சக்திமுத்த வாவியுள் தங்கி

நனை சுவர்க் கூறை கனை குரல் பல்லி

பாடு பார்த்திருக்கும் எம்மனைவியைக் கண்டே

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடையின்றி வாடையில் மெலிந்து,

கையது கொண்டு மெய்யது பொத்தி,

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழையாளனைக் கண்டதும் எனுமே.

இந்த நாரைவிடு தூதைக் கேட்கிறார் நகர் சோதனைக்கு வந்த பாண்டிய மன்னன். கவிஞனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று உண்டி, உடை முதலியன கொடுத்து மேலும் வேண்டும் திரவியங்களெல்லாம் கொடுத்து அவன் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். கவிஞனது வறுமையைப் போக்கி யிருக்கிறது இந்தப் பாட்டு. கவிதை உலகுக்கு ஒரு நல்ல பாட்டை உதவியிருக்கிறார் கவிஞர். இவரால், இவர், பாட்டால் இலக்கியப் பிரசித்தி பெற்றிருக்கிறது ஒரு சிறு ஊர், அந்த ஊர்தான் சக்திமுற்றம். அந்தச் சக்திமுற்றம் அதை யொட்டிய பட்டீச்சுரம், பழையாறை முதலிய ஊர்களுக்கே செல்கிறோம் நாம்.

சக்திமுற்றமும் பட்டீச்சுரமும் அடுத்தடுத்து இருக்கிற ஊர்கள், சக்திமுற்றத்தில் சிவக்கொழுந் தீசரும் பட்டீச்சுரத்தில் தேனு புரீசுவரரும் கோயில் கொண்டிருக்கிறார்கள், இந்தத் தலங்களை அடுத்தே சரித்திரப் பெருமையுடைய பழையாறை இருக்கிறது. இன்று இந்த வட்டாரத்தையே ஒரு சுற்றுச் சுற்றி விடலாம். பட்டீச்சுரம், சக்திமுற்றம் முதலிய தலங்களை உள்ளடக்கிய பெரும் பகுதியே பழையாறை என்ற பெயரில் விளங்கியிருக்கிறது அன்று. சோழ மன்னர்களின் சிறந்த தலை நகரங்கள், காவிரிப்பூம்பட்டினம், உறையூர், தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம் என்பதை அறிவோம். அவற்றை ஒத்த பெருமை உடையது பழையாறை, ராஜராஜனுக்கு முந்திய சோழர்கள் இருந்து ஆட்சி செலுத்திய இடம். ராஜராஜனே இங்கே இருந்துதான் வளர்ந்திருக்கிறான். காவிரியின் கிளை நதியான முடிகொண்டான், அரசிலாறு இவற்றுக்கிடையே ஐந்து மைல் நீளமும் மூன்று மைல் அகலமும் உள்ள பிரதேசமே பழையாறைப் பகுதி. இங்கே சோழ மன்னரது மாளிகைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பகுதியே சோழ மாளிகை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இன்னும் சோழர் படை எல்லாம் திரட்டி இங்கேயே நான்கு பிரிவாக வைத்திருக்கிறார்கள். அப் படைகள் இருந்த இடங்களே ஆரியப் படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர் என்று இன்றும் வழங்கி வருகின்றன.

பழையாறைப் பகுதி நான்கு சிறு பிரிவுகளுக்கு உட்பட்டிருக்கிறது; பழையாறை வடதளி, மேற்றளி,கீழ்த்தளி, தென் தளி என்று. தளி என்றால் கோயில் என்று பொருள். தாராசுரத்திலிருந்து தெற்கே மூன்று மைல் தொலைவில் இருக்கிறது வடதளி. ரோடு வளைந்து வளைந்து செல்லும். தாராசுரம் ஸ்டேஷனிலிருந்து வண்டி வைத்துக் கொண்டு செல்லலாம். கார் வசதி உள்ளவர்கள் காரிலும் போகலாம்.

தேரில் மேவிய செழுமணி

வீதிகள் சிறந்து

பாரில் நீடிய பெருமை

சேர்பதி பழையாறை

என்று சேக்கிழார் பாடுகிறார். ஆனால் இன்று அங்கு தேரும் கிடையாது. தேரோடும் வீதிகளும் கிடையாது. முதன் முதல் நாம் பழையாறை வடதளி என்ற பகுதியையே சென்று சேருவோம். அங்கு ஊர் என்று சொல்லும் அளவுக்கே வீடுகள் கிடையாது. ஒரேயொரு மாடக்கோயில் இடிந்து சிதிலமான நிலையில் இருக்கும். கோச்செங்கணான் கட்டிய மாடக் கோயிலாக இருக்கலாம். இந்த இடத்துக்கு அப்பர் வந்திருக்கிறார். அவர் வந்த போது சமணர்கள் இந்த வடதளிக்கு முன்னால் தங்கள் மடத்தைக் கட்டிக் கோயிலை மறைத்ததோடு, மூர்த்தியையும் தாழி ஒன்றால் மூடி வைத்திருக்கிறார்கள்! ‘வண்ணங்கண்டு நான் உம்மை வணங்கி அன்றிப் போகேன்' என்று அப்பர் அங்கே சத்தியாக்கிரஹமே பண்ண ஆரம்பித்திருக்கிறார். இறைவனும் அந்த வட்டார அரசன் கனவில் தோன்றி, தான் இருக்குமிடத்தை அறிவித்துச் சமணரது குறும்பை அடக்குமாறு சொல்லியிருக்கிறார். அரசனும் மறுநாள் அங்கு வந்து தாழியை அகற்ற வடதளி ஈசுவரும் வெளி வந்திருக்கிறார். இவரையே அப்பர்,

நீதியைக் கெட நின்று

அமணே உணும்

சாதியைக் கெடுமாச்

செய்த சங்கரன்

ஆதியைப் பழையாறை

வட தளிச்

சோதியைத் தொழுவார்

துயர் தீருமே

என்று பாடியிருக்கிறார். நாமும் அப்பரது அடிச்சுவட்டில் இந்தத் தர்மபுரி ஈசுவரையும் விமலநாயகியையும் வணங்கி மேற் செல்லலாம். அங்கு லிங்கத் திருவுரு, அம்மை வடிவம் தவிர வேறு விக்கிரகங்களே இல்லை. இக்கோயிலுக்குப் பக்கத்திலேயே துறையூர் சிவப்பிரகாசரது சமாதிக் கோயில் இருக்கிறது. அதிலுமே பல பகுதிகள் இடிந்து தான் கிடக்கின்றன. மேற்றளி, தென்தளி எல்லாம் எங்கேயிருந்தன என்று தெரிந்து கொள்ளுதல் எளிதன்று. நிரம்ப விவரம் தெரிந்தவர்கள் போல் அதையும் இதையும் காட்டுவார்கள் சிலர். நாம் அவர்களை யெல்லாம் பின்பற்ற வேண்டாம். வடதளியில் இருந்த பம்பைப் படையூர் சென்று தெற்கே திரும்பி, திருமலைராயன் ஆற்றைக் கடந்து பழையாறை கீழ்த் தளிக்குச் செல்லலாம். கீற்றளி, மேற்றளி என்றெல்லாம் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. இதுவே இன்று பழையாறை என்று வழங்குகிறது. இங்குள்ள சோமேசர்லோகாம்பிகை கோயில் பெரிய கோயில். சோழர் சிற்பப் பணிக்கு ஓர் எடுத்துக்காட்டு. வாயிலும் வாயிலை அடுத்த மதில் சுவரும் அச்சுவரில் உள்ள சிற்ப வடிவங்களுமே தக்க சான்று பகரும். ஆனால் கோயிலுள் நுழைந்தால், ஐயகோ! அந்தக் கோயில் சிதிலமாகக் கிடக்கும் நிலை கண்டு வருந்தவே செய்வோம். வெளிப் பிரகாரத்திலே தெற்கு நோக்கிய சந்நிதி, லோகாம்பிகை அம்மன் சந்நிதி, அது இருக்கிற நிலையில் அங்கு நுழையத் துணிவு வராது. என்றாலும் அங்குள்ள படிக்கட்டுகளிலே செதுக்கப்பட்டிருக்கும் பிரகலாத சரித்திரச் சிற்பங்களைக் காணாமல் நமக்குத் திரும்பவும் மனம் வராது. நரசிம்மன் இரணியன் போரில் பல காட்சிகள். கோயிலை வலம் வந்தால் நெருஞ்சிமுள் நம் காலைப் பதம் பார்க்கும். கருவறைக்குப் பின்னுள்ள சவரில் ஓர் அர்த்தநாரீசுவரர், அதையும் பார்த்துவிட்டுக் கோயிலுள் நுழைந்தால் முன் மண்டபத்திலேயே கயிலாய நாதர் நமக்குக் காட்சி கொடுப்பார். அவர் சாதாரணக் கயிலை நாதர் அல்ல.

மறு உற்ற பலர்க் குழவி

மடவார் அஞ்ச மலை துளங்க

திசை நடுங்கச் செறுத்து நோக்கி

செறுஉற்ற வாள் அரக்கன்

வவிதான் மாளத்திரு அடியின்

விரல் ஒன்றால் அலற ஊன்றிய

கயிலைநாதர் அல்லவா? ராவணன் கயிலையின் அடியில் கிடந்து நைவது, அம்மை அஞ்சி அத்தனை அணைவது, அத்தனோ அமைதியாய் இருப்பது எல்லாம் மிக்க அழகாகச் சிலை உருவில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைப் பார்த்ததுமே முன்னர் குத்திய முள்ளின் வலி எல்லாம் மறைந்து போகும். இன்னும் கோயில் அர்த்த மண்டபம் நுழைந்து அங்கு 'கானத்து எருமைக் கருந்தலைமேல் நிற்கும்' அந்தக் கரிய துர்க்கையையும் வணங்கி விட்டு வெளியே விரைவிலேயே வந்துவிடலாம். ஆம், எப்போது கீழே விழுவோம் என்று காத்து நிற்கும் மண்டபம் நம் தலைமேல் விழுந்து வைக்கக் கூடாதல்லவா? இந்தக் கோயிலைப் பார்த்து விட்டுத் திரும்பும்போது நம் உள்ளத்தை ஒன்று அழுத்தவே செய்யும். 'பண்டைப் பெருமையுடைய பழையாறைக் கோயிலிலே இண்டைச் செடி முளைத்து எழில் இழந்து நிற்பதெல்லாம் நம் கலை ஆர்வம் நலிந்ததற்குச் சான்றுதானே' என்று சொல்லவும் தோன்றும்.

இந்தப் பழையாறையைப் பார்த்த சூட்டிலேயே காலைக் கொஞ்சம் எட்டிப் போட்டுக் கிழக்கே ஒரு மைல் நடந்து நாதன் கோயில் என்று வழங்கும் நந்திபுர விண்ணகரையுமே பார்த்து விடலாம். இங்கே விண்ணகரப் பெருமாளும் சண்பக வல்லியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இங்கே பெருமாளைத் திருமங்கை மன்னன் ஒரு பதிகம் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார். இந்தப் பெருமாளையும் கண்டு தரிசித்து விட்டு மேற்கு நோக்கி விரைவாகவே வரலாம். அப்போது தானே இன்று இவ்வட்டாரத்தில் பிரபலமாக இருக்கும் பட்டீச்சுரம், சக்தி முற்றம் என்ற தலங்களைத் தரிசிக்கலாம்.

காமதேனுவின் புதல்வியர் நால்வரில் பட்டி ஒருத்தி, அவள் பூஜித்த தலம் பட்டீச்சுரம். இறைவன் பெயர் பட்டீச்சுரர். அவரைத் தேனுபுரீசர் என்றும் அழைப்பார்கள். அம்பிகை பல்வளைநாயகி, ஞானாம்பிகை என்றும் அழைக்கிறார்கள். இராவணனை வதஞ் செய்த ராமரை சாயஹத்தி பற்றிக்கொள்கிறது. அவர் இத்தலத்துக்கு வந்து பட்டீச்சுரரை வணங்கி தோஷம் நீங்கியிருக்கிறார். அவரது கோதண்டத்தால் கீறிய இடத்திலே ஒரு கிணறு. அதுவே தனுஷ்கோடி தீர்த்தம். தொலை தூரத்தில் உள்ள தனுஷ்கோடி செல்ல இயலாதவர்கள், இக்கிணற்று நீரிலே மார்கழி அமாவாசை அன்று மூழ்கி, அத் தனுஷ்கோடியிலே நீராடிய பலனைப் பெறுகிறார்கள்.

கோயிலை நான்கு கோபுரங்கள் அலங்கரிக்கின்றன. மேலப் பிரகாரத்தில் கருவறைக்குத் தெற்கே சண்முகர் வள்ளி தெய்வயானையோடு நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். நல்ல கம்பீரமான திருஉரு. இந்தக் கோயிலில் பார்க்க வேண்டிய கற்சிலை பைரவர் திரு உருவம். கண்டாரை அஞ்சவைக்கும் கோலம்; பெரிய வடிவம். இவற்றை எல்லாம்விட வடக்கு வாயிலில் கோயில் கொண்டிருக்கும் துர்க்கையே இங்குள்ள பிரபலமான தேவதை. எட்டுக் கரங்கள், சூலம், தனு, கசம், அங்குசம், சங்கு ஏந்திய கோலம், மகிஷன் தலைமேல் ஏறி நிற்கிறாள்.

ஏழு எட்டு அடி உயரத்தில் கருணை பொழியும் வதனம், அவள் பெரிய வரப்பிரசாதி என்பதைக்காட்டும். பழைய சோழ மன்னர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டவள். சோழ மாளிகையின் காவல் தெய்வமாக நின்றவளையே இக்கோயில் கோட்டை வாயில் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர். பட்டீச்சுரம் கோயிலில் யாரைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் துர்க்கையைத் தரிசியாது வந்து விடாதீர்கள்.

தேனுபுரீசுவரரை வணங்கிவிட்டு அடுத்துள்ள தனிக்கோயிலில் இருக்கும் பல்வளை நாயகியையும் சென்று வணங்கலாம். இங்கு மகாமண்டபத்தில் தம்பதிகள் இருவர் இருப்பர். அவர்களே நாயக்க மன்னரிடம் அமைச்சராக இருந்த கோவிந்தப்ப தீக்ஷிதரும் அவர் மனைவியும், இவரே இக்கோயிலின்பெரும் பகுதியைத் திருப்பணி செய்திருக்கிறார்.

இனிக் கொஞ்சம் வடக்கு நோக்கி நடந்தால் சக்தி முற்றம் வந்து சேரலாம். சக்திமுற்றம் இயற் பெயரா? காரணப் பெயரா? என்று ஒரு கேள்வி. இயற் பெயரே என்பர் ஒரு சிலர். ஆனால் கோயில் நிர்வாகிகள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அன்று கம்பை நதிக் கரையில் அம்மை தவ்ஞ்செய்ய, அப்போது ஆறு பெருகிவர அதற்கு அஞ்சாது அம்மை பூஜித்த லிங்கத்தையே கட்டித் தழுவ, அதனால் இறைவன் அம்மையின் வளைத்தழும்பும் முலைத்தழும்பும் பெற்றார் என்பது புராணக் கதை. அப்படி சக்தி. தழுவி முத்தம் கொடுத்த தலமே இது என்பர். இதற்கு ஆதாரமாகக் கோயிலுள் சென்றதும் அர்த்த மண்டபத்தை அடுத்த இடத்துக்கு அழைத்துச் செல்வர். அங்க ஒரு மாடக்குழியில் அம்மையின் தவக்கோலம் செதுக்கப்பட்டிருக்கும். மேலும் நிர்வாகிகள் கூற்றை வலியுறுத்த, அத்தனைத் தழுவிக் கட்டிப்பிடிக்கும் அன்னையுமே சிலை உருவில் அங்கே இருப்பர். இன்னும் இத்தலத்துக்கு வந்த அப்பர்,

{{left margin|2em|

மட்டார் குழலி மலைமகள்

பூசை மகிழ்ந்து அருளும்

இட்டா திருச்சக்தி முத்தத்து

உறையும் சிவக்கொழுந்தே

} என்று வேறு பாடிவிட்டுப் போயிருக்கிறார். இனியும் சந்தேகம் ஏன்? சக்தி முத்தம்- காரணப் பெயரே என்று முடிவுகட்டி விடலாமே?

6. விண்ணகர் ஒப்பிலியப்பன்

பக்த குசேலர் கதை நாம் அறிந்த ஒன்று. அதிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி ஏகமாகப் பிரசாரம் நடக்கும் இந்நாளில் அவரது கதையை அறியாதிருப்போமா? அப்படி யாராவது தெரியாதிருந்தால் அவர்களுக்காகவே சொல்கிறேன். அவந்தி நகரிலே சுதாமா என்று ஓர் அந்தணர். அவருக்குச் சுசீலை என்று ஒரு மனைவி, இவர்களுக்கு இருபத்து ஏழு பிள்ளைகள், பின்னர் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடக் கேட்பானேன்? கூழுக்கும் கஞ்சிக்கும் ஏக அடிபிடி சுதாமாவோ எதிலுமே பற்றுடையவராக இல்லை. உண்ணும் உணவிலே பற்றாக்குறை என்றால், உடுக்கும் உடையைப் பற்றிக் கேட்கவாவேணும், ஏதோ கிழிந்த துணிகளை ஒட்டுப்போட்டு அணிந்திருப்பார். அப்படிப் பொலிவற்ற ஆடை அணிந்தது காரணமாகவே குசேலர் என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரே நிலைக்கவும் செய்தது.

இந்தக் குசேலரை ஒருநாள் அவரது மனைவி அணுகினாள். உண்ண உணவின்றி மக்கள் தவிப்பதை எடுத்துக் கூறினாள், முன்னாள் சாந்தீப முனிவரிடம் அவரோடு ஒரு சாலை மாணாக்கனாக இருந்த கண்ணன் இன்று துவாரகையில் யாதவ மன்னனாக இருந்து செல்வம் கொழிக்க வாழ்வதை எடுத்துக் காட்டினாள். அந்தப் பழைய பள்ளித் தோழனிடம் தன் நிலைமையை எடுத்துக் கூறினால் ஏதாவது அவன் செய்ய மாட்டானா? என்று கேட்டாள். குசேலரும் மனைவியின் விருப்பப்படியே துவாரகை சென்றுவர இசைந்தார்; புறப்பட்டார். பெரியவர்களைப் காணப் போகும்போது சும்மா போகக் கூடாதே என்று கொஞ்சம் அவல் இடித்து அதை ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொடுத்து அனுப்பினாள் மனைவி. எத்தனையோ அல்லல்களையெல்லாம் சமாளித்துத் துவாரகைக்கு வந்து சேர்ந்து விடுகிறர் குசேலர். அரண்மனைக்குள் நுழைந்ததும் கண்ணன் எதிர் கொண்டழைத்து மார்புறத் தழுவிக் குசலம் விசாரிக்கிறான்.

அப்படிக் கொஞ்ச நேரம் அளவளாவிய பின், ‘எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்? அண்ணி சும்மா அனுப்பி யிருக்க மாட்டாளே!' என்று துளைத்துத் துளைத்து, அவர் கொண்டு வந்திருந்த அவல் பொட்டணத்தை அவிழ்த்து அதில் ஒரு பிடி அவல் எடுத்து வாயில் போட்டு, மென்று சுவைக்க ஆரம்பித்து விடுகிறார் கண்ணன். இதை வல்லூர் தேவராஜுப் பிள்ளை,

{{left margin|2em|

மலிதரும் அன்பின் தந்த

வண்பொதி அவிழ்த்து நோக்கி

வலிதரும் அவற்றுள் நன்று

வாய்த்தது நமக்கு இது என்னா

ஒலிதரு கழற்கால் ஐயன்

ஒரு பிடி அவலை, காதல்

பொலிதர எடுத்து வாயில்

போட்டுக் கொண்டான் மாதோ.

} என்று தமது குசேலோபாக்கியானத்தில் பாடுகிறார். ஆம்! அன்று கோகுலத்தில் உறியில் உள்ள வெண்ணெயை எல்லாம் வாரி உண்டு சுவைத்தவன் இன்று குசேலர் கொண்டு வந்த அவலையும் அள்ளி அள்ளித் தின்றான். அன்றே குசேலர் வறுமை நீங்குகிறது என்பது கதை. பக்தர் கொண்டு வரும் பொருள் அருமையானதாக இருக்க வேண்டும் என்பதில்லை கண்ணனுக்கு. பக்தி பூர்வமாக அர்ப்பணிக்க வேண்டுவது தான் முக்கியம். இல்லாவிட்டால் சர்க்கரையோ தேங்காய்த் துருவலோ கலவாத சாதாரண அவலைச் சுவையுடையது என்று விருப்போடு உண்டிருப்பானா? அவலாவது போகட்டும். ஏதோ கொஞ்சம் சுவையுடையதாக இருக்கும். உப்பே இல்லாத பண்டம் சுவையாக இருக்குமா? அப்படி உப்பில்லாத உணவையே ஏற்று அதை உண்டு மகிழ்ந்ததோடு, பின்னரும் தனக்குச் சமைக்கும்போது உப்பில்லாமலே சமைக்கட்டும் என்று உத்தரவு போட்டிருக்கிறானே, இது மாத்திரமா? இது காரணமாக உப்பிலியப்பனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறானே அவன். ஆம்! அந்த உப்பிலியப்பன் கோயில் கொண்டிருக்கும் திருவிண்ணகர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

உப்பிலியப்பன் கோயிலுக்குக் கும்பகோணத்திலிருந்தே பஸ் போகிறது. அல்லது திருநாகேசுவரம் ஸ்டேஷனிலும் இறங்கலாம். இரயில்வே நிர்வாகிகளே உப்பிலியப்பன் கோயிலுக்கு இங்கே இறங்கவும் என்று பலகையில் எழுதி விளம்பரப்படுத்தி யிருக்கிறார்கள். வண்டிகள் எல்லாம் சௌகரியமாகக் கிடைக்கும். அங்கிருந்து கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உப்பிலி அப்பன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயில் செல்லும் வழியிலே திருநாகேசுரத்துக் கோயில் வேறே இருக்கிறது. சந்திரன், சூரியன், ஐந்து தலை நாகம் எல்லாம் பூஜித்த தலம். சம்பந்தர், அப்பர், சுந்தரர் எல்லாம் வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள், சந்திரனோடு சூரியர் தாம் உடன்

வந்துசீர் வழிபாடுகள் செய்தபின்

ஐந்தலை அரவின் பணிகொண்டு அருள்

மைந்தர் போல் மேனி நாகேச்சுரரே

என்று அப்பர் பாடியிருக்கிறார். சேக்கிழார் மிக மிக ஈடுபட்டிருக்கிறார் இக்கோயிலில். அது காரணமாகவே தம் சொந்த ஊராகிய குன்றத்தூரிலே கோயில் ஒன்று கட்டுவித்து அதற்குத் திருநாகேச்சுரம் என்றே பெயரிட்டிருக்கிறார், ஆதலால் நாமும் வண்டியை விட்டு இறங்கிக் கோயிலுள் சென்று சண்பகாரண்யேசுரர், குன்றமுலைநாயகி முதலியோரை வணங்கிய பின்பே மேல் செல்லலாம்.

இக்கோயிலுக்குத் தெற்கே அரை மைல் தூரத்தில் தான் உப்பிலியப்பன் கோயில் இருக்கிறது. கோயில் வாயிலை ஒரு நல்ல கோபுரம் அணி செய்கிறது. இதனைப் பிரமனே அமைத்து விண்ணகரம் என்றே அழைத்திருக்கிறான். ஆழ்வார்களும் அப்படியே மங்களாசாஸனம் செய்திருக் கிறார்கள். இன்னும் இதனைத் துளசி வனம், மார்க்கண்டேய க்ஷேத்திரம் என்றும் கூறுவார்கள். பெண்ணுருவம் கொண்ட துளசிக்குப் பெருமானிடம் மிகுந்த ஈடுபாடு. இலக்குமியை மட்டும் மார்பில் அணிந்திருக்கிறாரே எனக்கும் ஏன் அங்கு இடம் தரக்கூடாது? என்பது அவளது பிரார்த்தனை. அதற்குப் பகவான் சொன்ன பதில் இதுதான் : 'பூலோகத்தில் பூதேவி என்னை மணக்க விரும்பிக் காவிரிக்கரையிலே அவதரிப்பாள், அவளையும் முந்திக்கொண்டு அங்கு ஒரு துளசிச் செடியாகச் சென்று நீ இரு. உன் காலடியிலே பூமிதேவி அவதரிப்பாள். அன்று முதல் உனக்கு ஒரு புனிதம் ஏற்பட்டு விடும். உன் இதழ்களை என் மார்பில் அணிந்து கொள்கிறேன். மேலும் உன் இதழ்களால் என்னை அர்ச்சிக்கிறவர்கள் எல்லா நலமும் பெறுவர்' என்று அனுக்கிரகிக்கிறார்.

அப்படியே துளசி வந்து செடியாக வளர்ந்து நின்ற தலமே இவ்விண்ணகர். அது சரிதான் 'அவர் ஏன் உப்பிலியப்பன் என்று பெயர் பெற்றார் என்று சொல்ல வில்லையே இன்னும்?' என்று நீங்கள் ஆதங்கப்படுவதை அறிவேன். இங்கு இத்தலத்தில்தான் மார்க்கண்டேயர் அமரத்துவம் பெற்றபின் வந்த தங்கியிருக்கிறார். பூதேவியையே தம் மகளாகப் பெறத் தவஞ் செய்திருக்கிறார். அவர் விரும்பியபடியே அந்தத் துளசி வனத்தில் ஒரு துளசிச் செடியின் அருகில் வந்து பெண் மகவாகப் பிறந்திருக்கிறார் பூதேவி. குழந்தையை எடுத்து வளர்க்கிறார்; பெண் மணப்பருவம் எய்துகிறாள். எம்பெருமான் கிழ வேதிய வடிவில் வந்த மார்க்கண்டேயரிடம் அவர் மகளாம் பூதேவியை தமக்கு மணம் முடித்துக் கொடுக்க வேண்டுகிறார். வந்திருக்கும் முதியவரின் கோலம் கண்டு, இல்லை என்று சொல்லாமல், ஏதாவது காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கலாமா என்று பார்க்கிறார் மார்க்கண்டேயர்.

'என் பெண் மிகமிக இளம் பெண் ஆயிற்றே. சரியாய்ச் சமைக்கத் தெரியாதே, உணவின் சுவையைக் கூட அறியாளே, நிரம்பச் சொல்வானேன். கறிகளில் உப்புச் சேர்க்கக்கூட அவளுக்குத் தெரியாதே' என்று கூறுகிறார். பெருமாளோ விடுகிறவராகக் காணோம். 'அது தெரியாதா! எனக்கு உணவில் உப்பே சேர்க்க வேண்டியதில்லையே, உப்பில்லாப் பத்தியச் சாப்பாடே சாப்பிட நான் தயார்' என்கிறார். அப்படியும் அவளை மணம் முடித்துத் தர இசையாவிட்டால் தம் உயிரையே விட்டு விடுவேன் என்கிறார்.

பின்னர் தம் நிஜ உருவையுமே காட்டுகிறார். ஆழியும் சங்கும் ஏந்தி நிற்கும் பரந்தாமனைக் கண்டு தொழுது தன் பெண்ணாம் பூமி தேவியை மணம் முடித்துக் கொடுக்கிறார் மார்க்கண்டேயர். பெருமாளும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற அன்று முதல் தமக்குச் செய்யும் நைவேத்தியங்களில் உப்பே சேர்க்க வேண்டாம் என்று உத்தரவிட்டு விடுகிறார். (அதனால் பரவாயில்லை. உப்பில்லாத வெண்பொங்கலைவிட உப்பேசேர்க்காத சர்க்கரைப் பொங்கலையே நிவேதனம் பண்ணச் சொல்லி வாங்கி நாம் சாப்பிட்டால் போகிறது.) இப்படித் தான் இங்குள்ள பெருமாள் உப்பிலி அப்பன் என்ற பெயரோடு நிலைத்திருக்கிறார். இது தல மான்மியம் கூறும் வரலாறு. ஆராய்ச்சியாளர்கள் கூறுவது மற்றொரு வரலாறு. அது இதுதான். இத்தலத்துக்கு நம்மாழ்வார் வந்திருக்கிறார்.

என்னப்பன் எனக்காய் இருளாய்

என்னைப் பெற்றவனாய்

பொன்னப்பன், மணியப்பன்

மூத்தப்பன் என்னப்பனுமாய்

மின்னப் பொன் மதில் சூழ்

திருவிண்ணகர் சேர்ந்த அப்பன்

தன் ஒப்பார் இல் அப்பன்

தந்தனன் தன் தாள் நிழலே

என்று பாடியிருக்கிறார். தன்னை ஒப்பார் இல்லாத அப்பனாக அவன் விளங்குவதால் ஒப்பிலி அப்பன் என்று வழங்கப்பட்டிருக்கிறான். அந்த ஒப்பிவி அப்பனே நாளடைவில் திரிந்து உப்பிலி அப்பன் ஆகியிருக்கிறான் என்பர். கோயில் நிர்வாகிகள் விசாரித்தால் அவன் ஒப்பிலி அப்பன் மாத்திரமல்ல, உப்பிலி அப்பனும் கூடத்தான் என்பார்கள். நம்மாழ்வாருக்கு இத்தலத்துப் பெருமான் ஐவகைக் கோலம் காட்டியிருக்கிறான். அதனால் தானே பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் என்றெல்லாம் பாடியிருக்கிறார். அவன் ஐந்து அப்பன் மாத்திரம் என்ன? ஆறு அப்பனாகவே இருக்கட்டுமே. நிர்வாகிகள் மனம் வருந்தாமல் இருக்க உப்பிலி அப்பனையுமே ஒப்புக் கொள்வோமே.

இனி நாம் கோயிலுள் நுழையலாம். நுழைந்ததும் கோயிலின் வடபுறம் இருப்பது 'அஹோராத்ர புஷ்கரிணி.' இதைப்பற்றி ஒரு வரலாறு. தேவசர்மா என்பவன் ஜைமினி முனிவரின் சாபத்தால் கிரௌஞ்சப் பட்சியாகி இந்தப் புஷ்கரிணியை அடுத்துள்ள ஒரு மரத்தின் கிளையில் இருந்திருக்கிறான். ஒரு நாள் இரவு புயல் அடித்து மரத்தின் கிளை ஒடிந்தபோது புஷ்கரிணியில் விழுந்து தன் சாபம் நீங்கியிருக்கிறான். புண்ணிய தீர்த்தங்களில் இரவில் நீராடக்கூடாது என்பது பொது விதி. அதற்கு விலக்காக இரவில் நீராடிய கிரௌஞ்சப் பட்சியும் சாப விமோசனம் பெற்றதால் இந்தப் புஷ்கரிணி அஹோராத்ர புஷ்கரிணி என்று பெயர் பெற்றிருக்கிறது.

கோயிலுள் நுழையலாம். கருவறையிலே ஒப்பிலி அப்பன். கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும் பூமிதேவி நாச்சியார். வடக்கு நோக்கி இருந்த கோலத்திலும், மார்க்கண்டேயர் கன்னிகாதானம் செய்து கொடுக்கும் கோலத்திலும் காட்சி கொடுக்கின்றனர். ஒப்பிலி அப்பன் உண்மையிலேயே தன் ஒப்பார் இல் அப்பன் தான். கிட்டத்தட்ட எட்டடி உயரம். கம்பீரமான தோற்றம், பால் வடியும் முக விலாசம். அரையிலே பொன்னாடை, இரண்டு கைகளில் ஆழியும் சங்கமும், ஒரு கை அரையில் பொருந்த மற்றொன்று கன்னிகாதானத்தை ஏற்கும் முறையில் அமைந்திருக்கிறது . அழகனுக்கு ஏற்ற அழகி பூதேவி. இக்கோயிலில் அம்மைக் கென்று தனிச் சந்நிதி கிடையாது. இருவரும் அத்தனை ஐக்கியம்! இங்கு நடக்கும் திருநாட்களில் சிறப்பானது திருக் கல்யாண மகோத்சவம்தான். ஐப்பசி மாதம் திருவோணத்தில் தொடங்கிப் பத்து நாட்கள் சிறப்பாக நடக்கும்.

இந்த ஒப்பிலியப்பனைப் பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆக நால்வரும் பாடி மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள். நம்மாழ்வார் பாடிய ஐவரைப் பற்றித்தான் முன்னமேயே தெரிந்து கொண்டிருக்கிறோமே. இவர்களின் மணி ஆப்பனுக்கு ஒரு சந்நிதி நந்தவனத்துக்குள் இருக்கிறது. அது சிதிலமாக இருப்பதால் திருப்பணி நடக்க ஏற்பாடாகியிருக்கிறது. அதனால்தானோ - என்னவோ செப்புச் சிலை வடிவில் உள்ள மணியப்பன் விண்ணகர் அப்பனோடு கருவறையிலேயே எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள உற்சவர் ஏகபத்னி விரதரே. 'இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்ற செவ்விய வரம்பில் நிற்கிறார் போலும். ஆனால் யார் கண்டார்கள்? அவருடைய மார்பில் வக்ஷஸ்தலத்தில் சிதேவி இல்லை என்பதை. அவர்தான் ஆடையும் நகைகளும் அணிந்து மார்பை நன்றாக மறைத்துக் கொண்டிருக்கிறாகே ஒப்பிலி, அப்பனாம். விண்ணகரப்பனை, மணியப்பனை எல்லாம் வணங்கியபின் இந்தக் கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளிலும் வணங்கலாம். இங்குள்ள பெருமானை அர்ச்சகர்கள் 'சர்வாங்க சுந்தராய நம: ஓம், காவேரி தீர ரஸிகாய நம: ஓம் என்றெல்லாம் அருச்சிப்பார்கள். இவன் காவேரி தீரத்தை நாடி வந்ததால் இவனைத் தேடிக் கங்கை, யமுனை, கோதாவரியும் ஓடி வந்திருக்கிறார்கள். கோவிலுக்குத் தெற்கே ஓடும் நாட்டாறே தக்ஷிண கங்கை, அதற்கும் தெற்கே ஓடும் கீர்த்திமானாறே தக்ஷிண கோதாவரி, அதற்கும் தெற்கே ஓடும் அரசிலாறே தக்ஷிண் யமுனை. வசதி உள்ளவர்கள் எல்லாம் நதிகளில் மூழ்கி, புண்ணியப் பேறுகள் பெறட்டும்.

இந்த விண்ணகரத்துக் கார்மேனிக் கண்ணனை முப்பது பாசுரங்களால் பாடிய மங்கை மன்னன் வேண்டேன் மனை வாழ்க்கையை' என்று விரக்தியோடு பேசியிருக்கிறார். அந்த மனை வாழ்க்கையை அவர் விரும்பாதது எந்த நிலையில் என்று தெரிய அவர் பாசுரத்தையே படிக்கவேணும்.

அண்ணல் செய்து, அலைகடல்

கடைந்து, அதனுள் கண்ணுதல்

நஞ்சு உண்ணக் கண்டவனே!

விண்ணவர் அமுது உண்ண

அமுதில் வரும் பெண்ண முது

உண்ட எம்பெருமானே!

ஆண்டாய் உனைக் காண்பது

ஓர் அருள் எனக்கு

அருளிதியேல்

வேண்டேன் மனை வாழ்க்கையை

விண்ணகர் மேயவனே!

என்பது அவரது பாடல். நடராஜனது எடுத்த பொற்பாதம் காணப் பெற்றால், மனிதப் பிறவி வேண்டுவதே என்று பாடினார் அப்பர். இவர் விண்ணகரப்பனைக் காணும் அருள் கிடைத்தால் வேண்டேன் மனை வாழ்க்கையை என்கிறார். நாம் யாரைப் பின்பற்ற? மனை வாழ்க்கையில் இருந்து வாழ்ந்துதான் அதில் உள்ள துயர்களை யெல்லாம் அறிவோமே. ஆதலால் நாம் விண்ணகரத்து ஒப்பிலியப்பனைத் தரிசித்துக் கொண்டே மகிழ்ச்சி பெறலாமே. நாம் மங்கை மன்னன் கட்சியிலேயே சேர்ந்து, வேண்டோம் இம்மனை வாழ்க்கை என்றே சொல்லுவோம். 'வேண்டின் உண்டாயில் துறக்க' என்றுதானே வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

7. நாச்சியார் கோயில் நாச்சியார்

பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில் ஒரு காதல் கதை. ஆம், அந்தக் ‘கற்று அறிந்தார் ஏத்தும் கலியில் எத்தனை கதைகள்! நான் சொல்லும் கதை பலர் படித்து அனுபவித்ததுதான். ஒரு பெண்; அவள் சிறுமியாக இருக்கும்போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கூடிச் சிறு வீடு கட்டி, சோறு சமைத்து, விருந்தருந்தி எல்லாம் விளையாடுவாள். ஆண்பிள்ளைகளை அவள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை. அதனால் கோபமுற்ற அடுத்த தெருப்பையன் ஒருவன் வருவான்; இவளது பந்தை எடுத்துக் கொண்டு ஓடுவான்; கையால் கட்டிய சிறு வீட்டைக் காலால் அழிப்பான். இப்படிச் சிறு சிறு குறும்பு செய்வதே அவன் தொழில்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். குறும்பு செய்த பயலும் வளர்ந்து கட்டிளங்காளையாகிறான். ஒருவரையொருவர் பார்க்கின்றனர் ஒருநாள், அந்தப் பார்வையிலேயே காதல் பிறக்கிறது இருவருக்கும். என்றாலும், நெருங்கிப் பேசியதில்லை, பழகியதில்லை. தன் காதலை வெளியிட ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ள விரைகிறான் இளைஞன். துணிந்து கன்னிப் பெண்ணின் வீட்டுக்கே வருகிறான்; பெண்ணும் தாயும் தனித்திருக்கும் நேரத்திலே 'தாகமாயிருக்கிறது; கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என்கிறான். வீட்டிற்குள் இருந்த அம்மாவும், பெண்ணை அழைத்து 'பெண்ணே! இந்தப் பையனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடம்மா' என்கிறாள். பெண்ணும் ஒரு சிறு! செம்பிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு தலைவாயிலுக்கு வருகிறாள். வந்திருப்பவனைப் பார்க்கிறாள். அவன் தாகத்துக்குத் தண்ணீர் கேட்டு வந்தவனா? அவன் கொஞ்சம் அவசரக்காரனும் கூட; ஆதலால் நீர் கொண்டு வந்த பெண்ணின் கையைப் பற்றித் தன் பக்கலில் இழுக்கிறான். எவ்வளவு தான் காதல் வயப்பட்டாலும், இப்படித் திடீரென்று ஆடவன் கையைப் பற்றினால் கன்னிப் பெண் சும்மா இருப்பாளா? ‘அம்மா இவன் செய்வதைப் பாரம்மா' என்கிறாள். வீட்டிற்குள்ளிருந்த அம்மா, மகள் சத்தம் கேட்டு ஓடிவருகிறாள்.

அதற்குள் மகள் சுதாரித்துக் கொள்கிறாள். காதலனைச் காட்டிக் கொடுக்கவில்லை. அம்மா என்ன? என்ன?' என்று கேட்க, 'ஐயோ? இவருக்குத் தண்ணீர் குடிக்கும் போது விக்கி விக்கிப்புரையேறி விட்டது அம்மா! நான் பயந்தே விட்டேன்' என்று ஒரு புதிய நாடகமே நடிக்கிறாள். அம்மாவும் அவள் வார்த்தையை உண்மை என நம்பி, அவன் முகத்தைத் தடவிக் கொடுக்கிறாள். அப்போது பயல் சும்மாவா இருக்கிறான்; அம்மாவுக்குத் தெரியாமல் பெண்ணைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரிக்கிறான். ஆம், அவள் உள்ளத்தையும் அவன் தெரிந்து கொண்டான் அல்லவா? இப்படி ஒரு நாடகம். இந் நாடகத்தை மறுநாள் தன்னைத் தேடிவந்த தன் தோழியிடம் பெண்ணே சொல்கிறாள், அப்படிச் சொன்னதாகக் குறிஞ்சிக் கலியில் கபிலர் பாடுகிறார்.

கடர்த்தொடீஇ! கேளாம். தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய

கோதை பரிந்து. வரிப்பந்து கொண்டு ஓடி

நோதக்கசெய்யும் சிறுபட்டி, மேல் ஓர் நாள்

அன்னையும் யானும் இருந்தேமா. இல்லிரே!

உண்ணும் நீர் வேட்டேன் என வந்தாற்கு, அன்னை அடல்பொன் சிரகத் தால்வாக்கி சுடரிழாய்!

உண்ணும் நீர் ஊட்டிவா என்றாள் ; என, யானும்

தன்னை அறியாது சென்றேன். மற்று என்னை வளைமுன்கை பற்றிநலிய, தெருமந்திட்டு

அன்னாய் இவன் ஒருவன் செய்ததுகாண் என்றேனா, அன்னை அலறிப் படர்தர, தன்னையான்

உண்ணும்நீர் விக்கினான் என்றேனா, அன்னையும் தன்னைப்புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி

நகைக்கூட்டம் செய்தான், அக்கள்வன் மகன்

என்பது பாட்டு. பெண் எப்படித்தன் காதலைத் தோழியிடம் "நைஸாக' வெளியிடுகிறாள் என்பதை அறிந்து அறிந்து அனுபவிக்கிறோம் பாட்டைப் படிக்கிறபோதெல்லாம்.

இந்தக் 'கள்வன் மகன்' செய்த சிறு குறும்பையே அந்தக் கள்ளக் கண்ணனுமே செய்திருக்கிறான். கதை இதுதான் : திருநறையூர் என்னும் தலத்திலே மேதாவி முனிவர் இருந்து தவம் செய்கிறார். அவருடைய ஆசையெல்லாம் திருமாமகள், தனக்கொரு மகளாகப் பிறக்க வேண்டும் என்பதுதான், அவர் விரும்பிய வண்ணமே திரும்களும், முனிவரது பர்ணசாலையின் அருகிலே வஞ்சுள மரத்தடியில் சிறு குழந்தையாக அவதரிக்கிறாள். முனிவரும் அவளை எடுத்து வஞ்சுள வல்லி என்று பெயரிட்டு வளர்க்கிறார். அவளும் வளர்ந்து மங்கைப் பருவம் அடைகிறாள். அந்த நாராயணன் தான் எத்தனை நாட்களுக்குத் திருமகளைப் பிரிந்து இருப்பான்? (ஆம், இந்த பக்தர்கள் விரும்பும்போதெல்லாம் தான் பூதேவியும் சீதேவியும் ஏன் அந்த உமையும் கூடத் தங்கள் புருஷன் மாரைத் தவிக்க விட்டுவிட்டு, பூலோகத்தில், வந்து அவதரித்து விடுகிறார்களே! அத்தனை அன்பு தம் பக்தர்களிடம் அவர்களுக்கு, தம் கணவரிடம் வைத்திருக்கும் அன்பை விட). அவளைத் தேடிக் கொண்டு பூலோகத்திற்கு வருகிறான் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், வாசுதேவன் என்று ஐந்து உருத் தாங்கி வருகிறான். இந்தப் பஞ்ச வியூகப் பரமர்களையும் மேதாவி முனிவரது சீடர்கள் மணிமுத்தாற்றின் கரையிலே சந்தித்து முனிவரது ஆசிரமத்திற்கு அழைத்து வருகிறார்கள்.

ஐவரையும் அதிதிகளாக ஏற்று உபசரிக்கிறார் முனிவர். ஐவரில் நடுநாயகமாக அமைந்த வசுதேவருக்கு வஞ்சுள வல்லியின் மேலே ஒரு கண். உணவு அருந்தி விட்டுக் கையலம்பக் கிளம்பியபோது, முனிவர் தம் பெண்ணை தண்ணீர் கொடுக்கச் சொல்கிறார். தண்ணீர் கொண்டு வந்த தையலின் கையை வசுதேவன் பற்றுகிறான். உடனே வஞ்சுளவல்லி 'அப்பா! இவர் செய்வதைப் பாரும்' என்கிறாள். ஓடி வந்த மேதாவி முனிவர், தம் மகள் கைப்பற்றி நிற்கம் வசுதேவனைக் காண்கிறார். அவனது அக்கிரமத்தைக் கண்டு கோபங் கொள்கிறார். சாபம் கொடுக்கவே முனைகிறார்.

வசுதேவனோ இந்த இக்கட்டான நிலையை உணர்ந்து, சங்குசக்கரம் ஏந்திய தன் திருக்கோலத்தை உடனே காட்டுகிறான். வந்திருப்பவன் திருமகள் கொழுநனாம் நாராயணனே என்று அறிந்ததும் மேதாவி முனிவர் வாழ்த்துகிறார்; தம் மகளாம் வஞ்சுளவல்லியை வசுதேவன் வடிவில் வந்த நம்பிக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார். அந்தத் திருமணக் கோலத்திலேயே இந்த நறையூரிலே நம்பி நின்றருளுகிறான். மேதாவி முனிவர் கெட்டிக்காரர். திருமணம் முடியும் முன்பே, நறையூர் நம்பியிடம் சில நிபந்தனைகள் போடுகிறார். ஒன்று தமக்குப் பிறவாமையாகிய பேறு, மற்றொன்று அத்தலத்தில் வாழும் உயிர்களுக்கு எல்லாம் விண்ணகர வாழ்வு, மூன்றாவதாக அத்தலத்தில் எல்லாக் காரியங்களிலும் அக்ரஸ்தானம் தம் பெண்ணாகிய வஞ்சுளவல்லி நாச்சியாருக்கே என்பவை அவை.

நிபந்தனைகளுக்கு எல்லாம் உட்பட்டே நம்பி, நாச்சியாரைத் திருமணம் செய்து கொள்கிறான். அன்று முதல் நறையூர் என்ற பெயர் மங்கி நாச்சியார் கோயில் என்றே விளங்குகிறது அத்தலம். நறையூர் நம்பியும், அன்று முதல் 'ஹென்பெக்ட் ஹஸ்பெண்டாகவே' அத்தலத்தில் வாழ்கிறான்! அந்த நாச்சியார் கோயிலுக்கே இன்று செல்கிறோம் நாம்.

நறையூர் என்னும் இந் நாச்சியார் கோயில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் ஆறு மைல் தொலைவில் இருக்கிறது. கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கினால் வண்டி கிடைக்கும்; பஸ் கிடைக்கும்; ஏன்? கார் வேண்டுமானாலும் கிடைக்கும். செல்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்றால் கண்ணை மூடிக் கொண்டு நேரே நாச்சியார் கோயிலுக்கே சென்று விடலாம்.

சைவ வைஷ்ணவ வேற்றுமை எல்லாம் நமக்குக் கிடையாது என்று சொல்பவர்கள் இருந்தால் வழியில் உள்ள அரிசிற்கரைப் புத்தூர், நறையூர் சித்தீச்சுரம் என்னும் சிவன் கோயில்களிலும் இறங்கி அங்குள்ள சொர்ணபுரி ஈசுவரர், சித்தநாத ஈசுவரர் இவர்களையும் வணங்கிய பின் மேலே நடக்கலாம். நாராயணன் சிவனை வணங்கிப் பல வரங்களைப் பெற்றான் என்றுதான் சைவர்கள் கதை சொல்வார்கள். இவற்றிற்கெல்லாம் வஞ்சம் தீர்த்துக் கொள்கிறார்கள் வைஷ்ணவர்கள், பிரமன் தலையைக் கொய்த சிவபெருமான் கையில் அந்தக் கபாலம் ஒட்டிக்கொள்ள அதைக் களைய, சித்தநாத ஈசுவரர் நறையூர் நம்பியை வணங்கினார் என்பது புராண வரலாறு.

ஏதோ பெண் சாதிக்கு அடங்கி வாழ்பவர் என்றாலும், இப்படி சிவனுக்கும் மேற்பட்ட பரத்துவம் உடையவராக இருக்கிறாரே என்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. இனி நாச்சியார் கோயிலை நோக்கி நடக்கலாம். அந்தக் கோயிலையும் முந்திக், கொண்டு ஒரு பெரிய திருக்குளம் தோன்றும். 684 அடி நீளமும் 225 அடி அகலமும் உள்ள இந்தத் திருக்குளத்தை மணிமுத்தாறு என்று கூறுகிறார்கள், நறையூர் நம்பிக்கு அணிவிக்கத் திருப்பாற் கடலிலிருந்து வைர முடியைக் கருடாழ்வார் எடுத்துப் போகும்போது அதில் உள்ள மணி ஒன்று கழன்று விழுந்திருக்கிறது இக்குளத்தில். அதனால் தான் மணிமுத்தாறு என்கிறார்களாம். இது மிகப் புனிதமான தீர்த்தம்: இறங்கி நீராடுவதற்கு வசதியாகவும் இருக்கும். ஆதலால் நீராடிவிட்டே கோயிலுள் செல்லலாம். .

கோயில் வாயிலில், நிரந்தரமாகப் பந்தல் போட்டு வைத்திருக்கிறார்கள். கோயில் வாயிலை 75 அடி உயரமுள்ள கோபுரம் அழகுசெய்கிறது. கோபுர வாயிலில் ஒரு மாடத்தில் தும்பிக்கை ஆழ்வார் இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறார், அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லலாம். உள்ளே நுழைந்ததும் ஏதோ தெரியாத்தனமாக மதுரை திருமலை நாயக்கர் மஹாலுக்கே வந்து சேர்ந்து விட்டோமே என்று தோன்றும். அப்படி உருண்டு திரண்ட பெரிய தூண்கள் ஏந்தும் மண்டபம் ஒன்றைப் புதிதாகச் சமைத்திருக்கிறார்கள். மண்டபம் அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவம். ஆனால் அந்த கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் கட்டிடக் கலையோடு பொருந்துவதாக இல்லை. பரவாயில்லை. செய்ததை அழகாகச் செய்திருக்கிறார்களே என்று திருப்திப் பட்டுக் கொண்டே நடக்கலாம்.

கோயில் மிகவும் பெரிய கோயில், 690 அடி நீளம் 288 அடி அகலம் என்றால் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ளுங்களேன். இக் கோயில் விமானம் ஸ்ரீநிவாச விமானம் எனப் பெயர் பெறும். ஸ்ரீநிவாசன் மிகவும் மகிழ்ந்து உறையும் தலத்தில் உள்ள விமானம் ஸ்ரீநிவாச விமானமாயிருப்பது பொருத்தம் தானே. ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். இது ஸ்ரீநிவாசனுக்கு மட்டுந்தான் உகந்த தலம் என்பதல்ல; அந்த ஸ்ரீதேவிக்குமே தேன் அனைய இருப்பானது பற்றித் தானே நறையூர் என்றே பெயர் பெற்றிருக்கிறது. புதிதாய்க் கட்டிய மண்டபத் தினின்றும் விலகி விமான தரிசனம் செய்தபின் படிக்கட்டுகள் ஏறிக் கல்யாண மண்டபத்தைக் கடந்து, திரும்பவும் படிக்கட்டுகள் ஏறியே கருப்பக்கிருக வாயிலுக்கே வரவேணும். அங்கே கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நிற்பவனே ஸ்ரீநிவாசன் என்னும் நறையூர் நம்பி. அன்று மேதாவி முனிவருக்கு ஆழியும் சங்கமும் ஏந்திய கைகளை முன்னே நீட்டிக்கொண்டு எழுந்தருளிய அவசரத்திலேயே நிற்கிறான். இவருக்கு இரண்டே கைகள்தான். காட்சி கொடுக்கத் துடித்த அவசரத்தில் தனக்கு நான்கு கைகள் உண்டு என்பதைக்கூட அல்லவா இவர் மறந்திருக்கிறார்!

இந்திரநீலமொத்த இருண்டமேனி, குன்றாடும் கொழுமுகில் போல், குவளைகள் போல், குரை கடல்போல், நின்றாடும் கமல மயில்போல் நிறமுடைய பெருமான் அவன் என்றாலும் மேனியெல்லாம் தங்கக் கவசமும், அழகான ஆபரணங்களும் அணிந்து கொண்டே சேவை சாதிக்கிறான். இவருக்குப் பக்கத்திலே வஞ்சுளவல்லி, மன்னும் மரகதக் குன்றின் அருகே ஓர் இளம் வஞ்சிக்கொடி நிற்பதுபோல நிற்கிறாள். இந்த நம்பியை அடுத்தே அன்று அவருடன் வந்த சங்கர்ஷணர், பிரத்யும்னர், அநிருத்தர், புருஷோத்தமர் நிற்கிறார்கள். மூலவருக்கு முன்னால் உற்சவர் இருக்கிறார், எல்லா இடத்திலும் பூதேவி ஸ்ரீதேவி சமேதனாக நிற்பவர் இங்கே வஞ்சுள வல்லியோடு மாத்திரமே நிற்கிறார். இந்த வஞ்சுளவல்லியும், 'இத்தலத்தில் எனக்கே பிரதானம்' என்பதைச் சொல்லிக் கொள்கிறவள் போன்று ஓர் அடி எட்டி எடுத்து வைத்து முன்வந்து நிற்கிறாள். இந்தக் கோயிலிலும் நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது. ஆம், நறையூர் நம்பியே, நாச்சியார் நிழலிலே ஒதுங்கித்தானே வாழ்கிறார்.

நம்பி, நாச்சியார் எல்லோரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது இத்தலம்தானே கருட சேவைக்குப் பேர்போனது, கருவறையில் கருடனைக் காணோமே என்று கேட்கத் தோன்றும். அதற்குள் அர்ச்சர்கள் நம்மை அந்தப் பக்ஷிராஜன் சந்நிதிக்கே கூட்டிச்சென்று விடுவார்கள். இவர் நல்ல கருங்கல் உருவினர். கல்கருடன் என்ற பெயர் பெற்றவர். வாகான வடிவம், நீள்சிறகு, நீள்முடி, அகன்ற மார்பு, ஆஜானு பாகுவான தோற்றத்தோடு விளங்குவார் தனிக்கோயிலில். இந்தக் கோயில் பத்தரை அடிச்சதுரமே உள்ள சிறிய கோயில் தான். அங்கிருந்து வெளியே நான்கு பேர் எளிதாக எடுத்து வந்து விடுவார்கள்.

அதன்பின் அந்தப்பொல்லாத கருடாழ்வாருக்கு எங்கிருந்துதான் பலம் வருகிறதோ தெரியவில்லை . பின்னர் வெளியில் எடுக்க வேண்டுமானால் எட்டுப் பேர்களாகவும் இன்னும் படிகள் இறங்கும்போது முப்பத்திரண்டு பேர்களாகவும் ஸ்ரீபாதம் தாங்குகிறவர்கள் வளர்ந்து கொண்டே போவார்கள். தறையூர் நம்பி ஆரோகணித்து வரும் நாச்சியார் கோயில் கருடசேவை கண்கொள்ளாக் காட்சியே. மார்கழி, பங்குனி மாதங்களில் நடக்கும் இந்தச்சேவைக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகம். இவர் சிறந்த வரப்பிரசாதி. நறையூர் நம்பியிடம் கேட்டுப் பெறாத பிரார்த்தனைகளைக்கூட இவர் நிறைவேற்றி வைக்கும் ஆற்றல் உடையவர்.

அவருக்கு உவப்பான பலகாரம் அமுதகலசம் என்னும் மோதகம் தான். இந்த அமுதகலசம் என்றைக்கும். கிடைக்கும். கிடைக்காவிட்டாலும், காத்திருந்து பண்ணச் சொல்லி, பக்ஷிராஜனுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, ருசிபார்த்துவிட்டே கிளம்புங்கள். எக்காரணத்தையிட்டும் அமுத கலசம் அருந்த மறந்து விடாதீர்கள்.

இன்னும் இத்தலத்திலே, நரசிம்மன் சந்நிதி, ஆஞ்ச நேயர் சந்நிதி, ஆழ்வார்கள் சந்நிதி எல்லாம் பார்க்க வேண்டியவை. மேலும் எண்ணற்ற செப்பு வடிவங்கள் பெரிய அளவிலும் மிகச் சிறிய அளவிலும் ஏராளமாக இருக்கின்றன. இருப்பவைகளில் கலை அழகு நிரம்பியது யோக நரசிம்மரது வடிவம். சிறியவைகளை எல்லாம், நல்ல கண்ணாடிப் பெட்டியில் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். கலை அன்பர்கள் விரும்பினால் எடுத்துக் காட்டுவார்கள். இந்த நறையூர் நம்பியிடம் ஆறாத காதல் உடையவர் திருமங்கை மன்னன் என்பதை அவர் பாடிய நூற்றுப் பத்துப் பாசுரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இத்தலத்து ஸ்ரீனிவாசனே அவருக்கு முத்திராதாரணம் செய்து வைத்திருக்கிறார். இத்தலத்தைப்பற்றி, இங்குள்ள நம்பியைப்பற்றி அவர் பாடிய பாடல்கள் எல்லாம் எத்தனை தரம் படித்தாலும் தெவிட்டாதவை.

குலையார்ந்த பழுக்காயும்,

பசுங்காயும் பாளைமுத்தும்

தலையார்த்த இளங்கமுகின்

தடஞ்சோலைத் திருநறையூர்,

மலையார்ந்த கோலம் சேர்

மணிமாடம் மிகமன்னி

நிலையார் நின்றான். தன்

நீள்கழலே அடை நெஞ்சே

என்று நம்பியைப் பாடுவார். பின்னர்,

அம்பரமும், பெருநிலனும், திசைகள் எட்டும்,

அலைகடலும், குலவரையும், உண்டகண்டான்

கொம்பு அமரும் வட்மரத்தின் இலைமேல் பள்ளி

கூடினான் திருவடியே கூடகிற்பீர்?

வம்பு அவிழும் செண்பகத்தின் வாசமுண்டு

மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும்

செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்தகோயில் - * . - :திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே.

என்று நம்மை எல்லாம் கூவி அழைத்து அந்த நம்பியிடம் ஈடுபடுத்துவார். இந்தப் பாசுரங்கள் எல்லாம் அரங்கத்தில் துயிலும் அரவணையான். காதிலும் விழுந்திருக்கிறது. திருமங்கை மன்னன் நறையூர் நம்பிக்கு ஒரு பெரிய மடலும் அரங்கநாதனுக்கு ஒரு பெரிய மதிலும் கட்ட முனைந்தபோது அந்த அரவணையான், மங்கை மன்னனை அழைத்து “மதிலை அங்கே கட்டு, மடலை இங்கே பாடு” என்று வேண்டியிருக்கிறான். அத்தனை விருப்பம் அந்த அரங்கநாதனுக்கு மங்கை மன்னன் பாடல் பெற.

ஆனால் ஆழ்வாரோ இதற்கு இணங்கவில்லை. 'மடல் அங்கேதான் மதில் இங்கேதான்' என்று சொல்லி அரங்கன் வேண்டுகோளையே தட்டிக் கழித்திருக்கிறார். அத்தனை ஆர்வம் ஆழ்வார்க்கு நம்பியிடம்.

கோச்செங்கணான் கட்டிய மாடக்கோயில் பின்னர் வந்த மன்னர்களால் விரிவடைந்திருக்கிறது. அதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரிபுவன சக்கரவர்த்தி சடாவர்மன் சுந்தரபாண்டியன் நறையூரில் நின்றருளிய எம்பெருமானுக்கு ஒரு தலத்தையே சாஸனம் செய்திருக்கிறான். தஞ்சை ரகுநாத நாயக்கன் நாச்சியாருக்கு ஒரு மண்டபம் கட்டியிருக்கிறான்.

இன்னும் இதுபோன்ற எத்தனையோ தகவல்கள். நமக்குத் தகவல்கள் எதற்கு, நாச்சியாரும் நம்பியும் ஆட்கொள்ள முனைந்து நிற்கும்போது.

8. திருச்சேறை சாரநாதன்

முன்னர் நாம் வட ஆர்க்காடு மாவட்டத்தில் பாலாற்றின் கரையில் உள்ள பள்ளிகொண்டானுக்குப் போயிருந்த பொழுது ஒரு வரலாற்றைக் கேட்ட ஞாபகம் இருக்கும். அங்கு பள்ளி கொண்டிருப்பவர் ரங்கநாதன். காவிரியிலே துயிலும் ரங்கநாதரிடமிருந்து இவரைப் பிரித்துக்காட்ட இவரை உத்தர ரங்கநாதன் என்கிறார்கள். இந்த ரங்கநாதர் கோயிலிலே ஒரு சிறு இடம், கஸ்தூரி ரங்கநாதருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. விசாரித்தால் இந்தக் கஸ்தூரி ரங்கநாதரே அந்த உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றிக் கொடுத்தவர் என்பார்கள். (ஆம். காத்தற் கடவுளான ரங்கநாதரே இன்னொரு ரங்கநாதரால் காப்பாற்றப்பட வேண்டியவராக இருந்திருக்கிறார் என்பது விசித்திரம்தானே.)

அதாவது முஸ்லிம் மன்னர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து இங்குள்ள கோயில்களை இடித்துத் தகர்த்து மூர்த்திகளை உடைத்து எறிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். பள்ளிக்கொண்டானுக்கு வந்து விடுவார்கள் என்று அஞ்சிய பக்தர் மூலவர் படுத்துக் கிடக்கும் வாயிலை நன்றாகச் சுவர் வைத்து மறைத்துக் கட்டி விட்டு ஒரு சிறு ரங்கநாதரை உருவாக்கி அவரை ஒரு மடத்தில் கிடத்தி யிருக்கிறார்கள். படை எடுத்து வந்த முஸ்லிம் வெறியர்கள் கோயிலுள் நுழைந்ததும் அந்தச் சிறுரங்கநாதரே அங்கு கோயில் கொண்டிருப்பவர் என்று காட்டியிருக்கிறார்கள். 'ஓ! இது என்ன சோட்டா சாமி' என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு மேல் நடந்திருக்கிறார்கள் வந்தவர்கள். இப்படித்தான் இந்தச் சோட்டா சாமியாம் கஸ்தூரி ரங்கநாதர் மோட்டா சாமியாம் உத்தர ரங்கநாதரைக் காப்பாற்றியிருக்கிறார். இதைப்போலவே இன்னொரு கதை, திருச்சேறை என்ற தலத்திலே கோயில் கொண்டிருப்பவர் சாரநாதன்.

இந்தச் சாரநாதன் கோயிலிலே முன் மண்டபத்திலே ஒரு சிறு கோயில் ராஜகோபாலனுக்கு, இந்த ராஜகோபாலனே சாரநாதன் கோயில் உருவாவதற்குக் காரணமாக இருந்திருக்கிறான் என்பது வரலாறு. கதை இதுதான். தஞ்சையை ஆளுகிறான் அழகிய மணவாள நாயக்கன். இவன் மன்னார்குடியில் ராஜகோபாலன் கோயில் கட்டுவதில் முனைந்திருக்கிறான், தஞ்சை ஜில்லாவில் கல் கிடைப்பது அரிதாயிற்றே! அதற்காக வடக்கே எங்கிருந்தோ வண்டிகளில் கல் கொண்டுவர ஏற்பாடு செய்திருக்கிறான்.

நாயக்க மன்னனின் மந்திரி நரச பூபாலனுக்குச் சாரநாதனிடம் ஈடுபாடு. அந்தச் சாரநாதனுக்குத் திருச் சேறையில் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆசை. ஆதலால் மன்னார்குடிக்குச் செல்லும் கற்களில் வண்டிக்கு ஒரு கல்லைத் திருச் சேறையில் இறக்க உத்தர விடுகிறான். அரசர் பெருமக்களை அடுத்துத்தான் கோள் சொல்பவர்கள் இருப்பார்களே. அவர்களில் ஒருவன் மன்னனின் பணத்தையெல்லாம் மந்திரி திருச்சேறை சாரநாதனுக்குக் கோயில் கட்டுவதில் செலவு செய்கிறான் என்று கோள் சொல்லுகிறான்.

இதன் உண்மை அறிய விரும்புகிறான் அழகிய மணவாள நாயக்கன். விஷயம் தெரிந்துவிடுகிறது மந்திரி நரச பூபாலனுக்கு. மன்னன் வரப்போகிறான் என்ற உடனே இரவோடு இரவாய் ஒரு ராஜகோபாலன் தம்பதிகளை உருவாக்கி அவர்களுக்கு ஒரு சிறு கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்து தயாராய் வைத்திருக்கிறான்; மன்னன் வந்ததும் அந்தக்கோயிலைக் காட்டி மன்னனின் இஷ்ட தெய்வமான ராஜகோபாலன் கைங்கரியமே அங்கும் நடக்கிறது என்று காட்டியிருக்கிறான். மன்னனும் மகிழ்ந்து அந்தக் கோயில் கட்டும் செலவு முழுவதையுமே கொடுத்துத் திருப்பணியைப் பூர்த்தி செய்திருக்கிறான்.

இப்படித்தான் ராஜகோபாலனை முன் நிறுத்தித் திருச்சேறை சாரநாதன் தனக்குக் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறான். பள்ளி கொண்டானில் இடிக்க வந்தவர்களைத் தடுத்திருக்கிறான் கஸ்தூரி ரங்கநாதன். இங்கோ பணியைத் தடுக்க வந்த மன்னனை உற்சாகமாகப் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறான் ராஜகோபாலன், சாரநாதன் இவர்களையே காணச் செல்கிறோம் நாம் இன்று.

திருச்சேறை கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே திருவாரூர் செல்லும் பாதையில் எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது. காரிலோ, பஸ்ஸிலோ, இல்லை வண்டியிலோ வசதியாகச் செல்லலாம். கோயிலுக்கு முன்னாலே ஒரு பெரிய தெப்பக் குளம், அதையே சார புஷ்கரணி என்பார்கள். இதைச் சுற்றிவளைத்துக்கொண்டே சென்று புஷ்கரணிக்கரையில் இறங்கலாம். இங்கு கோயிலை விடப் புஷ்கரணியே சிறப்புடையது. நல்ல விசாலமான படிக்கட்டுகள் எல்லாம் கட்டி வைத்திருக்கிறார்கள். மற்ற புஷ்கரணிபோல் அல்லாமல் தெளிவான தண்ணீரையும் நிரப்பியிருப்பார்கள். கோயிலுக்கு வடக்கில் முடி கொண்டான் ஆறும், தெற்கே குடமுருட்டி ஆறும் ஓடுகின்றனவே! தெளிந்த தண்ணீர் நிறைவதற்குக் கேட்டானேன். இந்தச் சார புஷ்கரணி எப்படி உருவாயிற்று என்று தெரியவேண்டாமா? யுகப் பிரளய காலத்தில் மகாவிஷ்ணு பிரும்மாவை அழைத்து விரைவில் மண் எடுத்து அதில் ஒரு கடம் பண்ணி அதற்குள் சகல வேத ஆகட், சாஸ்திர புராண கலைஞானங்களையெல்லாம் ஆவாகனம் பண்ணிப் பத்திரப்படுத்தச் சொல்லியிருக்கிறார். அவரும் அப்படியே பல இடங்களில் மண் எடுத்துக் கடங்கள் பண்ணிப் பார்த்திருக்கிறார். அத்தனை கடங்களும் நிலைத்து நிற்காமல் உடைந்து உடைந்து போயிருக்கின்றன. கடைசியில் வியாசர், மார்க்கண்டேயர், பராசரர் முதலியோர் தவம் செய்த இடத்திற்கு வந்து மண் எடுத்துக் கடம் பண்ணியிருக்கிக்கிறார். அந்தக் கடம் பின்னம் அடையாமல் நிலைத்திருக்கிறது. அதில் வேதங்கள், ஆகமங்கள் எல்லாம் பதனப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதனாலேயே யுகப் பிரளய காலத்தில் அவை அழியாமல் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.

இப்படிப் பட்ட காரணமாகவே அத்தலம் சாரக்ஷேத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கடம் செய்ய மண் எடுத்த இடத்தையே சார புஷ்கரணியாக்கியிருக்கிறார். (மக்களாகிய நம்மை யெல்லாம் இந்தப் பிரமன் இப்படி மண்ணெடுத்து மண் எடுத்துத்தானே உருவாக்கியிருக்கிறான்! நாம் கூட இந்தச் சாரபுஷ்கரணி மண்ணால் ஆனவர் தாமோ என்னமோ! நம்மில் பலர் எல்லா வகையிலும் சாரம் அற்றவர்களாயிருக்கிறார்களே என்கிறீர்களா? அவர்களைச் செய்ய பிரமன் வேறு இடத்தில் மண்ணெடுத்திருப்பான் போலும்!) இந்தச் சார புஷ்கரணியில் நீராடியதும் முதல் முதல் சென்று தரிசிக்க வேண்டியது, அக்குளத்தின் மேல் கரையில் தென் மேற்கு மூலையில் அரச மரத்தடியில் இருக்கும் காவிரித் தாயாரைத்தான். அவள் மாமதலைப் பிரானாக அவதரித்த குழந்தையை அணைத்த வண்ணம் இருக்கிறாள்.

பிரம்மாவும் விஷ்ணுவும் வேறே அங்கே நின்று கெண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள் என்று தெரியத் தல புராணத்தையே புரட்ட வேண்டியதுதான். இந்தக் காவிரி இருக்கிறாளே, அவள் மிகவும் பெருமைக்காரி, பொறாமைக் காரியும் கூட. இவள் பொறாமையெல்லாம் அந்தக் கங்கை பேரிலேதான். கங்கையைப் பாடுபவர்கள் 'தெய்வப் பொன்னியே பொருவும் கங்கை' என்று பாடியிருந்தாலும், இவளது பொறாமை வளர்ந்தே வந்திருக்கிறது. ஒருநாள் விந்தியமலை அடிவாரத்தில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி முதலிய ஏழு கன்னிகைகளும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வான்வழிச் சென்ற விஸ்ரவசு என்ற கந்தர்வன் இக் கன்னிகையரை வணங்கியிருக்கிறான். 'யாரைக் கண்டு வணங்கினான் அவன்?' என்று ஒரு விவாதம் கிளம்பி யிருக்கிறது கன்னிகையரிடையே. விவாதத்துக்கு முடிவு காண பிரம்மாவையே அணுகியிருக்கிறார்கள்.

அவரோ மாவலியாம் அசுர மன்னனை வாழ்விக்க வந்த வாமனர் திரிவிக்கிரமனாக வளர்ந்து நின்ற போது அவரது திருவடியைத் திருமஞ்சனம் செய்து வைத்த கங்கையே புனிதமானவள் என்று சொல்லி விடுகிறார். மற்ற அறுவரில் ஐந்து பேர் மரியாதையாக ஒதுங்கிக் கொள்ளக் காவிரி மட்டும் இதை ஒப்புக் கொள்கிறாள் இல்லை. மிக்க ரோசத்தோடு கங்கையைவிடப் புனிதமானவளாகக் கருதப்பட வேண்டும் என்று நாராயணனை நோக்கித் தவம் புரிகிறாள். அவள் சாரக்ஷேத்திரத்தில் சார புஷ்கரணியின் கரையிலுள்ள அரச மரத்தடியில் இருந்து தவம் புரிகிறாள். அவள் தவத்துக்கு இரங்கி அந்த நாராயணன் தை மாதத்தில் புஷ்ய நக்ஷத்திரமும் குருவாரமும் பௌர்ணமியும் கூடிய சுபதினத்தில் ஒரு மதலையாய் அவதரித்து, காவிரித் தாயின் மடியில் தவழ்கிறான். அந்தக் குழந்தையே நாராயணன் எனக் காவிரி அறிகிறாள். அவள் விரும்பிய கருடாரூடராய் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்க் காட்சி தருகிறார். காவிரியும் அதுதான் சமயம் என்று மூன்று வரங்கள் கேட்டுப் பெறுகிறாள்.

பகவான் அந்தச் சாரக்ஷேத்திரத்திலேயே நித்ய வாசம் செய்ய வேண்டும் என்பது ஒன்று. அந்தத் தலத்திலே வாழ்கிற சகல உயிர்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டும் என்பது மற்றொன்று. தனக்குக் கங்கையினும் மேம்பட்ட பதவி வேண்டும் என்றும் வேண்டுகிறாள். காவிரி காரியவாதிதான். ‘கங்கையிற் புனிதமாய காவிரி' என்று ஆழ்வார்களால் பாடப் பெறும் பேறு பெற்று விடுகிறாளே. அதற்குத் தகுதியுடையவள் தான். கங்கை பரந்தாமனது கால்களைக் கழுவித் தானே புனிதம் அடைகிறாள்! இவளது மடியிலே அல்லவா அவன் தவழ்ந்து விளையாடியிருக்கிறான். இவள் புகழ் அடைவதற்குக் கேட்பானேன்! ஆகவே புஷ்கரணியின் கரையிலுள்ள காவிரித்தாய்க்கே நமது முதல் வணக்கம். இந்தப் புஷ்கரணியின் கீழ்க் கரையில் அனுமாரும் வடகிழக்கு மூலையில் தும்பிக்கை ஆழ்வாரும் சிலா உருவத்தில் இருக்கிறார்கள், இவர்களையுமே வணங்கி விட்டு மேல் நடக்கலாம்.

புஷ்கரணியின் மேல் கரையிலே ராஜகோபுரம் சுமார் 120 அடி உயர்ந்து நிற்கிறது. இந்தக் கோபுரத்தைக் கடந்தே முதல் பிரகாரத்துக்குச் செல்ல வேணும். அங்கு இடை நிலைக் கோபுரம் வேறே இருக்கிறது. அதையும் கடந்தே இரண்டாம் பிரகாரம். அதை அடுத்தே கல்யாண மண்டபம். இந்த மண்டபத்தின் வடபக்கத்திலே தான் முன் சொன்ன ராஜகோபாலன் சந்திதி. அந்த ராஜகோபாலனையும் முந்திக்கொண்டு திருவேங்கடமுடையானும் இங்கு எழுந்தருளியிருக்கிறான். இவர்களை அடுத்தே சீதா லக்ஷ்மண சமேதனான ராமன், சேனை முதலியார், ஆழ்வார்கள் எல்லாம். எல்லோரும் நல்ல செப்புச் சிலை வடிவில் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் ராமரும் சேனை முதலியாரும் அழகாயிருக்கிறார்கள். அடுத்த உள் கட்டிலே நுழைந்தால் நரசிம்மர், மணவாள மாமுனிகளை எல்லாம் தரிசிக்கலாம். இவர்களை எல்லாம் கடந்தே கருவறை சென்று சேரவேண்டும். அங்கு சாரநாதப்பெருமாள் சிலை உருவில் கம்பீரமாக நின்று கொண்டிருப்பார்.

அவருக்கு வலப்பக்கத்தில் மார்க்கண்டேயரும், இடப் பக்கத்தில் காவேரித் தாயாரும் சிலை வடிவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னாலே தான் உத்சவ மூர்த்தியான சாரநாதர். இவர் நறையூர் நம்பியைப் போலவும் விண்ணகர் ஒப்பிலியப்பனைப் போலவும் ஏக்பத்னி விரதர் அல்ல. ஸ்ரீதேவி, பூதேவி, காணும் காணாததற்கு நீளாதேவி சமேதராகவே நிற்கிறார். காவிரியின் மடியில் தவழ்ந்த மாமதலைக் கோலத்திலும் இருக்கிறார். இன்னம் சந்தான கிருஷ்ணன், செல்வர் எல்லாம் அங்கே இருப்பர். இவர்களையெல்லாம் தரிசித்த பின்பே வெளியே வந்து வலப்புறம் சுற்றினால் சாரநாயகித் தாயாரைத் தரிசித்து வணங்கலாம். ஒப்பிலியப்பன் கோயிலிலும், நாச்சியார் கோயிலிலும் தனிச் சந்நிதி கேட்காத் பிராட்டி, இங்கு மட்டும் தனிக் குடித்தனத்தையே விரும்பியிருக்கிறாள். காரணம் தான் தெரியுமே. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று 'துணைவியரை அல்லவா சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார் கருவறையிலே சாரநாதர். சாரநாயகி தனிக் குடித்தனம் போடாமல் இருப்பாளா?

இத்தலத்துக்குத் திருமங்கை ஆழ்வார் வந்திருக்கிறார். சாரநாதன் சாரநாயகியைத் தொழுதிருக்கிறார். பத்துப் பாசுரங்கள் பாடியிருக்கிறார்.

வந்திக்கும், மற்றவர்க்கும் மாசுடம்பில்

வல் அமணர் தமக்கும் அல்லேன்,

முந்திச் சென்று அரி உருவாய் இரணியனை

முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்,

சந்தப் பூ மலர்ச்சோலை தண் சேறை .

எம் பெருமான் தனை நாளும்

சிந்திப் பார்க்கு என்னுள்ளம் தேனாகி

எப் பொழுதும் தித்திக்குமே..

என்ற பாடல், நமக்கும் தித்திக்கவே செய்கிறது. சாரநாதனைச் சிந்திப்பதிலேயே இனிமை கண்டவன் மங்கை மன்னன். அந்தப் பேராளன் பேரோதும் பெரியோர் வரிசையிலே பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் இடம் பெறுகிறார். தமிழ் எதற்குப் பயன்பட வேண்டும்? உணவுக்கும் உடைக்கும் இரந்து நிற்பதற்குத்தானா? இல்லை, சேறை வாழ் சாரநாதன் பேர் சொல்ல உதவினால்தான் அந்தத் தமிழ் இனிக்கும் என்கிறார் அவர்.

சென்று சென்று செல்வம்

செருக்கு வார் வாயில் தொறும்

நின்று நின்று தூங்கும் மட

நெஞ்சே; - இன் தமிழைக்

கூறைக்கும் சோற்றுக்கும்

கூறாதே, பேறு ஆக

சேறைக்கு நாயகன் பேர் செப்பு

என்கிறார்; நம்மையுமே கூவி அழைக்கிறார்.

ஊரை விட்டுக் கிளம்பு முன், ஊருக்கு வடபுறம் கொஞ்சம் ஒதுங்கி வாழ்கின்ற சிவ பெருமானையும் தரிசித்துவிட்டே. புறப்படலாமே. நெடுஞ்சாலைக்கு வடபுறம் கொஞ்சம் இறங்கி மேற்கு நோக்கி நடந்தால் செந்நெறி அப்பர் ஞானவல்லியுடன் இருக்கும் கோவிலுக்கு வந்து சேரலாம். சாரநாதன் கோயிலுடன் ஒப்பிட்டால் இக்கோயில் பெரிய கோயில் அல்லதான். என்றாலும் இக்கோயிலுக்கு ஒருவருக்கு இருவராக, சம்பந்தரும், அப்பரும் வந்து வணங்கியிருக்கிறார்கள்; இறைவனைப் பாடியிருக்கிறார்கள்.

விரித்த பல் கதிர் கொள்

வெடி படு தமரு கங்கை

தரித்த தோர் கோல கால

பயிரவனாகி, வேழம்

உரித்து உமை அஞ்சக் கண்டு

ஒண்திரு மணி வாய் விள்ளச்

சிரித்தருள் செய்தார் சேறைச்

செந்நெறிச் செல்வர் தாமே.

என்பது அப்பர் தேவாரம். நாமும் அந்த அழியாச் செல்வரை வணங்கி வரலாம்.

சார புஷ்கரணி - திருச்சேறை

9. கண்ணமங்கை பக்தவத்ஸலன்

பல வருஷங்களுக்கு முன் ஒரு நடன நாட்டிய நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். புதிய முறையில் பல புராணக் கதைகளை நடன நாட்டியமாக நடித்துக் காண்பித்தனர் நடிகர்கள், ஆண்டாள் திருக்கல்யாணம், பஸ்மாசுரமோகினி முதலிய புராணக் கதைகளை நடனமாடியே விளக்கம் செய்தனர். பஸ்மாசுர மோகினி கதையை அடுத்துக் கஜேந்திர மோட்சம் என்று கண்டிருந்தது நிகழ்ச்சி நிரலில், பஸ்மாசுர மோகினியின் பஸ்மாசுரன், சிவன், மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணு எல்லாருமே மேடைமீது தோன்றி நடனம் ஆடினர்.

அது போல் கஜேந்திர மோட்சத்திலும் கஜேந்திரன், முதலை, கருடன், மகாவிஷ்ணு எல்லோருமே மேடைமீது தோன்றுவார்களோ என்று எண்ணினேன் நான், விஷ்ணுவின் வேடத்தை வேண்டுமானால் நடிகர்கள். போட்டுக் கொள்ளலாம்; யானை, முதலை, கருடன் வேடங்களை எல்லாம் மனிதர்கள் போட்டு நடித்தால் நன்றாயிருக்குமா என்று நினைத்தேன். அதற்குள் நிகழ்ச்சியின் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டது. திரையும் விலகியது. ஒரே ஒரு நடிகர் தான் மேடைமீது தோன்றினார், பின்னணி வாத்தியங்கள் மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தன. நடிகர் தம் இரண்டு கைகளையும் நீர் நிறைந்த தடாகம் ஒன்று இருக்கிறது என்று காட்டிவிட்டு மலரும் தாமரைகளையும் ஹஸ்த முத்திரை மூலமாகவே காண்பித்தார். இதன் மூலம் தாமரை மலர்ந்த தடாகமே காண்பித்தார். சிறிது நேரத்தில் அந்த நடிகரே மேடையில் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு நடந்தார். இரண்டு காலால்தான் நடந்தார்.

என்றாலும் உடல் அசைவு வலதுகையைத் தும்பிக்கை போல் அங்குமிங்கும் ஆட்டுவதன் மூலம் அசைந்து ஆடிவரும் யானையையே கண்முன் கொண்டு வந்துவிட்டார். இனி இந்த யானையே தடாகத்தில் இறங்குகிறது. படிக்கட்டில் யானை எப்படி மெதுவாக இறங்குமோ அப்படியே இறங்குவது போல் அபிநயித்தார். பின்னர் யானை தும்பிக்கை மூலம் நீர் குடிப்பது, வாரி இறைப்பதுயெல்லாம் காட்டினார் நடிகர். எல்லாம் கை அசைவு, கால் அசைவு, உடல் அசைவுகளினாலேயே, இப்படி நடித்த நடிகரே இன்னும் சில நிமிஷ நேரங்களில் முதலையாக மாறிவிட்டார்.

முதலை தண்ணீருக்குள் எப்படி வளைந்து வளைந்து வருமோ அந்தக் காட்சியைக் கண்முன் கொண்டு வந்தார். சிறிது நேரத்தில் அவரே முதலை காலைப் பிடித்துக்கொள்ள அதனால் வீறிட்டு அலறும் யானையாகவும் மாறினார். பின்னர் அவரே கருடனாகவும், கருடன்மேல் ஆரோகணித்து வரும் பெருமாளாகவும் மாறி விட்டார், மேடைமீது 'ஆதிமூலமே' என்று அழைத்த கஜேந்திரனை முதலைப் பிடியினின்றும் விடுவித்து மோக்ஷமும் அளித்து விடுகிறார். இத்தனையையும் ஒரு நடிகரே பத்து நிமிஷ நேரத்தில் அங்கு எழும் இன்னிசைக்கேற்ப நடனம் ஆடி நடித்து மேடைமீது காட்டி விடுகிறார்.

இதில் இருந்தது ஒரு கஷ்டம், நடன நாடகத்தை நடித்த நடிகருக்கு எவ்வளவு கற்பனை வேண்டியிருந்ததோ அத்தனை கற்பனையுடையவர்களாகப் பார்ப்பவர்களும் அமைய வேண்டியிருந்தது. நடன நாடகத்தைக் கண்டவர்களும் கற்பனை பண்ணியே கதையைத் தெரிந்துகொள்ள, உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. குளமாக, யானையாக, முதலையாக, கருடனாக, காத்தற் கடவுளாம் திருமாலாக எல்லாம் ஒரே நடிகர் மாறி மாறி நடித்ததைக் கண்டு மகிழ்ந்ததோடு வியப்பிலும் ஆழ்ந்து விட்டேன். அத்தனை கலை அழகு இருந்தது, அந்த நடன நாடக நிகழ்ச்சியில்.

இத்தனை கலை அழகையும் பின்னர் ஒரு சிற்ப வடிவில் கண்டபோது அப்படியே அதிசயித்து நின்றேன். அந்தச் சிற்ப வடிவம் அமைந்திருப்பதே ஒரு தனி அழகு. ஒரு சிற்பிக்கு நான்கு அடி நீளம், இரண்டு அடி அகலம் உள்ள ஒரு கல் கிடைக்கிறது.

வைகுண்டவாசன்

கல்லின் கனம் எல்லாம் ஒன்றரை அடிதான். இந்தக் கல்லைப் பார்ப்பதற்கு முன் சிற்பி கஜேந்திர மோக்ஷக் கதையைக் தன் மனக்கண்ணில் கண்டிருக்கிறான். ஆம்! 'உள்ளக் கிழியில் உரு எழுதி' வைத்திருக்கிறான். கிடைத்த கல்லில் உருவாக்கிக்காட்ட முனைந்திருக்கிறான். இருப்பதோ ஒரு சிறிய கல், அதில் உருவத்தால் பெரிய யானை, அந்த யானையின் காலைப் பிடித்து இழுக்கும் முதலை, யானையைக் காக்க வருகின்ற பெருமான், அந்தப் பெருமானைத் 'தூக்கி வருகின்ற கருடன் எல்லோரையும் உருவாக்க வேண்டுமே என்று சிற்பி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கல்லிலே பெரும் பகுதியைப் பெருமானுக்கும் கருடனுக்கும் ஒதுக்கி விடுகிறான். அடித்தளத்தில் ஒரு சிறு இடத்தில் வீறிட்டு அலறும் யானை உருவாகிறது. அந்த யானையின் காலைப் பிடிக்கும் முதலையும், இருக்கிற கொஞ்ச இடத்துக்குள்ளேயே உடலை வளைத்துக் கொண்டு நெளிவதற்கு ஆரம்பித்து விடுகிறது. அவ்வளவுதான்; அதன்பின் பறந்து வருகின்ற கருடன்மேல் ஆரோகணித்து வரும் அந்தப் பெருமானின் கோலம் எல்லாம் உருவாகிவிடுகிறது சிற்பியின் சிற்றுளியால். பெருமான் வருகின்ற வேகம் கூடத் தெரிகிறது கருடனது வரவைச் சித்திரித்திருப்பதிலே.

சங்கு சக்கரம் ஏந்திய கைகள் இரண்டோடு அபய வரத முத்திரைகளோடு இரண்டுகைகள். கருடனது வடிவ அமைப்பே ஒரு கவர்ச்சி; பெருமானது மேனியிலே ஓர் அழகு; எல்லாவற்றையும் அல்லவா சிற்பி செதுக்கியிருக்கிறான். கலைஞனாகிய சிற்பி, யானை, முதலைகளைச் செதுக்குவதிலும் மிக்ககவனமே செலுத்தி யிருக்கிறான், அதனால் தானே உயிருள்ள முதலையையும் வளர்ச்சி குறை யாத யானையையுமே காண்கிறோம் கல்லுருவில். இப்படி அற்புதமாக ஒரே கல்லில் இத்தனையும் உருவாக்கி இருக்கும் சிலையைக் கண்ட்பின்தான், ஒரே நடிகர் அத்தனை கோலங்களிலும் அவர் ஒருவராகவே நடித்தது அதிசயமாகப் படவில்லை. இத்தகைய அற்புதச் சிற்ப வடிவைக் காண விரும்பினால் நீங்கள் செல்லவேண்டுவது திருக்கண்ண மங்கைக்கு அந்தத் திருக்கண்ண மங்கைக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருக்கண்ணமங்கை திருவாரூருக்கு மேற்கே நான்கு, ஐந்து மைல் தொலைவில் இருக்கிறது. திருவாரூர் ஜங்ஷனில் இறங்கிவண்டியோ, காரோ வைத்துக் கொண்டு சென்றாலும் போய்ச் சேரலாம். இல்லை, கும்பகோணத்தில் இறங்கி, நாச்சியார் கோயில், திருச்சேறை கோயில்களுக்கு எல்லாம் போய்த் தரிசித்துவிட்டுப் போய்ச் சேரலாம். இந்த வழியில் போனால் - வசதி இருந்தால், நாலூர், நாலூர் மயானம், குடவாயில் முதலிய பாடல் பெற்ற கோயில்களுக்குமே போய்த் தரிசனம் பண்ணிவிட்டு இங்கு வந்து சேரலாம். எப்படி வத்நாலும் சாலையில் இறங்கி மேற்கே கொஞ்ச தூரம் நடக்க வேண்டும்.

அப்படி நடந்தால் முதலில் தர்சன புஷ்கரணியைத் தரிசனம் பண்ணலாம். இந்தப் புஷ்கரணி தரிசனம் பண்ணுவதற்குத்தான் ஏற்றது. இறங்கித் துளாவிக் குளிப்பதற்கெல்லாம் ஏற்றது அல்ல. ஆதலால் 'விறு விறு' என்று கோயிலுக்குள்ளே நுழையலாம். அங்கு கோயில் கொண்டிருப்பவர் பக்தவத்ஸலர்; அவரையே பத்தாரவிப் பெருமாள் என்பார்கள் அங்குள்ளவர்கள். கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் இவரைக் கண்டு வணங்கிக் கொள்ளலாம். இவரையே மங்கை மன்னன் பதினான்கு பாசுரங்களில் பாடிப் பரவியிருக்கிறார். கண்ண மங்கைக் கண்ணனை, மங்கை மன்னன் பாடுவது பொருத்தம் தானே.

பண்ணினை, பண்ணில் நின்றதோர்

பான்மையை, பாலுள் நெய்யினை

மால் உருவாய் நின்ற

விண்ணினை, விளங்கும் சுடர்

சோதியை, வேள்வியை,

விளக்கின் ஒளிதன்னை

மண்ணினை, மலையை அலை

நீரினை, மாலை மாமதியை

மறையோர் தங்கள்

கண்ணினை; கண்களாரவும்

நின்று கண்ண மங்கையுள்

கண்டு கொண்டேனே

என்பது மங்கை மன்னன் பாடல். பாடலைப் பாடிக் கொண்டே நாமும் அவனை வலம் வரலாம். அப்படி வலம் வரும்போதுதான், ஒருமாடத்தில் முன் சொல்லிய கஜேந்திர

கஜேந்திர விஷ்ணு

மோக்ஷக் காட்சியைக் காண்போம். இந்த ஒரு காட்சிதானா? இன்னும் பல மாடங்களில் பல கோலங்களில் பெருமாள் நின்றுகொண்டிருப்பார். ‘தாயெடுத்த சிறு கோலுக்குக் குழைந்து ஓடி, தயிர் உண்டு வாய் துடைத்த மைந்தனாம்' கண்ணனை வேணு கோபாலனாகக் காண்போம். இத்துடன் பூமா தேவியைக் காத்தளிக்கின்ற வராக மூர்த்தி, இரணியன் உடல் கிழித்து உதிரம் உறிஞ்சிய நரசிம்மன், சேம மதிள் சூழ் இலங்கையர் கோன் கரமும் சிரமும் துணித்த அந்தக் கோதண்டராமன் முதலியவர்களையெல்லாம் நல்ல நல்ல கல்லுருவில் காண்போம். இத்தனை சிலைகளையும் தூக்கி அடிக்கும் சிலை ஒன்றும் இங்கு உண்டு. ஆதிசேஷனை நினைத்தால் அவன் விரித்த படுக்கையில் படுத்து அறிதுயில் கொள்ளும் அனந்த சயனன் தான் ஞாபகத்துக்கு வருவான். ‘பாற்கடலில் பாம்பணைமேல் பையத் துயின்றான் பரமன்' என்பது தானே கலைஞன் கற்பனை. ஆனால் இங்குள்ள பரமனோ நிரம்பவும் உஷாராகப் படுக்கையை விட்டே எழுந்து உட்கார்ந்திருக்கிறான். பாயாகச் சுருண்டு கிடந்த பாம்பே இங்கே 'கோப்புடைய சீரிய சிங்காதனமாக' அமைந்திருக்கிறது இந்த வைகுண்டநாதனுக்கு. ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தொங்க விட்டு உட்கார்ந்திருப்பதிலேயே ஒரு காம்பீர்யம். ஊன்றிய காலின் மேல் நீட்டிய கையோ அவன்றன் உல்லாசத்தைக் காட்டுகிறது. சங்கு சக்ரதாரியாய்த் திருமாமணி மகுடம் தாங்கிப் புன்னகை தவழ இருக்கும் இந்த வைகுண்டநாதனின் திருஓலக்கம் அழகுணர்ச்சி உடையார் எல்லாம் கண்டு களிக்கும் ஒரு கலைச் சிகரம். கஜேந்திர மோக்ஷத்திலே கலைஞனின் கற்பனை வளம் நிரம்பியிருந்தால் இந்த வைகுண்டநாதன் தோற்றத்திலே ஓர் அற்புத சௌந்தர்யம் நிறைந்திருக்கிறது. இந்த அழகனை வழுத்தி வாழ்த்தாத மானுடர் மானுடரே அல்ல என்பது மங்கை மன்னன் சிததாந்தம். அப்படியே அவர் பாடுகிறாரே,

மண்ணாடும், விண்ணாடும், வானவரும்,

தானவரும், மற்றும் எல்லாம்

உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல்,

தான் விழுங்கி உய்யக் கொண்ட

கண்ணாளன், கண்ணமங்கை நகராளன்

கழல் சூடி, அவனை உள்ளத்து

எண்ணாத மானிடத்தை எண்ணாத

போதெல்லாம் இனிய வாறே.

என்பது மங்கை மன்னன் பாடல், இத்தகைய சிற்ப வடிவங்களெல்லாம் நிறைந்து இந்தக் கோயிலை ஒரு கலைக் கூடமாகவே அமைத்து வைத்திருக்கிறார்கள் நமது சிற்பிகள்.

இப்படியே கண்ணமங்கைக் காராளனைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீரே, இங்குள்ளதாயாரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்றுதானே நினைக்கிறீர்கள். அவரசப்பட வேண்டாம். அவளைத்தான் பார்க்க இப்போது உடனடியாகவே அழைத்துச் செல்கிறேன். பக்தவத்ஸலருக்கு வடபக்கத்தில் தனிக்கோயிலில் அபஷேகவல்லித் தாயார் இருக்கிறாள். அங்கு சென்று அவளை வணங்குபவர்களுக்கு ஓர் அதிசயம் காத்து நிற்கும். இந்தத் தாயார் சந்நிதியிலே ஒரு பெரிய தேன் கூடு; இந்தத் தேன் கூடு இங்கே எப்போது கட்டப்பட்டது என்று சொல்வார் ஒருவரும் இல்லை. ஆனால் இந்தத் தேன் கூடு இங்கே கட்டப்பட்டதற்கு ஒரு கதை மட்டும் உண்டு.

கண்ணமங்கை நகராளனைப் பிரிய விரும்பாத முனிபுங்கவர் பலர் தேனியாகப் பிறக்க வரம் வாங்கிக் கொண்டார்களாம். அவர்களே இங்கே கூடு கட்டி அனவரத காலமும் பக்தவத்ஸலன், அபிஷேக வல்லி இருவரையும் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு ரீங்காரம் செய்து வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேன் கிடைப்பதும் அவ்வளவு சிரமமானதாக இல்லை . பெருமானின் மார்பை அலங்கரிக்கும் அலங்கல் மாலையிலே தான் அளவிறந்த தேன் உண்டே. அந்தத் தேனையே உண்டு உண்டு திளைத்து எந்நேரமும் பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இத்தேன் கூட்டுக்கு இல்லை, இத்தேன் கூட்டில் வாழும் முனிவர்களுக்குத் தினமும் பூசை நடக்கிறது.

திருக்கண்ண மங்கை செல்வோர் இந்தத் தேன் கூட்டைக் கண்டு தொழாமல் திரும்புவதில்லை. நாம் மட்டும் தொழாமல் திரும்புவானேன்? தேனை உண்ண வழியில்லை என்றால் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே திரும்பி விடலாம். கண்ணமங்கை வைணவத் திருப்பதிகளாம் நூற்றெட்டில் ஒன்று. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி பாடிய திவ்ய கவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், இந்தத் திருப்பதியையும் பாடியிருக்கிறார்.

கருத்தினால் வாக்கினால்

நான் மறையும் காணா

ஒருத்தனை நீ! நெஞ்சே!

உணரில் பெருத்த முகில்

வண்ணமங்கை கண் கால்

வனசத் திருவரங்கம்

கண்ண மங்கை ஊர் என்று காண்.

என்பது அவரது பாட்டு. கண்ணமங்கை செல்பவர்களுக்குக் கலையழகைக் காணும் வாய்ப்பு உண்டு. பக்த வத்ஸலனையும் அபிஷேகவல்லியையும் வணங்கும் பேறு உண்டு. இந்தத் தலத்திலே சிறப்பான திருவிழா வைகுண்ட ஏகாதசிதான். ஆம்! வைகுண்டநாதன் கம்பீரமாகக் கொலுவிருக்கும் தலம் அல்லவா! ஆதலால் வசதி செய்து கொள்ளக் கூடியவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்றே செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு நான் நின்று கொள்கிறேன்.

10. திருவாரூர் தியாகேசர்

கிரேக்க இலக்கியத்திலே ஒரு கதை. இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு நாள் டயோஜனீஸ் என்ற ஒரு பெரியவர், ஆதென்ஸ் நகரத்தில் நாலு வீதிகள் சேரும் ஒரு சந்தியிலே பட்டப்பகல் பன்னிரண்டு மணிக்குக் கையில் ஒரு விளக்கை ஏந்திக்கொண்டு எதையோ தேடுகிறார். அங்கு போவோர் வருவோருக்கெல்லாம் இவர் எதைத் தேடுகிறார் என்று விளங்கவில்லை. அவர் ஒருவேளை தன்னைப் படைத்த கடவுளையே தேடுகிறாரோ என்பது ஒருவரது ஏகத்தாள வாதம். ஆனால் டயோஜனீஸோ,

பன்னும் நூல்கள் விவரிக்கும்

பரனைக்காண ஆசையிலை

மன்னுத மாக்கள் உலகினிலே

மனிதன் தன்னைத் தேடுகின்றேன்

என்றல்லவா கூறுகிறார். ஏதோ உருவில் பலர் மனிதர்களாகத் தோன்றினாலும் உள்ளத்தால் அவர்கள் மனிதர்களாக இல்லையே. மருந்துக்குக்கூட. ஒரு மனிதன் அகப்படமாட்டேன் என்கிறானே இந்த உலகில், என்பது தான் டயோஜனீஸின் அங்கலாய்ப்பு.

நம் நாட்டு வள்ளுவர் இவ்வளவு மோசமில்லை. வையத்தில் வாழ்வாங்கு வாழும் வகைகளை எல்லாம் வகுத்துக் கூறுகிறார். அதன்பின் அவர் தேடுகிறார் ஒரு சான்றோனை. சான்றோனைத் தேடும் முயற்சியில் அவர் சொல்கிறார் :

சமன் செய்து சீர் தூக்கும்

கோல்போல் அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி

என்று. சரிபார்த்து, நிறுத்தி, அளக்கின்ற துலாக்கோலைப் போல் இருந்து, தம்மிடம் தீர்ப்புக்கு வந்திருக்கும் வழக்கில் ஒரு பக்கமாகச் சாய்ந்து விடாமல் நடுநிலைமை வகிப்பவர்களே சான்றோர் என்று கூறுகிறார். இப்படி வழக்கைச் சீர்தூக்கி நேர்மையான தீர்ப்புச் சொல்ல உள்ளம் எவ்வளவு நேராக இருக்க வேண்டும். அப்படி இருப்பவர்களை இவ்வுலகில் விரல்விட்டு எண்ணி விடலாம்தானே.

அத்தகைய சான்றோர் வரிசையிலே முதலிடம் பெறுபவனே மனுநீதிச் சோழன், அவன் வரலாறு சரித்திரத்தில் மாத்திரம் அல்ல; திருத்தொண்டர் பெரிய புராணத்திலேயே இடம் பெற்று விடுகிறது. அவன் சரித்திரம் இது தான். சரித்திர காலத்துக்கும் முந்திய சோழ பரம்பரையிலே ஒரு சோழ மன்னன் மனுநீதிச் சோழன் என்ற பெயரோடு திருவாரூரிலே இருந்து அரசு செய்கிறான், அவனுக்கு அருமையாக ஒரே மகன்; அந்த அரசிளங்குமரனுக்கு என்று தனித் தேர்; அந்தத் தேரில் ஏறிக்கொண்டே அந்த நகரின் மணிமாட வீதிகளிலே அவன் வலம் வருவான்.

ஒருநாள் அவன் தேர் ஊர்ந்து வரும்போது ஓர் இளங்கன்று துள்ளி வந்தது; தேர்ச்சக்கரத்தில் அகப்பட்டு நசுங்கி உயிர் இழக்கிறது. மன்னன் மகன் இதற்காக வருந்துகிறான். செய்வது இன்னதென்று அறியாது மயங்குகிறான். இதற்குள் கன்றை இழந்த தாய்ப் பசு அரண்மனை சென்று அங்கு கட்டியிருந்த ஆராய்ச்சி மணியையே அடிக்கிறது. அதற்கு ஒரு நம்பிக்கை, நீதி தவறாத மனுச்சோழன் தனக்கும் நீதி வழங்குவான் என்று. சோழ மன்னன் விவரம் அறிகிறான். மந்திரி பிரதானிகளைக் கேட்கிறான். அவர்களோ கன்றை இழந்த பசுவின் துயரத்துக்கு மாற்றுச் சொல்பவர்களாக இல்லை. கன்றைக் கொன்ற பாவம் தீரப் பிராயச்சித்தங்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். அரசனோ இதற்கெல்லாம் செவிசாய்க்கவில்லை. பசு படுகின்ற துயரத்தைத் தானும் பட்டால்தான் . சரியான நீதி வழங்கியதாகும் என நினைக்கிறான். அதற்காகத் தன் தேரைக் கொண்டு வரச் சொல்கிறான். அந்தத் தேர்க்காலில் தன் மகனைக் கிடத்தி, தன்தேரை அவன்மீது ஏற்றுகிறான். எவ்வளவு மனோதிடம் வேண்டும் இப்படிச் செய்ய? நீதி வழங்கும் ஆர்வம் எவ்வளவு அவனுக்கு இருந்திருக்க வேண்டும்?

திருவாரூர் உறையும் வன்மீகநாதன் இதனையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருந்திருப்பானா? உயிர்பிரிந்த ஆன்கன்று, அரசிளங்குமரன் எல்லோரையுமே உயிருடன் எழுப்பியிருக்கிறான். மனு நீதிச் சோழன் புகழ் நிலைக்கிறது திருவாரூராம் தெய்வத் திருநகரிலே. அந்தத் திருவாரூருக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவாரூர் செல்வது சிரமமே இல்லை. திருவாரூர் ஜங்ஷனுக்கு ஒரு டிக்கட் வாங்கவேணும். ரயிலில் சென்று இறங்கவேணும். வண்டியோ காரோ அமர்த்திக்கொண்டு ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல் தூரத்தில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேணும். அவ்வளவுதான். சாதாரணமாகத் தெற்கு வாயிலிலேயே கொண்டுதான் வண்டிக்காரன் வண்டியை அவிழ்ப்பான். எல்லோரும் வழக்கமாகப் போகும் அந்தத் தெற்கு வாயிலின் வழியாகவே நாமும் நுழையலாம் கோயிலுள். கோவில்கள் நிறைந்திருக்கும் தஞ்சை ஜில்லாவிலே மிகப் பெரிய கோவில்கள் இரண்டு தான். ஒன்று தஞ்சைப் பெரிய கோயில்; மற்றொன்று திருவாரூர்க் கோயில், இந்தக் கோயிலைப் பூங்கோயில் என்று அழைக்கிறார்கள். கோயில் வாயிலிலே அர்ச்சகர்கள் நம்மிடம் சொல்லுவார்கள் : முத்தி தரும் தலங்கள் மூன்று, அவை சிதம்பரம், காசி, ஆரூர் என்பன. அவற்றுள் காண முத்தி தருவது சிதம்பரம், இறக்க முத்தி தருவது காசி, பிறக்க முத்தி தருவது ஆரூர் (நாமோ இந்தப் பிறவியில் திருவாரூரில் பிறக்கவில்லை காசி சென்று இறக்கவோ நம்மில் எல்லோருக்கும் வசதி இருப்பதில்லை. ஆனால் நமக்கு முத்தி நிச்சயம். நாம் தாம் இதற்கு முன்னமேயே சிதம்பரம் சென்று தில்லைச் சிற்றம் பலவனைக்கண்டு தொழுதிருக்கிறோமே.)

ஆரூரில் பிறக்கும் அதிர்ஷ்டம் பெற்றவர்களை நினைத்துப் பொறாமைப் பட்டுக் கொண்டே கோயிலுள் செல்லலாம். கோயில், கோயில் பிரகாரங்கள் அங்குள்ள மண்டபங்களையெல்லாம் பார்த்தால் அது மிகப் பழைய கோயிலாகத் தெரியும். எவ்வளவு காலத்துக்கு முந்திய கோயில் என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. என்னால் மாத்திரந்தானா முடியவில்லை. ஆயிரத்து இரு நூறு வருஷங்களுக்கு முன் இருந்த அப்பராலேயே சொல்ல முடியவில்லையே. அவர் கூட!

மாடமொடு மாளிகைகள் மல்கு

தில்லை மணிதிகழும் அம்பலத்தே

பன்னிக் கூத்தை

ஆடுவான் புகுவதற்கு முன்னோ ?

பின்னோ ? அணியாரூர்

கோயிலாய்க் கொண்ட நாளே?

என்று அந்த இறைவனிடமே கேட்டிருக்கிறார்; விடை. கிடைத்ததோ என்னவோ? கோயிலை நான்கு பக்கத்தும் நான்கு கோபுரங்கள் அணி செய்கின்றன. கீழைக்கோபுரம் 118 அடி உயரம். காம்பீரியம் இருக்காது. சட்டிபோல் அகன்று பரந்திருக்கும். மற்றையக் கோபுரங்கள் எல்லாம் அளவில் சிறியவை. வடக்குக்கோபுரம், அந்தக் குலோத்துங்கன் படைத் தலைவராம் கருணாகரத் தொண்டைமான் திருப்பணி, அவருடைய சிலையிருக்கிறது கோபுரத்துச் சுவரிலே. கோயிலுக்குள் நுழைந்ததும் உயர்ந்த நீண்ட கம்பங்கள் மொட்டை மொட்டையாக நின்று கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அதுவே ஆயிரங்கால் மண்டபம் என்னும் தேவாசிரிய மண்டபம் என்பர்.

விழாக் காலங்களில் மட்டுமே அந்தக் கம்பங்களின் பேரில் ஓலை வேய்ந்து மண்டபம் அமைத்துக் கொள்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு மூன்று பிரகாரங்கள். ஒவ்வொன்றுமே பெரிய பிரகாரங்கள்தான். மூன்றாம் பிரகாரம் ஆகிய வெளிப்பிரகாரத்தில் மூன்று கிணறுகள் இருக்கின்றன. ஒன்றின் பெயர் மூக்குத்திக் கிணறு, முத்தி தீர்த்தம் என்ற பெயர் மூக்குத்தி தீர்த்தம் என்று சிறப்படைந்திருக்கிறது போலும்! இப்பிரகாரத்தில் தான் பக்த காட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் எல்லாம் இருக்கின்றன. இனி இந்தப் பிரகாரத்திலுள்ள ஆரியன் கோபுர வாயில் வழியாகத்தான் இரண்டாம் பிரகாரத்துக்குச் செல்ல வேண்டும். அரி அயன் கோபுரம் என்பதே ஆரியன் கோபுரம் என்று மாறி இருக்கிறது (இதை வைத்துக்கொண்டு ஆரியர் திராவிடர் சண்டைகளுக்கு ஆதாரங்கள் தேட வேண்டாம்)

இந்த இரண்டாம் பிரகாரத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சிறு சிறுகோயில்கள். திருவாரூர் அறநெறி, அசலேசம், ஆனந்தேசம், விசுவகர்மேசம், சித்தீசம் முதலிய கோயில்கள் இருப்பது இங்கே தான் - ஒரு கோயிலைக் கண்டு கும்பிட முனைந்தால், கும்பிடும் கையைக் கீழே போட வேண்டியதில்லை பிரகாரம் சுற்றி முடியும்வரை.. இதைத் தெரிந்திருக்கிறார் மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை, *குவித்தகரம், விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்' என்று கூறுகிறார். இந்தப் பிரகாரத்தில் உள்ள அழகியான் கோபுர வாயிலைக் கடந்துதான் வன்மீகநாதர் சந்நிதிக்கு வந்து சேரவேணும். மூலவர் அவர்தானே. அவர் எழுந்தருளியிருக்கிற கருவறையைத் திருமூலட்டானம் என்றே வழங்குகின்றனர்; கோயில் என்றால் சிதம்பரம் என்பது போல, திருமூலட்டானம் என்றால் இந்தத் திருவாரூருக்கே உரியது. இங்குள்ளவர் புற்றிடங் கொண்டவர். பஞ்ச பூத ஸ்தலங்களில் இது பிருதிவித் தலம் ஆயிற்றே. இக்கருவறையை அடுத்தே சோம குலாம்பிகை என்னும் பிரியா விடையம்மை இருக்கிறார்.

இந்த வன்மீகநாதரை விடப் புகழ் பெற்றவர் இங்குள்ள தியாகேசர். வன்மீகநாதர் கோயிலுக்கு வலப்புறம் உள்ள தனிச் சந்நிதியில் இருக்கிறார் இவர். இவர் இங்கு எழுந்தருளியதற்கு ஒரு புராண வரலாறு உண்டு. சிவபெருமானையும் உமா தேவியையும் குமரக் கடவுளையும் ஒரே ஆசனத்திலிருத்தி இறைவனை சோமாஸ்கந்த மூர்த்தமாக வழிபடுகிறார் திருமால். இந்த சோமாஸ்கந்தத்தைத் தேவேந்திரன் திருமாலிடம் பெற்று, அதற்குத் தியாகப் பெருமான் என்று பெயரிட்டுச் சிறப்பாகப் பூசனை செய்து வருகிறான். இந்தத் தேவேந்திரனுக்குத்தான் அடிக்கடி அசுரர்களது உபத்திரவம் உண்டே வலன் என்ற அசுரனுடன் போர் செய்தபோது சோழமன்னன் முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்குத் துணை நின்று வெற்றியைத் தந்திருக்கிறான்.

இதற்குப் பரிசாக இந்திரனிடம் தியாகப் பெருமானையே கேட்டிருக்கிறான். கொடுக்க மனம் இல்லாத இந்திரன், தியாகப் பெருமானைப் போலவே ஆறு உருவங்களைச் செய்து அதில் எதையாவது எடுத்துப் போகச் சொல்லியிருக்கிறான். இறைவன் அருளால் முசுகுந்தன் தேவேந்திரன் பூசித்த தியாகரையே இனம் காட்டியிருக்கிறான். அதன் பின்னும் இல்லையென்று சொல்ல இயலுமா? தியாகர் வந்திருக்கிறார் தேவலோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்து திருவாரூரில் கோயில் கொண்டிருக்கிறார். மற்றைய ஆறு பேரும் நள்ளாறு, நாகைக்காரோணம், தாறாயில், கோளிலி, வாய்மூர், மறைக்காடு என்னும் தலங்கள் சென்று தங்கியிருக்கிறார்கள். இப்படித்தான் இந்தத் தியாகேசர், 'நிறை செல்வத் திருவாரூருக்கு' வந்து செலவத் தியாகேசர் என்ற பெயரிலேயே நிலைத்திருக்கிறார். இந்தத் தலத்திலேயே சிறந்த சந்நிதி இதுவே. இரத்தின சிம்மாசனத்திலே முன்னே இரண்டு வாள் படையும், நடுவில் ஒரு பூச்செண்டும் பொருந்த எழுந்தருளியிருக்கிறார். பெருமான் பக்கத்திலே அம்மை. இருவருக்கும் இடையில் உள்ள கந்தர் மலர்மாலைகளுக்குள்ளும், ஆடை அணிகளுக்குள்ளும் புதைந்து வெளியில் தெரியாமலேயே நிற்கிறார்.

'வெள்ளிலை வேல் நம்பியொடும் ஆடரவர் கிண்கிணிக் கால் ஐயன் இருந்து அரசு செய்கிறான்' என்று தியாகராஜ லீலை கூறும். இந்தத் தியாகராஜர் அணியும்பணிகளுக்கு எல்லாம் தனித் தனிப் பெயர். தியாகர் அணியும் பரிவட்டம் தியாக விநோதன், அணியும் கிண்கிணி ஆடரவக் கிண்கிணி, வாள் வீர கண்டயம், தேர் ஆழித் தேர், மாலை பணி, மத்தளம் சுத்த மத்தளம், நாதசுரம் பாரி, வாத்தியம், பஞ்சமுக வாத்தியம், பிள்ளைத் தண்டு, மாணிக்கத் தண்டு, நடனம் அசபை, கொடி தியாகசபை. இவரது தேவ சபையில் நடக்கும் திருவந்திக் காப்பு சிறப்பானது.

அர்ச்சகர் நீண்ட அங்கி தலைப் பாகை எல்லாம் தரித்து எதிரே நின்று தான பூசனை புரிவார். தேவேந்திரனே வந்து பூஜை செய்வதாக ஐதீகம். இவ்வளவு பெருமையோடு விளங்கும் தியாகருக்கு, வீதிவிடங்கன், தியாக விநோதர், செவ்வந்தித் தோட்டழகர், செங்கழுநீர்த் தாமர், அஜபா நடேசர் என்றெல்லாம் நூற்றெட்டுத் திருநாமங்கள். இவரைத் தரிசிக்க வேண்டுமானால் மாலை ஆறு, ஆறரை மணிக்கே செல்ல வேண்டும். நீண்ட நேரம் இருந்தே பூசனையில் கலந்து கொள்ளவும் வேண்டும்.

இந்தத் தியாகருக்கும், அந்த வன்மீகநாதருக்கும் இடையே இடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் ஐங்கலக் காசு விநாயகர். அழகிய சோழன் ஒருவன் ஐந்து கலம் பொற்காக கொண்டு வடித்தான் என்பது வரலாறு. இவரையும் தரிசித்தபின் இரண்டாம் பிரகாரம் வந்து அங்குள்ள அம்மன் கோயிலில் தெற்கு முகமாக இருக்கும் நீலோத்பலாம்பிகையையும் தரிசிக்கலாம். கையில் செண்டு ஒன்று ஏந்தி நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அல்லியங் கோதையின் பக்கத்திலே, தோழி ஒருத்தி தோள்மீது முருகனைச் சுமந்து நிற்பதையும் அம்மை தனது இடது கரத்தால் முருகனது சுட்டு விரலைப் பிடித்திருப்பதையும் காணத் தவறி விடாதீர்கள். மற்றக் கோயில்களில் எல்லாம் இல்லாத தனிச்சிறப்பு. இது நீலோத்பலாம்பிகை தவிர, தனிக்கோயிலில் கமலாம்பிகை தவக்கோலத்தில் இருக்கிறாள். இரண்டு திருக்கரங்களுடன் கால்மேல் கால் போட்டு யோகாசனத்தில் அமைந்த இந்த அம்பிகை அழகானவர். பராசக்தி பீடங்களில் இதுவும் ஒன்று

கமலாலயம் - கோயில் கோயில்

'திருவாரூர்த் தேர் அழகு' என்பது பழமொழி. தமிழ் நாட்டில் உள்ள தேர்களில் எல்லாம் பெரியது. இந்தத் தேரைப்போல் 'மாடல்' ஒன்று செய்து அதைச் சென்னை மியூசியத்தில் வைத்திருக்கலாம். அத்தனை அழகு அந்தத் தேர். இந்தத் தேரையும் மிஞ்சிய புகழுடையது, இக்கோயிலுக்கு மேல் பக்கத்திலுள்ள கமலாலயம் என்னும் திருக்குளம் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்று கணக்கு. வேலி 6.66 ஏக்கர் என்றால் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்களேன் குளத்தின் பரப்பை, இந்தக் குளக்கரையிலே ஒரு பிள்ளையார் மாற்றுரைத்த பிள்ளையார் என்ற பெயரோடு. அன்று சுந்தரர் விருத்தாசலம் மணி முத்தாற்றில் இட்ட பொன்னைக் கமலாலயத்தில் இறைவன் எடுத்துக் கொடுத்த போது அந்தப் பொன்னின் மாற்றை உறைத்துச் சரி பார்த்தவர் இவர். இன்னும் இந்தக் கோயிலைச் சுற்றி எத்தனையோ கோயில்கள், கோயிலுக்குக் கீழ்ப்பக்கத்திலே மனுநீதிச் சோழன் வரலாற்றை விளக்கும் கல்தேர், கல் பசு, கன்று எல்லாம் இருக்கின்றன.

இத்தலத்துக்குப் பலவகையாலும் வரலாற்றுத் தொடர்பு உடையவர்கள் சுந்தரர், சேரமான் பெருமாள். இவர்கள் இருவரும், தியாகேசரது திருமுன்பு எதிர்முக மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். இவர் இருவரில் சுந்தரரோடு தொடர்பு கொண்ட ஏயர்கோன் கலிக்காமர் விறன்மிண்டர், சோமாசி மாறர், இன்னும் இங்கிருந்து முத்திபெற்றவர் நமிநந்தி, செருத்துணை, தண்டியடிகள், கழற் சிங்கர் முதலியோர். இவர்கள் சரித்திரம் விரிக்கில் பெருகும் என்றாலும் சுந்தரர் பரவையாரோடு இங்கு நடத்திய இல்லறத்தைப் பற்றிச் சொல்லாது போனால் திருவாரூர்ச் சிறப்பை முழுவதும் சொல்லியதாகவும் ஆகாதே. ஆதலால் அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

நாவலூரிலே பிறந்து வெண்ணெய் நல்லூரிலே இறைவனுக்கு ஆட்பட்டு அவனோடு தோழமை பூண்டு, தம்பிரான் தோழராக வாழ்ந்தவர் கந்தரர். அவர் இந்தத் திருவாரூருக்கு வந்து, இங்கு அவதரித்திருந்த பரவையாரை மண்ந்து குடியும் குடித்தனமுமாக இருந்தவர். அந்த 'வாளான கண் மடவாள் வாடி வருந்தாமல் குண்டையூரிலே நெல் பெற்று' அதைக் கூட. அள்ளிக் கொண்டு வந்து திருவாரூரில் போட இறைவனையே ஏவியிருக்கிறார். இதையெல்லாம் விட, பின்னர் ஒற்றியூரிலே சங்கிலியாரை மணந்த தன் காரணமாகப் பரவை ஊட, அந்த ஊடல் தீர்க்க இறைவனையே தூதாக அனுப்புகிறார். இந்தக் கதையை எல்லாம் அறிந்த ஒரு புலவர், 'ஐயோ! ஐயனின் அடியும் முடியும் காண இந்த அரியும் அயனும் அன்று அண்ணாமலையில் திணறி இருக்கிறார்களே. இவர்கள் இருவரும் இந்தப் 'பரவையார் வீட்டு வாயில் படியில் வந்து இருந்து கொண்டால்,” ஐயனின் அடியையும் முடியையும் அவன் தூது வரும்போது எவ்வளவு எளிதாகக் கண்டு விடலாம்' என்கிறார்.

ஆனார் இலையே அயனும் திருமாலும்?

காணா அடிமுடிமுன் காண்பதற்கு - மேனாள்

இரவு திருவாரூரில் எந்தைபிரான் சென்ற

பரவை திருவாயில் படி

என்பது பாட்டு. சுவையான அனுபவம்தான். இந்தப் பரவைக்கும் சுந்தரருக்கும் தெற்குக் கோபுர வாயில் பக்கம் ஒரு தனிக்கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில் சுந்தரர் நிரந்தரமாக இருந்திருக்கிறார் என்றால் சம்பந்தர், அப்பர், மணிவாசகர் எல்லாம் வந்து வழிபாடு செய்து திரும்பியிருக்கிறார்கள். எல்லோரும் நிறையப் பாடல்கள் பாடியிருக்கிறார்கள்.

பொன்னும் மெய்ப்பொருளும்

தருவானை, போகமும் திருவும்

புணர்ப்பானைப்

பின்னை என்பிழையைப்

பொறுப்பானை, பிழை எலாம்

தவிரப் பணிப்பானை,

இன்ன தன்மையன் என்று

அறி ஒண்ணா எம்மானை

எளிவந்த பிரானை,

அன்னம் வைகும்

வயல் பழனத்தளி ஆரூரானை

மறக்கலும் ஆமோ?

என்பது சுந்தரர் பாடல். மற்றவர்கள் பாடிய பாடல்களெல்லாம் படித்து இன்புற வேண்டியவை. பிற்காலத்தில்லே கமலை ஞானப் பிரகாசர், திருஞான சம்பந்தர் எல்லாம் இப்பகுதியில் தங்கயிருந்து புகழ் பெற்றிருக்கிறார்கள். இங்குள்ள கல்வெட்டுகள் அனந்தம். சோழ மன்னர்களது திருப்பணி விவரம் எல்லாம் அவை சொல்லும். பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்த முதல் பராந்தகன் முதல் பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்த மன்னர்கள் அளித்த நிபந்தங்கள் அனந்தம். அவை விரிக்கில் பெருகும் - இலக்கியப் பிரசித்தி பெற்ற அபயகுலசேகரன் அநபாயன் எல்லாம் இருந்து ஆட்சி செய்திருக்கிறார்கள். அதிகம் சொல்வானேன்? திருவாரூர் என்றால் கலை அழகு நிரம்பிய கோயில் நிறை செல்வத்திருவாரூர் என்ற பெருமையோடு விளங்கிய கோயில்.

ஆரூரன் சந்நிதி போல்

ஆரூரன் ஆலயம் போல்

ஆரூரன் பாதத்து

அழகு போல் - ஆரூர்

மருவெடுத்த கஞ்ச மலர்

வாவிபோல், நெஞ்சே

ஒரு இடத்தில் உண்டோ உரை?

என்று ஒருவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கேட்கிறார். அதேகேள்வியையே நானும் கேட்கிறேன் உங்களிடம். சங்கீத மும்மணிகளாம் தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி திக்ஷிதர் எல்லாம் பிறந்து வளர்ந்ததும் இந்தத் திருவாரூரே என்றால் இங்கே இசை வளர்வதற்குக் கேட்பானேன்? கலை வளர்வதற்குக் கேட்பானேன்?

11. கீழ்வேளூர் கேடிலியப்பர்

கர்நாடக சங்கீத மும்மணிகளில் ஒருவர் ஸ்ரீமுத்து சாமி தீக்ஷிதர். இவருடைய தந்தை ராமசாமி தீக்ஷிதர் வைத்தீசுவரன் கோயில் முத்துக்குமரன் சந்நிதியில் நாற்பது நாட்கள் தவங்கிடந்து பெற்றிருக்கிறார் இவரை. இவர் தம் தந்தையிடமே சங்கீதம் கற்றுக் கொண்டவர். கர்னாடக சங்கீதத்தில் மாத்திரம் அல்ல, வடக்கே காசி போயிருந்த போது ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பத்ததியையுமே நன்கு தெரிந்து கொண்டிருக்கிறார். 'யமுனாகல்யாணி ஜம்பூபதே' 'ஸௌந்திரராஜம் ஆச்ரயே' என்ற இரண்டு கீர்த்தனங்களிலும் தம் வடநாட்டு இசைப்பழக்கத்தை நன்கு காட்டி யிருக்கிறார்.

திருத்தணிகை சென்று மெய்ம்மறந்து முருகனைத் தியானித்திருக்கும்போது ஒரு சிறுவன் இவர் வாயில் கற்கண்டைப் போட்டது போல் கனவு கண்டிருக்கிறார். அன்றைய தினத்திலிருந்து அற்புதம் அற்புதமான கீர்த்தனங்களைப் பாடத் துவங்கியிருக்கிறார். தீக்ஷிதர் கீர்த்தனங்களின் விசேஷம் என்னவென்றால், தலங்களின் மகாத்மியங்கள், இறைவன் இறைவி பெயர், அங்குள்ள தீர்த்த விவரம் எல்லாம் ஏதோ அட்டவணையிட்டுக் கூறுவது போல் இருக்கும். இறைவனைப் பாடிய இவர் மனிதனைப் பாடியதில்லை . இந்த தீக்ஷிதர் ஒருநாள் கீழ் வேளூருக்கு வருகிறார். அங்குள்ள அக்ஷயலிங்கரைத் தரிசிக்க விரும்புகிறார். இவர் தம் அனுஷ்டானங்களையெல்லாம் முடித்துக் கொண்டு கோயிலுக்கு வருவதற்கு முன் அர்ச்சகர் கோயில் வாயிலைப் பூட்டிக்கொண்டு போய் விடுகிறார். இவருக்கோ இவைனைத் தரிசிக்க ஆசை. அடைத்த வாசல் முன்பு நின்றே,

அக்ஷயலிங்க விபோ,

ஸ்வாயம் போ,

அகிலாண்ட கோடியிரபோ!

பாஹி சம்போ!

அக்ஷயலிங்க விபோ

என்னும் அழகிய கீர்த்தனத்தைச் சங்கரனுக்குப் பிரியமான சங்கராபரண ராகத்தில் பாடுகிறார். பக்திப் பரவசமாக இவர் நின்று பாடுவதைக் கேட்ட அக்ஷயலிங்கருக்கே இவரைப் பார்க்கும் ஆவல் மேலிட்டிருக்கிறது. உடனே அவர் கதவைத் திறந்திருக்கிறார். இது நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே. முத்து சாமி தீக்ஷிதர் காலம் 1775 முதல் 1853 வரை என்பது பிரசித்தம்.

இப்படி மூடிய கதவைத் திறக்க ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு அப்பர் அந்தத் திருமறைக் காட்டிலே பாடினார் என்பது வரலாறு. அங்கு அப்பர் தேவாரம் பாடி, மூடிய கதவைத் திறக்கிறார். இந்தத் தீக்ஷிதரோ நல்ல கீர்த்தனம் ஒன்றைப் பாடி கோயில் கதவைத் திறந்திருக்கிறார். பக்தி வலையில் படுபவன் தானே பரமன். பக்தர்கள் பக்திக்குக் கட்டுப்பட்டு அவன் செய்யாத காரியம் என்று ஒன்று உண்டா ? இப்படி முத்துச்சாமி தீக்ஷிதருக்காக மூடிய கதவைத் திறந்தவர் அக்ஷயலிங்கர். அந்த அக்ஷயலிங்கர் கோயில் கொண்டிருக்கும் தலம் கீழ் வேளூர். அந்தக் கீழ் வேளூர் என்னும் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

கீழ் வேளூர், திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தாவில் திருவாரூருக்குக் கிழக்கே ஏழுமைல் தொலைவில் உள்ள சிறிய ஊர். காரிலும் போகலாம்; ரயிலிலும் போகலாம். கீழ்வேளூர் என்றெல்லாம் சொன்னால் ரயிலில் டிக்கெட் வாங்க முடியாது. கீவளுர் என்றுதான் சொல்லி டிக்கெட் கேட்க வேண்டும். ரயில்வேயில் மாத்திரம் என்ன, பஸ்ஸிலுமே அப்படித்தான். ஊர்க்காரரும் நெடுஞ்சாலைப் பொறியர்களும் கீவளூர் என்றுதானே ஊரை அழைக்கிறார்கள். குமரனாம் வேளுக்குத் தேவ உலகத்தில் ஓர் ஊர், பூலோகத்தில் ஓர் ஊர் என்று ஏற்பட்டிருக்கின்றன. தேவலோகத்திலுள்ள ஜரை மேல்வேளூர் என்றும் அழைத்திருக்கிறார்கள் என்பது புராண வரலாறு.

ரோட்டு வழியாகச் சென்றால், தெற்கு நோக்கித் திரும்ப வேணும் கோயில் செல்ல. ரயில் வழியாக வந்தால் வடக்கு நோக்கி வரவேணும். ஊர் சிறியதுதான் என்றாலும் கோயில் பெரிய கோயில். நல்ல உயர்ந்த மதில்களும் கோபுரங்களும் உண்டு. கோயில் மாடக் கோயில், சோழன் கோச்செங்கணான் கட்டிய எழுபது மாடக் கோயில்களில் இது ஒன்று. வெளிப்பிரகாரத்தில் சுதையால் செய்த பெரிய நந்தி கொடிமரத்தை அடுத்திருக்கிறது. இது சந்நிதியை விட்டுத் தென் பக்கம் கொஞ்சம் விலகியிருக்கிறது. இங்கும் நந்தன் போல் ஒரு பக்தன் வந்தானா? அவனுக்காக இறைவன் தந்தியை விலகச் சொன்னாரா என்று அதிசயிப்போம். இங்கு வந்தவன் பக்தன் அல்ல, ஒரு பக்தை. இவளுக்காக, இவள் கற்பு நிலையை மக்களுக்குத் தெரிவிக்கவே, நந்தி விலகி இருக்கிறது. சுதை இதுதான்.

கோயிலில் பூசை செய்து வந்த ஆதிசைவர் ஒருவர், தம் மனைவியுடன் வாழ்கிறார். அந்த மனைவி கருவுற்ற இரண்டாவது மாதத்தில் ஆதி சைவர் இறந்து விடுகிறார். கருமுற்றி உரிய காலத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. அந்தப் பையன் வளர்ந்து கற்க வேண்டியதைக் கற்றுச் சிவாகம் பண்டிதன் ஆகிறான். அவன் தன் தந்தை செய்து வந்த பூசைமுறை மான்யங்களைக் கேட்கிறான். தாயாதிகளோ அவன் இறந்து போன ஆதி சைவக் குருக்களுக்குப் பிறந்தவன் இல்லை என்று கூறி, அவரது மனைவியின் கற்புக்கே இழுக்குக் கற்பிக்கிறார்கள். அந்த அம்மையோ அக்ஷய லிங்கரின் சந்நிதிக்கு வந்த குறை இரந்து நிற்கிறாள். பெண்ணின் கற்பைக் காக்க, இறைவன் கையிலிருந்த மழு புறப்பட்டுக் கரகர என்று சுழன்று வருகிறது. அது வரும் வேகத்தைக் கண்டு, நந்தியும் பயந்து விலகிக் கொள்கிறது. பெண்ணின் கற்புக்குப் பழுது. கூறிய தாயாதிகள் தலைகளை வெட்டித் தரை மட்டமாக்கி விடுகிறது மழு. இப்படி மழு எறிந்து கண்டித்து அப்பெண்ணின் கற்பைக் காத்த பெருமானாக அக்ஷயலிங்கர் அமைகிறார். அந்த அவசரத்தில் விலகிய நந்தி அப்படியே இருக்கிறது.

இந்த நந்திக்கு வலப் பக்கமாக நடந்து பின்னர் படிக்கட்டு ஏறித்தான் அக்ஷயலிங்கர் சந்நிதிக்கு வந்து சேர வேணும். படிக்கட்டு ஏறுமுன் இத்தலத்துக்கே விசேஷமான பாலசுப்பிரமணியரைத் தரிசித்து விட வேண்டும். சூரபத்மனை சம்ஹரித்த வெற்றி வேலாயுதனை வீர ஹத்திகள் சூழ்ந்து கொள்கின்றன. இந்த ஹத்திகள் நீங்க இறைவன் கட்டளை இட்டபடியே, பதரி வனமாகிய இந்தத் தலத்துக்கு வந்து நவலிங்க பூசையும் துவாரலிங்க பூசையும் செய்து தவம் இருக்கிறான், அந்த பாலசுப்பிரமணியம்.

மஞ்சளால் பிடித்து வைத்த பிள்ளையார் இருக்கும் இடமே மஞ்சாடி: அவர் பிரதிஷ்டை பண்ணிய நவலிங்கங்களே, கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பா வாழ்க்கை, வல்லமங்கலம், பட்டமங்கலம், தேவூர் முதலிய இடங்களில் இருக்கின்றன என்று கூறும் தலவரலாறு, இந்தப் பூசையைச் செய்ய ஒட்டாமல் வீரஹத்திகள் இடையூறு செய்ய, அன்னை பராசக்தி கோர ரூபம் எடுத்து வந்து மைந்தனைக் காக்க முனைகிறாள். நான்கு திசைகளிலும் ஆகாயத்திலும் பரவி நின்று காத்த அம்மையையே கோயிலின் வட பக்கத்தில் அஞ்சு வட்டத்தம்மை என்ற பெயரில் காளி வடிவில் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். குமரன் தவம் நிறைவேறுகிறது. வீரஹத்திகள் ஓடுகின்றன. அந்தத் தவக் கோலத்திலேயே பாலசுப்பிரமணியம். இந்தப் பாலசுப்பிரமணியரை வணங்கிவிட்டே படியேறி மேலே போகவேணும். அப்படிப் போனாலும் நம் எதிரே காட்சி கொடுப்பவர் சோமாஸ்கந்த மூர்த்தத்தில் உள்ள அக்ஷயலிங்கரே. அதன்பின் வடக்கே திரும்பினால் தெற்கு நோக்கிய கோலத்தில் சபாபதி தரிசனம் தருவார்.

இந்தச் சபாபதி மற்றக் கோயில்களில் உள்ள சபாபதியைப் போல் இல்லையே என்று தோன்றும் நமக்கு. உண்மைதான். விரித்த செஞ்சடையுடன் முயலகன் மீது நடனமாடும் நிலையில் இருப்பதால் அவர் நடராஜர்தான் என்பதைத் தெரிவோம். ஆனால் சாதாரணமாக உள்ள நான்கு திருக்கரங்களுக்குப் பதிலாகப் பத்துக் கரங்கள். வலது காலை ஊன்றி இடது பாதத்தைத் தூக்கி ஆடுவதற்குப் பதிலாக, இடது காலை ஊன்றி வலது காலை ஏதோ வேணுகோபாலன் கால் வைத்து நிற்பது போல் இடப்பக்கம் வைத்து நிற்கிறாரே இவர் என்றும் எண்ணுவோம். அதற்குள் அர்ச்சகர் இடைபுகுந்து. 'ஆம்! இவர்தான் வலது பாத நடராஜர்' என்பார்.

இன்னும் இச் சந்நிதியிலே சிவகாமி அம்மையுடன், சின்னஞ் சிறிய வடிவில் அகஸ்தியர் இருப்பார். தாளம் போட்டுக் கொண்டு பிரமனும், மத்தளம் கொட்டிக் கொண்டு திருமாலும் நிற்பர். மேலும் லக்ஷ்மி கரதாளம் போட, சரஸ்வதி வீணை வாசித்துக் கொண்டிருப்பாள். ஒரே இசை முழக்கம் இந்த நடன அரங்கிலே. இப்படி ஒரு நடனம் எந்தச் சந்தர்ப்பத்திலே என்று தெரியத் தல புராணத்தையே ஒரு புரட்டுப் புரட்ட வேண்டும். தல புராணம் கூறும்வரலாறு இதுதான். கயிலையில் நடக்கவிருந்த இறைவன் திருமணக்கோலம் காண எல்லோருமே வடதிசை செல்ல, அதனால் வடதிசை தாழ்ந்து தென்திசை உயருகிறது. இந்த உயர்வு தாழ்வைச் சமன் செய்ய இறைவன் குறுமுனியாம் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்புகிறார். தம் திருமணக் கோலத்தோடு தென் திசை வந்து அகஸ்தியருக்குத் தரிசனம் தருவதாகவும் வாக்களிக்கிறார். அதன்படியே தென் திசை வந்து அகஸ்தியர் பொதிகையில் தங்குகிறார். இறைவனும், இறைவி உமை சகிதம் தென்திசை வந்து கீழ்வேளூரில் தரிசனம் கொடுக்கிறார் (இந்தத் திருமணக் கோலக் காட்சியை இன்னும் பல தலங்களில் காட்டியதாக அந்தத் தல வரலாறு கூறும்),

இப்படித் திருமணக் கோலங் காட்டியபோது கீழ்வேளூரில் இருந்த அகஸ்தியருக்கு மட்டும் ஒரு பேராசை,

கால்மாறியாடியவர்

தாண்டவக் கோலத்தையும் தரிசிக்க வேண்டுமென்று. அகஸ்தியர் வேண்டியபடியே தாண்டவக் கோலத்தில் ஒரு புதிய கோலத்தை ஆம், கால் மாறி ஆடிய கற்பகமாக நின்று காட்சி கொடுக்கிறார். கால் மாறி ஆடியதற்கு மதுரைத் திரு விளையாடல் புராணத்தில் ஒரு வரலாறு உண்டு. அப்படிப்பாக அங்குள்ள வடிவம் ஒரு நல்ல தாண்டவத் திரு உருவம் கல்லிலே. இங்கு கீழ் வேளூரில் இருப்பது செப்புச் சிலைவடிவில். கால் மாற்றியிருப்பதைத் தவிரத் தாண்டவமாகவே இல்லை. இறைவன் ஆடியது எழுவகைத் தாண்டவம் என்பர். அவற்றுள் எந்தத் தாண்டவத்திலும் வைத்து எண்ணப்படத்தக்கதில்லைதான். என்றாலும் ஆனந்தத் தாண்டவக் கோலத்தையே கோயில்கள் தோறும் பார்த்த நமக்கு, கலை அன்பர்களுக்கு ஒரு நல்விருந்து இப்புதிய நடராஜ வடிவம்.

அந்த நடனராஜனையும் சிவகாமியையும் தரிசித்த பின்னர் அர்த்த மண்டபத்தில் சென்று அக்ஷயலிங்கரை வணங்கலாம். அப்படி வணங்கும்போது ஓதுவார் ஒருதேவாரம் பாடுவார்.

சொல் பாவும் பொருள் தெரிந்து

தூய்மை நோக்கி, மனத்திருளை

வாங்காதானை,

நல் பான்மை அறியாத

நாயினேனை நன்னெறிக்கே

னசெல்லும் வண்ணம் நல்கினானே!

பல்பாவும் வாயாரப் பாடி ஆடி,

பணிந்து எழுந்து, குனிந்து

அடைந்தார் பாவம் போக்க

இல்ப்பானைக் கீழ் வேளூர் ஆளும்

கோவை, கேடு இலியை

நாடும் அவர் கேடிலாரே

என்று அப்பர் தேவாரமாக இருக்கும். இதில் இறைவனைக் 'கேடு இலி' என்பானேன் என்று கேட்கத் தோன்றும். க்ஷயம் என்றால் கேடு; அ என்றால் இல்லை. ஆதலால் அக்ஷயலிங் கரைக் கேடிலி என்று தமிழ்ப்படுத்துவது எவ்வளவு அழகு. இத்தலத்துக்கு வந்த சம்பந்தரும் சுந்தரரும் இத்தலத்தில் உள்ள இறைவனைக் கீழ் வேளூரான் என்று மட்டுமே பாட, அப்பர் மட்டும் அவனைக் 'கேடிலி' என்ற ஒரு நல்ல பெயராலேயே அழைக்கிறார்.

இனி, கோயில் மாடத்தை விட்டுக் கீழே இறங்கலாம். பிரமன், இந்திரன், அக்கினி, யமன் இன்னும் எண்ணிறந்தோர் அங்கு வழிபட்டு முத்தியடைந்திருக்கிறார்கள் என்பர் அர்ச்சகர்கள். அதை யெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க நமக்கு நேரம் இருக்காது. அப்பர் சொல்லியதைவிட, இந்த அர்ச்சகர்கள் என்ன புதிதாகச் செய்துவிடப் போகிறார்கள்? இந்தக் கோயிலின் வடபக்கத்தில் தனிக் கோயில் கொண்டிருக்கும் இறைவியைத் தரிசிக்க வேண்டாமா? ஆம்! அவளே சுந்தர குசாம்பாள்; அவளையே வனமுலை நாயகி என்று சம்பந்தர் தேவாரத்தில் குறிப்பிடுகிறார். அப்பர் இறைவனுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுத்தால், சம்பந்தர் இறைவிக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் கொடுக்கிறார். இவளையே பதரி வன மூல நாயகி என்றும் அழைக்கிறார்கள். இந்த இடமே இலந்தைக் காடாகத் தான் இருந்திருக்கிறது அன்று. அது காரணமாக இத்தல விருக்ஷம் கூட, இலந்தை மரமாகத்தானே இன்றும் இருக்கிறது. அம்பிகை இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி அபயம் அளிக்கும் கோலம் காணக் காண அழகு பயப்பது. ஆனால் இன்னும் கொஞ்சம் நட்ந்து கீழ்ப் பக்கம் வந்தால், இந்த சுந்தர குசாம்பிகையே, காளி உருவில் அஞ்சு வட்டத்து அம்மன் என்ற பெயரில், வடக்கு நோக்கியவளாய்த் தனிக் கோயிலில் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயில் வாயிலில் இருக்கும் துவார பாலகிகளைக் கண்டாலே அச்சம் எழும்.

உள்ளேயுள்ள அஞ்சு வட்டத்தம்மை நம் உள்ளத்தில் அச்சம் பிறக்கும் நிலையில் இருந்தால் வியப்பில்லைதானே. பால சுப்பிரமணியனை, நான்கு திசைகளிலும், வானில் இருந்தும் துயரங்கள் நெருங்காதபடி காக்க அவள் அத்தகைய கோர உருவம் எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. சுதையால் ஆன வடிவம்தான். நமக்கு ஐந்து திசைகளில் இருந்து மாத்திரம் துன்பங்கள் வருவதில்லையே. ஆயிரம் திசைகளிலிருந்து அல்லவா வருகின்றன. அத்தனை துயரையும் தடுத்து நிறுத்தி நம்மை வாழ்விக்க அஞ்சு வட்டத்தம்மை, ஆயிரம் வட்டத்து அம்மையாக உருவெடுக்க வேண்டியதுதான். அப்படி உருவெடுத்து நம் துயர்களைக்களைய அவளை வேண்டிக்கொள்ளலாம். இங்குள்ள இறைவன் கேடு இல்லாதவர் என்று கண்டோம். இவர் மாத்திரம் கேடு இல்லாதவராக வாழ்ந்தால் நமக்கு என்ன பிரயோஜனம்? நமக்கும் கேடு வராமல் காக்க அல்லவா தெரிந்திருக்க வேணும். அந்த வேலையைத்தான் அஞ்சு வட்டத்து அம்மையிடம் கொடுத்திருக்கிறாரே அவர்; அது போதாதா?

இக்கோயில் பழைய கோயில் என்பதனை, இது மாடக் கோயிலாய், கல்லாலேயே விமானம் அமைந்திருப்பதிலிருந்து தெரியும். இன்னும் இங்குள்ள கல்வெட்டுக்களை ஆராய்ந்தால் திரிபுவனச் சக்கரவர்த்தி ராஜராஜ தேவசோழன் இக்கோயிலுக்கு அளித்த பூதான விவரம் எல்லாம் தெரியும். தஞ்சை மராத்திய மன்னர்களான துகோஜி மகாராஜா துளஜாஜி மகாராஜாக்கள் எல்லாம் செய்த திருப்பணிகள், அவர்கள் செய்து வைத்த திரு ஆபரணங்களைப் பற்றிய விவரங்களும் தெரியும். இவற்றை யெல்லாம் தெரிய ஆவலுடையவர்கள் ஆற அமர இருந்து ஆராய்ச்சி பண்ணலாம். கேடிலியைத் தரிசிப்பதோடு திருப்தியடைகிறவர்கள் திரும்பி வந்து விடலாம்.

12. சிக்கல் சிங்கார வேலவர்

பால்நினைந்து ஊட்டும் தாயினும்

சாலப் பரிந்து, நீ

பாவியேன் உடைய

ஊனினை உருக்கி, உள்ஒளி

பெருக்கி, உலப்பு இலா

ஆனந்தம் ஆய

தேனினைச் சொரிந்து, புறம்புறம்

திரிந்த செல்வமே!

சிவபெருமானே!

யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப்

பிடித்தேன்; எங்கு எழுந்து

அருளுவது இனியே?

என்று மாணிக்கவாசகர் பாடுகிறார் அவரது திருவாசகத்தில். இந்தப் பிடித்த பத்து என்னும் பத்துப் பாட்டிலும் நான் உன்னை 'சிக்' எனப் பிடித்தேன் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். இந்தப் பாடல்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கு ஓர் ஐயம். “திருப் பெருந்துறைக்கு மன்னனுக்காகக் குதிரை வாங்கப்போன இடத்தில் இவரை வந்து இறைவன் அல்லவா சிக்கெனப் பிடித்திருக்கிறான்; இவர் போய் அவனைப் பிடித்ததாக இல்லையே' என்று நினைப்பேன். இந்த இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்புகளில்தான் எத்தனை எத்தனைவகை. இதில் குரங்குப் பிடியும் பூனைப்பிடியும் அல்லவா இருக்கின்றன. நமக்குத் தெரியுமே குரங்கு தன் குட்டியைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாது. குட்டிதான் தாயை விடாப் பிடியாகக் கட்டிப் பிடித்திருக்கும் போது தாய்க் குரங்கு மரத்துக்கு மரம் தாவும். மதில் சுவரில் ஏறும். அத்தனை நேரமும் விடாது பற்றிக் கொள்ளும் குட்டி.

பூனை இருக்கிறதே, தன் குட்டிகளிடம் மிகுந்த பாசம் உடையது. எங்கு சென்றாலும் தன் குட்டியைத்தானே தூக்கிச் செல்லும். அதிலும் குட்டியின் முதுகில் வாயை வைத்துக் கொஞ்சமும் நோவாமல் கடித்து எடுத்துச் செல்லும். எத்தனை குட்டிகள் இருந்தாலும் அத்தனை குட்டிகளையும் அப்படி ஒவ்வொன்றாக எடுத்துச் சென்றே காப்பாற்றும்.

இப்படித்தான் இறைவன் நம்மிடம் நடந்து கொள்கிறான். குரங்குக் குட்டியைப் போல் நாம் அவனை விடாது பற்றிக் கொண்டிருக்க வேணும். அப்போதுதான் சிலருக்கு அவன் அருள் பாலிப்பான். இன்னும் சிலருக்கோ அவன் பூனையைப் போல் பரிவுகாட்டி. அவனே வந்து அணைத்து எடுத்துத் தன்னுடன் சேர்த்து அருள்பாலிப்பான். இந்த உறவு முறையையே மார்க்கட. நியாயம், மார்ஜால நியாயம் எனச் சொல்லுவர் சமயவாதிகள். இரண்டு முறைகளிலும் பிடிப்பு உண்டு, ஒன்று அவனை நாம் பிடிக்க வேண்டும். இல்லை. அவன் நம்மைப்பிடித்துக் கொள்ள வேண்டும். இந்தப் பிடியும் ஏதோ 'ஏனோ தானோ' என்று இராமல் சிக்கெனப் பிடித்த பிடியாய் இருத்தல் வேண்டும்.

மாணிக்கவாசகரை அப்படிப் பிடித்தவன் இறைவன். இவருமே அவனைச் சிக்கெனப் பிடித்துக் கொள்கிறார், அந்தப் பிடியின் வலியை உணர்ந்தே, 'நான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்தருளுவது இனியே?' என்று இறைவனிடமே கேட்கிறார். அவன் என்ன சொல்லக் கூடும்? ‘ஆம். நானுந்தான் வந்து பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டேன். இனி, உனக்காக நரியைப் பரியாக்க வேண்டியதுதான். பரியை நரியாக்க வேண்டியதுதான் இன்னும் என்ன என்ன செய்து எவனிடம் எல்லாம் பிரம்படிபடவேண்டியிருக்கிறதோ? யார் கண்டார்கள்?' என்றுதானே சொல்லியிருப்பான். இத்தனை எண்ணமும் என் உள்ளத்தில் ஓடுகிறபோது, எனக்குச் சிக்கல்' ஞாபகம் வரும். சிக்கல் சிங்கார வேலவர் ஞாபகம் வருவார்.

இந்த வேலவர் மிகவும் நல்லவர் ஆயிற்றே. இவர் ஏன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்ற கேள்வி எழும். விசாரித்தால் இங்கே சிக்கிக் கொண்டிருப்பவர் சிங்கார வேலவர் அல்ல. அவருடைய தந்தையாரான வெண்ணெய் லிங்கேசுரரே என்று அறிவோம். அவர் சிக்கலில் அகப்பட்டுக் கொள்ளகூடியவர்தான். ஏன் சிக்கலில் அகப்பட்டுக் கொண்டார் என்று தெரிய வேண்டாமா? அதற்குச் சிக்கல் தலவரலாற்றைப் பார்க்க வேண்டும்.

இந்தத் தலத்திலே ஒரு குளம். பால் குளம் என்று பெயர் (இன்றும் இருக்கிறது, அதே பெயரில், ஆனால் அங்கிருப்பது தண்ணீர்தானே ஒழியப் பால் இல்லை.) அதில் அன்று பால் நிறைந்திருக்கிறது. வசிஷ்டர் இந்தக் குளக்கரைக்கு வந்திருக்கிறார். பால் குளத்திலுள்ள பாலை எடுத்துக் காய்ச்சி நிறைய வெண்ணெய் எடுத்திருக்கிறார். அந்த வெண்ணெயாலேயே லிங்க உரு அமைத்துப் பூசித்திருக்கிறார். வெண்ணெய் லிங்கரை அப்படியே விட்டு விட்டுப்போக மனம் வருமா? அவரைத் தம்முடன் எடுத்துச் செல்ல விரும்பிப் பெயர்க்க முனைந்திருக்கிறார். ஆனால் அவரோ பிரதிஷ்டை பண்ணிய இடத்திலேயே சிக்கிக் கொள்கிறார். இடத்தை அவர் 'சிக்' எனப் பிடித்துக்கொள்கிறார். பாவம்! வசிஷ்டர் ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறார்.

இப்படி இந்த வெண்ணெய்ப்பிரான், நவநீத ஈசுவரர் சிக்கிக்கொண்ட இடம்தான் சிக்கல். இவர் இப்படி இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டால், இவரது குமாரனாம் சிங்காரவேலவனும் எத்தனையோ பக்தர்கள் உள்ளத்திலே சிக்கிக் கொண்டிருக்கிறான். இப்படி ஒரே சிக்கல் மயம்தான் அங்கு, அந்தச் சிக்கலுக்கே செல்லுகிறோம் நாம் இன்று.

சிக்கல் தஞ்சை நாகூர் ரயில்லைனில் திருவாரூருக்குக் கிழக்கே பன்னிரெண்டு மைல் துரத்தில் இருக்கிறது. வசதியாக ரயிலிலே செல்லலாம். 'சிக்கல்' என்ற பெயரோடு விளங்கும் ரயில்வே ஸ்டேஷனில் இயங்கி இரண்டு மூன்று பர்லாங்கு நடந்தால் போதும். கோயில் வாசலில் வந்து சேரலாம். இல்லை, 'எங்களுக்குக் கார் வசதி எல்லாம் உண்டு' என்று சொல்கிறவர்கள் திருவாரூர் நாகப்பட்டினம் ரஸ்தா வழியாகவும் வரலாம். ரோடும் ரயிலும் அடுத்தடுத்து ஒரே கதியில்தான் செல்கின்றன. கோயில் வாயிலை எண்பது

அடி உயரமுள்ள ஏழு நிலைக் கோபுரம் அழகு செய்கிறது. ஆனால் இந்தக் கோபுரத்தையும் முந்திக்கொண்டு ஒரு கல்யாண மண்டபம் இருக்கிறது. இதனைக்கல்யாண மண்டபம் என்று கூறுவது சரியல்ல. கல்யாணக் கொட்டகை என்று வேண்டுமானால் சொல்லலாம். அது ஒரு பெரிய தகரக் கொட்டகை. இரு பக்கமும்பெரிய இரும்புத் தூண்கள் நிறுத்திப் பிரும்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள், 1932-ம் வருஷம்தான் கட்டி முடித்திருக்கிறார்கள். அப்போது அதனை 'காரனேஷன்ஹால்' என்று அழைத்திருக்கிறார்கள், உற்சவ காலங்களில் கலை அரங்காக உபயோகிக்கிறார்கள். தகரக் கொட்டகை ஆனதால் இன்னிசை எல்லாம் கேட்க இயலாது. எல்லாம் தகர ஓசையாகவே இருக்கும். என்னைக் கேட்டால் இந்த இடத்தில் இந்தத் தகரக் கொட்டகையைக் கட்டியிருக்கக்கூடாது, இனி என்ன செய்ய? இருந்து விட்டுப் போகட்டும். அதனைச் சிரமப்பட்டுப் பார்க்க வேண்டியதில்லை. உண்மையில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லைதான்.

இனிக் கோயிலுள் நுழையலாம்; நுழைந்ததும் கிருத்திகை மண்டபம்வந்து சேருவோம். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று சிங்கார வேலவர் தமது மனைவிமார் இருவருடன் எழுந்தருளி இங்கு நீராட்டப் பெறுவார். அப்போது கூட்டம் 'ஜாம் ஜாம்' என்று இருக்கும். மற்ற வேளையெல்லாம் காலியாகவே கிடக்கும். இந்த மண்டபத்தையும் கோயிலையும் பார்த்தால் திருப்பணி சமீபகாலத்தில்தான் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றும். விசாரித்தால் அன்று சோழன் செங்கணான் கட்டிய இம்மாடக் கோயிலை முப்பத்தைந்து வருஷ காலம் இந்தக் கோயில் தருமகர்த்தராக இருந்த தெக்கூர் திரு. கருமுத்து அழகப்பச் செட்டியார் எட்டு லட்ச ரூபாய் செலவில் புதுப்பித்திருக்கிறார் என்பார்கள். புதுப்பிப்பது என்ன, புதிதாகவே கட்டியிருக்கிறார்.

சமீபத்தில்தான் சிறப்பாகக் கும்பாபிஷேகம் இங்கு நடந்திருக்கிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே செல்லலாம். எல்லா மாடக் கோயில்களிலும் உள்ளது போல் கட்டு மலை மேலே நவநீதேசுவரர் இருக்கிறார். இவர் இருக்கும் இடத்தைத் தேவகோட்டம் என்கிறார்கள். படிக்கட்டின் பக்கத்தில் சுந்தர கணபதி இருக்கிறார். அவரை வணங்கிப் பன்னிரண்டு படி ஏற வேணும். ஏறினால் சோமாஸ்கந்தர் நம்முன் நிற்பார்; இல்லை, உட்கார்ந்திருப்பார். அந்த மண்டபத்துக்குச் சென்று அங்கிருந்து வெண்ணெய்ப் பிரானைத் தரிசிக்கலாம். அவரே சிக்கலில் சிக்கிக் கொண்டவர். நம்மையும் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டி விடுவதற்கு முன்பே வெளிவந்து விட வேணும்.

வெளி வரும்போது நடராஜருக்கும் ஒரு வணக்கம் செலுத்தலாம். அதன் பின்னும் நடந்தால் சிங்கார வேலவர் காட்சி கொடுப்பார். அவர் செப்புச் சிலை வடிவில் வெள்ளை மஞ்சத்தில் நின்று கொண்டிருப்பார். இரு புறமும்வள்ளியும் தெய்வயானையும் நிற்பார்கள். எல்லோரும் தங்கக் கவசமும் வைர நகைகளும் அணிந்து கொண்டிருப்பார்கள். இத்தனை அழகுடன் இருக்கும் இவர்கள் இருக்கும் இடம்தான் என்னவோ போல் இருக்கும். இத்தாலியப் பளிங்குக் கற்களை வாங்கித் தரையில் சுவரில் எல்லாம் பதித்து அழகு செய்திருப்பார்கள்.

இந்தச் சிங்காரவேலர் அழகான திரு உரு மூன்றடி உயரமே உடையவர் என்றாலும் நல்ல கம்பீரக் கோலத்துடன் நிற்கிறார். இவர் முழு அழகையும் காண, கார்த்திகை தினம்தான் செல்ல வேண்டும். அபிஷேக காலத்தில் தான் காண வேண்டும். அப்போதும் ஓர் எமாற்றம் இருக்கும் நமக்கு. சிங்கார வேலவரை வடித்த சிற்பியா இந்த வள்ளி தேவயானையையும் வடித்தான் என்று எண்ணத் தோன்றும். அந்த உருவங்களில் அத்தனை வடிவ அழகு இராது. வினாவினால் ‘ஒரிஜினல்' வள்ளி தேவயானையர் களவு போய் 'டூப்ளிகேட்' வள்ளி தேவயானையரையே பின்னர் செய்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியும். ஐயோ! அழகனான சிங்காரவேலவனுக்கு அழகு மனைவியர் இல்லையே! அது அவன் ஜாதக விசேஷம். நாம் என்ன செய்ய? இந்தச் சிங்காரவேலவனைத் தரிசித்துவிட்டுக்கட்டு மலையைவிட்டு இறங்கிக் கீழ்தளத்தில் கோயில் கொண்டிருக்கும் வேல் நெடுங்கண்ணி அம்மையைத் தரிசிக்கலாம். அம்மையின் திருஉரு அழகான ஒன்றுதான். அவளது அழகைவிட அவளது கருணையே சிறப்பானது. அன்று சூரபதுமனை முடிக்கக் கார்த்திகேயன் கிளம்பியிருக்கிறான். அவனிடம் அப்போது பல படைகள் இருந்தாலும், முக்கியமான வேல் இருக்கவில்லை. இதை உணர்ந்திருக்கிறாள் அன்னை வேல் நெடுங்கண்ணி. அதனால் ஓடோடி வந்து தன் மகனாம் முருகனக்கு வேல் ஒன்றைக் கொடுத்திருக்கிறாள். அந்த வேல்தானே சூரனைச் சம்ஹரித்திருக்கிறது. இப்படி முருகன் வேல் வாங்கி வேலனாக நின்ற இடம்தான் சிக்கல் என்று கூறும் தல புராணம். 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்பது பழமொழியாச்சே. இந்த வேல் வாங்கும் விழா கந்த சஷ்டிக்கு முந்திய நாள் நடைபெறும், கந்தன் விரைவாக வருவதும் அம்மாவிடம் வேல் வாங்குவதும் அழகான காட்சி. ஆனால் அதை விடச் சிறப்பானது, அந்த நேரத்தில் சிங்கார வேலவர் முகத்தில் வியர்வை அரும்புவது. இது இன்றும் நடக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும். இப்படிக் குமரனுக்கு வேல் கொடுத்த வேல் நெடுங்கண்ணியையும் தரிசித்து விட்டு, கோயில் பிரகாரத்தை ஒரு சுற்றுச் சுற்றலாம். தென்பக்கத்தில் இரும்புக் கதவுகள் போட்டுப் பதனப்படுத்தி வைத்திருக்கும் அறைகளில் தங்க மயில், தங்க ஆட்டுக்கடா, தங்கக் குதிரை வாகனங்கள் எல்லாம் இருக்கும். இவற்றையெல்லாம் பார்க்க அதிகாரியின் அனுமதி வேண்டும். ஆதலால் விரைவாகவே பிரகாரத்தைச் சுற்றிக் காசி விசுவநாதர், கார்த்திகை விநாயகர், ஆறுமுகன் முலியோரைத் தரிசித்து விடலாம்.

இத்தனையும் பார்த்து விட்டாலும் வெளியே வர முடியாது. இந்தக் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் இருந்த சிங்கார வேலவர் தம் அம்மானுக்கு இடம் கொடுத்திருக்கிறாரே, அவரைப் பார்க்க வேண்டாமா? அங்கு தனிக் கோயிலில் இருப்பவர் கோல வாமனப் பெருமாள். பெயர் தான் வாமனரே ஒழிய நல்ல நீண்டு வளர்ந்த ஆஜானுபாகு; அவரையும் அவருடைய துணைவி கோமளவல்லித் தாயாரையும் வணங்கலாம். வெளியே மண்டபத்தில் நல்ல சிமெண்டில் ஆதிசேஷனை ஆசனமாகவும் ஸ்ரீதேவி பூ தேவியரைத் துணைவிகளாகவும் கொண்டிருக்கும் வைகுண்ட நாதன் வேறே உருவாகியிருக்கிறான். இவரையுமே கண்டு தரிசித்து விட்டு வெளியே வரலாம். இதன் பின்னும் அவகாசம் இருந்தால் கோவிலுக்கு மேல் புறம் உள்ள பால்குளம், மற்றைய இலக்குமி தீர்த்தம், கயா தீர்த்தம், அம்மா குளம் முதலியவற்றைக் காணலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார். வெண்ணெய்ப் பிரானைப் பாடிப் பாடிப் பரவி இருக்கிறார்.

நீலம் நெய்தல் நிலவி

மலரும் சுனை நீடிய

சேலும் ஆலும் கழனி

வளம் மல்கிய சிக்கலுள்,

வேல் ஒண் கண்ணியினாளை

ஓர் பாகன் வெண்ணெய்ப்பிரான்

பால்வண்ணன் கழல் ஏத்த

நம் பாவம் மறையுமே.

என்பது தேவாரம். சம்பந்தர் சிங்கார வேலவரைப் பாடவில்லை . அருணகிரியார் அவரைப் பாடமறக்கவில்லை

அழகிய சிக்கல்

சிங்கார வேலவா!

சமரிடை மெத்தப்

பொங்காரமாய் வரும்

அகரரை வெட்டிச்

சங்காரம் ஆடிய

பெருமானே!

என்பது அவர் பாடும் திருப்புகழ். இன்னும் இந்தச் சிங்காரவேலவன், அவன்றன் தந்தை வெண்ணெய்ப் பிரான், அவன்றன் துணைவி வேல்நெடுங்கண்ணி எல்லோரையும் சேர்த்தே காஞ்சி சிதம்பர முனிவர் க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழில் பாடி மகிழ்விக்கிறார்.

சிக்கல் அம்பதிமேவும் சிங்கார வேலனாம்

தேவர் நாயகன் வருகவே!

திகழும் வெண்ணெய்ப் பிரான்

ஒருபால் உறைந்த மெய்ச்செல்வி

பாலகன் வருகவே!

என்பது பாட்டு. இப்படியெல்லாம் பல்லோரும் பாடிப் பரவும் பெருமை வாய்ந்தவன் சிங்காரவேலவனும் அவன் பெற்றோரும்.

இக்கோயிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளில் இரண்டு கோல வாமனப் பெருமாளைப் பற்றியும், ஒன்று சிங்கார வேலவனைப் பற்றியும், மற்றவை நவநீதப் பெருமாளைப் பற்றியும் உள்ளவை. ஜடாவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீர பாண்டியன் கல்வெட்டு பால்வெண்ணெய் நாயனாருக்கு வழிபாட்டுக்குப் பணம் கொடுத்ததைக் கூறுகிறது. பாண்டிய மன்னர் தவிர விஜயநகர நாயக்க மன்னர்களும் நிபந்தங்கள் பல ஏற்படுத்தியிருக் கிறார்கள். மகாராயர், வீரபூபதி அச்சுததேவ மகாராயர் ஏற்படுத்திய நிபந்தங்கள் பல. இவற்றை யெல்லாம் விரிவாய் ஆராய்வதற்கு நேரம் ஏது, நாம் செல்லும் க்ஷேத்திராடன வேகத்தில்?

13. கடல் நாகைக் காரோணர்

தொண்டை மண்டலம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக உருவாவதற்குக் காரணமாக இருந்தவன் தொண்டைமான் இளந்திரையன். அவன்தன் புகழைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற சங்கப் புலவர் பெரும்பாண் ஆற்றுப் படையிலே பரக்கப் பாடுகிறார்.

இருநிலம் கிடந்த திருமறு மார்பின்

முந்நீர் வண்ணன் பிறங்கடை, அந்நீர்த்

திரைதரு மரபின், உரவோன் உம்பல்.

மலர்தலை உலகத்து மன்உயிர் காக்கும்

முரக முழங்கு தானை மூவருள்ளும்

இலங்குநீர் பரப்பின் வளைமிக் கூறும்

வலம்புரி அன்னவசை நீங்கு சிறப்பின்

அல்லது கடிந்த அறம்புரி செங்கோல்

பல்வேல் திரையன்.

என்று பாராட்டப் பெறும் இளந்திரையன் வரலாற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? சோழ நாட்டிலே கிள்ளி வளவன் என்று ஓர் அரசன் இருக்கிறான். இளவயதிலே அவன் கடல் கடந்து செல்கிறான். அப்படிச் சென்றவன் நாகர் உலகத்துக்கே போகிறான்; அங்கு பீலிவளை என்ற நாக கன்னியைக்கண்டு காதலிக்கிறான். அந்த வட்டாரத்திலே கிடைத்த தொண்டை மலர்களை மாலையாக்கி அவளுக்கு அணிவித்துக் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறான். பீலிவளையுடன் கூடியிருந்த தலைவன் கிள்ளிவளவன் தன் நாடு திரும்புகிறான். அவளை அறவே மறந்து விடுகிறான். பீலிவளையோ நல்ல ஆண் மகனைப் பெற்றெடுக்கிறாள், அவன் வளர்ந்து வாலிபமாகிறான். தான் சோழன் மகன் என்பதை அறிகிறான்.

அன்னையின் அனுமதியோடு கடல் கடந்து சோழ நாட்டுக்கு வருகிறான். கிள்ளி வளவனைக் கண்டு அரசுரிமை கேட்கிறான். அவன் அணிந்து வந்த தொண்டை மாலையால் உண்மையை உணர்கின்ற சோழ மன்னன், சோழ நாட்டையே இரு கூறாக்கி வட பகுதிக்குத் தொண்டை மாலை அணிந்து வந்த தொண்டையனை அரசனாக்குகிறான். கடல் அலைகொண்டு வந்த இளைஞன் ஆனதினால் அவனை இளந்திரையன் என்கின்றனர் மக்கள். இப்படித்தான் தொண்டைமான் இளந்திரையன் தொண்டை மண்டலத்தின் முதல்வனாகிறான் என்று பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த இளந்திரையன் நாகர் உலகத்திலிருந்து வந்து சோழ நாட்டில் கரை ஏறிய இடம்தான் நாகப்பட்டினம். இந்தக் கடற்கரைக்கு நாகப்பட்டினம் என்று பெயர் பெறுவதற்குப் புராண வரலாறும் ஒன்று உண்டு.

ஆதிசேடனுக்கு ஒரு மகள் ; அவள் சூரியகுலத் தோன்றலாம் சாலீசுக மன்னனைக் கண்டு காதலிக்கிறாள். ஆதிசேடன் இருவருக்கும் மணம் முடித்து வைத்துவிட்டுப் பூலோகத்துக்கு வந்து விடுகிறான். வந்து ஒரு நகரைச் சிருஷ்டித்து அங்கு இறைவனையும் பிரதிஷ்டை பண்ணி வணங்குகிறான். நாக அரசன் உருவாக்கிய பட்டினம் நாகப்பட்டினம் என்று பெயர் பெறுகிறது. அவன் ஸ்தாபித்த இறைவனே காரோணர் ஆகிறார். இப்படித் தான் கடல் நாகைக் காரோணம் உருப்பெற்றது என்பது புராணக் கதை. இப்படிச் சரித்திரப் பிரசித்தியும் புராணப் பிரசித்தியும் பெற்ற கடல் நாகைக் காரோணர் கோயிலுக்கே செல்கிறோம் நாம் இன்று.

நாகப்பட்டினம் தஞ்சை ஜில்லாவில் தஞ்சைக்கு நேர் கிழக்கே 55 மைல் தூரத்தில் உள்ள ஒரு கடற்கரைப் பட்டினம் தஞ்சை திருவாரூர் வழியாகவோ, இல்லை மாயூரம் திருவாரூர் வழியாகவோ ரயிலிலும் போகலாம்; காரிலும் போகலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரைமைல் தொலைவில் கோயில் இருக்கிறது. அங்குள்ள வண்டிக்காரர்களிடம் காரோணர் கோயில் எங்கிருக்கிறது என்று கேட்டால் பரக்கப் பரக்க விழிக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் நீலாயதாக்ஷி அம்மன் கோயில் எங்கிருக்கிறது என்றுதான் கேட்க வேண்டும்.

ஆம். இங்குள்ள நீலாயதாக்ஷி -கருந்தடங் கண்ணி காரோணரை விடப் பிரபலமானவள். அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது அவளது திருக்கோயில். ஆதலால் நீலாயதாக்ஷியின் பெயரைச் சொல்லியே கோயிலைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்படியானால் இந்தக் கோயிலுக்குக் காரோணர் கோயில் என்று பெயர் வருவானேன் என்றுதானே கேட்கிறீர்கள், அதுவா? இங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன் காயாரோகணர். இதற்கு முன்னமேயே இரண்டு காயாரோகணர்களைச் சந்தித்திருக்கிறோம், நமது தல யாத்திரையில் ஒன்று கச்சியில், அங்கு அவர் அவ்வளவு பிரபலமானவர் அல்ல. அவருக்கு என்று தனிப்பதிகம் கூட ஒருவரும் பாடவில்லை . அடுத்தவர் தான் குடந்தைக் காரோணர். இவர் கூடக் காசிவிசுவநாதர் என்ற பெயரிலேதான் வழங்கப் படுகிறார். இந்த நாகப்பட்டினத்து இறைவர் மாத்திரமே காயாரோகணர் என்ற பெயரோடேயே நிலைத்து நிற்கிறார். இவர் காயாரோகணர் என்று பெயர் பெறுவானேன்? யமுனைக் கரையில் கருத்தமர் என்ற முனிவரின் புத்திரனாகப் புண்டரீகர் பிறந்து வளர்கிறார். பல தலங்களைத் தரிசிக்கிறார். குடந்தையிலே, ராமர் ருத்திர அம்சம் பெற விரும்பியபோது இறைவன் அவர் உ.டலிலே ஆரோகணித்துக் கொண்டார் என்பதை அறிகிறார்.

இவர் நாகப் பட்டினம் வந்ததும் இறைவனைத் தரிசித்துத் தம்மை அவர் உருவில் ஆரோகணித்துக் கொள்ள வேண்டித் தவங் கிடக்கிறார். புண்டரீகரது தவத்துக்கு மெச்சி அவரது காயத்தைத் தம்மேனியோடு ஆரோகணித்துக் கொள்கிறார். இப்படித் தான் காயாரோகணர் நாகையில் உருவாகியிருக்கிறார். இந்தக் காயாரோகணரே பின்னர் தம் பெயரைக் காரோணர் என்று சுருக்கிக் கொண்டிருக்கிறார். ஆம்! வேங்கடாசலபதியை வே.பதி என்றம், சந்திர சேகரை ச.சேகர் என்றும் குறுக்கி மகிழ்கின்றவர் பெருகியிருக்கிற காலத்தில் வாழ்கின்றவர் அல்லவா?

காரோணரைப் பற்றி இவ்வளவு தெரிந்து கொண்ட பின் கோயிலுக்குள் செல்லலாமே. கோயில் கிழக்கு நோக்கிய கோயில். கோயில் வாயிலிலே நீண்டு உயர்ந்த கோபுரம் இருக்காது. முற்றுப்பெறாத மட்டக் கோபுர வாயில் வழியாகத்தான் உள்ளே செல்லவேணும். உள்ளே சென்றதும் நம்மை எதிர்கொண்டு வரவேற்பவர் தல விநாயகரான நாகாபரணப் பிள்ளையார். ஐந்து தலைப் பாம்பு ஒன்று அழகாகக் குடை பிடிக்கும் பாவனையில் பிள்ளையாருக்குப் பின்னால் இருக்கும். ஏதோ பல லிங்கத் திருவுருவுக்குத்தான் நாகாபரணம் என்றில்லை, பிள்ளையாருக்குமே உண்டு என்று சொல்லும் பாவனையில் அமைந்திருக்கும் தலம் நாகப்பட்டினம் அல்லவா? அங்குள்ள விநாயகருக்கு நாகாபரணம் இல்லாமல் இருக்குமா? அவருக்குப் பின்புறந்தான் நந்தி; கல்லுருவில் அல்ல, சுதை உருவில்தான். ஒரு சிறு மண்டபத்துக்குள்ளே அதையும் நாற்புறமும் இரும்பு வேலியிட்டுப் பதனப்படுத்தியிருப்பார்கள். இந்த நந்திக்கு வடபுறம் பந்தல் காட்சி மண்டபம், தென்பக்கம் முத்தி மண்டபம். இந்த மாதிரி முத்தி மண்டபம் கயிலையிலும், காசியிலும், இக்காரோணர் கோயிலிலுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். நந்தியை வலம் வந்து இடைநிலைக் கோபுரமாம் சோழன் கோபுர வாயிலையும் கடந்தே, ராஜதானி மண்டபம் வரவேணும். இம்மண்டபத்தில் எல்லா மூர்த்திகளும் சேர்ந்து வதிவதால் இத்தலத்துக்கே சிவராஜதானி என்று பெயர் ஆயிற்றே. அந்த ராஜதானி மண்டபத்திலுள்ள தெய்வங்களுக்கெல்லாம் வணக்கம் செலுத்தி விட்டு வடபக்கம் உள்ள நீலாயதாக்ஷியைக் கண்டு தரிசிக்கலாம்.

திருவாரூரில் நீலோத்பலாம்பாள் என்னும் அல்லியங் கோதை என்றால், இங்கு நீலாயதாக்ஷி என்னும் கருந்தடங் கண்ணி-நிரம்ப வரசித்தி உடையவள். காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாக்ஷியுடன் ஒருங்குவைத்து எண்ணப்படுபவள். சங்கீத விற்பன்னர்களாம் தியாக ராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் நீலாயதாக்ஷியின் அருள் பிரபாவத்தை அழகிய கீர்த்தனங்களாகப் பாடியிருக்கிறார்கள். அதிலும் நீலாம்பரி ராகத்தில் 'அம்ப நீலாய தாக்ஷி' என்று முத்துச்சாமி தீக்ஷிதர் பாடியுள்ள கீர்த்தனம் பிரசித்தம். பாடத் தெரியுமானால் சந்நிதி முன் நின்றுபாடி சாந்நித்யம் பெறலாம். இல்லாவிட்டால் பிறர் பாடக் கேட்டாவது மகிழலாம்.

நீலாயதாக்ஷியை வணங்கிய பின்னர் அந்தப் பிரகாரத்திலுள்ள வாயிலையும் கடந்து உட்கோயிலுக்குச் செல்லலாம். அங்கு நின்று பார்த்தால் கோயில், கோபுர மில்லாவிட்டாலும் பிரம்மாண்டமான கோயில் என்று காண்போம். அங்குள்ள பிரகாரத்தைச் சுற்றினால் விநாயகர், ஆறுமுகன், அதிகார நந்தி, பைரவன், சந்திரன், சூரியன், புண்டரீகர், சாலீசுக மன்னன், இந்திரன் முதலிய அஷ்ட திக்குப் பாலகர்கள், சமயக் குரவர் நால்வர், மாவடிப் பிள்ளை யாரை எல்லாம் கண்டு தொழலாம். இந்தப்பிரகாரத்தின் வடபகுதியிலேதான், தசரதனே பிரதிஷ்டை செய்த சனிசுவரன் வேறே தனித்து நிற்பார். இன்னும் கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் எல்லாமே ஒரே வரிசையில் மேற்கு நோக்கியே 'கார்ட் ஆப் ஆனர்' கொடுத்துக்கொண்டு நிற்பார்கள். ஒருவருக்கு ஒருவர் வக்கரித்துக்கொண்டு நிற்கமாட்டார்கள். இதை அடுத்தே சங்க மண்டபம்; அந்த மண்டபத்தின் மேற்கிலேதான் தியாகராஜரும், காயாரோகனரும். தியாகராஜர் பூலோகத்துக்கு எழுந்தருளிய வரலாற்றைத் தான் திருவாரூரிலேயே கண்டு கொண்டோமே, அங்குள்ளவர் வீதிவிடங்கர் என்றால் இங்குள்ளவர் சுந்தரவிடங்கர். அங்கு நடந்தது அசபா நடனம் என்றால் இங்கு நடந்தது தரங்க நடனம். இங்கு தியாகராஜர் திருவாரூரில் உள்ள கோலாகலத்தில் இருக்க மாட்டார். அந்தக் கோலாகலம் எல்லாம் திருவாரூர் தியாகராஜருக்கென்றே ஏற்பட்டவை. என்றாலும் இந்தத் தியாகராஜரையும் வணங்கிவிட்டு வடக்கு நோக்கி நடந்தால், மூலவராம் காயாரோகனர் சந்நிதி வந்து சேருவோம். நல்ல வடிவில், லிங்கத் திரு உருவில் இருப்பார்.

அங்கு கருவறைச் சுவரிலே காயாரோகனருக்குப் பின்னாலே இருப்பவர் ஆதிபுராணர். சோமாஸ்கந்தர், அகஸ்தியர் முதலிய ஏழு முனிவர்களக்குக்காட்சி கொடுத்த கோலம். கயிலையில் நடந்த திருமணக் கோலத்தை அகத்தியருக்கு மட்டுந்தான் காட்டுவதாக எக்ரிமெண்டு, அவருடன் மற்ற ஆறுமுனிவர்களும் சேர்ந்து கொண்டால் எல்லோருக்கும் தரிசனம் கொடுத்துத் தானே ஆக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கெல்லாம் அருள் செய்பவன் ஆயிற்றே. ஆதலால் தான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார். காயாரோகணரையும், சோமாஸ்கந்தரையும் வணங்கிவிட்டு வெளியே வரும்போது, மண்டபத்தின் ஒரு பகுதியை இரும்புக் கிராதிகள் போட்டு, அதைப் பத்திரமாகப் பூட்டியும் வைத்திருப்பதைப் பார்ப்போம். அந்த நீண்ட சிறு

அறைக்குள் தான் நெருக்கி இடம் பிடித்துக்கொண்டு, அந்தக் கோயிலில் செப்புச் சிலை வடிவில் உள்ள தெய்வங்கள் எல்லாம் இருப்பார்கள். இவர்களில் கிட்டத்தட்ட எல்லோருமே நமக்கு முன்பே அறிமுகமானவர்கள்தான் என்றாலும் இவர்களுக்கிடையில் ஒரு பஞ்சமுக விநாயகர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளியிருப்பார். செப்புச் சிலை வடிவில் ஒரு நல்ல வேலைப் பாடு. வேறு ஒரு தலத்திலும் இல்லாதது. இவரையே ஹேரம்ப விநாயகர் என்றும், இவரே சர்வ வல்லமை உள்ளவர் என்றும் சாஸ்திரங்கள் கூறும். இவருடன் வில்லேந்திய வேலன் ஒருவனும் உண்டு. இடது கை வில்தாங்க வலது கை அம்பை விடுகின்ற பாணி. இன்னும் இந்தக் கோயிலில் இரண்டு நடராஜ வடிவங்கள். எல்லாவற்றையும் கலை அன்பர்கள் கண்டுகளிக்கலாம் பல மணி நேரம் நின்று பார்த்து. இத்தனையையும் பார்த்துவிட்டு வெளியே வரலாம்.

இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மூவருமே வந்திருக்கிறார்கள். மூவரும் காரோணரைப் பாடியிருக் கிறார்கள்.

கருந்தடங் கண்ணியும் தானும்

கடல் தாகைக் காரோணத்தான்

இருத்த திருமலை என்று

இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான்

பெருந்தலை பத்தும். இருபது

தோளும் பிதிர்ந்து அலற

இருந்தருளிச் செய்ததே,

மற்றுச் செய்திலன் எம் இறையே!

என்பது அப்பர் தேவாரம். இந்தச் சுந்தரர் இருக்கிறாரே அவர் கருமமே கண்ணாயினர். எங்கு சென்றாலும் தனக்கு என்ன என்ன வேண்டும் என்பதைக் கேட்கத் தவறமாட்டார். கேட்டதை வாங்காமலும் போகமாட்டார். கடல் நாகைக் காரோணம் மேவியிலிருந்த பெருமானிடம் அவர் கேட்கும் பொருள்களின் 'ஜாபிதா' வைப் பாருங்களேன். அதையும் தனக்கெனக் கேட்காதவர் போலவுமே பரவை சங்கிலியாருக்காவே கேட்பவர் போலவுமே வினயமாகக் கேட்கிறார்.

பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் :எனக்கும் பற்றாய பெருமானே!

மற்று யாரை உடையேன்?

உண்மயத்த உமக்கு அடியேன் குறைதீர்க்க

வேண்டும், ஒளிமுத்தம், பூணாரம்

ஒண்பட்டும் பூவும்

கண்மயத்த கத்தூரி, கமழச் சாந்தும் வேண்டும்.

என்று ஜாபிதாவை நீட்டிக் கொண்டே போகிறார். சமயக் குரவர் நால்வருள்ளும் இவர்தானே கோலாகலமாக வாழ்வு நடத்தியவர். வேண்டும் பொருள்கள் பலவாக இருத்தல் வியப்பில்லையே. இன்னும் இத்தலத்தில்தான் அறுபத்து மூவரில் ஒருவரான அதிபத்தர் வாழ்ந்திருக்கிறார். பரதவர் குலத்தில் பிறந்த இவர் மீன் பிடிக்கும் தொழில் நடத்தியிருக்கிறார். தம் வலையில் அகப்படும் முதல் மீனைச் சிவபெருமானுக்கு என்று விட்டு விட்டுப் பழகியிருக்கிறார். ஒரு தடவை பொன் மீனே முதல் மீனாகக் கிடைத்திருக்கிறது. அதையுமே இறைவனுக்கு விட்டிருக்கிறார். இவர் அன்பை உணர்ந்து இவருக்குத் தரிசனம் தந்து இவரை ஆட்கொண்டிருக்கிறான் இறைவன், அதிபத்தர் கெட்டிக்காரர்தான். தம் வலையில் கிடைத்த மீனை விட்டு, பக்தி வலையில் பரமனையே பிடித்துப் போடக் கற்றிருக்கிறாரே. இவர் வாழ்ந்த இடம் செம்படவர் சேரியாம். நம்பியாங்குப்பம் என்கிறார்கள். அங்கு அதிபத்தர் கோயில் ஒன்று மண் மேட்டில் புதைந்திருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இன்னும் இத்தலத்தில் காயாரோணகர் கோயிலை ஒட்டிய சுற்றுக் கோயில்களும் பல உண்டு. அவகாச உடையவர்கள் எல்லாம், அமரநந்தீசர் கோயில், கைலாச நாதர் கோயில், கட்டியப்பர் கோயில், விசுவநாதர் கோயில், குமார் கோயில் முதலிய கோயில்களுக்குச் சென்று வணக்கம் செலுத்தலாம்; இந்தக் கோயில்களுக்கு எல்லாம் செல்ல அவகாசம் இல்லாதவர்களும் மேற்கு நோக்கிக் கொஞ்சம் எட்டி நடந்து சௌந்தரராஜப் பெருமாளைத் தரிசிக்காமல் மட்டும் திரும்பக் கூடாது. உண்மையில் அங்கு மூலமூர்த்தியாக நிற்கும் சௌந்தரராஜன், சுந்தரமாக அழகுடையவர், நாகராஜனுக்குப் பிரத்யக்ஷமாகி அனுக்கிரகித்திருக்கிறார். அங்கு தனிக்கோயிலில் சௌந்தரவல்லித் தாயார் வேறே இருக்கிறாள். சுந்தரராஜனைத் திருமங்கை மன்னன் பத்துப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்திருக்கிறான்; வாழ்த்தி வணங்கியிருக்கிறான்.

வாழியரோ இவர்! வண்ணம்

எண்ணில் மாகடல் போன்றுஉளர்

கையில் வெய்ய

ஆழி ஒன்று ஏந்தி ஓர்

சங்கு பற்றி அச்சோ

ஒரு அழகிய வா?

என்றுதானே சௌந்தரராஜனின் அழகை அனுபவித்துப் பாடியிருக்கிறான். இந்தக் கோயிலில் ஆண்டாளுக்கு, மணவாள மாமுனிகளுக்கு எல்லாம் தனித்தனிச் சந்நிதி. இங்குள்ள உற்சவரும் மிகவும் அழகியவர்தான். அத்துடன் ஓர் அழகிய செப்புச் சிலை உக்கிர நரசிங்கருக்கு, இரணியன் உடல் கிழிக்கும் நிலையிலே, அளவில் சிறியதேயானாலும் கலை அழகில் மேம்பட்டது. கடல் நாகைக் காரோணரைத் தரிசிக்க வந்த நாம், சௌந்தரராஜனையும் அவன் துணைவி சௌந்தர வல்லியையுமே தரிசித்து விட்டோம். இத்துடன் நமது சமரச மனோபாவனை நிற்காது இத்தலத்தில். அந்தக் காலத்திலேயே, சோழ மன்னன் ராஜராஜன் இங்குள்ள புத்த விஹாரத்துக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சாஸனம் பண்ணிக் கொடுத்திருக்கிறான். பௌத்த மதமானது நம் நாட்டில் பிறந்து வளர்ந்தது. பிறநாட்டிலிருந்து வந்த முஸ்லிம், கிறிஸ்துவ சமயத்துக்குமே இங்கு இடமுண்டு. நாகப்பட்டினத்திலிருந்து நாலு மைல் வடக்கு நோக்கி நடந்தால் நாகூரில் மகம்மது மீரான் என்ற பெரியார் அடக்கமாகி உள்ளார். அங்கு நடக்கும்கந்திரி, சந்தனக் குடம், இதில் எல்லாம் கலந்து கொள்பவர்கள் இந்துக்களே, நாகப்பட்டினத்திலிருந்து தெற்கு நோக்கி எட்டு மைல் நடந்தால் அங்கு வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா கோயில். தீரா நோய் தீர்த்தருள வல்லவள் அவள் என்பது பிரசித்தம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா, வேளூர் வைத்திய நாதனை யொத்த புகழ் உடையவள், மக்கள் பிணி தீர்க்கும்பான்மையிலே. இங்கும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். நம்பிக்கையில் வளர்வதுதானே பக்தி. அத்தகைய பக்தி இத்தலத்தை ஓட்டி நல்ல சமரச முறையிலே வளர்கிறது என்றால் இதைவிட என்ன புகழ் தான் வேண்டும் இத்தலத்துக்கு?

14. செம்பியன்மாதேவிக் கயிலாயர்

சில வருஷங்களுக்கு முன் நான் ஒரு சித்திரம் பார்த்தேன். அந்தத் சித்திரத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய விக்டோரியா மகாராணி கம்பீரமாக வீற்றிருந்தாள். ஆம் பதினெட்டு வயதிலேயே அரியாசனத்து அமர்ந்து எண்பது வயதுக்கு மேலும் இருந்து ஆட்சி புரிந்தவள் அல்லவா அவள், அவளது எண்பதாவது வயதில் எழுதிய சித்திரம் அது, அவளுடன் அவளது மகன் எட்வர்ட் இருந்தார். அவர்தானே அப்போது வேல்ஸ் இளவரசர். பின்னர் தானே ஏழாவது எட்வர்ட் ஆக அவர் முடிசூடினார். இன்னும் படத்தில் எட்வர்ட் மகன் ஜார்ஜ் இருந்தார். அவர் மகன் எட்வர்ட். இருந்தார் (இவர்கள் தாம் பின்னர் ஐந்தாம் ஜார்ஜ், எட்வர்ட் என்று சரித்திரத்தில் கணக்கிடப்பட்டவர்கள்). இந்தச் சித்திரத்துக்கு அடியில் 'நான்கு தலைமுறை' என்று எழுதியிருந்தது.

விக்டோரியா மகாராணியின் காலத்திலே அவளது பூட்டன் எட்வர்ட் பிறந்து வளர்த்து பருவம் எய்தியதால், நான்கு பேரையும் நிறுத்திப் படம் எழுதி நான்கு தலைமுறை கண்ட ராணி அவள் என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள் ஆங்கிலேயர்கள். தமிழ் மக்களாகிய நாமுமே இப்படிப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம், தமிழகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு ராணியைக் குறித்து. அத்தகைய சோழப் பேரரசிதான் செம்பியன்மாதேவி. சேர மன்னர்களுள் ஒரு கிளையான மழவர் பெருங்குடியில் பிறந்தவர். சோழ மன்னரான முதல் பராந்தக சோழரின் இரண்டாம் புதல்வரான கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசியாக விளங்கியவர். கண்டராதித்தனுக்குப் பின், அவரது தம்பியாகிய அரிஞ்சயனும், இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரச் சோழனும் அரியாசனத்தில் இருந்து ஆட்சி புரிந்ததைக் கண்டவர்.

பின்னும் தன் அருமை மகன் மதுராந்தகன் என்னும் உத்தமச் சோழனும், சுந்தர சோழன் மகன் அருள் மொழி வர்மன் என்னும் ராஜராஜனும் ஆட்சி புரியும் போது உடன் இருந்தவர். ஆகவே எண்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மாதரசி ஆறு சோழ மன்னர்கள், சோழ மண்டலத்தை ஆள்வதைக் காணும் பேறு பெற்றவர். இப்படி ஆறு சோழ மன்னர்களுக்கு உகந்தவராக விளங்கினார் என்பதற்காக மட்டும் இவர் நமது பாராட்டுக்கு உரியவர் இல்லை . வாழ்நாள் முழுதும் சிவனடி மறவாச் சிந்தையராக வாழ்ந்து, செங்கல்லால் கட்டிய பழைய கோயில்களையெல்லாம் கற்றளிகளாக மாற்றி நல்ல சிவத்தொண்டு செய்து வாழ்ந்தவர், என்பதற்காகவே இவரை நாம் நினைக்கிறோம்; போற்றுகிறோம்.

மன்னரும் மக்களும் இப் பெருமகளை எப்படிக் கொண்டாடியிருக்கிறார்கள் என்பதைச் சரித்திர ஏடுகள் சொல்கின்றன. ஏன்? இவர் பெயராலேயே ஓர் ஊரையும் உண்டாக்கி அங்கு ஒரு கோயிலையும் கட்டி, பாராட்டுவதொன்றே அவர் தம் பெருமைக்குச் சான்று பகர்வதாகும். அத்தகைய நிலைத்த புகழுடைய செம்பியன் மாதேவிக்கே செம்பியன் மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரால் நிர்மாணிக்கப்பட்ட தலத்துக்கும், அங்குள்ள கயிலாயநாதர் கோவிலுக்குமே செல்கிறோம் நாம் இன்று.

செம்பியன்மாதேவி என்பது தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் தாலூக்காவில் உள்ள ஒரு சிறிய கிராமம். திருவாரூர் நாகப்பட்டினம் ரயில் பாதையில் கீழ் வேளூர் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக்கொண்டு ஆறு மைல் தென்கிழக்காகச் சென்றால் இத் தலத்துக்கு வந்து சேரலாம். கீழ் வேளூருக்குத் தெற்கே இரண்டு மைலில் தேவூர் என்னும் தலம் இருக்கிறது. அங்கு இறங்கி, அங்குள்ள மதுரா பாஷிணி அம்மையோடு கோயில் கொண்டிருக்கும் தேவபுரி ஈசுவரரை வணங்கலாம். அத்துடன் அங்குள்ள செப்புச் சிலை வடிவில் இருக்கும் கல்யாண சுந்தரத்திருக்கோலத்தையும் காணலாம். கலை உலகில் காண வேண்டிய வடிவம் அது. இந்தத் தேவூருக்குச் சம்பந்தர் வந்திருக்கிறார்.

ஓதி மண்டலத்து ஓர் முழுது

உய்ய வெற்பு ஏறு

சோதி வானவன் துதிசெய

மகிழ்ந்தவன் தூநீர்த்

தீது இல் பங்கயம் தெரிவையர்

முகமலர் தேவூர் ஆதி சேவடி அடைந்தனம்,

அல்லல் ஒன்று இலமே

என்று பாடிவிட்டே நடந்திருக்கிறார். நாம் அந்தத் தேவூர் இறைவனின் ஆதிசேவடியை வணங்கிவிட்டு மேல் நடந்தால்தான் அல்லல் ஒன்றும் இல்லாமல் செம்பியன் மாதேவி போய்ச் சேரலாம். சில வருஷங்களுக்கு முன் இந்தத் தலம் செல்வதென்றால் மிகவும் கரடு முரடான பாதையில் தான் செல்லவேண்டியிருக்கும். இப்போது பாதையெல்லாம் செம்மை செய்திருக்கிறார்கள். வசதியுள்ளவர்கள் காரிலேயே போகலாம்.

இந்த ஊருக்கு வந்து இங்குள்ள கோயில் செல்லுமுன் அந்தச் செம்பியன்மாதேவியின் வரலாறு முழுவதையும் தெரிந்துகொள்ள வேண்டாமா? முன்னரே தெரிந்திருக்கிறோம், இவள் மழவர் மகள் என்று. முதல் பராந்தக சோழன் மகன் ராஜகேசரி கண்டராதித்தன். இவனுக்கு மனைவியர் இருவர்; முதல் மனைவி வீரநாரணி, இரண்டாவது மனைவியே செம்பியன்மாதேவி. கண்டராதித்தன் பட்டத்துக்கு. வருமுன்னரே வீரநாரணி இறந்திருக்கிறாள். ஆதலால் செம்பியன்மாதேவியே கண்டராதித்தனது பட்டத்து அரசியாக விளங்கியிருக்கிறார். கண்டராதித்தனோ ஏதோ அரியணையில் வீற்றிருந்திருக்கிறானே ஒழிய, அவன் எண்ணமெல்லாம் இறைவன் திருவடிகளிலேதான் இருந்திருக்கிறது.

சிவபக்தியும் செந்தமிழ்ப் புலமையும் நிரம்பிய சிவஞானச் செல்வனாகவே வாழ்ந்திருக்கிறான். சிவபக்தி நிரம்பிய அரசனைக் கணவனாக வாய்க்கப்பெற்ற இவரும் சிவபக்தையாகவே வாழ்ந்திருக்கிறார். கண்டராதித்தன் சோழ மன்னனாக இருந்து அரசு செய்தது எல்லாம் ஆறு ஏழு வருஷங்கள் தாம். அப்போது இந்த அம்மையாரது திரு வயிறு வாய்த்தவரே உத்தம சோழன். இந்த உத்தமனையும் அரசியல் பற்றே இல்லாமல் சிவபக்தியில் திளைப்பவனாக வளர்த்த பெருமையும் இந்த மாதேவியையே சாரும். இவரை மக்கள் எல்லாம் மாதேவடிகள் என்றே பாராட்டி வந்திருக்கின்றனர்.

தம் கணவர் அமரரான பின் இந்த அம்மை சிவத்தொண்டுகள் செய்வதிலேயே தம் வாழ்நாள் முழுவதும் செலவு செய்திருக்கிறார். இவர் செய்யும் பணிகளுக்கு எல்லாம் இவரது கொழுந்தன்டமாரான அரிஞ்சயரும் சுந்தரச் சோழரும் துணை நின்றிருக்கிறார்கள். திருமகன் உத்தம சோழனும், பேரன் ராஜராஜனும் இவரது பணியைச் சிறக்கச் செய்திருக்கிறார்கள் என்றால் வியப்பில்லை. இவர் தம் மாமனார் முதல் பராந்தக் சோழர் காலத்திலேயே அதாவது கி.பி. 941-ம் ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியை அடுத்த உய்யக் கொண்டான் மலை என்னும் திருக்கற்குடி மகாதேவருக்கு ஒரு நுந்தா விளங்கு எரிக்கத் தொண்ணூறு ஆடுகளை அளித்திருக்கிறார். இவர் சோழ நாடு முழுவதும்

சுற்றிப் பல தலங்களில் இறைவனை வணங்கியிருக்கிறார். பல கோயில்கள் செங்கற்களால் கட்டப்பட்டு நாளா வட்டத்தில் சிதைந்து போவதைக் கண்டு அவைகளைக் கற்கோயில்களாகக் கட்ட முனைந்திருக்கிறார். அப்படி இவர் கற்றளிகளாகப் புதுப்பித்தவை பத்து என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. திரு நல்லம் என்னும் கோனேரி ராஜபுரம், விருத்தாசலம், திருவாரூர் அறநெறி, திருமணஞ்சேரி , தென்குரங்காடு துறை, திருக்கோடிக்கா, ஆநாங்கூர், திருத்துருத்தி என்னும் குத்தாலம், திருவக்கரை என்னும் கோயில்கள் எல்லாம் கற்றளிகளாக மாறியது இவரது திருப்பணியினால்தான்.

இந்த ஒன்பது கோயில்களோடு பத்தாவது கோயிலாகத்தான் நாம் வந்திருக்கும் சிற்றூர் கயிலாயநாதர் கோயிலையும் கட்டியிருக்கிறார். அந்த நன்றி காரணமாகவே இந்த ஊரையே செம்பியன்மாதேவி என்று அழைத்திருக்கிறார்கள் மக்கள் (இதற்கு முன் அந்த ஊரின் பெயர் என்னவோ தெரியவில்லை .) இப்படிக் கோயில் திருப்பணி செய்வதோடு இவரது கைங்கர்யம் நிற்கவில்லை. இன்னும் பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டுக்கும் திருவிழாக்களுக்கும் மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்குகளுக்கும் நந்தவனங்களுக்கும் பலப்பல நிவந்தங்கள் அளித்திருக்கிறார். பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பலவகைக் கலங்களும் வழங்கியிருக்கிறார். இத்தனை அறங்களை அடுத்தடுத்து இவர் செய்து வரும்போதும், சீலமிக்க தம் கணவனை மறவாமலேயே வாழ்ந்திருக்கிறார். திரு நல்லத்தில் உமாமகேசுவரர் கோயிலைக் கட்டும்போது அங்கு தம் கணவராம் கண்டராதித்தர் சிவபூசை செய்வதுபோல் ஒரு சிற்ப வடிவம் சமைக்க அவர் மறக்க வில்லை.

செம்பியன் மாதேவியைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் அங்குள்ள கைலாயமுடையார் கோயிலுள் நுழையலாம். கோயில் நாற்புறமும் நல்ல மதிலும், கோயில் வாயிலில் ஒரு திருக்குளமும் உடையதாக இருக்கிறது. கோயிலின் மதில் கிழ-மேல் 298 அடி நீளம். தென்-வடல் 267 அடி அகலம் உடையது. இது சிறிய கோயிலும் இல்லை ; பெரிய கோயிலுமில்லை. இரண்டு பிரகாரங்களோடும் திருச்சுற்று மாளிகையுடனும் அமைந்தது. கோயிலின் தோரண வாயிலின் பேரில் கட்ட முனைந்த கோபுரம் முற்றுப் பெறவில்லை. இடைநிலைக் கோபுரம் மூன்று நிலை கொண்டதாக இருக்கிறது. அதைக் கடந்து சென்றதும் செம்பியன்மாதேவியார். பெருமண்டபம் இருக்கிறது. இதில்தான் அன்றையக் கிராம சபையார் கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இனிக் கோயிலுள் நுழைந்து கயிலாய முடைய மகாதேவரை வணங்கலாம்.

இரண்டாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய திருவாயிலுடன்

செம்பியன் மாதேவி

அம்பிகையின் கோயில் இருக்கிறது. அம்பிகை பெரிய நாயகி என்ற பெயரோடு அருள் பாலிக்கிறாள், இந்தக் கோயிலுள் பல செப்புப் படிமங்கள் உண்டு. அவைகளில் சிறப்பாயிருப்பது பழைய பைரவர் வடிவம் ஒன்று. இக்கோயிலில் சிலாவடிவமாகச் செம்பியன் மாதேவியின் திருக்கோலம் ஒன்றும் இருக்கிறது. இந்தச்சிலை கலை, அழகு பொருந்தியதல்ல என்று சமீபத்தில் செப்புச் சிலை வடிவில் இச் சிவ பக்தையாம் செம்பியன் மாதேவியைச் செய்து வைத்திருக்கிறார்கள். அது அழகாக இருக்கிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் சிறப்பாக நடக்கிறது. இது ஏழைக் கோயில் அல்ல. 280 ஏக்கர் நன்செயும் 115 ஏக்கர் புன் செயும், அவற்றின் மூலம், வருடம் ஒன்றுக்கு இருபத்தையாயிரம் ரூபாய் வருமானமும் உடையது.

இக்கோயில் புராணப் பிரசித்தி உடைய கோயில் அல்ல; என்றாலும் நல்ல சரித்திரப் பிரசித்தி உடைய கோயில், இந்தக் கோயிலில் இருபத்து மூன்று கல் வெட்டுக்கள் இருக்கின்றன. சோழ மண்டலத்திலிருந்த ஒன்பது வளநாடுகளில் ஒன்று, அருள்மொழித் தேவவளநாடு, அதனுள் அடங்கியது அளநாடு. அந்த நாட்டிலே இந்தச் செம்பியன் மாதேவி சதுர்வேதி மங்கலம் தோன்றியிருக்கிறது. நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்களுக்குப் பிரமதேயமாக, செம்பியன் மாதேவியார் இந்த நாட்டை வழங்கியிருக்கிறார்.

ஸ்ரீ கைலாயம் என்னும் இக்கோயிலையும் கட்டியிருக்கிறார். உத்தமசோழர் காலம் (கி.பி. 970) முதல் சடையவர்மர் வீரபாண்டியன் காலம் (கி.பி. 1268) வரை இக்கோயிலுக்கு ஏற்பட்ட நிபந்தங்கள் அனந்தம். மற்ற வரலாறுகளைப் பற்றிய தகவல்களுக்கும் குறைவில்லை சரித்திர ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு இங்குள்ள கல்வெட்டுக்கள் மிக்க பயனுடையதாக இருக்கும். செம்பியன் மாதேவியார் செய்த திருப்பணிகளைப் பாராட்டி. அவருக்கு உரிய வணக்கத்தைச் செலுத்துவதற்காகவே இந்தக் கோயிலுக்குப் போகலாம்.

இக்கோயிலைச் சுற்றி அந்த வட்டாரத்திலே நிறையக் கோயில்கள் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்குத் தெற்கே ஐந்து மைல் தொலைவில் குண்டையூரும் அதையடுத்து திருக்குவளை என்று வழங்கும் கோளிலியும் இருக்கின்றன. குண்டையூரில்தான் சுந்தரர் இறைவனிடம் நெல் பெற்றிருக்கிறார். அந்த நெல் குவையை அள்ளிக் கொண்டு போய்த் திருவாரூர் பரவையார் வீட்டில் சேர்க்க இறைவனிடமே ஆள் வேண்டியிருக்கிறார். அவரும் இந்தப் பணியை முகங்கோணாது செய்திருக்கிறார். கோளிலி சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. அவனிவிடங்கத் தியாகர் பிருங்க நடனம் ஆடியிருக்கிறார் இங்கே. இக் கோயிலுக்குப் பக்கத்திலே எட்டிக்குடி.. ஆம், எட்டிக் குடி வேலாண்டி இசை உலகில் பெயர் பெற்றவனாயிற்றே. இன்னும் இச் செம்பியன்மாதேவிக்குத் தென்மேற்கே ஆறு மைல் தொலைவில் வலிவலம் என்னும் தலம் இருக்கிறது. கரிக்குருவியான வலியன் பூஜித்த தலம் அது. கோயில் கட்டுமலை மேல் இருக்கிறது.

பிடியதன் உரு உமை

கொளமிகு கரியது

வடிகொடு தன அடி

வழிபடும் அவரிடம்

கடி கணபதி வர

அருளினன் மிகு கொடை

வடிவினர் பயில் வலி

வலம் உறை இறையே

என்ற சம்பந்தர் தேவாரம் நமக்கெல்லாம் மனப்பாடம் ஆன பாட்டாயிற்றே. இன்னும் செம்பியன்மாதேவிக்கு மேற்கே நான்கு மைல் தொலைவில் திருவிசைப்பா பெற்ற சாட்டியக்குடி என்ற தலமும் ஐந்து மைலில் கன்றாப்பூர் என்ற பாடல் பெற்ற தலமும் உண்டு. இத்துடன் கீழ் வேளூர், சிக்கல், நாகைக் காரோணம் எல்லாம் இத்தலத்தைச் சுற்றி அமைந்த கோயில்கள் தாமே. இத்தனை கோயில்களுக்கும் நடுநாயகமாகச் சரித்திரப் பிரசித்தியுடன் விளங்குவதுதான் செம்பியன்மாதேவி கயிலாயமுடையார் கோயில்.

15. மறைக்காடுறை மணாளர்

ஐந்தாறு வருஷங்களுக்கு முன்பு நான் தஞ்சையில் உத்தியோகம் ஏற்றிருந்தேன். அப்போது ஜில்லா போர்ட் நிர்வாகம் என் கையில் இருந்தது. ஜில்லா போர்டின் நிதி நிலைமை திருப்திகரமாக இல்லை. ஆரம்பப் பள்ளிகளை நடத்துவது மிக்க சிரமமாக இருந்தது. ஆதலால் பஞ்சாயத்து போர்டாராவது அல்லது தனிப்பட்ட பெரிய மனிதர்களாவது, அவரவர் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியை ஏற்று நடத்த முன்வந்தால் சர்க்கார் அனுமதியுடன் அந்தப் பள்ளிகளை அவர்களது நிர்வாகத்தில் விட்டு விடத் தயாராக இருந்தோம்.

திருப்பனந்தாளில் ஓர் உயர்தர ஆரம்பப் பள்ளியிருந்தது. அந்தப் பள்ளியை அங்குள்ள ஆதீனத் தலைவர் ஏற்று நடத்த விரும்பினார்கள். சர்க்கார் அனுமதி பெற்று அந்தப் பள்ளியை அவர்களது நிர்வாகத்துக்கு மாற்றினோம். அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்த முனைந்த ஆதீனகர்த்தர் அவர்கள் பள்ளியைத் திறந்து வைக்க என்னையே அழைத்தார்கள். ஆம். மார்ச்சு மாதம் முப்பத் தொன்றாம் தேதி ஜில்லா போர்ட் நிர்வாக அதிகாரியாக நான் மூடிய பள்ளியை, ஏப்ரல் மாதம் முதல் தேதி ஆதீனத்தார் அழைப்புக்கு இணங்கிச் சென்று நானே திறந்து வைத்தேன். அன்று நினைவு கூர்ந்தேன். அதைச் சொல்லவும் செய்தேன், இப்படி நான் ஒருவனாகவே இருந்து பள்ளியை மூடவும் திறக்கவும் செய்தது போலவே, ஆயிரத்து முந்நூறு வருஷங்களுக்கு முன்பு ஒருவருக்கு இருவராக ஒரு கோயில் கதவைத் திறக்கவும் அடைக்கவும் பாடியிருக்கிறார்கள். ஆம், அப்பரும், சம்பந்தரும் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் சென்றிருந்தபோது அக்கோயில் கதவு அடைத்து வைக்கப்பட் டிருந்திருக்கிறது. கோயில் வாயிலைத் திறக்க பாடினார் அப்பர். திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர் என்பது வரலாறு. ஒரேயொரு வித்தியாசம். நான் மூடிய பள்ளியை நானே திறந்த வைத்தேன் (பாட்டு ஒன்று பாடாமலேயே). அப்பரோ வேறு யாரோ மூடிய கதவைத் திறந்து வைத்தார். அப்படித் திறந்து வைத்த கதவையே திரும்பவும் மூடப் பாடினார் சம்பந்தர், இப்படி அப்பரும் சம்பந்தரும் திறக்கவும் மூடவும் செய்த திருமறைக்காட்டுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் தஞ்சை மாவட்டத்திலே திருத்தருப்பூண்டி தாலூகாவிலே தென் கோடியில் உள்ள ஒரு பெரிய ஊர். திருவாரூர் அறந்தாங்கி ரயில் பாதையில் ‘திருத்துறைப்பூண்டி' ஜங்கஷனில் இறங்கி மாற்று வண்டி ஏறி வேதாரண்யம் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேரலாம். இல்லை என்றால் பஸ்ஸிலோ அல்லது காரிலோ வேதாரண்யம் சென்று சேரலாம். திருத்தருப்பூண்டியிலிருந்து முப்பது முப்பத்திரண்டு மைல் தொலைவில் இருக்கிறது வேதாரண்யம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அரை மைல் மேற்கு நோக்கி நடந்தால் கோயிலுக்கும் செல்லலாம்.

நான்கு வேதங்களாலும் பூசித்துப் பேறு பெற்ற இடம் ஆனதால் வேதாரண்யம் என்னும் அந்தத்தலம் மறைக்காடு என்று பெயர் பெற்றிருக்கிறது அத்தலம். இந்தக் கோயிலுள் இருப்பவர் மறைக் காடரும் அவரது துணைவி யாழைப் பழித்த மொழியாளும். இப்போதெல்லாம் கோயில் வாயில் திறந்தேயிருக்கும். அன்று வேதங்கள் பூஜித்துத் திருக்காப்பு செய்த கதவைத்தான் அப்பர்,

பண்ணின் நேர் மொழியாள்

உமை பங்கரோ!

மண்ணினார் வலஞ்செய்

மறைக் காடரோ!

கண்ணினால் உமைக்

காணக் கதவினை

திண்ணமாகத்

திறந்தருள் செய்ம்மினே!

என்று பாடித் திறந்து வைத்திருக்கிறாரே, திறந்த கதவை அப்படியே திறந்தே நின்று விடாமல் பின்னர் அடைக்கவும் பாடியிருக்கிறார் சம்பந்தர்.

சதுரம் மறைதான்

துதிசெய்து வணங்கும்

மதுரம் பொழில் ஆல்

மறைக்காட்டு உறைமைந்தா

இது நன்கு இறை வைத்து

அருள் செய்க எனக்கு உள்

கதவம் திருக்காப்புக்

கொள்ளும் கருத்தாலே.

என்பது சம்பந்தரது தேவாரம், இந்தத் தலத்தில் மணலெல்லாம் லிங்கமாவும் நீர் எல்லாம் தீர்த்தமாகவும் கருதப்படுகின்றன. இங்குள்ள கடல் வேததீர்த்தம் என்றே கூறப்படுகிறது, அதனால் இத் தலத்தையே ஆதிசேது என்பர். சீதையை மீட்கச் சென்ற ராமன் முதல் முதல் அணை கட்டத் தேடி எடுத்த இடம் இதுதான். அப்போது அங்கு வசித்த பறவைகளும் பிராணிகளும் வேதவன ஈசுவரரிடத்திலே ஆட்சேபித்திருக்கின்றன. அவரும் அக்காரியத்தில் தலையிட்டுச் சேதுவைத் தேவி பட்டணத்தருகே கட்டுவது தான் எளிது, நல்லது என்று கூறியிருக்கிறார். இது காரணமாவே ராமனும் சேதுவில் அணையைக் கட்டியிருக்கிறான்.

இன்னும் இலங்கை சென்று இராவணனை வதம் செய்து திரும்பி, ராமன் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதும் இங்கே தான் என்று தலபுராணம் கூறுகிறது. ராமனைப் பிடித்திருந்த பிரமஹத்தி தோஷமும் இந்தக் கோயிலில் உள்ள வீரஹத்தி விநாயகரை வழிபட்ட பின்னரே நீங்கிற்று. இந்த வீரஹத்தி விநாயகர் இக்கோயிலின் மேல் பிரகாரத்தில் இருக்கிறார். இத்தல விநாயகரோ சிந்தாமணிகணபதி. இக்கோயிலுக்குப் பகல் வேளையில் செல்வதைவிட இரவில் செல்வதே நல்லது. அப்பொழுதுதான் அங்கு சந்நிதியிலும் மற்ற இடங்களிலும் ஏற்றும் விளக்குகளைப் பார்க்கலாம். 'திருவாரூரில் தேர் அழகு' என்பது போல

‘வேதாரண்யத்தில் விளக்கழகு' என்பது பழமொழி ஆயிற்றே. இந்த விளக்குகளையெல்லாம் கடந்து கருவறைப்பக்கம் சென்றால் மறைக்காடு உறையும் மணாளரைக் காணலாம். அது என்ன இந்த மூர்த்தி மட்டும் மணாளர் என்ற பெயரோடு விளங்குகிறார் என்று கேட்போம். அதற்கு அந்தப் பழைய கதையையே சொல்வார்கள். பரமேசுவரனுக்கும் பார்வதிக்கும் நடக்கும் கல்யாணத்தைக் காணத் தேவரும் பிறரும் கயிலையில் கூட அதனால் வடதிசை தாழ, அதைச் சரி செய்ய இறைவன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்ப, பின்னர் அவர் விரும்பியபடியே தென் திசை வந்து மணக்கோலத்திலேயே காட்சி கொடுத்தார் என்றும் தெரிந்திருக்கிறோம் அல்லவா? அதே கதை தான் இங்கும் நடந்திருக்கிறது. இக்கதையைத் தென் தமிழ் நாட்டில் உள்ள பல கோயில்களில் கேட்கலாம். என்றாலும்

இத்தலத்தில் இதைக் கேட்பதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கருவறையில் லிங்கத் திருவுருவுக்குப் பின்னர் உள்ள சுவரில் பார்வதி பரமேசுவரர் உப்புச உருவில் திருமணக் கோலத்தில் இருக்கின்றனர். புது மணப் பெண்ணான பார்வதியே நாணிக்கோணி உட்கார்ந்திருக்கிறாள். இந்தச் சுவர் சிற்பத்துக்கு ஆண்டுக்கு ஒரு முறைதான் திருமஞ்சனம். திருமஞ்சனம் ஆனதும் சந்தனக்காப்புச் சாத்துவார்கள். இந்தச் சந்தனக்காப்பை ஒரு வருஷம் கழித்து அடுத்த திருமஞ்சனக் காலத்தில்தான் களைவார்கள். கல்யாணமான தம்பதிகளை அப்படியே மணங்கமழ் சந்தனத்திலேயே மூழ்கடித்து வைத்து விடுகிறார்கள் பக்தர்கள். மணம் நிறைந்தவர்களாகத் திருமணத் தம்பதிகள் வாழ வேண்டும் என்ற ஆசை போலும்!

இத்துடன் இவர்களுக்கு முன்னமேயே இத் தென்திசை நோக்கிவந்து அகத்தியரும் இந்தக் கோயிலில் இருக்கிறார். இங்கு மாத்திரமா இருக்கிறார்; இக்கோயிலுக்குத் தெற்கே ஒரு மைல் தூரத்திலுள்ள தலத்திலும் இருக்கிறார். அந்தத் தலத்தின் பெயரே அகத்தியான் பள்ளி, அங்குள்ள இறைவன் அகத்தீஸ்வரர். அம்மையோ பாகம் பிரியாள். இன்னும் வேறு என்ன சான்று வேண்டும், இறைவன் அகத்தியர்க்குத் தன் திருமணக்கோலத்தை இத்தலத்தில்தான் காட்டினான் என்று நிரூபிக்க? இன்னும் அப்பர் பெருமான் தமது திருத்தாண்ட கத்திலே இம்மறைக்காட்டு உறையும் மணாளனைச் சிறப்பாக வேறே பாடிப் பரவியிருக்கிறார்.

மூரி முழங்கு ஒலிநீரானான்

கண்டாய், முழுத்தழல்போல் மேனி

முதல்வன் கண்டாய்,

ஏரி நிறைந்தனைய செல்வன்

கண்டாய், இன்னடியார்க்கு இன்பம்

விளைப்பான் கண்டாய்,

ஆரியன்கண்டாய், தமிழன்

கண்டாய், அண்ணாமலை உறையும்

எம் அண்ணல் கண்டாய்

வாரிமத களிறே போல்வான்

கண்டாய், மறைக்காட்டு

உறையும் மணாளன்தானே.

என்ற பாடலை எத்தனை தரம் பாடினாலும் உடல் புளகிக்கத் தானே செய்கிறது.

இத்தலத்தில் இந்த மணாளரையும் முந்திக்கொண்டு அருள்பாலிக்க இருப்பவர் தியாகேசர். வேதாரண்யம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்று என்பதை முன்னமேயே அறிந்திருக்கிறோம். இங்கு எழுந்தருளி இருப்பவர் புவனவிடங்கர். அவர் ஆடும் நடனம் பிருங்க நடனம். உற்சவக் காலங்களில் இவர் சதா ஆடிக்கொண்டே ஆஸ்தானம் வரை எழுந்தருளுவார் என்கிறார்கள். இந்தத் தியாகேசருக்கு எதிரே சுந்தரர் பரவையுடன் எழுந்தருளி இருக்கிறார். சேரமான் பெருமானையும்உடன் கூட்டிக் கொண்டு சுந்தரர் இங்கு வந்திருக்கிறார் என்பது வரலாறு. அவர்தான் மறைக்காட்டீசரோடு அவரது துணைவியான யாழைப் பழித்த மொழியாளையும் மறவாமல் பாடியிருக்கிறார்.

யாழைப் பழித்தன்ன மொழி

மங்கை ஒருபங்கன்

பேழைச் சடைமுடிமேல் பிறை

வைத்தான் இடம்பேணில்

தாழைப் பொழில் ஊடே சென்று

பூழைத்தலை நுழைந்து

வாழைக்கனி கூழைக் குரங்கு

உண்ணும் மறைக்காடே.

என்பதுதானே அவரது தேவாரம், ஆதலால் நாமும் மறவாது யாழைப் பழித்த மொழியாள் சந்நிதிக்கும் சென்று வணங்கலாம். இத்தலம் எழுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று. இந்த இடமே சுந்தரிபீடம் என்பர். மென் மொழியாள் மாத்திரம் அல்ல. அழகாலுமே மற்றவர்களை வெல்லும் பெருமை பெற்றவள் இந்த அம்பிகை. இத்துடன் இங்குள்ள துர்க்கையின் சந்நிதியும் மிகுந்த சாந்நித்யம் வாய்ந்தது. இங்குள்ள காட்சி கொடுத்த நாயகர் என்னும் செப்புப் படிமமும் காணவேண்டிய கலை வடிவம்.

இன்னும் இத்தலத்திலே ஒரு சிறப்பு இந்தக்கோயிலில் விளக்கு அழகு என்பதை முன்னரே சொன்னேன். அந்த அகல் விளக்குகளுக்கு எல்லாம் நெய் ஊற்றியே விளக்கேற்றி யிருக்கிறார்கள் அந்தக் காலத்தில், அப்படி ஊற்றிய நெய்யை உண்ண ஓர் எலி வந்திருக்கிறது. உண்ணும் பொழுது சுடர் அதன் மூக்கில் பட்டிருக்கிறது. அதனால் திரி தூண்டப்பட்டிருக்கிறது. அணையும் தறுவாயிலிருந்த விளக்கைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்த காரணத்தால், அந்த எலியை மறுபிறப்பில் மகாபலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறக்க அருள் செய்திருக்கிறார் மறைக்காடர்.

இத்தனை பிரசித்தியடன், இத்தலம் பெருமக்கள் புலரது பிறப்பிடமாகவும் இருந்திருக்கிறது. திருவிளையாடல் பாடிய பரஞ்சோதி முனிவரும், எண்ணரிய பாடல்களை எழுதிக் குவித்த தாயுமானாரும் இத்தலத்திலேயே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். அந்தப் பழைய காலத்தில் விசுவாமித்திரர் இங்குள்ள தல விருட்சமாகிய வன்னியின் அடியில் தவங்கிடந்துதான் பிரம்மரிஷிப் பட்டம் பெற்றிருக்கிறார், யாக்ஞவல்கியரும் மைத்திரேயியும் இங்கு தங்கியிருந்து அவர்களது அறிவொளியைப் பரப்பினார்கள் என்றும் அறிகிறோம். நிரம்பச் சொல்வானேன்? நாம் அறிய, நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தில் உப்புச் சக்தியாகிரகம் பண்ணத் தேர்ந்து எடுத்த இடமும் இதுதானே. சர்தார் வேதரத்தினம் இன்றும் அங்கிருந்து சமூக நலப் பணிகள் பல புரிகிறார் என்பதும் நாம் தெரிந்ததுதானே.

சகர புத்திரர்களில் ஒருவனாகிய அம்சுமான் என்பவனே முதன் முதல் இந்தக் கோயிலைக் கட்டினான் என்பர். பஞ்ச பாண்டவர் தங்களது வனவாச காலத்தில் இங்கு வந்து பஞ்ச.லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார்கள் என்றும் புராணம் கூறுகிறது. ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்கள் பல பிற்காலச் சோழ மன்னர்களுடையவை. விஜயநகர நாயக்க மன்னர்கள் காலத்தியதும், தஞ்சை மராத்தியர் காலத்துக் கல்வெட்டுக்களும் இருக்கின்றன. சோழர்களால் கட்டிய கோயிலே விரிவடைந்திருக்கிறது என்று தெரிகிறோம். இத்தலத்துக்கு அருணகிரிநாதர் வந்திருக்கிறார். இந்தக் கோயிலில் உள்ள முருகனது திருப்புகழைப் பாடியிருக்கிறார்.

கோதில் தமிழ் கான

கும்ப முனிவற்கா மணஞ்செய்

கோலம் அளித்து ஆளும்

உம்பர் கோனே!

கோகனத்தாள் வணங்கி

கோடிமறைக் காட்மர்ந்த பெருமாளே!

என்று அப்பனையும் மகனையும் சேர்த்துப் பாடியிருக்கிறார். கோடி மறைக்காடு என்ற உடனே நமக்குக் கோடிக்கரை ஞாபகம் வரத்தானே செய்யும். வந்ததே வந்தோம், கொஞ்சம் எட்டி நடைபோட்டு அகத்தியான்பள்ளி சென்று அகத்தீஸ்வரரையும் வணங்கி விட்டுப் பின்னும் நான்கு மைல் சென்று கோடிக் குழகரையும் தரிசித்து விட்டே திரும்பலாமே, கோடிக்கரையில் உள்ள கோடிக்குழகர் பேராசிரியர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கு முன்னமேயே அறிமுகமானவர் தானே. சமுத்திர ஸ்நானம் செய்ய விரும்புவர்கள் மாத்திரமே கோடிக்கரைவரை செல்லவேணும். கோயிலுக்கு மட்டும் போக விரும்புபவர்கள் ஒரு மைலுக்கு இப்பாலேயே குழகர் கோயிலுக்குச் செல்லலாம். வழியில் ஒரு மணல்மேடு ஏறி ராமர் பாதத்தையும் தரிசித்துக் கொள்ளலாம். கோடியில் அமிர்த கடேசுரரும் மையார் தடங்கண்ணியும் கோயில் கொண்டிருக்கிறார்கள். அமுததீர்த்தம் என்னும் கிணறு பிரகாரத்தில் இருக்கிறது. ஒரு விசேஷம். இங்குள்ள சுப்ரமணியர் ஒரே முகமும் ஆறு திருக்கரங்களும் கொண்டவராய் இருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்து விட்டே திரும்பலாம்.

16. சீரார் பெருந்துறையான்

படிக்கும் திருப்புகழ் போற்றுவன்,

கூற்றுவன் பாசத்தினால்

பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல்

என்பாய் பெரும் பாம்பில் நின்று

நடிக்கும் பிரான் மருகா, கொடுஞ்

சூரன் நடுங்க வெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில்

ஏறும் இராவுத்தனே.

என்று அருணகிரியார் மயில் ஏறும் மாமுருகனைக் கந்தர் அலங்காரத்திலே பாடுகிறார், அந்தப் பாட்டைப் பற்றி இரண்டு முருக பக்தர்களிடையே ஒரு விவாதம். 'ஏன் ராவுத்தன் என்று பாடியிருக்கிறார்? என்றைக்கு இந்த முருகன் முஸ்லிம் ஆக ‘கன்வெர்ட்' ஆனார்? என்பது ஒருவர் கேள்வி. மற்றவரோ, 'அப்படியெல்லாம் முருகனை முஸ்லீம் ஆக்கிவிடவில்லை அருணகிரியார். சர்வசமய சமரச பாவத்தை வளர்க்கும் தமிழ் மக்கள் முருகனையும் ராவுத்தன் என்று அழைத்துத் தம் சமரச மனோபாவத்தை வெளியிட்டிருக்கிறார் அவ்வளவுதான்' என்று வாதிடுகிறார். இருவரும் இந்த விவாதத்தைத் தீர்க்க என்னிடம் வந்தார்கள் ஒருநாள், அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்ட பின் நான் கேட்டேன் அவர்களிடம்; 'ராவுத்தன் மகனை ராவுத்தன் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது என்று?' இதைக்கேட்டு இருவரும் அப்படியே அதிர்ந்து போனார்கள். 'என்ன இப்படிச் சொல்கிறீர்கள்?' என்று என்னிடமே முறைத்துக் கொண்டார்கள்,

அவர்களிடம் நான் சொன்னேன் ; 'உங்களுக்குத் தெரியும் யானையை ஓட்டுபவன் மாவுத்தன் என்று. அதுபோலவே குதிரையை ஓட்டுபவனை ராவுத்தன் என்ற அழைத்திருக்கிறார்கள் தமிழர்கள். முதல் முதல் தமிழகத்துக்கு அரேபியாவிலிருந்து முஸ்லிம்கள் குதிரைகளை ஓட்டிக் கொண்டு வந்தார்கள். குதிரைகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்களை ராவுத்தர் என்று அழைத்த தமிழர்கள் பின்னர் எல்லா முஸ்லிம்களையுமே ராவுத்தர் என்று அழைத்திருக்கிறார்கள். நாமெல்லாம் அறிந்த கதை. நமது சிவபெருமான் அன்று திருப்பெருந்துறையிலிருந்து மதுரைக்குக் குதிரை ஓட்டி வந்தார் என்பது. அதுவும் நல்ல கச்சவட முறையில் நரிகளையெல்லாம் பரிகளாக்கி, அந்தப் பரிகளையும் பாண்டியன் மந்திரியாகக் குதிரை வாங்க வந்த மாணிக்கவாசகருக்காக மதுரைக்கு ஓட்டி வந்திருக்கிறார்.

குதிரையை ஓட்டி வந்த ராவுத்தர் சிவபெருமான், அந்த ராவுத்தர் மகன் முருகன். ராவுத்தர் மகன் ராவுத்தனாக இருப்பதில் வியப்பில்லைதானே!' என்று விளக்கம் கூறினேன். ஒத்துக்கொண்டார்கள், அந்தச் சைவ பெருமக்கள், முருக பக்தர்கள். எங்கே, எப்பொழுது, எதற்காக இந்தச் சிவன் ராவுத்தராக மாறினார் என்று தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் திருப்பெருந்துறை செல்ல வேணும். அங்கேயே செல்கிறோம் நாம் இன்று.

திருப்பெருந்துறை தஞ்சை மாவட்டத்தில் அறந்தாங்கி தாலுக்காவில் தென்கிழக்குக் கோடியில் இருக்கிறது. அங்கு செல்ல விரும்புகிறவர்கள் திருப்பெருந்துறைக்குச் செல்லவேண்டுமென்று சொன்னால் பஸ்காரர்களுக்கோ, வண்டிக்காரர்களுக்கோ தெரியாது. அந்தத் தலத்தின் பெயர் இன்று ஆவுடையார் கோயில் என்று தான் வழங்குகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேணும். இந்த ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறை செல்ல, திருவாரூர் காரைக்குடி ரயில் பாதையில் ரயில் ஏறவேணும், அறந்தாங்கி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஒன்பது மைல்போக வேணும். கார் வசதியுள்ளவர்கள் காரைக்குடியிலிருந்தும் போகலாம். எப்படிப் போனாலும் அறந்தாங்கியைக் கடந்தே செல்ல வேணும். ஊர் நிரம்பச் சின்ன ஊரும் அல்ல; பெரிய ஊரும் அல்ல; ஊரின் பெருமை எல்லாம் அங்குள்ள கோயிலை வைத்துத்தான்.

இந்தத்தலத்துக்கு ஆவுடையார் கோயில் என்று ஏன் பெயர் வந்தது என்று தெரிய வேண்டாமா? மற்ற எல்லாச் சிவன் கோயில்களிலும் இல்லாத விசேஷம் ஒன்று இங்கு உண்டு. மற்றக் கோயில்களில் எல்லாம் கருவறையில் லிங்கத் திருவுரு இருக்கும். அம்பிகை கோயிலுள் அம்பிகை நின்று கொண்டிருப்பாள். இந்த கோயிலில் மட்டும் ஆவுடையார் என்னும் பீடம் இருக்கும், லிங்கத் திரு உரு இருக்காது. அம்பிகை சந்நிதியிலும் அப்படியே. இறைவனுக்கும் இறைவிக்கும் உருவம் என்று ஒன்று இல்லை. கோயில்களில் சமைத்து வைத்திருக்கும் உருவம் எல்லாம் கலைஞன் கற்பனையில் உருவாக்கி நிறுத்தியவையே என்பதை அறிவோம்.

அந்த உண்மையை அழுத்தமாக விளக்குகிறது இந்தக் கோயில். இறைவன் திருப்பெயர், ஆத்மநாதர்; இறைவி பெயர் யோகாம்பிகை. இருவரும் அந்தர்யாமியாகத்தான் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருக்கும் இருக்கும் பீடம் இருக்கிறது. அதற்கே அபிஷேக ஆராதனைகள் எல்லாம். அப்படிப் பீடமாகிய ஆவுடையார்க்கே முக்கியத்துவம் கொடுத்து, பூசை நடப்பதினால் தான் ஆவுடையார் கோயில் என்று வழங்குகிறது. இப்படி இறைவனும் இறைவியும் அரூபமாக இருப்பதனால்தானோ என்னவோ இங்கு நந்தி கிடையாது, கொடிமரம் கிடையாது, சண்டீசரும் இல்லை.

இந்த கோயிலில் பிரதான்யம் எல்லாம் சமயக் குரவர் நால்வரில் ஒருவரான மணிவாசகருக்கே. ஆதலால் அவர் சரிதத்தைத் தெரிந்துகொண்டே கோயிலுக்குள் செல்லலாம். மதுரையை அடுத்த வாதவூரிலே மாணிக்க வாசகர் பிறக்கிறார். பல கலைகளையும் இளவயதிலேயே கற்கிறார். இவருடைய அறிவுடைமையைக் கேட்டு, அரிமர்த்தன பாண்டியன் இவரைத் தனக்கு அமைச்சராக ஆக்கிக்கொள்கிறான். இவரிடம் நாற்பத்தொன்பது கோடி பொன் கொடுத்து, கீழ்க் கடற்கரைக்குச் சென்று அங்கு அராபியர் கொண்டுவரும் குதிரைகளை வாங்கி வரச் சொல்கிறான். அமைச்சரான வாதவூரரும் திருப்பெருந்துறை வந்து சேருகிறார்.

அங்கு குருந்த மரத்தடியில் ஒரு முனிவர் உட்கார்ந்து தம் சீடர் சிலருக்குச் சிவஞானபோதம் உபதேசித்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கிறார் வாதவூரர். அந்தக் குருவினிடம் ஒரு பக்தி உண்டாகிறது. தம்மை மறக்கிறார். பின்னர் தம்மை இப்படித் தடுத்து ஆட்கொள்ள எழுந்த குருமூர்த்தி இறைவனே என்பதை உணர்கிறார். கொண்டு வந்த பணத்தையெல்லாம் அந்த இறைவனுக்குக் கோயில் கட்டுவதிலேயே செலவு செய்கிறார். விஷயம் எட்டுகிறது பாண்டியனுக்கு. அரசன் அவரை மதுரைக்கு அழைக்கிறான். குதிரைகள் என்ன ஆயின என்று கேட்கிறான். இறைவன் அருளியபடி, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று கூறுகிறார். வாதவூரர் சொன்னபடியே இறைவனும், திருப்பெருந்துறைக் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் பரிகளாக்கி அவைகளை ஓட்டிக்கொண்டு மதுரைக்கு வருகிறான் ராவுத்தனாக. பரிகளை எல்லாம் லாயத்தில் கட்டி வைக்கிறார்கள். ஆனால் இரவுக்கிரவே பரிகள் பழையபடி நரிகளாகி மற்றக் குதிரைகளையும் கடித்துக்குதறிவிட்டு ஓடிவிடுகின்றன.

மன்னன் இது அறிந்து வாதவூரரைச் சிறையில் அடைக்கிறான்; துன்புறுத்துகிறான், திரும்பவும் இறைவன் மண் சுமக்கும் கூலியாளாக வந்து மன்னனிடம் அடிபடுகிறான். தனது திருக்கோலத்தையும் காட்டுகிறான். வாதவூரரும் சிறை நீங்கி இறைவன் புகழை மணி மணியான பாடல்களில் பாடி மகிழ்கிறார். தல யாத்திரையையே துவக்குகிறார். இந்த மணிவாசகர் பாடியதே திருவாசகம். அந்தத் திருவாசகம் எழுவதற்குக் காரணமாக இருந்த தலம் தான் இந்தத் திருப்பெருந்துறை.

நரியைக் குதிரைப் பரியாக்கி

ஞாலமெல்லாம் நிகழ்வித்து

பெரிய தென்னன் மதுரையெலாம்

பிச்சதேற்றும் பெருந்துறையாய்!

என்பதுதானே மணிவாசகரது பாடல், இந்த மணிவாசகரையும் அவருக்காகக் குதிரை விற்க வந்த இறைவனையும் காணவே நாம் இந்தத் தொலை தூரத்தில் உள்ள திருப்பெருந்துறைக்கு வந்திருக்கிறோம்.

பெருந்துறைக் கோயில்வாயில்

கோயில் தெற்கே பார்த்த கோயில். கோயிலுக்கு முன் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அதை நெல்லியடி தேவதீர்த்தம் என்கிறார்கள். குளம் வெட்டிய காலத்தில் அதன் கரையில் நெல்லி மரங்கள் இருந்திருக்க வேண்டும். இந்த தேவ தீர்த்தத்தின் கரையிலே வல்லப கணபதி கிழக்கு நோக்கியிருக்கிறார். இவர் ஐந்து கரத்தனாக இல்லை பதினோரு கரத்தனாக இருக்கும் இவரை வணங்கிய பின் கோயிலின் பெரிய மண்டபத்துக்கு வந்து சேரலாம். இதனையே கோயில் நிர்வாகிகள் ஆயிரக்கால் மண்டபம் என்கின்றனர். இந்த மண்டபத்தின் முகப்பில் ஏழு தூண்களிலும் ஏழு சிற்ப வடிவங்கள். உக்கிர நரசிம்மர், ஊர்த்துவதாண்டவர், ஆலங்காட்டுக் காளி, பிக்ஷாடனர் முதலியவர்கள். இன்னும் இந்த மண்டபத்தின் உள்ளே வில்லேந்திய வேலன், சங்கரநாராயணர், ரிஷபாந்திகர் எல்லாம். மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். அளவிலும் காத்திரத்திலும் கம்பீரத்திலும் சிறந்தவையாகச் சிற்பவடிவங்கள் இருக்கின்றன. இந்த மண்டபத்தைக் கடந்து உள் நுழைந்தால் இரண்டு வீரபத்திரர் உருவங்களையும் பார்க்கலாம். இத்தலத்தில் உள்ள சிவயோக நாயகி, தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். அவளது தவத்தைக் காப்பதற்கு இறைவன் வீரபத்திரனை உருவாக்கினார் என்பது புராணக்கதை. இந்த வீரபத்திரன் அம்பிகை கோயிலிலும் இருக்கிறான். என்றாலும் சந்நிதி வாயிலிலுமே ஒருவருக்கு இருவராக இருந்து காவல் புரிகின்றனர். இந்த வீரபத்திரர்களை வணங்கியபின் நாம் வந்து சேருவது மாணிக்கவாசகரது சந்நிதிக்கு. இச் சந்நிதியைக் கடந்துதான் மற்ற இடங்களுக்குச் செல்லவேணும். அப்படிச் கடந்து வெளிப்பிரகாரத்துக்கு வந்தால் அங்கு வெயில் உவந்த விநாயகர் நம்மை வரவேற்பார். அவருக்குக் கோயில் இல்லை. அவர்தான் எப்பொழுதுமே 'சன் பாத்' எடுக்கிறவர் ஆயிற்றே. எப்போதுமே வெயிலிலேயே உட்கார்ந்து உட்கார்ந்து நல்ல திட சரீரியாக வாழ்கிறார். இவரையே, 'நிலவு வந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிறு' என்று மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் பாடிப் பரவியிருக்கிறார்கள். இவரையும் வணங்கி விட்டே பிரசித்தி பெற்ற தியாகராஜ மண்டபத்துக்குச் செல்ல வேணும்.

இங்குதான் மாணிக்கவாசர் இரண்டு திருக்கோலங்களில் சிலை உருவில் இருக்கிறார். ஒன்று மந்திரியின் கோலம். அந்தக் கோலத்தில்தானே அவர் இங்கு முதல் முதல் வந்திருக்கிறார். மன்னனுக்கு உரிய கிரீடம் கூட அவர் தலையை அலங்கரிக்கிறது. காதிலே குண்டலங்கள், மார்பிலே ஆரம், கைகளிலே அணிகள் எல்லாம் அணிந்து கம்பீரமாக நிற்கிறார். இதற்கு எதிர்ப்புறமோ, அவரது துறவுக்கோலம். எல்லா அணிகளையும் பணிகளையும் உதறி விட்டுக் கூப்பிய கையராய் நிற்கிறார். இந்த வடிவில்தானே இறைவன் திருவடியில் நிலைத்துநின்றிருக்கிறார் அவர்.

இந்த மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்ப உலகில் பிரசித்தமானவை. கல்லைத் தகடாக்கி அதில் பல வளைவுகள் கொடுத்துக் கூரை வேய்ந்திருக்கிறார்கள். அந்தக் காலத்திலே கோயில் கட்ட 'எக்ரிமெண்டு' எழுதிக் கொடுக்கும் சிற்பிகள், 'தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழிப் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை' ஆகியவற்றைத் தவிர மற்ற வேலைப்பாடுகளுக்குக்குறையாமல் செய்து தருகிறோம்' என்று எழுதிக் கொடுப்பார்களாம். கொடுங்கை வேலை அத்தனை 'அற்புதமானது, அழகானது. இந்த மண்டபத்துக்கு வட மேற்கிலேதான் தல விருட்சமாகிய குருந்த மரம் நிற்கிறது. இந்த மரத்தடியிலேதான் இறைவன் எழுந்தருளி வாதவூரரை ஆட்கொண்டிருக்கிறார் இதனை அந்த மணிவாசகரே சொல்கிறாரே.

நீதியே! செல்வத் திருப்பெருந்துறையில்

நிறைமலர்க் குருந்த மேவியசீர்

ஆதியே! அடியேன் ஆதரித்து அழைத்தால்

அதெந்துவே என்று அருளாயே!

என்பதுதானே அவரது திருவாசகம். இரண்டாவது பிரகாரத்தில்தான் பஞ்சாட்சர மண்டபம் என்னும் கனகசபை இருக்கிறது. இந்த மண்டபத்தின் தூண்கள் ஒன்றில்தான் குதிரைச்சாமி இருக்கிறார். ராவுத்தருக்கு உரிய உடையும் அணிந்து நாலுகால் பாய்ச்சலில் செல்லும் குதிரைமேல் ஆரோகணித்து இருக்கிறார். இக்கோயிலில் பல குதிரை வீரர்களது சிலைகள் இருந்தாலும் இந்தக் குதிரைச்சாமிக்கு மட்டுமே பூசை நடக்கிறது. இந்த மண்டபத்தை மாணிக்க வாசகரே கட்டினார் என்பது வரலாறு. மண்டபத்தின் அமைப்பைப் பார்த்தால் மிகவும் பிந்திய காலத்தில்தான் கட்டியிருக்க வேண்டும், என்றாலும் இந்தக் கோயில் முழுவதையுமே மணிவாசகர் கட்டினார் என்று சொல்வதிலே பின்னால் கோயிலை விரிவாக்கியவர்கள் பெருமைப் பட்டிருக்கிறார்கள். இன்று கோயில் திருவாடுதுறை ஆதீனத்தார் ஆளுகையில் இருக்கிறது.

இத்தனையும் பார்த்த பின்னரே தெற்கு நோக்கிய சுவாமி சந்நிதியிலும் கிழக்கு நோக்கிய அம்பிகை சந்நிதியிலும் சென்று வணங்கவேண்டும். மாணிக்கவாசகர் சந்நிதிக்கு எதிரிலேதான் அம்பிகை சந்நிதியிருக்கிறது. அம்மன் சந்நிதியைச் சுற்றிச் சலாகை அடித்த சுவர் இருப்பதால் அந்தச் சுவர்த் துவாரங்களின் வழியாகத் தான் கர்பூர ஹாரத்தியைக் காணவேண்டும். அம்பிகைக்கும் மாணிக்கவாசகருக்கும் ஏககாலத்தில் தீப ஆராதனை நடக்கும். அப்போது மணிவாசகர் பாடிய திருவாசகப் பாடல்கள் எல்லாம் நமது ஞாபகத்து வரும்.

நெறியல்லா நெறிதன்னை

நெறியாக நினைவேனை

சிறுநெறிகள் சேராமே

திரு அருளே சேரும் வண்ணம்

குறி ஒன்றும் இல்லாத

கூத்தன் தன்கூத்தை எனக்கு

அறியும் வண்ணம் அருளியவாறு

ஆர்பெறுவார் அச்சோவே

என்று பாடினார் மாணிக்கவாசகர். நம்மையும் இந்தக் குறி ஒன்றும் இல்லாத கூத்தனது கோயிலுக்கு அழைத்து வந்து, அங்கு இருக்கும் அற்புதங்களையெல்லாம் காண வைத்த இறைவன் திருவருளை வியந்து கொண்டே நாமும் வீடு திரும்பலாம். இனி,

இன்பம் பெருக்கி

இருள் அகற்றி எஞ்ஞான்றும்

துன்பம் தொடர் வறுத்து

சோதியாய் - அன்பு அமைத்து

சீரார் பெருந்துறையான்

தன்னுடைய சிந்தையே

ஊராகக் கொண்டான்

உவந்து

என்று திருவாசகப் பாடலே நமது நித்யப் பிரார்த்தனை யாகவும் இருக்கலாம் தானே.

காளி

17. மன்னார்குடி ராஜகோபாலன்

'கலையை வளர்ப்பது குழந்தையுள்ளம்தான். சீற்றமும் அழுக்காறும் துயரமும் குடிகொண்ட மனிதனது நெஞ்சிலே கலை தோன்றாது. அது கலையை அழிக்கும்; ஆக்காது' என்று ஓர் அறிஞர் கூறுகிறார். இந்த உண்மையை எத்தனையோ வருஷங்களுக்கு முன்னாலேயே நமது முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் முருகனையும் கண்ணனையும் குழந்தையாகப் பாவனை பண்ணியே வழிபட்டிருக்கிறார்கள். விரிந்த உலகங்கள் யாவையும் தன்னுள் அடக்கிக் காக்கும் பெரிய மாயவனாகிய திருமாலைப் பச்சிளங் குழந்தையாம் கண்ணனாகக் கொண்டாடுவதிலே ஓர் இன்பம் பெற்றிருக்கிறார்கள்.

இந்தக் கண்ணனிடத்து ஈடுபட்டு நிற்கும் அடியவர்களிடத்தில் பெரியாழ்வார் தலைசிறந்து விளங்குகிறார். வடமதுரைச் சிறைக்கூடத்திலே தேவகி மைந்தனாகப் பிறந்த கண்ணன் கோகுலத்திலே யசோதையின் பிள்ளையாக வளர்கிறான், 'மாணிக்கம் கட்டி வைரம் இடை கட்டி ஆனிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டிலில்' இட்டு அன்னை யசோதை தாலாட்டுகிறாள். இந்த யசோதையாகவே மாறுகிறார் பெரியாழ்வார் கண்ணனை அனுபவிப்பதிலே. ‘வாய்த்த புகழ் மணிவண்ணா! மஞ்சனம் ஆட நீ வாராய்! என்று அழகொழுக அவனை அழைக்கிறார். இன்னும் பூச்சூட்டக் கண்ணனை அழைக்கும் அருமைதான் என்ன?

ஆநீரை மேய்க்க நீ போதி!

அருமருந்து ஆவது அறியாய்

கானகமெல்லாம் திரிந்து உன்

கரிய திருமேனி வாட,

பானையில் பாலைப் பருகிப்

பற்றாதார் எல்லாம் சிரிப்ப,

தேனில் இனிய பிரானே!

செண்பகப் பூச் சூட்டவாராய்

என்றல்லவா அழைக்கிறார். இப்படியே அவனுக்குக்காப்பிட, கோல் எழுத, முலையூட்ட எல்லாம் அழைக்கும் பாடல்கள் அனந்தம். இன்னும் அவன் கன்றுகளை மேய்த்து வருவதையும், குழல் ஊதி நிற்பதையும், அக்குழல் ஓசைகேட்டுப் பறவையும் கறவையும் தன் வயமிழந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பதையும் அவர் கூறும்போது நாமும் அந்தக் கண்ணனிடத்திலே அப்படியே ஈடுபட்டு நிற்கிறோம். இந்தக் கண்ணனாம் கோபாலனது திருவிளையாடல்களும் ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்திரண்டு என்று வகைப்படுத்தி அத்தனைக்கும் விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள் நமது முன்னோர். இந்தக் கிருஷ்ணாவதார லீலைகளை யெல்லாம் காட்டி அருளிய தலம்தான் ராஜகோபாலன் கோவில் கொண்டிருக்கும் ராஜ மன்னார் குடி. அந்தத் தலத்துக்கே செல்கிறோம் நாம் இன்று.

தஞ்சை ஜில்லாவிலே, மன்னார்குடித் தாலுகாவில் தலைநகராய் இருப்பதுதான் ராஜமன்னார்குடி. தஞ்சை திருவாரூர் ரயில் பாதையில் நீடாமங்கலம் ஸ்டேஷனுக்குச் சென்று அங்கு ரயில் மாற்றி மன்னார்குடிக்குச் செல்லலாம். இப்படியெல்லாம் ரயில் ஏறவும் இறங்கவும் வேண்டாம் என்று நினைத்தால், தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் முதலிய எந்த ஊரில் இருந்தும் பஸ்ஸில் இவ்வூர் போய்ச் சேரலாம். இல்லை என்றால் கார் வசதி செய்து ‘ஜாம் ஜாம்' என்றுகோயில் வாயிலிலேயே போய் இறங்கலாம். ஏதோ யமுனா தீர விஹாரியாக இருந்த இந்த ராஜகோபாலன், ஏன் இத்தனை தூரம் தெற்கு நோக்கி வந்து இங்கு தங்கியிருக்கிறான் என்ற அறிய விரும்பினால் அந்தத் தல வரலாற்றை ஒரு திருப்புத் திருப்ப வேணும். -

இத்தென் தமிழ் நாட்டிலே காவிரிக்குத் தெற்கே இரண்டு யோசனை தூரத்திலே சண்பக மரங்கள் அடர்ந்த சண்பகக் காடு ஒன்று இருந்திருக்கிறது. அங்கு முனிவர் பலர் இருந்து தவம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் வாஹிமுகர்: அவருக்கு இரண்டு பிள்ளைகள் கோப்பிரளயர், கோபிலர் என்று. இருவரும் தங்களுக்கு மோக்ஷ சாம்ராஜ்யம் வேண்டித் துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானை நோக்கித் தவம் புரிகிறார்கள். இவர்களை நாரதர் சந்திக்கிறார். இவர்களிடம் 'துவாரகையிலுள்ள கிருஷ்ணன்தான் தான் வந்த காரியத்தை முடித்துக்கொண்டு வைகுண்டத்துக்கே திரும்பப் போய்விட்டனே; அவனை நோக்கி இங்கு தவம் புரிவானேன்?' என்று சொல்கிறார். பின் கிருஷ்ண சாக்ஷாத்காரம் பெற, காவிரியின் கிளை நதியான ஹரித்திரா நதிக்கரையில் தவம் செய்யச் சொல்கிறார். அப்படியே அவர்கள் தவம் செய்கிறார்கள்.

தவத்துக்கு இரங்கி, பரந்தாமன் எழுந்தருளுகிறான். அவர்கள் விரும்பியவிதமே அன்று கண்ணனாகப் பிருந்தாவனத்தில் திரிந்த கோலத்தையும் அங்கு அப்போது செய்த லீலைகளையும் மறுபடியும் இவர்களுக்காகச் செய்து காட்ட இசைகிறான். அப்படியே கோபாலன் தனது திருவிளையாடல் முப்பத்திரண்டையும் செய்து காட்டிய தலம்தான் தக்ஷிண துவாரகை என்னும் இந்த மன்னார்குடி. ஆகவே இத்தலத்துக்குச் சென்றால் அங்குள்ள கோயிலில் கண்ணனது திருவிளையாடல்களையெல்லாம் கண்டு களித்து அந்தப் பழைய துவாரகைக்கே போய் வந்த பலனைப் பெறலாம்.

அவதரித்தது, பூதகியை வதஞ் செய்தது, யசோதை மடியில் தவழ்ந்தது, பாலுண்டது, மாடு மேய்த்தது, வெண்ணெய் திருடி உண்டது, உரலில் கட்டுண்டு கிடந்தது, காளிங்க நர்த்தனம் செய்தது, கோபிகைகளோடு ஜலக்கிரீடையாடியது, அவர்களது வஸ்திராபஹரணம் பண்ணியதெல்லாம் இக்கோபாலனது பால லீலைகள், வயது முதிர்ந்து இளைஞனான பின்னர் ருக்மிணி சத்யபாமைகளை மணம் புரிந்தது, பஞ்சவர்க்காகத் தூது நடந்தது, பார்த்தனுக்குச் சாரதியாக அமர்ந்து அவனுக்குக் கீதோபதேசம் செய்ததெல்லாம் அவன்றன் லீலைகள்தாமே. இப்படியே முப்பது முப்பத் திரண்டு கோலங்களில் அவன் தன் திருவிளையாடல்களைக் கோப்பிரளயருக்கும், கோபிலருக்கும் காட்டியிருக்கிறான்: இத்தனை கோலங்களையுமே இந்தத் தலத்திலே நடக்கும் திருவிழாக்களில் இன்றும் கண்டு மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

இந்தக் கோயில் வாயிலுக்கு முன் எழுந்து நிற்பது கருடகம்பம். ஐம்பத்து நாலு அடி உயரம் உள்ள இந்தக் கம்பத்தில் கருடன் அஞ்சலி ஹஸ்தராய் மேற்கு நோக்கி ராஜகோபாலனை வந்தித்த வண்ணம் இருக்கிறார். அந்தக் கம்பத்திலேயே தீபம் வைக்கவும்வகை செய்திருப்பதால் அதுவே தீப ஸ்தம்பமும் ஆகிறது. இதனை வலம் வந்தே கோயில் வந்து சேர வேண்டும். இந்தக் கோயில் ஐந்து பிரகாரங்களோடு கூடிய விஸ்தாரமான கோயில். இங்குள்ள கோபுரங்கள் மொத்தம் பதினாறு. அவற்றில் கீழைக் கோபுரம் 154 அடி உயரமுள்ள பெரிய கோபுரம். இந்த வாயிலைக் கடந்தே வெளிப் பிரகாரமான நாச்சியார் ரதவீதிக்கு வரவேணும். இதற்குள் அமைந்தது காசிப் பிரகாரம்; அதற்குள் அமைந்தது சண்பகப் பிரகாரம். இதுவே அன்றையச் சண்பகாரண்யமாக இருந்திருக்க வேணும்.

இன்றைய தலவிருட்சம் புன்னையும் இங்கே தான் இருக்கிறது. இதற்குள்ளேதான் கருடப் பிரகாரம். இதையும்

கோயில் - மன்னார்குடி

கடந்தே தான் கரு வறையைச் சுற்றியுள்ள திரு உண்ணாழிப் பிரகாரம். இந்தப் பிரகாரங்களில் எல்லாம் எத்தனையோ மண்டபங்கள். இத்தனையும் கொஞ்சம் கற்பனை பண்ணிப் பார்த்தாலே கோயில் எத்தனை பெரியது என்று தெரியும். இந்தக் கோயிலை, இந்தக் கோயிலின் காசிப் பிரகாரத்தைச் சுற்றி நிற்கும் மதில் வானளாவி நிற்கும். திருவாரூர்த் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, வேதாரண்யம் விளக்கு அழகு, காஞ்சீபுரம் குடை அழகு, திருவரங்கம் நடை அழகு என்பது போல் மன்னார்குடி மதில் அழகு என்பதும் பிரசித்தமானதாயிற்றே. இந்த மதில், இந்தப் பிரகாரம், இந்த மண்டபங்கள் எல்லாவற்றையும் கடந்தே கருவறையில் இருக்கும் பெருமாளைச் சேவிக்க வேணும்.

அங்குள்ள மூலவர் வாசுதேவன் நான்கு திருக்கைகளோடு சேவை சாதிப்பான், இவர் பிரம்மாவாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டவர் என்பர். இவருக்கு முன்னால் உத்சவ மூர்த்தியாய் எழுந்தருளியிருப்பவரே ராஜகோபாலன், வலக்கையில் மாடு மேய்க்கும் கோலும் இடக்கையை சத்யபாமையின் தோள்களிலும் வைத்துக் கொண்டு ஆனிரை சுற்றி நிற்கக் கோலாகலமாகக் காட்சி தருகிறான். ராஜகோபாலன் நல்ல வடிவழகு உடையவன். பின்னே விரித்த குழலும், முன்னே முடித்த கொண்டையும், கருணை பொங்கும் கண்களும், புன்முறுவல் பூத்த முகமும் உடையவனாய் இருக்கிறான். வலக்காலை அழுத்தி, இடக்காலைச் சிறிது சாய்த்துச் சதங்கை அணிந்த திருவடிகளோடு காட்சி தருகிறான்.

கொஞ்சம் உற்று நோக்கினால் ஒரு காதில் தாடங்கமும் ஒரு காதில் குண்டலமும் அணிந்திருப்பது தெரியும். ஐயோ! இது என்ன கோலம்? பெண்கள் அணியும் தாடங்கம் இவன் காதில் எப்படி வந்தது என்று நினைப்போம். இவன்தான் கோலாகலப் புருஷன் ஆயிற்றே, ஹரித்திரா நதியிலே இறங்கி கோபிகைகளுடன் ஜலக்கிரீடை செய்திருக்கிறான். அக்கிரீடைக்கு முன்னர் எல்லோரும் அவரவர் ஆடை அணிகளைக் களைந்து கரையிலே வைத்திருக்கின்றனர். ஜலக்கிரீடை முடிந்து அவசரம் அவசரமாகக் கரையேறி ஆடை அணிகளைத் திரும்பவும் அணிகிறபோது இந்தக்கோபாலன் தெரியாமல் ஒரு கோபிகையின் தாடங்கத்தையே எடுத்து அணிந்து கொண்டிருக்கிறான். அந்தக் கோலத்திலேயே இன்றும் சேவை சாதிக்கிறான். இவன் விட்டு விட்ட குண்டலம் எந்தக் கோபிகையின் காதில் ஏறியிருக்கிறதோ? அத்தனை கோபியரில் அந்தக் கோபிகையை நாம் எப்படிக் கண்டுபிடிப்பது?

வாசுதேவனையும் ராஜகோபாலனையும் தரிசித்தபின் வெளியே வந்து தென்பக்கம் போய் அங்கு தனிக்கோயிலில் இருக்கும் செங்கமலத் தாயாரையும் தரிசிக்கலாம். பிருகு மகரிஷி. தவம் செய்து லக்ஷ்மியையே தம் மகளாகப் பெறுகிறார். அவள், ‘மணந்தால் பரந்தாமனையே மணந்து கொள்வேன்' என்று தவமிருந்து வாசுதேவனை மணந்திருக்கிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்றுகிறாள். அவளை வடமொழியில் ஹேமாப்ஜநாயிகா என்று அழைக்கிறார்கள். ஹேமாப்ஜம் என்றால் பொற்றாமரை என்றுதானே பொருள். அவளையே செங்கமல நாச்சியார் என்று நல்ல தமிழ்ப் பெயராலேயே அழைக்கிறார்கள்,

இக்கோயில் பிரகாரங்களில் லக்ஷ்மி நாராயணன், அனந்த

சக்கரத்தாழ்வார்

பத்மநாபன், வெங்கடேசப் பெருமாள், வைகுண்டவாசன் முதலிய மற்றைய விஷ்ணுவின் பல கோயில்கள் இருக்கின்றன. ஆண்டாளுக்கும் சக்கரத் தாழ்வாருக்கும் தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன. இன்னும் ஆழ்வாராதியர் எல்லாம் தனிக் கோயிலிலேயே இருக்கிறார்கள். இத்தனை இருந்தும் இங்குள்ள ராஜ கோபாலனோ அல்லது வாசுதேவனோ ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்படவில்லை. ஆதலால் நூற்றெட்டுத் திருப்பதியில் ஒன்றாகக் கணக்கிடப்படவும் இல்லை. ஆனால் ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் கடைசி ஆச்சாரியரான மண்வாள மாமுனிகளின் அபிமான ஸ்தலம் என்ற சிறப்பு உண்டு இத்தலத்துக்கு. ஸ்ரீராமானுஜர் 'ஒரு நாயகமாய்' என்ற திருவாய் மொழிப் பாசுரத்தை மைசூர் திருநாராயணபுரத்து பெருமானுக்குச் சமர்ப்பித்ததுபோல் மணவாள மாமுனிகளும் ‘தீரப்பாரையாமினி' என்னும் திரு வாய் மொழியின் பத்தாம் பாட்டை இந்த ராஜ கோபாலனுக்குச் சமர்ப்பித்திருக்கிறார். பாடல் இதுதான்.

உன்னித்து மற்றொரு தெய்வம்

தொழாள், அவனையல்லால்

நும் இச்சை கொல்லிநும் தோள்

குலைக்கப்படும், அன்னைமீர்

மன்னப்படு பறைவாணனை

வண் துவாரபதி மன்னனை ஏத்துமின்

ஏத்துதலும் தொழுது ஆடுமே.

என்பது நம்மாழ்வார் பாசுரம். முன்னமேயே இத்தலம் தக்ஷிண துவாரகை என்று வழங்கப்படுகிறது என்பதைத் தெரிந்திருக்கிறோம். அந்தத் தென் துவாரகையையே வளப்பமுள்ள துவாரகை - வண் துவாரகை என்று நம்மாழ்வார் குறித்தார் போலும்.

புராண ரீதியில் இக்கோயிலைச் சௌராஷ்டிதேசத்து அரசன் ராஜசேகரன் கட்டிப் பல கைங்கர்யங்கள் செய்தான் என்று தெரிகிறோம். யக்ஞசீலன் என்ற அந்தணனை அவமதித்தது காரணமாக அந்த ராஜசேகரன் பைத்தியம் பிடித்து அலைய அவன் இத்தலத்துக்கு வந்து ராஜ கோபாலனைச் சேவித்துப் பைத்தியம் நீங்கினான் என்பது புராணக் கதை, சரித்திர பூர்வமாக ஆராய்ந்தால் இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரியும். இக்கோயிலில் ஆறு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவற்றில் முதல் குலோத்துங்கன் காலத்தியது இரண்டு, மற்றவை திரிபுவன சக்ரவர்த்தி ராஜராஜதேவர், ராஜ ராஜேந்திர சோழ தேவர், கோனேரின்மை கொண்டான் காலத்தியவை. முதற் குலோத்துங்க சோழன் காலத்திய கல்வெட்டின்படி இக்கோயில் அவனது 43-ஆம் ஆண்டில் அதாவது கி.பி. 1113-ல் விஸ்தரிக்கப்பட்டிருக்கவேண்டும். ராஜாதி சதுர்வேதிமங்கலம், குலோத்துங்க சோழவிண்ணகரம் என்றெல்லாம் இத்தலம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. தஞ்சை நாயக்க மன்னரில் ஒருவரான விஜயராகவன் இக்கோயிலின் பெரும்பகுதியைக் கட்டியிருக்கிறான். அவனது சிலைவடிவம் மகா மண்டபத்தில் இருக்கிறது.

இந்தக்கோயிலை மட்டுமே பார்த்துவிட்டுத் திரும்பி விட்டால், தலம் முழுவதையும் பற்றித் தெரிந்ததாக ஆகாது. இங்குள்ள முக்கிய தீர்த்தம் ஹரித்திரா நதி என்னும் பெரிய தெப்பக்குளம்தான். இத் திருக்குளத்தின் விஸ்தீரணம் இருபத்து மூன்று ஏக்கர். திருவாரூர் கமலாலயத்தை விடச் சிறியதுதான் என்றாலும் நல்ல புராணப் பிரசித்தி உடையது. இங்குதான் ராஜகோபாலன் கோபிகைகளோடு ஜலக்கிரீடை செய்திருக்கிறான். இந்தக் குளத்தின் மத்தியில் ஒரு மண்டபம் அல்ல, மதிலுடன் கூடிய ஒரு சிறு கோயிலே இருக்கிறது. அக்கோயிலினுள் வேணுகோபாலன், ருக்மிணி சத்யபாமா சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். வசதி செய்து கொள்ளக் கூடுமானால் இவர்களையும் தரிசித்துவிட்டே திரும்பலாம்.

18. வடுவூர் கோதண்டராமன்

சரயு நதிக் கரையிலே பிறந்து கங்கை நதி தீரத்திலே வளர்ந்தவன் ராமன். ஆனால் இன்று இந்தச் சரயு நதிக்கரையிலோ அல்லது கங்கை நதி தீரத்திலோ ராமனுக்குக் கோயில்கள் அதிகம் இல்லை. இந்திய நாட்டின் தலநகரம் டில்லியிலேயே பெரிய கோயில் லக்ஷ்மி நாராயணனுக்குத் தான். நான் அங்கு சென்றிருந்தபோது, 'ராமனுக்குக் கோயில்கள் உண்டா ?' என்று தேடிந்திரிந்தேன். 'ஓ! உண்டே அந்த ஜந்தர்மந்தர் பக்கம் இறங்கி அங்கிருந்து கிழக்கு நோக்கி ஒரு மைல் நடந்தால் ராமன் கோயிலுக்குச் செல்லலாமே' என்று விவரம் அறிந்த நண்பர் ஒருவர் கூறினார். அப்படியே நடந்தேன்.

ஆனால் அங்கு சென்று கண்டது ராமன் கோயில் இல்லை. அங்கே அனுமனுக்கு என்று ஒரு பெரிய கோயிலைக் கட்டி அதில் பெரியதோர் அனுமாரையும் பிரதிஷ்டை செய்து விட்டு, ஓர் ஒதுக்குப் புறமான மாடத்தில் ராமனுக்கும் சீதைக்கும் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இந்தக் கங்கா யமுனை நதி தீரத்தைக் கடந்து, கோதாவரிக் கரைக்கு வந்தால் அங்கு பத்ராஜலத்தில் ஒரு கோயில், ஆம்! அந்தப் பழைய ராம பக்தன் ராம்தாஸ் கட்டிய கோவில் ஒன்றுதான், மேற்கே மராத்திய நாட்டையோ பாண்டுரங்க விட்டல் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான்.

ஆனால் வேங்கடத்தைக் கடந்து தெற்கு நோக்கித் தமிழ் நாட்டுக்கு வந்துவிட்டாலோ, அதிலும் காவிரிபாயும் சோழநாட்டுக்கு வந்துவிட்டாலோ இந்த ராமனுக்குத் தான் எத்தனை எத்தனை கோயில்கள்? கும்பகோணத்தில் ஒரு கோயில் என்றால், நீடாமங்கலத்தில் ஒரு கோயில், முடி கொண்டானில் ஒரு கோயில், தில்லை விளாகத்தில் ஒரு கோயில், அடம்பரில் ஒரு கோயில், வடுவூரில் ஒரு கோயில் என்று எண்ணற்ற கோயில்கள் இந்த ராமனுக்கு. இவை தவிரப் பெருமாளுக்கு என்று எடுத்த திருப்பதிகள் அத்தனையிலும் ராமனுக்கு என்று ஒரு தனிச் சந்நிதி. இவ்வளவுதானா? அந்த ராமனுக்கு வேங்கடராமன், கோசலராமன், ரகுராமன், சுந்தர ராமன், கல்யாண ராமன், சந்தானராமன், கோதண்ட ராமன் என்னும் எண்ணற்ற திருப்பெயர்கள், இப்படிக் கங்கைக் கரையில் பிறந்து வளர்ந்தவனைக் காவிரிக் கரையில் நிலைத்து நிற்கச் செய்தவன் கலிச்சக்கரவர்த்தி கம்பனே என்றால் மிகையில்லை. கம்பனோ ராமனை அந்தமில் அழகனாகக் காண்கின்றான்; விற்பெருந்தடந்தோள் வீரனாக மதிக்கிறான்; எல்லாவற்றுக்கும் மேலாக அவனது அவதார ரகசியத்தையும் உணர்ந்து, அவனே மூவர்க்கும் மேலான பரம்பொருள் என்று கொண்டாடுகிறான்.

மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர்

மும்மைத் தாய

காலமும் கணக்கும் நீத்த

காரணன் கைவில் ஏந்தி

சூலமும் திகிரி சங்கும்

கரகமும் துறந்து, தொல்லை

ஆலமும், மலரும், வெள்ளிப்

பொருப்பும் விட்டு அயோத்தி வந்தான்

என்பதுதானே அவனது சித்தாந்தம். இந்தக் கம்பனையும் முந்திக்கொண்டு அந்த இளங்கோ அடிகளும் இந்த ராமப் பிரபாவத்தை நிறைந்த சொற்களால் கூறி மகிழ்கிறாரே. மூவுலகும் ஈர் அடியால்

முறை நிரம்பா வகை மூடிய

தாவிய சேவடி சேப்ப

தம்பியொடும் கான் போந்து,

சோ அரணும் போர்மடிய -

தொல் இலங்கை கட்டு அழித்த

சேவகன் சீர் கேளாத

செவி என்ன செவியே?

திருமால் சீர் கேளாத

செவி என்ன செவியே?

என்றுதானே ஆய்ச்சியர் குரவையில் பாடுகிறார் அவர், ஆதலால் அறம்தலை நிறுத்த வந்த தலைமகனான ராமன் தமிழ் நாட்டுக்குள் எவ்வளவோ காலத்துக்கு முன்பே வந்திருக்கிறான். என்றாலும் அவனை வீடும் குடியுமாக இங்கே இருத்தி அவனுக்குக்கோயில்கள் எழுப்பித்து அங்கெல்லாம் அவனை மக்கள் பணிந்து வணங்கி எழுவதற்கெல்லாம் வகை செய்தவன் கம்பன். சோழ நாட்டில் ராமனுக்குக் கோயில்கள் எழுந்ததெல்லாம் கம்பன் காலத்துக்குப் பின்தான். இப்படி எழுந்த கோயில்களில் ஒன்றே வடுவூர் கோதண்டராமன் கோயில். அந்த வடுவூருக்கே செல்கிறோம், நாம் இன்று.

வடுவூர் தஞ்சை ஜில்லாவிலே. தஞ்சைக்குத் தென் கிழக்கே பதினான்கு மைல் தூரத்திலுள்ள சிறிய ஊர். முன்னர் சென்றிருந்த திவ்ய தேசமான ராஜமன்னார் குடிக்கு மேற்கே ஒன்பது மைலில் இருக்கிறது. தஞ்சையில் இறங்கித் தஞ்சைமன்னார்குடி (வடுவூர் வழி) பஸ்ஸில் ஏறி வடுவூர் செல்லலாம். இல்லை, கார் வைத்துக்கொண்டும் அந்தத் தலத்துக்குச் சென்று சேரலாம். இதைத் தண்டகாரண்ய க்ஷேத்திரம் என்று கூறுகிறது தல வரலாறு. நாம் அறிந்த மட்டில் தண்டகாரண்யம் என்பது விந்திய மலைக்குத் தெற்கே உள்ள பிரதேசம்தான். 'காவிரி பாயும் சோழவளநாட்டிலா ஒரு தண்டகாரண்யம்?' என்று அதிசயிப்போம். நமக்குத்தான் தெரியுமே, 'ராமன் இருக்குமிடம் அயோத்தி' என்று. அதுபோல் ராமன் சீதா லக்ஷ்மண சமேதனாக இருக்கும் இடம் பஞ்சவடி. அந்தப் பஞ்சவடியை உள்ளடக்கியது தண்டகாரண்யம், ஆதலால் ராமன் சீதா லக்ஷ்மணருடன் தங்கியிருக்கும் இந்த இடத்தையும் தண்டகாரண்யம் என்று சொல்வதில் தவறில்லையல்லவா? ஆதலால் அந்தத் தண்டகாரண்ய க்ஷேத்திரத்துக்கே செல்லலாம்.

இந்த வட்டாரத்தை அங்குள்ள பழங் குடியினரான கள்ளர்குல மக்கள் 'தன்னரசு நாடு' என்கிறார்கள். அவர்களெல்லாம் தத்தமக்குத் தோன்றியபடி அன்று தனி அரசு செய்த நாடாக இருக்கும் போலும். ஆனால் இந்த நாட்டில் இந்த ராமன் வந்து கோயில் கொண்டபின், நல்ல குடியரசு நாடாகவே மாறியிருக்கிறது. ஊரில் ஒரு பஞ்சாய்த்து இருக்கிறது. கோயிலுக்கு ஓர் அறம் காவலர் குழு இருக்கிறது. தன்னரசு எல்லாம் மலை ஏறி நல்ல குடியரசாக ராமராஜ்யமாக மாறியிருக்கிறது.

வடுவூர் கோயில்

இந்த ஊரின் மேல்புறத்திலே ஒரு கோயில். அக்கோயில் மிகப் பெரிய கோயிலும் அல்ல, மிகச் சின்னக்கோயிலும் அல்ல. கோயில் வாயிலை ஒரு சிறு கோபுரம் அணி செய்கிறது. அதைக் கடந்ததும் வெளிப் பிரகாரம். அதை அடுத்து ஒரு மண்டபம், அந்த மண்டபத்தை அடுத்துகி கருவறை. கருவறையிலே ராமன், சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கிறான் சிலை உருவில், இவர்களை முந்திக் கொண்டு செப்பு வடிவமாக நிற்பவர்களே மிக்க அழகு வாய்ந்தவர்கள். அப்படி நிற்பவனே கோதரண்டராமன். அவனது பக்கத்திலே அஞ்சலி ஹஸ்தனாய் அனுமனும் நிற்கிறான். பட்டாச்சாரியரை அழைத்துத் தூபம் இட்டு நல்ல வெளிச்சத்தில் ராமனைச் தரிசித்து அனுப்விப்பது அவனது உதடுகளில் தவழும் புன்முறுவலையே. அன்று கன்னி மாடத்திலிருந்து சீதை, மிதிலா நகரின் தெருவிலே முனிவர் முன் செல்லத் தம்பி பின்வரச் சென்ற ராமனைக் கண்டபோதும் அவள் கண்டது அந்த முறுவலைத்தானே. இந்திர நீலம் ஒத்து

இருண்ட குஞ்சியும்

சந்திர வதனமும்

தாழ்ந்த கைகளும்

சுந்தர மணி வரைத்

தோளுமே அல,

முந்தி என் உயிரை

அம் முறுவல் உண்டதே

என்றுதானே அவள் சொல்லுகிறாள். நாமும் அவளைப் போலவே அவனது சந்திரவதனத்தைக் காணலாம். புன்முறுவலை அனுபவிக்கலாம். இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியையோ, தாழ்ந்த கைகளையோ, சுந்தர மணிவரைத் தோள்களையோ காண்பது இயலாது. காரணம் அத்தனையையும் நீண்டுயர்ந்த கிரீடமும், தங்கக் கவசமும் அணிவித்து மறைத்து வைத்திருப்பார்கள்.

சாதாரணமாகக் கவசம் களைதல் என்பது இங்கு இல்லை. வருஷத்துக்கு ஒருமுறை ஆடி மாதத்தில் அபிஷேகம் நடத்துகிறார்கள். அன்று கருவறையில் உள்ள இந்தச் செப்புச் சிலை ராமனை, லக்ஷ்மணனை. சீதையை வெளியே கொணர்கிறார்கள்; திருமஞ்சனம் ஆட்டுகிறார்கள். அதன் பின் சந்தனக் காப்புச் செய்கிறார்கள். அந்தச் சந்தனக் காப்போடு காப்பாகக் கவசத்தையுமே போட்டு 'பாக்' பண்ணி வைத்து விடுகிறார்கள். மறுபடியும் கவசம் களைவது அடுத்த அபிஷேகக் காலத்தில்தான்.

இந்த ராமன் இங்கு எழுந்தருளியிருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. இத்தலத்தில் முதன் முதல் பிரதிஷ்டை செய்யப் பட்டிருந்தவன். ருக்மிணி சத்யபாமையுடன் கூடிய ராஜகோபாலனே. திருத்துறைப்பூண்டித் தாலுகாவில் உள்ள தலைஞாயிறு என்ற இடத்திலேயே ஒரு சிறு கோயிலில் ராமர், லக்ஷ்மணர், சீதை வடிவங்கள் இருந்திருக்கின்றன. அப்போது தஞ்சையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர் இந்த ராமனை வடுவூருக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். முதலில் ராமனையும் சீதையையும் எடுத்து இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குள் தலைஞாயிறு மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். லக்ஷ்மணனை எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை. ஆதலால் அங்கிருந்து வந்த ராமன் சீதை வடிவங்களோடு லக்ஷ்மணனையும் புதிதாக வடித்துச் சேர்த்திருக்கிறார்கள் இங்கே.

ராஜகோபாலன் அவதாரத்துக்கு முந்திய அவதாரம் அல்லவா ராமாவதாரம்? ஆதலால் முன்னர் அங்கிருந்த ராஜகோபாலன், ராமருக்குக் கருவறையிலேயே இடம் கொடுத்துவிட்டு ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறான். இன்று ராஜகோபாலன் தம்பதிகள், நம்மாழ்வார், உடையவர், தேசிகர், மணவாள மாமுனிகள் எல்லாம் ஓர் இருட்டறைக்குள்ளே ஒதுங்கியிருக்கிறார்கள். அர்ச்சகரைக் கேட்டு அவர்களையுமே தரிசிக்கலாம். தலை ஞாயிற்றிலுள்ள சீதையும் ராமனும் இங்கு வந்து விட்டார்களே, அங்குள்ள இலக்குவன் என்ன ஆனான் என்று கேட்டேன், இந்த வடுவூர் பட்டாச்சாரியரிடம். “ அதுவா? அங்குள்ள லஷ்மணனுக்கு 'பிரமோஷன்' ஆகிவிட்டது. அவனையே ராமனாக்கி வேறு லட்சுமணன், சிதை முதலியவர்களைப் புதிதாகச் செய்து அவர்களுக்கு ஒரு சிறு கோயிலும் கட்டிவைத்திருக்கிறார்கள்” என்றார்.

இதன் உண்மையைத் தலைஞாயிறு செல்லும் காலத்தில் தான் விசாரித்து அறிய வேணும். இப்படித் தலைஞாயிற்றிலிருந்து எழுந்தருளிய ராமனே இன்று வடுவூர் கோதண்டராமன் என்ற பிரசித்தியோடு விளங்குகிறான். இத்தலத்தில் ராமநவமி உற்சவம்தான் பெரிய உற்சவம். இன்னும் இந்த ஊரில் கைலாசநாதர் மேற்கே பார்க்க இருக்கிறார். பிடாரி வடக்கே பார்க்க இருக்கிறாள். இப்படி மூன்று திசைகளிலிருந்தும் இத்தன்னரசு நாட்டு மக்களைப் பரிபாலிக்கிறார்கள் இவர்கள் மூவரும். அவகாசம் உடையவர்கள் எல்லாம் கைலாசநாதர், அழகிய சுந்தரி முதலியவர்களையும் தரிசித்துவிட்டுத் திரும்பலாம்.

அடம்பர் ராமன்

காவிரிக் கரையிலுள்ள ராமனை, அர்ச்சகர்கள் 'காவேரி தீர ரஸிகாயா நமா ஓம்' என்று அர்ச்சித்து மகிழ்கிறார்கள், உண்மைதானே? கங்கைக் கரையில் பிறந்த ராமன் காவிரிக்கரையில் அல்லவா வந்து நிலைத்திருக்கிறான். கும்பகோணம் போயிருந்தபோது அங்குள்ள ராமசாமி கோயிலில் பட்டாபிராமனைப் பார்த்தோம். இன்றோ வடுவூர்கோதண்ட ராமனைப் பார்க்கிறோம். இன்னும் கொஞ்சம் வசதி செய்து கொள்ளக் கூடுமானால் தில்லை விளாகம் ராமன், அடம்பர் ராமன், முடிகொண்டான் ராமன் முதலியவர்களையும் தரிசித்து மகிழலாம். திருத்துறைப் பூண்டி - பட்டுக்கோட்டை பாதையில் ரோட்டை விட்டுக் கொஞ்சம் விலகிக் கிழக்கு நோக்கிச் சென்றால் தில்லைவிளாகம் ராமனைக் காணலாம். அலங்கரிக்கப்பட்ட பெரிய மேடையில் சர்வாலங்கார பூஷிதனாக லக்ஷ்மணனுடனும் சீதையுடனும் அனுமனுடனும் அங்கு நின்று கொண்டிருப்பான். இவர்களை அடுத்த தனிக்கோயிலில் நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகரும் இருப்பார்கள். எல்லோருமே ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன் பூமிக்கடியில் இருந்து வெளிவந்தவர்கள்தானாம். இதற்கு எதிர்த் திசையில் மாயூரம் - திருவாரூர் பாதையில் பூந்தோட்டத்தை அடுத்து முடிகொண்டான் என்று ஒரு சிற்றூர். அங்குள்ள தனிக்கோயிலிலும் ராமன், சீதா லக்ஷ்மண சமேதனாக நிற்கிறான். இவர்களையெல்லாம் விட அழகனாக நிற்கும் ராமனைக் காண அடம்பர் என்ற ஊருக்கே செல்லவேணும். தஞ்சை ஜில்லாவிலே, திருவாரூருக்கு வடக்கேயுள்ள நன்னிலம் போய், அங்கிருந்து மேற்கு நோக்கி நான்கு மைல்கள் சென்றால் அடம்பர் என்ற ஊருக்கு வருவோம். அந்த ஊரைப் பற்றி ஒரு பாட்டு :

ஆயிரம் வேலி அதம்பார்.

ஆனை கட்டும் தாள்

வானை முட்டும் போர் -- அதில்

ஆறு கொண்டது பாதி

தூறு கொண்டது பாதி - அதனால்

கொட்டாங்கச்சியிலே நெல்லு

கொடுங்கையிலே வைக்கோல்,

இதற்கு மேலும் அந்த ஊரின் பிரபாவத்தைச் சொல்ல வேணுமா? இந்தச் சிறிய ஊரிலே ஒரு கோயில். கள்ளிக் கோட்டை ஓடு போட்டு முன்கூரை வேய்ந்திருக்கும். அங்கு இருப்பவர் கல்யாண ரங்கநாதர் என்பார்கள். அங்குள்ள ராமனோ மிகமிக அழகு வாய்ந்தவன். அவனைப் பார்க்கவே ஒரு நடை போகலாம் அந்த ஊருக்கு.

19. தஞ்சைப்பெரு உடையார்

ஆயிரம் வருஷங்களுக்கு முன் தஞ்சையிலிருந்து அரசாண்ட சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தியான ராஜராஜன் ஒரு நாள் மாலை தஞ்சை நகரின் வெளிப்புறத்திலே உலாவப் புறப்படுகிறான். அவனை வளர்ப்பதில், அவன் ராஜ்யபாரம் செய்வதில் எல்லாம் மிகுந்த அக்கறை காட்டுகின்ற அவன் தமக்கை குந்தவையும் உடன் வருகிறாள். அவன் பட்டம் ஏற்றது கி.பி. 986-ல். பட்டம் ஏற்ற உடனேயே திக்விஜயம் செய்து, வெற்றிக்கு மேல் வெற்றி கண்டு அப்போதுதான் தலைநகர் திரும்பியிருக்கிறான். சேரர், பாண்டியர், பல்லவர், சளுக்கர் எல்லோருமே இவனுக்கு அடிபணிந்திருக்கிறார்கள். அவர்கள் நாடுகள் எல்லாமே சோழ மண்டலத்தின் கீழ் அடங்கியிருக்கின்றன.

காந்தளூரில் கலம் அறுத்து, பாண்டியன் அமர புஜங்கனை முறியடித்து, கங்கபாடியையும் அடிமை கொண்டு, நுளம்பப் பாடியைக் கைப்பற்றி, குடமலை கொல்லம் கலிங்கம் முதலிய நாடுகளின் பேரிலும் படையோடு சென்று வெற்றி கண்டதோடு நிற்கவில்லை அவன். கடல் கடந்து சென்றிருக்கிறான்; ஈழ நாட்டை மும்முடிச் சோழ மண்டலமாக்கியிருக்கிறான்; அலை கடல் நடுவில் பலகலம் செலுத்தி முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைக் கொண்டு ஜயங்கொண்ட சோழனாகவே திரும்பியிருக்கிறான். அவனது போர் அனுபவங்களையும் அவனது வெற்றிப் பிரதாபங்களையும் அவன் வாயிலாகவே கேட்டு மகிழ்கிறாள் அவனது தமக்கையார். இப்படி உரையாடிக் கொண்டே இருவரும் வந்து சேருகிறார்கள் ஒரு சோலைக்கு. அங்குள்ள குளத்தையும் அக்குளத்தின் நடுவிலே லிங்கத் திருவுருவிலே இறைவன் கோயில் கொண்டிருப்பதையும் காண்கிறார்கள். .

‘விண்ணிறைந்து மண் நிறைந்து மிக்காய், விளங்கு ஒளியாய் எண்ணிறந்து எல்லை இல்லாதானாகப் பரந்து நிற்கும் இறைவனுக்கா இப்பெரிய சாம்ராஜ்யத்தில் இத்தனை சிறிய கோயில்?' என்று நினைக்கிறான் ராஜராஜன். அதே எண்ணம் எழுகிறது தமக்கை குந்தவைக்கும். கேட்கிறாள் அவள் தம்பியிடம் : ‘தம்பி! இந்தத் தஞ்சைத் தலைநகரிலே உனது சிறந்த ஆட்சியிலே இந்தத் தளிக்குளத்து இறைவனுக்கு இத்தனை சிறிய கோயில் இருப்பது உனது புகழுக்கு ஏற்றதாகுமா?' என்று. ஆம். அக்கா! நானும் அப்படியேதான் நினைத்தேன் இப்போது. இனிமேல் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சிந்தித்துக்கொண்டே வந்தேன். சரி. இந்தத் தளிக்குளத்து இறைவனையே பெருஉடையாராக அமைத்து, அந்தப் பெரு உடையாருக்கு ஏற்ற ஒரு பெரிய கோயிலையும் : கட்டிவிட வேண்டியதுதான், என்று தீர்மானித்து விட்டேன்' என்கிறான்.

இந்தச் சிந்தனையில் பிறக்கிறது தஞ்சைப் பெரிய கோயில். கிட்டத்தட்ட ஏழு வருஷகாலம் கோயில் கட்டும் திருப்பணி நடக்கிறது. ராஜராஜனது முழுக் கவனமும் கோயில் கட்டுவதிலேயே இருக்கிறது. தன் உடைமை யெல்லாம் கொடுக்கிறான் ராஜராஜன், இந்தக் கோயில் கட்ட. அவனது மனைவியர் எல்லாம் வாரி வழங்குகிறார்கள். அவன் தமக்கை குந்தவையுமே பொன்னும் பொருளும் கொடுத்து உதவுகிறாள்; 'நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' சேர்ந்து இக்கோயில் உருவாகுகிறது என்று பெருமையோடு பொறிக்கிறான் இராஜராஜன். இந்த ராஜராஜன் கட்டிய பெரிய கோயிலையே மக்கள் ராஜராஜேச்சுரம் என்று அருமையாக அழைக்கிறார்கள். அங்கு பெரு உடையார் என்னும் பிரஹதீசுவரர் கோவில் கொள்கிறார். இந்த தஞ்சைப் பெருவுடையாரின் பெரிய கோயிலுக்கே செல்கிறோம், நாம் இன்று.

தஞ்சாவூர் எங்கிருக்கிறது? அதற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லித்தான் வாசக நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பது இல்லை. ஆனால் இந்த ஊருக்கு தஞ்சாவூர் என்று ஏன் பெயர் வந்தது?. யாராவது இங்கு வந்து தஞ்சம் புகுந்தார்களா என்ற கேள்விக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ஆதியில் குபேரன் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டிருக்கிறான். மேலும் இந்தத் தலத்தில்தான் பராசர முனிவர் தவம் செய்திருக்கிறார். முனிவர் தவம் செய்கிறார் என்றால் அதைக் கெடுக்கத்தான் அசுரர்கள் புறப்பட்டு விடுவார்களே! தஞ்சன், தாரகன், தாண்டகன் என்னும் அசுரர்கள் பராசரரைத் துன்புறுத்துகிறார்கள்.

அவரோ விஷ்ணுவினிடமும், துர்க்கையிடமும் முறையிடுகிறார். இருவரும் அசுரர்களுடன் போர் ஏற்கிறார் கள்: விஷ்ணு தஞ்சன், தாண்டகனைச் சம்ஹரிக்கிறார். துர்க்கை தாரகனை வெற்றி காண்கிறாள். இறக்கும் தறுவாயில் தஞ்சன் விஷ்ணுவினிடம் அன்று முதல் அந்தத் தலம் தன் பெயரால் அழைக்கப்படவேண்டும் என்று வரம்கேட்கிறான். அதனாலேயே தஞ்சன் ஊர் தஞ்சாவூர் என்று பெயர் பெறலாயிற்று என்று புராண வரலாறு கூறுகிறது (தஞ்சனைப் போலவே தாண்டகனும் தாரகனும் வேண்டிக் கொண்டிருந்தால் தஞ்சையை அடுத்தே ஒரு தாண்டகபுரி, தாரக நகரும் தோன்றியிருத்தல் கூடும். பைத்தியக்காரர்கள் கோட்டை விட்டு விட்டார்கள்!). வெற்றி கொண்ட விஷ்ணுவும், துர்க்கையும் ஊருக்கு வட பக்கத்தில் கோயில்களில் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சையில் வட எல்லையிலே உள்ள திருவுடைக் கோடி அம்மனோ துர்க்கையின் அம்சம். தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் வெண்ணாற்றங்கரையிலே நீலமேகப் பெருமாள், மணிகுன்னப் பெருமாள், சிங்கப் பெருமாள் எல்லாம் இடம்பிடித்து அமர்ந்து கொள்கின்றனர்.

வம்புலாம் சோலை மாமதிள்

தஞ்சை மாமணிக்

கோயிலே வணங்கி

நம்பிகாள் உய்ய நான்

கண்டுகொண்டேன்

நாராயணா என்னும் நாமம்

என்று இந்த மாமணிக் கோயிலில் உள்ள மணிவண்ணனை வாயாரப் பாடி மகிழ்ந்திருக்கிறாரே திருமங்கை மன்னன். திருவையாறு செல்லும் வழியில் இவரைத் தரிசித்து வணங்கிக் கொள்ளலாம்.

இப்படி எல்லாம் பிரசித்தி அடைந்தவர்கள் விஷ்ணுவும் துர்க்கையும் என்றாலும் பிராபல்யம் எல்லாம் பெரு உடையார்க்குத்தான். அவருக்குத்தானே பெரிய கோயில். கோயில் என்றால் சைவர்களுக்குச் சிதம்பரமும், வைணவர் களுக்கு ஸ்ரீரங்கமுமே ஆகும். ஆனால் தமிழ் நாட்டில் பெரிய கோயில் என்று மட்டும் குறிப்பிட்டால் அது தஞ்சைப் பெரிய கோயிலைத்தான் குறிக்கும். இனி இந்தக் கோயிலைக் காணப் புறப்படலாம். ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஐந்து, ஆறு பர்லாங்கு தூரத்தில் கோயில் இருக்கிறது. ஆனால் அந்தக் கோயில் விமானம் ரயிலில் வரும்போதே ஐந்தாறு மைல் தொலைவில் தெரியும். கோயிலைச் சுற்றியிருப்பது ஒரு பெரிய அகழி. தளிக்குளத்தில் இருந்த இறைவன் அல்லவா? அதனால் குளத்தைத் தூர்த்தாலும் அகழி வெட்டி வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது அரசனுக்கு. வடபக்கத்தில் அகழி தூர்ந்தே போய்க் கட்டிடங்கள் கிளம்பி விட்டன. கீழ்ப்பக்கம் தூர்ந்துகொண்டு வருகிறது. மேல்புறம் அகழியில் மீன் வளர்க்கிறார்கள். தென்பக்கத்து அகழியைத்தான் புதிதாக வெட்டிய கிராண்ட் அணைக்கட்டு கால்வாய் செல்லும் பாதையாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள் பொதுத்துறைப் பணியாளர்கள்.

ஆதலால் அகழியைக் கடப்பது என்ற பிரச்னை இன்று இல்லை. இக்கோயிலின் முதல் வாயில் எப்போதும் திறந்தே இருக்கும். அடையாத வாயில் அகம் அது. அதற்குக் கதவு கிடையாது. இதனையே கேரளாந்தகன் திருவாசல் என்று அழைத்திருக்கிறான் அரசன். இதனைக் கடந்தே அடுத்த ராஜராஜன் திருவாயிலுக்கு வரவேணும். அந்த வாயிலின் இருபக்கமும் உள்ள கல் சுவர்களில் சிறிய சிறிய சிற்ப வடிவங்கள் இருக்கும். அவை பலப்பல கதைகளை விரிக்கும். அப்படி விரிக்கும் கதைகளில் ஒன்று அன்று இறைவன் கிராத வேடத்தில் வந்து அர்ச்சனனுக்குப் பாசுபதம் வழங்கியது. இந்த வாயிலில் நின்று கோயில் விமானத்தை நிமிர்ந்து நோக்கினால் நமது நெஞ்சு விரியும், நமது சிந்தனை உயர்ந்து ஓங்கும். ராஜராஜன் தன் முழுக்கவனத்தையும் இவ்விமானம் கட்டுவதில் தானே செலவழித்திருக்கிறான், வட இமயத்தினில் ஓர் உத்தரமேரு இருக்கிறது என்றால் தென் தமிழ் நாட்டில் ஒரு தக்ஷிண மேருவை உருவாக்குவேன் என்று சவால் விட்டுக்கொண்டு கட்டிய விமானம் அல்லவா?

கருவறை மேல் 96 அடி சதுரமான அடித்தளத்தின் பேரில் 216 அடி உயரம் விமானம் உயர்ந்திருக்கிறது. இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் இந்த விமானம் உபானம் முதல் ஸ்தூபிவரை கல்லாலேயே கட்டப்பட்டிருப்பதுதான், மலையே இல்லாத தஞ்சை ஜில்லாவிலே முழுக்கக் கல்லாலேயே கோயில், விமானம் எல்லாம் கட்டுவதென்றால் அதற்கு எவ்வளவு துணிவு இருந்திருக்கவேண்டும். இந்த விமானத்தின் உச்சியிலே ஏற்றியிருக்கிறார்கள் இருபத்து ஐந்து அடி சதுரம் உள்ள ஒரு பிரமாந்திரத் தளக்கல்லை, அதன் எடை 'எண்பது டன் என்றும் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தக் கல், அழகி என்ற கிழவி வீட்டுப் பக்கம் இருந்ததாகவும் அதையே சிற்பிகள் நாலு மைல் தூரத்துக்குச் சாரம் கட்டி விமானத்தின் பேரில் ஏற்றினார்கள் என்றும் சொல்கிறார்கள. ஆம். பெருவுடையாரே ஒத்துக் கொண்டிருக்கிறாரே, ராஜராஜன் கட்டிய கோயிலில் இருந்தாலும் கிழவி தந்த நிழலிலே தாம் ஒதுங்கியிருப்பதாக. எந்த ஊரிலிருந்து சாரம் தொடங்கிற்றோ அந்த ஊர் இன்றும் சாரப்பள்ளம் என்று வழங்குகிறதே.

தஞ்சை பெரிய கோயில்

இந்த விமானத்தின் உச்சியில் உள்ள கலசம் பன்னிரண்டு அடி உயரம். 3083 பலம் நிறையுள்ள செம்பினால் ஆயது. இதன் மேல் 2926 கழஞ்சு பொன்பூசிய தகடு, வீரபத்ர ஆச்சாரி கொடுத்த பஞ்ச லோகக் கம்பத்தில் சோழ சிங்காசனாபதி கொடுத்த இந்தக் குடம் இருத்தப்பட்டது என்று அந்தக் குடத்திலே பொறிக்கப்பட்டிருக்கிறதாம். இந்த விமானத்தில் அந்தப் பிரமாந்திரத் தளக்கல்லின் மேலே மூலைக்கு இரண்டு நந்தியாக எட்டு நந்திகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நந்தியின் காத்திரம் என்ன என்று தெரியவேண்டுமானால், கோயிலுக்குத் தென்புறம் உள்ள வெளிப் பிரகாரத்தை அடுத்துள்ள இடத்தில் வைத்திருக்கும் நந்தியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். இன்னும் இந்த விமானத்தில் உள்ள சிற்ப வடிவங்களை யெல்லாம் ஜாபிதா போட்டுச் சொல்லி விட முடியாது. நேரிலே சென்றுதான் பார்க்கவேணும். இனி கோயிலின் திறந்த வெளி முற்றத்தைக் கடக்கலாம். அங்குள்ள சரபேந்திர பூபாலக் குறவஞ்சி மேடையையும் பார்க்கலாம்.

அதன் பின் சில படிகள் ஏறிப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய நந்தியைப் பார்க்கலாம். 12 அடி உயரம், 20 அடி நீம், 8 அடி அகலம், 25 டன் நிறை என்று கணக்கிட்டிருக்கிறார்கள் இதனை. எனக்குள்ள ஆச்சரியமெல்லாம் இத்தனை பெரிய நந்தியைச் செய்ய ஒரே கல் எப்படிக் கிடைத்தது இவர்களுக்கு என்பதுதான். இனி ‘விறு விறு' என்று நடந்து படிக்கட்டுகள் ஏறி மேலே செல்லலாம். மகா மண்டபத்தின் வாயிலில் பதினெட்டு அடி உயரமுள்ள துவார பாலகர்கள் நிற்பார்கள். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து கருவறைக்கு வந்தால் இன்னும் பெரிய வியப்பு. 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையார் பேரில் 23 அடி உயரமுள்ள லிங்கத் திருவுரு கம்பீரமாக இருக்கும். அபிஷேகம், ஆடை, மாலை அணிவித்தல் எல்லாம் பக்கத்தில் அமைத்திருக்கும் படிகள் வழியாக ஏறித்தான் செய்யவேண்டும். இந்த லிங்கம் அமைக்கக் கல், நருமதை நதிக்கரையில் இருந்தே வந்திருக்கிறது. பாணத்தை ஆவுடையாரில் பொருத்தக் கருவூரார் வந்திருக்கிறார்.

பெரு உடையார், பிரஹதீசுவரர் என்று இவருக்குப் பெயர் சூட்டியது எல்லாம் பொருத்தமே என்று காண்போம். கருவறையிலேயே போக சக்தி அம்மன் செப்புச் சிலை வடிவில் இருக்கிற அழகையும் காணலாம்.

இனிக் கோயிலை விட்டு வெளியே வரலாம். வெளியே இருக்கும் பைரவர், மேல்புறம் உள்ள விநாயகர், கருவூரார், சுப்பிரமணியர் சந்நிதியில் எல்லாம் சென்று வணங்கலாம். சுப்பிரமணியர் கோயில் ராஜராஜன் கட்டியது அல்ல. பின்னால் நாயக்க மன்னர்கள் கட்டியிருக்கிறார்கள். நுணுக்க வேலைப்பாடுகள் நிறைந்த எண்ணற்ற சிற்ப வடிவங்கள் அங்கு. அதில் களத்தில் விழுந்துவிட்ட படைத்தலைவனைப் பாசறைக்கு எடுத்துச் செல்லும் யானையின் வடிவம் ஒரே சோக சித்திரம். இதைக் காணாது திரும்பி விட்டால் ஒரு பெரிய புதையலையே இழந்தவர்கள் நீங்கள் என்பேன் நான். இப்படியெல்லாம் சுற்றி விட்டே அம்மன் சந்நிதிக்கு வரவேணும். அங்கு தெற்கு நோக்கிக் கம்பீரமாகப் பத்தடி உயரத்தில் பெரியநாயகி நிற்பாள். இந்தச் சந்நிதிகூட நாயக்க மன்னர்கள் காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேணும்.

இந்தப் பெரிய நாயகியை வணங்கிய பின், இந்தக் கோயிலுக்குத் தென்பக்க்ததிலுள்ள நடராஜர் சந்நிதிக்கு வரலாம். அங்கு மேடை மீது செப்புச்சிலை வடிவில் நடராஜரும் சிவகாமியும் நின்று கொண்டிருப்பார்கள். நடராஜர் நேரே நம்மைப் பார்த்து அருள் புரியமாட்டார், அவர் முகத்தைத் திருப்பிக் கடைக் கண்ணால் சிவகாமியையே பார்ப்பார். அவரது அருளை நாம் பெறுவது, அன்னை சிவகாமி மூலம்தானே. இவரையே ஆடவல்லான் என்று அழைத்திருக்கிறான் ராஜராஜன். அளக்கும் கருவிகளுக்கும் ஆடவல்லான் என்ற பெயரைச் சூட்டியதிலிருந்தே அவனுக்கு இந்த ஆடவல்லானிடம் எத்தனை ஈடுபாடு என்று தெரியும்.

இத்தனை பார்த்த பின்னும் அவகாசம் இருந்தால் மேல ராஜவீதி சென்று பங்காரு காமாக்ஷி என்னும் தங்கக் காமாக்ஷியம்னைத் தரிசிக்கலாம். வடக்கு வீதி வழியாய் நகரின் உள்ளே சென்று ராஜகோபால சுவாமியையும் காணலாம். இதற்கெல்லாம் அவகாசம் இல்லாதவர்கள் கூட அரண்மனைக் கட்டிடங்களுக்குச் சென்று அங்கு அந்த ரகுநாத நாயக்கன் கட்டிய சங்கீத மகாலையும், சரபோஜி மன்னன் அமைத்த சரஸ்வதி மகாலையும், சில வருஷங்களுக்கு முன் உருவான கலைக் கூடத்தையும் காணாது திரும்பக் கூடாது. கலைக்கூடத்தில் தமிழ் நாட்டுச் சிற்ப வடிவங்கள் நூற்றுக்கு மேல் பார்க்கலாம். தமிழரது சிற்பச் செல்வம் எப்படிப்பட்டது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

20. ஐயாறப்பன்

இது ‘டெலிவிஷன்' காலம்.' மனிதனது அறிவு வளர்ச்சியின் காரணமாக மனிதனோடு மனிதன் எவ்வளவு தொலை தூரத்தில் இருந்தாலும் தொடர்பு கொள்வதற்கு இன்றைய விஞ்ஞானம் சாதிக்கக் கொடுத்தவை எத்தனை எத்தனையோ? முதல் முதல் சங்கேத ஒலி மூலம் ஓர் இடத்திலிருந்து ஓர் இடத்துக்குச் செய்தி அனுப்ப மனிதன் கற்றுக்கொண்டிருக்கிறான். அதன்பின் மனிதனுக்கு மனிதன் நேரில் பேசுவதுபோல் தொலை தூரத்தில் உள்ள இருவரும் பேசிக்கொள்ள வசதி செய்து கொண்டிருக்கிறான். பின்னர் ஓர் இடத்தில் எழுகின்ற ஒலியைப் பல இடத்தும் கேட்க ஏற்பாடுகள் செய்து அதன் மூலமெல்லாம் இன்னிசையை, தினசரிச் செய்திகளைப் பரப்பத் தெரிந்து கொண்டிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், ஓர் இடத்தில் நடக்கும் காட்சியையே தொலைவில் உள்ளவர்கள் உடனடியாகவே காணுமாறு மின்காந்த அலைகள் மூலம் அனுப்பக் கற்றுக்கொண்டிருக்கிறான். இதனையே இன்று 'டெலிவிஷன்' தொலைக்காட்சி 'காணுதல்' என்று சொல்கிறோம் நாம்.

இந்தத் தொலைக்காட்சி காண இன்றைய விஞ்ஞானிகள் நமக்குத் துணை புரிகிறார்கள். இந்த விஞ்ஞானிகளுக்கு எல்லாம் மேலான விஞ்ஞானி, ஆம்! 'டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' ஆக ஒருவன் அன்றே இருந்திருக்கிறான் நம்மிடையே, அவன் யார்? அவன் காட்டிய டெலிவிஷன் காட்சி என்ன என்று தெரியவேண்டாமா? அதற்குச் சமயக் குரவரில் ஒருவரான அப்பர் வரலாற்றைப் படிக்க வேணும். வரலாறு இது தான். நாவுக்கரசர் பல தலங்களுக்குச் சென்றுவிட்டுக் காளத்தி வந்து சேருகிறார். அவருக்கு ஓர் ஆசை, தென் கயிலையாம் காளத்தியிலிருந்து வட கயிலைக்குச் சென்று அங்கு இறைவனை நேருக்கு நேரே கண்டு வணங்க வேண்டும் என்று. அந்த எண்ணத்தோடேயே தளர்ந்த அந்த வயதில் தம் யாத்திரையைத் தொடங்கியிருக்கிறார். வாரணாசிவரை வந்திருக்கிறார். உடன் வந்த அடியார்களால் அதற்குமேல் தொடர முடியவில்லை. அவர்களையெல்லாம் அங்கே நிறுத்திவிட்டு மேலும் செல்கிறார்.

கைகால் தளர்ந்தாலும், மார்பினால் புரண்டு புரண்டாவது போய்விட வேண்டும் என்றே தொடர்ந்து செல்கிறார். இந்த நிலையில் இறைவன் ஒரு முனிவர் உருவில் வந்து, 'கயிலையை மானிடர் இந்த ஊனக்கண்ணால் காணுதல் இயலாது அப்பனே! ஆதலால் திரும்பிவிடு' என்கிறார். அப்பரோ, 'ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டு அல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என்கிறார். உடனே இறைவன் அவருக்கு இரங்கி, அங்குள்ள பொய்கை ஒன்றைக் காட்டி அதில் முழுகும்படி சொல்கிறார். அப்படியே முழுகியவர் பின் எழுந்தது திருவையாற்றிலுள்ள திருக்குளத்திலேதான். எழுந்தவர் கண்முன் எழுகிறது கயிலை. அங்கு அவர் கண்ட உயிர்கள் எல்லாம் சக்தி சிவமாகவே விளங்குகின்றன. மாதர் பிறைக் கண்ணியானை

மலையான் மகளோடும் பாடி

போதொடு நீர் சுமந்து ஏத்திப்

புகுவார் அவர்பின் புகுவேன்,

யாதும் கவடு படாமல்

ஐயாறு அடைகின்ற போது,

காதல் மடப் பிடியோடும்

களிறு வருவன கண்டேன்;

கண்டேன் அவன் திருப்பாதம்

கண்டறியாதன கண்டேன்.

என்று அவர் கண்ட கயிலாய தரிசனத்தைத்தான் எவ்வளவு எக்களிப்போடு பாடுகிறார்? இப்படித் தூரா தொலைவில் உள்ள கயிலையை ஐயாற்றில் அப்பருக்குக் காட்டிய பெருமகன் ‘டெலிவிஷன் எக்ஸ்பர்ட்' அல்லவா? காட்சியைக் காட்டுவதோடு நிற்கவில்லை. காசிப் பக்கம் பொய்கையில் மூழ்கியவரைக் காவிரிக் கரையில் அல்லவா எழச் செய்திருக்கிறார். இந்த வித்தக விளையாட்டை என்ன என்று உரைப்பது? இப்படித்தான் சிந்தனைகள் எழும் திருவையாறு சென்று அங்கு அப்பர் எழுந்தருளிய திருக்குளத்தையும், அதன் கரையில் கட்டப்பட்டுள்ள தென் கயிலாயம் என்ற கோயிலையும் கண்டால், அந்தத் திருவையாற்றுக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருவையாறு தஞ்சைக்கு வடக்கே ஏழு மைல் தொலைவில் காவிரிக் கரையில் இருக்கிறது, நெடுஞ்சாலைப் பொறியாளர்கள் மைல் கற்களில் ‘திருவையார்' என்று எழுதி வழி காட்டுவார்கள் (அப்பர் கயிலைக் காட்சி கண்ட இடம் இவர்களுக்குத் திரு வைக்காத இடமாகக் காட்சி கொடுக்கிறது. என்ன செய்ய?). ஆங்கிலம் கற்ற தமிழர்களோ அவ்வூரைத் 'திருவாடி' என்று சொல்வதிலே பெருமைப்படுவார்கள். இத்தலம் திரு ஐயாறு என்று அழைக்கப் படுவானேன் என்று அத்தலத்து அன்பர்களைக் கேட்டால், "இது தெரியாதா? தஞ்சையிலிருந்து திருவையாறு வரும்போது வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுட்டி, காவேரி என்று ஐந்து நதிகளைக் கடக்கிறீர்களே அதனால்தான் ஐயாறு என்கிறோம் நாங்கள்” என்பார்கள். சரி, கும்பகோணத்திலிருந்து வரும்போது ஓர் ஆற்றையுமே கடக்கவில்லையே என்றால், அதற்கு அவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது. உண்மையில் ஐயாறு என்றால், அழகிய ஆறாகிய காவிரி, அக்கரையில் உள்ள அழகிய ஊர் என்றுதான் பொருள்.

'செண்டாடு புனற் கன்னி, செழுமணிகள் வந்தலைக்கும் திருவையாறு' என்றுதானே ஞானசம்பந்தர் பாடி மகிழ்கிறார். இந்த ஐயாறை ஐந்து ஆறுகளாக்கி அங்குள்ள இறைவனையும் பஞ்சந்த ஈசுவரர் ஆக்கி அங்குள்ள தீர்த்தமும் ஐந்து என்று கணக்குக் காட்டி, மகிழ்கிறார்கள் மக்கள். இவர்களோடெல்லாம் நாம் விவாதிக்க வேண்டாம். நேரே கோயில் வாயிலிலே போய்ச் சேரலாம். கும்பகோணத்திலிருந்து காரிலோ பஸ்ஸிலோ வந்தால் கோயில் வாயிலிலே வந்து முட்டுவோம். இல்லை, தஞ்சை வழி வந்தால் காவிரியைக் கடந்து கிழக்கு நோக்கி நடந்து அதன் பின் வட பக்கம் திரும்பிக் கோயில் வாயில் வந்து சேரவேணும். காவிரிக் கரையில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் இந்தக் கோயில் ஒன்றையே காவிரிக் கோட்டம் என்று அழைத்திருக்கின்றனர் நமது முன்னோர்.

இங்கு ஐயாறப்பனுக்கும் அவன் துணைவி அறம்வளர்த்தாளுக்கும் கோயில் சமீப காலத்தில் புதுப்பிக்கப்பட்டுச் சிறப்பாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. சுவாமி கோயில் பழைய நிலையிலேயே இருக்கிறது. இரண்டு கோயில் வாயிலையும் இரண்டு பெரிய கோபுரங்கள் அழகு செய்கின்றன. சுவாமி கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். கோபுர வாயிலைக் கடந்து உள்ளே வந்ததும் ஒரு பெரிய வெளிப்பிரகாரம். அந்தப் பிரகாரத்தின் தென் கிழக்கு மூலையிலேதான் சூரிய தீர்த்தம். அதற்கு மேல்புறம் அப்பர்அவர் கண்ட கயிலைக் காட்சியின் ஞாபகமாக ஒரு கோயில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதுவே தக்ஷிண கயிலாயம். இதைக் கட்டியவர் ராஜராஜ சோழன் மனைவியார் பஞ்சவன் மாதேவி. இதை அடுத்தே அப்பர் எழுந்த சமுத்திர தீர்த்தக் குளம் இருக்கிறது. தென் கயிலாயத்தை உருவாக்கியவர்கள் ஓர் உத்தர கயிலாயத்தையும் கட்டி முடிக்க மறக்கவில்லை; அக்கோயில் வடக்குப் பிரகாரத்தில் இருக்கிறது. அதனைக் கட்டியவர் ராஜராஜனது மனைவியார் லோகமாதேவி. அதனால் அதற்கு லோகமாதேவீச்சுரம் என்று பெயர். வெளிப்பிரகாரத்தைச் சுற்றி விட்டு உள்ளே போகுமுன் தெற்கு வாயிலில் உள்ள ஆட்கொண்டார். சந்நிதிக்குச் செல்ல வேண்டும்.

இந்த ஆட்கொண்டார் காலசம்ஹார அம்சத்தினர். வட நாட்டு அந்தணச் சிறுவனான சுசரிதன் குறைவான ஆயுளை உடையவன். ஆதலால் அவன் யமபயத்தைப் போக்கிக்கொள்ளத் திருவையாறு வந்து பஞ்சாக்கர ஜபம் செய்கிறான். சிவபெருமானே தன் துவாரபாலகர் ஒருவரை அவனுக்குக் காவல் புரியுமாறு கட்டளையிடுகிறார். யார் காவல் இருந்தால் என்ன? குறித்த காலத்தில் யமன் சுசரிதன் உயிரைக் கவர விரைகிறான், சிவபெருமான் எழுந்தருளி யமனை மிதித்து மாய்த்துச் சுசரிதனைக் காத்தருள்கிறான், அப்படி எழுந்தருளிய சிவவடிவமே ஆட்கொண்டார். அவர் காலடியிலே யமன் கிடக்கிறான். பின்னர் இறை அருளால் உயிர் பெற்று எழுந்தான் அவன் என்பது புராண வரலாறு, இந்த ஆட்கொண்டார் சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் புகைந்து கொண்டே இருக்கும். நாமும் இவரை வணங்கி யமபயம் நீங்கியபின், பிரதானக் கோயிலுக்குள் நுழையலாம்.

'கோயிலில் உள்ள மண்டபங்களை யெல்லாம் கடந்து கருவறை சென்று ஐயாறப்பனை முதலில் தரிசிக்கலாம். இங்குள்ள லிங்கத் திருஉரு சுயம்பு மூர்த்தி. 'திருவையாறு அகலாத செம்பொற் சோதி' என்றே திருமுறைகளில் குறிக்கப்படுகிறார். புராணங்கள் இவரைக் கைலாச நாதர் பிரணதார்த்தி ஹரர் என்று போற்றுகின்றன. இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள்,

ஓதியாரும் அறிவார் இல்லை, ஓதி உலகெல்லாம்

சோதியாய் நிறைந்தான் கடர் சோதியுள் சோதியான்!

வேதி யாகி, விண்ணாகி மண்ணோடு எரிகாற்றுமாய்

ஆதி யாகி நின்றாளும் ஐயாறுடை ஐயனே!

என்பது சம்பந்தர் தேவாரம். சுந்தரர் தம் தோழர் சேரமான் பெருமாள் நாயனாரோடே இத்தலத்துக்கு வந்திருக்கிறார். காவிரியில் அப்போது பெரு வெள்ளம். காவிரியின் தென் கரையில் நின்று,

கங்கை சடைமேல் கரந்தானே!

கலைமான் மறியும் கனல் மழுவும்

தங்கும் திரைக் காவிரிக் கோட்டத்து

ஐயாறுடைய அடிகளோ?

என்று கூவி அழைத்திருக்கிறார். இந்த ஓலத்துக்கு எதிர் ஓலம் கொடுத்திருக்கிறார், இந்தக் கோயிலில் உள்ள விநாயகர். இவரே, ஓலமிட்ட விநாயகர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். காவிரியும் வழி விட்டிருக்கிறது. அதன்பின் சுந்தரரும் சேரமானும் வந்து வணங்கித் திரும்பியிருக்கிறார்கள். நாமோ இன்று காவிரிப் பாலத்தைக் கடந்து ஓலமொன்றும் இடாமலேயே வந்து ஐயாறு அடிகளைக் கண்டு திரும்பும் வாய்ப்புப் பெறுகிறோம்.

இந்த ஐயாறப்பன் நல்ல சைவன், இவனையே மணிவாசகர், 'ஐயாறதனில் சைவனாயினன்' என்கிறார். சிவபெருமானே சைவனாவது வேடிக்கைதான். இதன் வரலாறு தெரியவேண்டாமா? இந்தக் கோயிலில் பூசை

அப்பர் கண்ட கயிலைக் காட்சி

செய்து வந்த இருபத்து நான்கு ஆதிசைவரில் ஒருவர் காசியாத்திரை செல்கிறார். நீண்ட நாட்களாக அவர் திரும்பாததால் அவருடைய உரிமை, காணி முதலியவற்றைத் தாயாதிகள் கவர்ந்து கொள்ளுகின்றனர். இந்த நிலையில் இறைவனே அந்த ஆதிசைவர் வடிவில் வந்து தன் உரிமைகளை நிலை நாட்டுகிறான், இந்தச் சமயத்தில் காசி சென்ற ஆதி சைவரும் திரும்புகிறார். இந்த இருவரில் எவர் உண்மையான சைவர் என்று அறிய முடியவில்லை. வழக்கு நடக்கிறது. உண்மையான அந்தணரே வெற்றி பெறுகிறார். ஆதிசைவராக வந்த இறைவன் தம் உண்மை வடிவைக் காட்டி மறைகிறார்.

இந்த வரலாற்றை நினைந்தே ஐயாறதனில் இறைவன் சைவனாகிய பண்பைப் பாடிப்பரவுகிறார் மணிவாசகர், இத்தலத்தில் வழிபட்டு, அகத்தியர் தாம் விரும்பியபடி குறுகிய வடிவைப் பெற்றிருக்கிறார். இந்த ஐயாறப்பனை வணங்கி விட்டு முதல் திருச்சுற்று மாளிகையில் நடந்தால் அங்குள்ள தக்ஷிணாமூர்த்தியைக் கண்டு தொழலாம். இவர் கபாலமும் சூலமும் ஏந்திய கையராய் இருப்பார். இவர் திருவடிக் கீழ் ஆமை ஒன்றும் இருக்கும். ஒருமையுள் ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்கியே குருமூர்த்தமாக எழுந்தருளவேணும் என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்குகிறார் போலும். இந்தச் சுற்றில் இவரைத் தரிசித்து விட்டுச் சென்ற வழியே திரும்பிவிட வேண்டும். இவரைக் கடந்து செல்லலாகாது என்பது அங்குள்ள ஐதீகம். அடுத்த சுற்றிலேதான் மேலப்பிரகாரத்திலே தனுஷ் சுப்பிரமணியர் கருவறைக்கு நேர் மேற்கே, கிழக்கு நோக்கி நிற்பார். இதற்கு அடுத்த சுற்றிலேதான் சோமாஸ்கந்தருக்குத் தனிச் சந்நிதி.

இனி, இந்த ஐயாறப்பர் கோயிலை விட்டு வெளி வந்து வடக்கு நோக்கி நடந்து, அறம் வளர்த்தாள் கோயிலுக்குச் செல்லலாம். இவளையே தர்ம சம்வர்த்தனி என்று நீட்டி முழக்கி அழைக்கிறார்கள். வடமொழிப் பெயரில் மோகம் கொண்டவர்கள். இந்த அம்பிகைக்கு ஒரு பரீக்ஷை வைத்திருக்கிறார் இறைவன், இறைவன் இரண்டு படி அரிசியை அளந்து கொடுத்து உலகில் உள்ள மக்கள் பசியை எல்லாம் போக்கச் சொல்லியிருக்கிறார். அம்மையுைம் அதைப் பெற்று முப்பத்திரண்டு தருமங்களைக் குறைவற முடித்திருக்கிறாள். இதனாலேயே அறம்வளர்த்தாள் என்ற பெயரும் பெற்றிருக்கிறாள். அம்பிகை அழகொழுகும் வடிவத்தில் நிற்கிறாள். அவளையுமே கண்டு தரிசித்து விட்டுத் திரும்பலாம்.

இத்தலத்தில் சிறப்பான திருவிழா-சப்தஸ்தானமே. சித்திரா பௌர்ணமி அன்று இந்தத் திருவிழா நடக்கும். ஐயாறப்பர், அறம் வளர்த்தாளுடனும், நந்தியம் பெருமான் சுயம்பிரகாச அம்மையுடனும் எழுந்தருளிய, பழனம், சோற்றுத்துறை, வேதிக்கூடி, கண்டியூர், பூந்துருத்தி, நெய்த்தானம் என்னும் ஆறு தலங்களிலும் உபசாரங்கள் பெற்று, மறுநாள் காலை திருவையாற்றுக்குத் திரும்புவர். இந்த ஏழூர் விழாவிலே மக்கள்கலந்து கொண்டு மூர்த்திகளின் பின்னாலேயே நடந்து செல்வர். வழியெல்லாம் தண்ணீர்ப் பந்தலாக இருக்கும். உண்பதற்கு உணவும், குடிப்பதற்கு இளநீரும் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும். இந்த சப்தஸ்தான க்ஷேத்திரங்கள் எல்லாமே பாடல் பெற்றவை. இவற்றில் கண்டியூர் அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்று. பூந்துருத்தியில், அப்பர் மடம் கட்டிச் சில காலம் இருந்து வாழ்ந்திருக்கிறார்.

பூந்துருத்தி, பூந்துருத்தி என்பீராகில்

பொல்லாத புலால் துருத்திப் போக்கலாமே.

என்று நமக்குச் சொல்லி விட்டும் சென்றிருக்கிறார். இந்த ஏழூர் விழாவிலே கலந்து கொள்வதே ஒரு புதிய அனுபவம். ஐயாறப்பர் கோயில் ஆதியில் சூரிய வம்சத்து அரசன் பிரியவரதனால் கட்டப்பட்டது. பின்னர் கரிகால் பெருவளத்தான், வேங்கிநாட்டு விமலாதித்தன், விக்கிரம சோழன், இவர்களுக்குப் பின் வந்த நாயக்க மன்னர், மராத்திய மன்னன் சரபோஜி எல்லாம் திருப்பணி செய்திருக்கிறார்கள். இன்று இந்தக் கோயில் தருமபுர ஆதீனத்தார் ஆளுகையின் கீழ் இருக்கிறது. திருவாரூரிலே பிறந்த கர்நாடக சங்கீத பாஸ்கரர் தியாகையர், அவரது கடைசிக் காலத்தில் இத்தலத்தில் வந்து தங்கி இங்கேயே சமாதி கொண்டிருக்கிறார். அவரது சந்நிதியிலே தை மாதம் பகுள பஞ்சமியிலே தியாக ராஜ உத்சவம் நடப்பது உலகம் அறிந்ததாயிற்றே. ஆதலால் அவரது கோயிலுக்கும் சென்று வணக்கம் செலுத்திவிட்டே திரும்புங்கள் என்று நான் சொல்ல வேண்டுமா, என்ன?

21. மழபாடி மாணிக்கம்

உலகத்தில் நமக்குக் கிடைக்கும் மணிகளில் எல்லாம் மிக்க உறுதியானது, மிக்க ஒளி உடையது வைரம் என்பதை அறிவோம். இது காரணமாகவே அதன் மதிப்புமே உயர்ந்திருக்கிறது. வைரக் கம்மல்கள் அணிந்த பெண்ணுக்கும் வைர மோதிரம் அணிந்த ஆணுக்கும் சமுதாயத்திலே ஒரு மதிப்பு இருக்கிறதே. இந்த வைரத்தையே வஜ்ரம் என்றும் கூறுவார்கள். இந்த வைரம் எப்படி உருவாகிறது என்று தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பின் மேல் மரங்கள் அடர்ந்த காடுகள் இருந்திருக்கின்றன. பலவகையான இயற்கை மாற்றத்தால் இம்மரங்கள் நிலத்துக்குள் புதைந்திருக்கின்றன. கணக்கற்ற ஆண்டுகள் இப்படிப் புதைந்து கிடந்தமையால் அவை மிகச் செறிவு பெற்று நிலக்கரிப் பாறைகளாக உறைந்திருக்கின்றன.

மேலும் மேலும் மண்ணும் கல்லும் அந்தப் பாறைகளை அழுத்த உள்ளேயிருந்து வெப்பமும் தாக்க, இந்த அழுத்தம் காரணமாகக் கரிப்பாறைகள் வைரமணிப் பாறைகள் ஆகியிருக்கின்றன. இப்படிக் கரியானது அளவுக்கு மிஞ்சிய அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் உள்ளாகும்போது தான் வைரமாகிறது என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். இத்தனை அழுத்தம் காரணமாகப் பிறப்பதினால்தான் அத்தனை வலிவுடனும் வைரம் இருக்கிறது. உறுதியான உள்ளம் படைத்தவர்களை வைர நெஞ்சு உடையவர்கள் என்று கூறுகிறோம்; பாராட்டுகிறோம். பாரதி பாடினானே நம் நாட்டுப் பாப்பாக்களைப் பார்த்து :

உயிர்களிடத்து அன்புவேணும் - தெய்வம்

உண்மை என்று தானறிதல் வேணும்

வயிரமுடைய நெஞ்சு வேணும் -- இது

வாழும் முறைமையடி பாப்பா

என்று. மனிதர்களில் வைரமுடைய நெஞ்சு படைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அஞ்சி அஞ்சிச் சாகும் மனிதர்கள் தானே இங்கு அதிகம். ஆனால் அந்த மனிதர்களையெல்லாம் காக்கும் இறைவன் நல்ல திடமான வைர நெஞ்சு படைத்தவனாக இருந்திருக்கிறான். எது வந்தாலும் அசையாது அஞ்சாது நிற்கும் இயல்புடையவனாக இருந்தால் தானே, அவன் உலகு, உயிர் அனைத்தையும் காத்தல் கூடும். அப்படி இருப்பவனையே வைரத்தூண் என்போம். அப்படியே அழைத்திருக்கிறார்கள். ஒரு தலத்தில் உள்ள இறைவனை. அந்தத் தலத்து இறைவன் பெயரே வஜ்ரஸ்தம்பேசுரர். அவரையே அருள் மிக அப்பர் அடிகள், ‘மறை நான்கும் ஓலமிட்டு வரம் ஏற்கும் மழபாடி வயிரத் தூணே' என்று மனமுருகிப் பாடுகிறார். இவர் எப்படி வைரத் தூண். ஆனார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரம்ம லோகத்திலிருந்து சிவலிங்கத்தைப் புருஷா மிருகம் எடுத்து வந்து கொள்ளிடக் கரையில் பிரதிஷ்டை செய்து விடுகிறது. பிரம்மாவோ தான்பூஜித்த லிங்கத்தை தேடி அங்கு அதைப் பெயர்த்து மீண்டும் தன் உலகத்துக்கு எடுத்துப் போக விரும்பியிருக்கிறார். இறைவனோ அசையாது ஆடாது வைரத்தூணாக, வஜ்ர ஸ்தம்பமாக நின்றிருக்கிறார். பிரமன் அவரை அப்படியே விட்டு விட்டே திரும்பியிருக்கிறான். லிங்க வடிவில் பிரம்ம லோகத்திலிருந்து வந்தவர் எப்படி வைரத்தூணாக மாறினார்? கற்ப கோடி காலங்களாகப் பக்தர்கள் அன்பென்னும் பூமியில் அல்லவா புதைந்திருக்கிறார். தேவர் ஒரு புறமும் மக்கள் ஒரு புறமும் இருந்து அழுத்த அழுத்த, அவர் வைரமாக - வைரத்தூணாக மாறியதில் வியப்பில்லை தானே. இந்த வஜ்ரஸ்தம்பேசுரர் கோயில் கொண்டிருக்கும் தலம்தான் திருமழபாடி. அந்த மழபாடிக்கே செல்கிறோம் நாம் இன்று.

திருமழபாடி, திருச்சி ஜில்லாவில் கொள்ளிடக்கரையில் உள்ள ஊர். இதற்குச் செல்வதற்குத் தலயாத்திரிகர்களை வழிகேட்டால், திருவையாற்றிலிருந்து ஒரு மைல் மேற்கே போய்த் தில்லைஸ்தானம் என்று இன்று வழங்கும் நெய்த்தானத்து நெய்யாடி அப்பரையும் பாலாம்பிகையும் தரிசித்துவிட்டு வடக்கே திரும்பி இரண்டு மைல் நடந்து கொள்ளிட நதியையும் கடந்தால் சென்று சேரலாம் என்பர். இது எல்லாம் நல்ல பங்குனி சித்திரை மாதம் கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாத காலத்துக்குச் சரி. ஆற்றிலே தண்ணீர் இருந்தால் இந்த வழி எல்லாம் சரிப்பட்டு வராது. நேரே திருச்சி விருத்தாசலம் ரயில் பாதையில் புள்ளம்பாடி ஸ்டேஷனில் இறங்கிக் கிழக்கு நோக்கிப் பன்னிரண்டு மைல் நடந்தோ வண்டியிலோ போகவேணும்.

இதைவிடச் சுளுவான வழி, திருச்சியிலேயே பஸ் ஏறி லால்குடி, பூவாளூர், புள்ளம் பாடி வழியாகக் கிட்டத்தட்ட முப்பது மைல் போக வேணும். சொந்தக் கார் உள்ள மகாராஜாக்கள் 'ஜம்' என்று காரிலேயே போய்ச் சேரலாம். கோயில் வாயிலிலே கொள்ளிட நதி ஓடும். அதுவும் அங்கு வடக்கு நோக்கியே ஓடும். 'ஓ! அப்படியானால் அது உத்தர வாஹினியாயிற்றே. அங்கு ஸ்நானம் செய்வது எவ்வளவோ புண்ணியத்தைத் தருமே' என்று நினைத்து முதலிலே நதியில் இறங்கி நன்றாக நீராடுங்கள். அங்கு எப்போதுமே குளிக்கும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்குமாம். இப்படிக் கொள்ளிடத்தில் நீராடி விட்டுக் கரையேறிக் கோயிலுக்குள் செல்லலாம். கோயில் வாயிலை ஒரு பெரிய கோபுரம் அழகு செய்கிறது. ஆற்றிலே நீர் நிறைந்து போனால் கோயிலுக்குள்ளேயே தண்ணீர் வந்து விடும். அப்படித் தாழ்ந்தே இருக்கிறது வாயில். கோயிலுள் செல்லுமுன் இத்தலத்துக்கு எப்படி மழபாடி என்ற பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளலாம். சேரர் மரபில் ஒரு கிளையினர் மழவர், அந்த மழவர்கள் தங்கியிருந்த இடம் மழபாடி என்று ஆகியிருக்கிறது. நமக்குத்தான் அந்த மழவர் மகள் செம்பியன் மாதேவி முன்னமேயே நன்கு அறிமுகம் ஆனவள் ஆயிற்றே.

இது தவிர இத்தலத்தில் இறைவன் மழு ஏந்தி நர்த்தனம் செய்திருக்கிறார். அதனால் மழு ஆடி என்று பெயர் பெற்று மழபாடி ஆயிற்று என்றும் கூறுவர். இதற்கேற்ப மழு ஏந்தி இறைவன் திருத்தம் செய்யும் கற்சிலை ஒன்றும் கோயிலுள் இருப்பதைப் பார்க்கிறோம். கோயில் நல்ல பெரிய கோயில், பெரிய பிரகாரங்களையுடையது. வெளிப்பிரகாரத்தில் காணவேண்டியவை சிறப்பாக ஒன்றும் இல்லை. ஆதலால் இடை நிலைக் கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லலாம். மகா மண்டபம், அர்த்த மண்டபம் எல்லாம் கடந்து சென்றால் இறைவன் திருமுன்பு வந்து நிற்போம். வைரத்தூண் என்று பெயர் தாங்கியவர் ஆயிற்றே என்று அவர் மேனியில் வைர ஒளியை எதிர்பார்த்தல் கூடாது. வஜ்ரஸ்தம்பேசுரர் என்பதனால் பெரியஸ்தம்பம் போலும் இருக்கமாட்டார். நல்ல காத்திரமில்லாத வடிவில் லிங்கத் திருஉருவாக அவர் இருப்பார். இத்தலத்துக்குச் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள்.

அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு

அமுதாய் உண்டு அமரர்கள் தம்

தலைகாத்து ஐயர், செம்பொன் சிலை எடுத்து மாநாக நெருப்புக்

கோத்து திரிபுரங்கள் தீயிட்ட

செல்வர் போலும்!

நிலை அடுத்த பகம் பொன்னால்

முத்தால் நீண்ட நிரை வயிரப்

பலகையால் குவையார்த்து உற்ற

மலை யடுத்த மழபாடி

வயிரத்தூணே! என்றென்றே

நான் அரற்றி நைகின்றேனே

என்பது அப்பர் தேவாரம். சுந்தரரோ, திருவையாறு வந்தவர், ஆலம்பொழில் வரை சென்று அங்கு இரவு தங்கியிருக்கிறார். அவருக்கு மழபாடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்போது இருக்கவில்லை. மழபாடி இறைவனுக்கோ சுந்தரரை அப்படி எளிதாக விட்டுவிட விருப்பமில்லை. அவரிடம் பாடல் பெறும் வாய்ப்பை இழந்து விடுவோமோ என்று எண்ணியிருக்கிறார். ஆதனால் சுந்தரர் கனவில் தோன்றி, 'என்னை மறந்தனையோ?' என்று கேட்டிருக்கிறார். அதனால் சுந்தரர் கொள்ளிடத்தைக் - கடந்து இங்கு வந்திருக்கிறார். பாடிப் பரவியிருக்கிறார். அவருடைய,

பொன்னார் மேனியனே! புலித்

தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

மிளிர் கொன்றை அணிந்தவனே!

மன்னே மாமணியே!

மழபாடியுள் மாணிக்கமே!

அன்னே உன்னை யல்லால்

இனி ஆரை நினைக்கேனே!

என்று தொடங்கும் பதிகம்தான் பிரபலமானதாயிற்றே. வயிரத்தூணாக இருந்த இறைவன் சுந்தரருக்குச் செக்கச் சிவந்த மாணிக்கமாக அல்லவா காட்சி கொடுத்திருக்கிறார். இன்னும் அந்தப் பொன்னார் மேனியன் பாட்டை நினைவு படுத்திக் கொண்டு, மழபாடி பக்கத்திலேயே பொன்னார் மேனி விளாகம் என்று ஒரு சிறு ஊரும் இருக்கிறதே.

இந்த மழபாடி மாணிக்கம் சிறந்த வரப்பிரசாதியாகவும் இருந்திருக்கிறார், வேத வியாசரது வாதநோய் இத்தலத்துக்கு அவர் வந்து வணங்கிய பின்தான் தீர்ந்திருக்கிறது. கோயில் பலி பீடத்தில் வைத்திருந்த உணவை ஒரு கழுகு வந்து சாப்பிட யத்தனிக்கையில் அதை ஒரு வேடன் அம்பெய்து வீழ்த்த அந்தக் கழுகுக்கு இரங்கி, அதற்கு மோக்ஷ பதவியையே அளித்திருக்கிறார். அந்தக் கழுகின் பரம்பரையில் வந்த கழுகு ஒன்று இன்றும் கோயில் கோபுரத்திலே வசித்து வருகிறது என்கிறார்கள். சந்திரனைப் பற்றியும் ஒரு கதை உண்டு.

அவனுக்கோ அசுவினி முதலிய இருபத்து ஏழு மனைவியர். இவர்களில் அவனுடைய காதலெல்லாம் ரோகிணியிடமே. இந்தப் பாரபக்ஷம் காட்டியதற்காக அவனது மாமனாரான தக்ஷன், அவன் கலை தேயச் சாபமிட்டிருக்கிறான். தேய்ந்த கலை வளர அருள் புரிந்தவர் இந்த மழபாடி மாணிக்கமே என்பது புராணக் கதை. அதனால் இவர் வைத்தியநாதர் என்ற பெயரையுமே ஏற்றிருக்கிறார். இத்தனை விவரங்களையும் இறைவன் சந்நிதிமுன் நின்றே தெரிந்து கொள்ளலாம். அதன்பின் திருவுண்ணாழிச் சுற்றைச் சுற்றப்புறப்பட்டால் அங்குதான் மழு ஏந்தி நடனம் செய்த இறைவனை ஒரு தாழ்ந்த மாடத்தில் பார்ப்போம். அதனை அடுத்தே செப்புச் சிலை வடிவில் சோமாஸ்கந்தரது வடிவம் ஒரு சிறு கோயிலுள் இருக்கும். கற்சிலையாகச் சோமாஸ்கந்தரை எல்லா இடத்தும் காணுதல் இயலாது.

இந்தத் தலத்தில் இவர் விசேஷமானவர், இந்த மூர்த்திகளையெல்லாம் வணங்கியபின் வெளியே வந்துதான் வடபக்கம் தனிக் கோயிலில் இருக்கும் அன்னை அழகம்மையைக் காணவேண்டும். அழகம்மையின் வடிவம் அழகானது என்பதைத் தவிர, சிறப்பாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இத்தலத்தின் சிறப்பான திருவிழா பங்குனி மாதத்தில் நடக்கும் நந்தியம் பெருமானின் திருமண விழாதான். நந்தி என்றால் கோயில் வாயிலில் இறைவனை நோக்கிப் படுத்துக் கிடக்கும் காளை என்றுதானே தெரியும் நமக்கு. அந்த நந்தி மனித வடிவம் தாங்கி இறைவனது அம்சமான திரிநேத்திரம், மழு, மான் ஏந்திய நான்கு கரங்களோடு சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவராய்ப் பதவி பெற்று, முதல் திருவாயிலிலேயே இருந்து காக்கும் உரிமையையும், சைவ ஆச்சாரியருள் முதல் குருவாக இருக்கும் தன்மையையும் பெற்று அதிகார நந்தி என்ற பெயரோடு விளங்குகிறார் என்பதை நம்மில் பலர் அறியமாட்டோம். சிலாத முனிவரின் மகனாகப் பிறந்து செபேசுரர் என்ற திருமநாமத்தோடு வாழ்ந்து, அரிய தவம் செய்து இறைவனது அருளைப் பூரணமாகப் பெற்று, பின்னர் வசிஷ்டரது பௌத்திரியும் வியாக்கிரபாதருடைய புத்திரியும், உபமன்யரது தங்கையுமான சுயம்பிரபையை மணந்திருக்கிறார்.

இவரே சிவ கணங்களுக்கு எல்லாம் தலைவரான அதிகார நந்திதேவர். இவரது திருமணம் சிறப்பாக நடந்தது. இந்த மழபாடியில்தான். இங்குதானே மணப்பெண்ணான சுயம்பிரபை பிறந்து வளர்ந்து இவருக்கெனக் காத்திருக்கிறாள். இந்தத் திருமணத்துக்கு மணமகனையும் அழைத்துக் கொண்டு ஐயாறப்பரும் அறம் வளர்த்தாளும் வந்திருக்கிறார்கள். இந்த மணமக்களை அழைத்துக் கொண்டே. ஐயாறப்பர் ஏழூர் காணப் புறப்பட்டிருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்தது இத் தலம். இக்கோயிலின் சரித்திர ஏடுகள் மிக மிக விரிவானவை. மொத்தம் முப்பது கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருக்கின்றன. மதுரை கொண்ட கோப்பர கேசரி வர்மன் என்னும் முதல் பராந்தக சோழன் காலம் முதல், மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், ஹொய்சல மன்னர்கள், விஜயநகர வேந்தர்கள் காலம்வரை இந்தக் கோயிலில் பல பகுதிகள் கட்டப்பட்டிருக்கின்றன. பல நிபந்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. திருவிசைப்பா பாடிய கண்டராதித்த சோழர், ராஜராஜன் முதலியோர் காலத்தில் இக்கோயில் பலவகையாலும் விரிவடைந்திருக்கிறது. மழபாடி பக்கத்திலேயே கண்டாரதித்த சதுர்வேதி மங்கலம் என்று ஓர் ஊர் இருக்கிறது. அதுவே இன்று கண்டராச்சியம் என வழங்குகிறது. கண்டராதித்தரது மனைவியின் திருப் பெயரால் செம்பியன் மாதேவிப் பேரேரி ஒன்றும் வெட்டப்பட்டிருக்கிறது. இந்த அம்மையின் மற்றொரு பெயரான குலமாணிக்கம் என்றே ஒரு வாய்க்காலுக்குப் பெயரிடப்பட்டிருக்கிறது. சோழர் ஹொய்சலர் சரித்திர ஆராய்ச்சியாளருக்கு இந்தக் கோயில் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அனந்தம்.

நேரமும் வசதியும் உடையவர்கள் மழபாடியிலிருந்து வடக்கே பத்து மைல்கள் சென்றால் பழுவூர் செல்லலாம். பொன்னியின் செல்வன் நவீனம் மூலம் நமக்கெல்லாம் அறிமுகமான பழுவேட்டரையது ஊர் அது. பரசுராமர், தாயாம் ரேணுகையைத் தந்தையின் கட்டளைப்படி கொன்றார் என்பதும், அந்தப் பழியை இங்குள்ள வடமூல நாதரை வணங்கித் தீர்த்துக்கொண்டார் என்பதும் புராண வரலாறு. நமது பழிகளும் நம்மை விட்டு நீங்க இப்பழுவூர் சென்று வடமூல நாதர் அருந்தவ நாயகி இருவரையும் வணங்கலாம். திருச்சிக்குத் திரும்பும்போது வழியில் உள்ள அன்பில் ஆலந் துறையார், சுந்தரராஜப் பெருமாள், லால்குடியிலுள்ள திருத்தவத் துறையார் முதலியவர்களையும் வணங்கி விட்டே திரும்பலாம். இதற்கெல்லாம் வசதி செய்துகொள்ள வேண்டுமானால் சொந்தக் காரிலே தான் தலயாத்திரை தொடங்க வேண்டும் என்பது மட்டும் ஞாபகம் இருக்கட்டும்.

22. தென்னரங்கத்து இன்னமுதன்

இலங்கை ஓர் அழகான தீவு. இந்தியத் தாயின் கழுத்தில் அணியும் நித்திலப் பதக்கம்போல் அமைந்த தீவு. ஆகவே அதனை நித்திலத் தீவு என்றனர் கவிஞர்கள். நாற்புறமும் கடல் சூழ்ந்து நடுவே மலைச்சிகரம் உயர்ந்து எங்கும் பசுமை கொழித்துக் கொண்டிருக்கும் நாடு அது. காடெல்லாம் பசுமை, மலை எல்லாம் பசுமை, காணும் வயலெல்லாம் பசுமை என்னும்படி தென்னை, கமுகு, வாழை நிறைந்திருப்பதுடன் மலைச் சிகரங்களையெல்லாம் தேயிலைச் செடிகள் வேறே மூடிக் கொண்டிருக்கும், அந்த நாட்டில் கருமையே இல்லை. வானுலாவும் கார்மேகங்களையும், தெருக்களிலே பறந்து செல்லும் மோட்டார் கார்களையும் தவிர வேறு கருமையை அங்கு காண்பதே அரிது. இப்படி வளம் கொழிக்கும் இலங்கையில், சைவம் என்றும் நிலைபெற்று நின்றிருக்கிறது. பௌத்தம் வந்து சேர்ந்திருக்கிறது.

ஆனால் இந்த வைணவம் மட்டும் அங்கு சென்று சேரவில்லை. அந்த மகாவிஷ்ணுவே அங்கு செல்ல மறுத்திருக்கிறார். 'பாஸ்போர்ட்', 'விசா' எல்லாம் கிடைக்கவில்லையோ என்னவோ? விஷ்ணு அங்கு செல்ல மறுத்த காரணம் தெரிய நாம் பழைய இதிகாச காலத்துக்கே செல்ல வேண்டும். இலங்கையில் மலைமேல் கோட்டை கட்டிக்கொண்டு வாழ்ந்திருக்கிறான் இராவணன். அவன் அயோத்தி ராமனின் மனைவி சீதையை எடுத்துச்சென்று அசோக வனத்தில் சிறை வைத்திருக்கிறான். சிறையிலிருந்து செல்வியை மீட்க ராமன்படை திரட்டிக் கொண்டு இலங்கைக்கே சென்றிருக்கிறான்.

ராவணன் தம்பி விபீஷணன் ராமனுடன் சேர்ந்து அவன் வெற்றி பெற உதவியிருக்கிறான். ராவணன் வதம் முடித்துத் திரும்பும்போது, இலங்கையையே விபீஷணனுக்குத் தந்து அவனுக்கு அங்கே முடிசூட்டியிருக்கிறான். பின் தம் துணைவியாம் சீதையுடன் அயோத்தி திரும்பித் தானும் பட்டாபிஷேகம் செய்து கொண்டிருக்கிறான் ராமன், இந்தப் பட்டாபிஷேக விழாவுக்கு வந்த விபீஷணனுக்குப் பரிசாகத் தான் ஆராதித்து வந்த அரங்கநாதனையே கொடுத்திருக்கிறான். அரங்கனோடு கூடிய விமானத்தையே எடுத்துச் சென்ற விபீஷணன் காவிரிக்கரை சேர்ந்ததும் அங்கு நீராட எண்ணி விமானத்தை அங்கே இறக்கியிருக்கிறான். அவ்வளவுதான்; நீராடி விட்டு விபீஷணன் விமானத்தை எடுத்தால் அவனால் எடுக்க முடியவில்லை. அரங்கனும் இந்த இடத்தை விட்டுக்கிளம்ப மறுத்து விடுகிறான். விபீஷணன் ஏமாற்றத்தோடு, வெறுங்கையனாகவே இலங்கைக்குத் திரும்பியிருக்கிறான். என்றாலும் விபீஷணன் வேண்டிக் கொண்டபடி இலங்கையை நோக்கிய வண்ணமாகவே காவிரிக் கரையில் சயனித்துவிடுகிறான் அரங்கன்.

குடதிசை முடியை வைத்து,

குணதிசை பாதம் நீட்டி,

வடதிசை பின்பு காட்டி,

தென்திசை இலங்கை நோக்கி

அரவணையில் துயில்பவனாகத்தானே இன்னும் காட்சி கொடுக்கிறான் அரங்கநாதன். அந்த அரங்கநாதனைக் காணவே ஸ்ரீரங்கம் செல்கிறோம் நாம் இன்று. அரங்கன் கோயிலுக்குச் செல்ல வழி ஒன்றும் சொல்ல வேண்டாம். ‘பணியரங்கப் பெரும்பாயல் பரஞ்சுடரையாம் காண, அணியரங்கம் தந்தானை அறியாதார்' என்று ஆயிரம் வருஷ அறியாதார்க்கு முன்பே பாடி வைத்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன். அவனைத் தென் தமிழ் நாட்டினர் மாத்திரம் அல்ல மற்ற வடநாட்டினருமே நன்கு அறிவார்கள். திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி மேற்கு நோக்கி நான்கு பர்லாங்கு நடந்தால் கோயில் வாயில் வந்து சேரலாம். இது தவறு. கோயிலின் பிரதான வாயிலுக்கு வருமுன் கோயிலைச் சுற்றிக் கட்டியுள்ள மதில்களையெல்லாம் கடக்கவேணுமே. மதில் முக்கால் மைல் சதுர விஸ்தீரணத்தை நிறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழாவது மதில் சுவரின் நீளம் 3072 அடி; அகலம் 2521 அடி என்றால் கோயில் எவ்வளவு பெரியது என்று தெரியுமல்லவா? சப்த லோகங்களுமே இக் கோயிலின் சப்த பிரகாரங்களாக அமைந்திருக்கின்றன என்பர்.

இங்கு இந்த மதில்கள் எழுந்த வரலாறே சுவையானது. அன்று விபீஷணன் கொண்டு வந்த ரங்க விமானமும், ரங்கநாதனுமே காவிரி மணலில் புதைந்து விடுகிறார்கள். காடு மண்டிவிடுகிறது. தர்மவர்மா என்னும் சோழ மன்னன் வேட்டைக்கு வந்தபோது ஒரு கிளி அவன் காதில் அங்கு ரங்க விமானம் புதையுண்டு கிடந்த ரகசியத்தைச் சொல்கிறது. காடு வெட்டி நிலந்திருத்திச் சோழ மன்னன் ரங்கவிமானத்தை வெளிக் கொணர்கிறான். கோயில் கோபுரம், விமானம், மண்டபம் எல்லாம் கட்டி அரங்க நாதனை அங்கு கிடத்தி வைக்கிறான். கிளி சொன்னதை மறக்காமல் கிளி மண்டபம் ஒன்றையும் கட்டுகிறான். தன் பெயரால் தர்மவர்மா பிரதக்ஷிணம் ஒன்றையும் எழுப்புகிறான். இவன்றன்பின் வந்த மன்னரும் மக்களும் ஒவ்வொரு பிரகாரமாகக் கட்டி முடிக்கிறார்கள். இப்படி எழுந்த பிரதக்ஷிணங்களும் மதில்களும் ஆறு. அவைதாம் ராஜ மகேந்திரன் பிரதக்ஷிணம், குலசேகரன் பிரதக்ஷிணம், ஆலி நாடன் பிரதக்ஷிணம், அகளங்கன் பிரதக்ஷிணம், திரு விக்ரமன் பிரதக்ஷிணம், மாட்ட மாளிகைப் பிரதக்ஷிணம் என்பவை, ஏழு மதில்களையும் ஏழு ஆடைகளாக வனைந்திருக்கிறான் அரங்கநாதன் என்பர். இதனையே அடைய விளைஞ்சான் என்றும் கூறுவர் பாமர் மக்கள். இந்த மதில்கள் எல்லாம் யார் யாரால் எப்போது எப்போது கட்டப்பட்டன என்று விரித்தல் இயலாது. ஒன்று மட்டும் சொல்லாமல் இருக்கவும் முடியாது. இந்தக் கோயிலுக்குப் பெரிய மதிலைக் கட்டியவன் ஆலி நாடனான திருமங்கை மன்னனே. அவனது காதலி குமுதவல்லியின் விருப்பப்படி பரம பாகவதர்களுக்குத் ததியாராதன கைங்கர்யம் செய்வதை மேற்கொள்கிறான்.

தன்கையில் பொருள் இல்லாத போதெல்லாம் வழிப்பறி செய்கிறான். இவனுக்கு அருள் பாலிக்கவே அரங்கனும் அவன்துணைவி ரங்நாயகியும், திருமணத் தம்பதிகளாக வந்து இந்த மங்கை மன்னனாம் கலியன் கையில் சிக்கிக் கொள்கிறார்கள். கலியனும் அந்த ஆடை அணிகளையெல்லாம் கவர்ந்து கொள்கிறான். கவர்ந்த பொருளையெல்லாம் மூட்டையாகக் கட்டியபோது அதை எடுத்துச் செல்ல இயலாதவனாக நின்றிருக்கிறான். அப்படி. எடுக்க இயலாதபடி. செய்த மந்திரம் என்ன என்று கேட்டபோது, மணவாளக் கோலத்தில் வந்த அரங்கன் நாராயணனது அஷ்டாக்ஷர மகா மந்திரத்தையே உபதேசித்திருக்கிறான். இவ்வாறு ஞானோதயம் பெற்ற கலியனே பின்னர் திருப்பதிகள் பலவற்றுக்கும் சென்று பாடிப் பாடி நாராயணனைப் பரவியிருக்கிறான். தேடிச் சேர்த்த பொருளை எல்லாம், அரங்கனுக்கு மதில் கட்டுவதிலேயே செலவழித்திருக்கிறான். இவன் கட்டிய மதிலே ஆலிநாடன் திருமதில் என்ற பெயரோடு நின்று நிலவுகிறது இன்றும்.

ஏழு பிரகாரங்களோடு கூடிய இந்தக் கோயிலுக்கு இருபத்தொரு கோபுரங்கள். அவைகளில் முக்கியமானவை இரண்டு; ஒன்று கீழ்ப்பக்கம் உள்ள வெள்ளைக் கோபுரம்.

விமானம் தென்னரங்கம்

மற்றொன்று தென்பக்கம் உள்ள நான்முகன் கோபுரம். கோயிலுள் நுழையும் பிரதான வாயில் இந்த நான்முகன் கோபுர வாயிலே தென்திசை நோக்கி அரவணையில்துயிலும் அரங்கநாதனைத் தரிசிக்கத் தென் வாயில் வழியாகச் செல்வதுதானே முறை. இந்த வாயில்வரை வண்டியும் காரும் செல்லும். இதற்கும் தெற்கே மண்டபங்கள், முற்றுப் பெறாத கோபுரம் எல்லாம் உண்டு. இனி நாம் நான்முகன் கோயில் வாயிலைக் கடந்து உள்ளே செல்லலாம். அப்போது உங்கள் முன் நிற்பது ரங்க மண்டபம். அதையும் முந்திக்கொண்டு ஒரு நாலுகால் மண்டபம். அதில் முறுக்கு மீசையும் திருகிக் காட்டிய கொண்டையும் உடைய ஒரு பெரியவர் கூப்பிய கையராய் நிற்பார் சிலை உருவில். இவரையே கம்பர் என்பார்கள், அந்த ராமகாதை எழுதிய கபைக் கம்பருக்கும் இந்தச் சிலைக் கம்பருக்கும் யாதொரு ஒற்றுமையும் காண இயலாது. இவர் அந்த ரங்கமண்டபம் கட்டிய நாயக்க மன்னர்களில் ஒருவராக இருக்கலாம்.

ரங்க மண்டபம் - கார்த்திகை மண்டபம் எல்லாம் கடந்துதான் பிரதானக் கோயிலுள் நுழைய வேணும். அங்குள்ள பெரியதொரு மண்டபத்தில் கருடாழ்வார் பெரிய வடிவில்

வெள்ளைக்கோபாம்

அரங்க நாதனைச் சேவித்த வண்ணம் நின்று கொண்டிருப்பார். அவரையும் வணங்கி விட்டு மேல் நடந்தால் அடுத்த கட்டு. அங்கே பொன் போர்த்த கொடி மரம், பலிபீடம் எல்லாம். அவை இரவில் மின்விளக் கொளியில் கண்டால் சோதி மயமாக இருக்கும். இவற்றை யெல்லாம்கடந்துதான் கருவறைப் பக்கம் வரவேணும். இங்குள்ள கருப்பக் கிருஹம் பிரணவாகாரத்தில் அமைந்திருக்கிறது. அந்தக் கருவறையின் பேரில் உள்ள விமானம்தான் ரங்கவிமானம். அந்த விமானத்துக்கே பொன் தகடு வேய்ந்து அதில் பரவாசு தேவனையும் உருவாக்கி நிறுத்தியிருக்கிறார்கள். இந்த விமானமே ஆதியில் விபீஷணன் எடுத்து வந்த விமானம் என்பர். இந்த விமானத்தோடு கூடிய கருவறையிலேயே அரங்கநாதன் அறிதுயில் கொள்ளுகிறான். 'கருது செம்பொனின் அம்பலத்தில் கடவுள் நின்று நடிக்கிறான்' என்று பாடிய கவிஞன், இந்தக் 'காவிரித் திருநதியிலே கருணை மாமுகில் துயில்வதையும்' பாட மறக்கவில்லை. சுமார் பதினைந்து அடி நீளமுள்ள கருவறையை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான் ஆதிசேடன். அவனது பாயலில் அழகாகக் கண்வளருகிறான் அரங்கநாதன். இரண்டு திருக்கரங்களே அவனுக்கு. ஒரு கை தலையைத் தாங்க மற்றொரு கை முழங்கால் வரை நீண்டு கிடக்கிறது. ஆதிசேடனும், அரங்கநாதனும் சுதை உருவில் உருவானவர்களே.

ஆதிசேடன் பொன் முலாம் பூசிய தகடுகளால் பொதியப்பட்டிருக்கிறான். அரங்கனோ நல்ல கன்னங்கரிய வடிவினனாகத் தைலக் காப்புக்குள்ளே புதையுண்டு கிடக்கிறான், அகன்ற மார்பிலே முத்தாரம், கௌஸ்துபம், வனமாலை எல்லாம் புரள்கின்றன. தலையிலே நீண்டுயர்ந்த கிரீடம் அணி செய்கிறது. இத்தனை கோலத்துடன் இருக்கும் அவன் தனிமையை நாடியிருக்கிறான். என்றும் இணைபிரியாத துணைவியரான ஸ்ரீதேவி பூதேவிகளுக்குக் கூட அங்கு இடம் இல்லை. நாபிக் கமலத்திலிருந்து பிரம்மாவும் எழவில்லை. இதற்கெல்லாம் ஈடு செய்யவே அந்தக் கிடந்த கோலத்தின் முன்பு நின்ற கோலத்தில் செப்புச் சிலை விடிவில் அழகிய மணவாளன் இரண்டு அணங்குகளோடு தங்க மஞ்சத்தில் நின்று கொண்டிருக்கிறான். இந்த உத்சவரே வெளியில் எல்லாம் எழுந்தருளிப் பக்தர்களுக்கு எல்லாம் காட்சி தருகிறார். இருவரையும் கண்குளிரத் தரிசித்தபின் வெளிவந்து பிரகாரங்களை யெல்லாம் சுற்றிக் கொண்டு மேலே நடக்கவேணும்.

இந்த அரங்கநாதன், தன்னை ஆராதித்து வந்த ராமனைப்போல் ஏகபத்னி விரதன் அல்ல. எப்போதும் உள்ள ஸ்ரீதேவி பூதேவியோடு இன்னும் ஐந்து பேர்கள் இவனது மனைவியர். அதனால்தானோ என்னவோ தனிமையை விரும்பிக் கருவறையில் ஒருவரையுமே நுழைய விடாமல் கதவடைத்துக் கொண்டிருக்கிறான். எத்தனை மனைவியர் இருந்தாலும் இவனது பட்டமகிஷி ஸ்ரீரங்கநாயகிதான். இவள் தனிக் கோயிலில் குடியிருக்கிறாள். ரங்கநாதரைத் தரிசித்த பின் கொஞ்சம் சுற்றி வளைத்து நடந்தே இவள் கோயிலுக்குச் செல்லவேணும், செல்லும் வழியிலே ஒரு மண்டபம். அங்குதான் கம்பனது ராமாயண அரங்கேற்றம் நடக்கும்போது சித்திரத்தில் தீட்டிய நரசிம்மமே தலையசைத்துச் சிரக்கம்பம் செய்து பாராட்டியது என்பது வரலாறு. அந்த மண்படத்தை எல்லாம் கடத்தே ஸ்ரீரங்கநாயகி சந்நிதிக்கு வரவேணும். அவள் படிதாண்டாப் பத்தினி. அவள் உத்சவகாலங்களில் கூடத் தன் கோயிலை விட்டு வெளியே வருவதில்லை.

ஸ்ரீரங்கநாதர்தான் அவளைத் தேடிக்கொண்டு அவள் கோயிலுக்கு வருகிறார். ரங்கநாயகிக்கு அடுத்த படியாக ரங்கநாதருக்கு உகந்த மனைவி உறையூர் கமலவல்லிதான், உறையூரிலிருந்து அரசாண்ட நந்தசோழன் மகள் அவள். தாமரை ஓடையிலே கமல மலர்களோடு மலராகப் பிறந்தவள் இக்கமலவல்லி. இவள் அரங்நாதனிடம் ஆராத காதல் கொள்கிறாள். அதிரூப சுந்தரியான இவளை மணக்க இந்த ரங்கநாதருக்குக் கசக்கவா செய்யும்? அவளையும் மணந்து கொள்கிறான். அதன்பின் அரங்கத்திலும் உறையூரிலுமாக இருந்து வாழ்கிறான். இக்கமல்வல்லியைப் போலவே சேரமன்னன் குலசேகரப் பெருமானது மகள் சேரகுலவல்லியும் ரங்நாதனையே காதலித்து மணந்து கொள்கிறாள்.

இவர்களைத் தலிர, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பெரியாழ்வார் திருமகளாக அவதரித்த ஆண்டாளும் இந்த ரங்கநாதனிடத்திலே காதல் கொள்கிறாள். அவளுக்கும் இந்த அரங்கநாதன் ரங்கமன்னாராகவே சேவை சாதித்து அவளையும் மணந்து கொள்கிறான். இவர்கள் எல்லாம் போகட்டும்; டில்லி சுல்தானின் மகள் ஒருத்தியின் உள்ளத்திலும் அல்லவா இவன் காதல் விதை விதைக்கிறான்! முகமதியர்கள் இந்த நாட்டைப் படையெடுத்து இங்குள்ள கோயில் கோபுரங்களை யெல்லாம் இடித்துத் தரை மட்டமாக்கியதெல்லாம் சரித்திரம் கூறும் உண்மை. இப்படிப் படையெடுத்த பாதுஷா ஒருவன், ஸ்ரீ ரங்கம் வரை வந்து இங்குள்ள பல விக்கிரகங்களை எடுத்துச் சென்றிருக்கிறான். விக்கிரகங்களோடு விக்கிரமாக அழகிய மணவாளனுமே சென்றிருக்கிறான். ஆனால் பாதுஷாவின் மகள் இந்த அழகிய. மணவாளனின் அழகில் ஈடுபட்டு அவனை மட்டும் தன் அந்தப்புரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறாள். அவன் அழகுக்கு அடிமையாகியிருக் கிறாள்.

பின்னர் ஸ்ரீ ரங்கத்து ஸ்தலத்தார் பாதுவாவை அணுகி அவன் எடுத்துச் சென்ற அழகிய மணவாளைைனத் திரும்பத் தரக் கேட்டிருக்கிறார்கள். பாதுஷாவும் தன் மகள் தூங்கும் சமயம் அறிந்து அழகிய மணவாளனை அவர்களிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான். விழித்தெழுந்த பாதுஷாவின் மகள் தன் அழகிய மணவாளனைக் காணாது, அவனைத் தேடி ஸ்ரீரங்கத்துக்கு ஓடி வந்திருக்கிறாள். இத்தனை பிரேமை கொண்ட மங்கையை இந்த அரங்கநாதன் பின்னர் மணந்து கொண்டதில் வியப்பில்லை. இந்தப் பாதுஷா மகளே துலுக்க நாச்சியார் என்ற பெயரிலே, ஸ்ரீரங்கம் கோயிலுக்குள்ளேயே தனிக் கோயிலில் இருக்கிறாள். சித்திர உருவிலே இக்கோயிலில் உறையும் பெருமாளுக்கு நிவேதனம் ரொட்டியும் வெண்ணெயும், அக்காரடிசிலும் அரவணையும் அந்தப் பாதுஷா மகளுக்கு ஒத்துக் கொள்ளாதே. பின்னர் அவள் கொடுப்பதைத்தானே இவன் ஏற்றுக் கொள்ள வேணும். இதற்கென்றே மாமனாராகிய பாதுஷா கொற நாட்டில் இரண்டு கிராமங்களையே சீதனமாக வேறு கொடுத்திருக்கிறராம்.

இப்படி யெல்லாம் மனைவியர் பலரைச் சேர்த்துக் கொண்டிருக்கிறாரே, இதுசரிதானா என்று ஒரு கேள்வி, கண்ணனாகக் கோகுலத்தில் அவதரித்தபோதும் இவர் எண்ணிறந்த கோபியரது காதலனாக வாழ்ந்திருக்கிறாரே. பெருமாளைப் பதியாக உடைய உயிர்களாகிய பக்தர்கள் எல்லோரும் எப்போதுமே தவங்கிடக்கிறார்கள். அருளாளனான பெருமானும் அவர்களை யெல்லாம் தன் காதலிகளாக ஏற்றுக் கொள்ளத் தயங்குவதில்லை, இந்தத் தத்துவ உண்மையை விளக்குவதற்கே இத்தனை திருவிளையாடல்கள் என்று மட்டும் நாம் தெரிந்து கொண்டால் உண்மை என்ன என்று விளங்கும் அல்லவா?

அரங்கனையும் அவனது துணைவியரையும் தரிசித்து விட்டுத் திரும்பி வெளியே வரும்போது கலை அன்பர்கள் கண்டுகளிக்க வேண்டிய சிறிய கோயில் ஒன்று இங்கு உண்டு. அதுதான் ரங்க மண்டபத்தை அடுத்த வேணுகோபாலன் சந்நிதி. அங்கே உள்ள வேணுகோபாலனை விட அவனைச் சுற்றி நிற்கும் கோபியர்கள் அழகு அழகான சிற்ப வடிவத்தினர். அரங்கத்து அரவணையான் கோயில் சரித்திரத்தைப்பற்றி எளிதாகச் சொல்லிவிட முடியும் என்று தோன்றவில்லை. ராமானுஜர், கோயில் நிர்வாகத்தைச் சீர்செய்திருக்கிறார். மணவாள மாமுனிகள் கைங்கர்யங்கள் பல செய்திருக்கிறார். விஜயநகர சாம்ராஜ்ய நாயக்க மன்னர்களே கோயிலை விரிவாகக் கட்டிப் பல நிபந்தங்கள் ஏற்படுத்திச் சிறந்த பணியைச் செய்திருக்கிறார்கள்.

இந்த அரங்கத்து அரவணையானை ஆழ்வார்கள் எல்லோரும் பாடியிருக்கிறார்கள். பதின்மர் பாடிய பாண்பெருமாள் என்ற புகழ் இவர் ஒருவருக்குத்தானே.

பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண்

அச்சுதா அமரர் ஏறே!

ஆயர்தம் கொழுந்தே என்னும்

இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகம் ஆளும்

அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகருளானே

என்ற தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரது பாடலை எத்தனை தரம் வேண்டுமானாலும் பாடிப் பாடிப் பரவலாமே. 'திருவரங்கப் பெருநகருள், தெண்நீர்ப் பொன்னி திரைக்கையால் அடிவருடப் பள்ளிகொள்ளும் கருமணியைக் கோமளத்தைக் கண்டு களிக்கும்' குவசேகரது பக்தி எவரது பக்திக்குக் குறைந்தது? அரங்கத்து இன்னமுதரது குழல் அழகிலும், வாய் அழசிலும் தன்னை இழந்து நின்றவள் ஆண்டாள், பெரியாழ்வாரோ,

எய்ப்பு என்னை வந்து நலியும்போது

அங்கு ஏதும் நான் உன்னை

நினைக்கமாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி

வைத்தேன், அரங்கத்து அரவணைப்

பள்ளியானே!

என்று முன்கூட்டியே எச்சரிக்கை செய்து வைத்து முக்தி பெற வழி சொல்லுகிறார். அரங்கனும் இவர்களுக்கெல்லாம் அருள் செய்தது போல், நமக்கெல்லாம் அருள் செய்யத் தவறமாட்டார் என்று உறுதியோடு ஒரு பக்தர் கூறுகிறார் !

நாவுண்டு, நீ உண்டு, நாமம் தரித்தோதப் பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு

வண்டுறங்கு சோலை மதில் அரங்கத்தே உலகை

உண்டு உறங்குவான் ஒருவன் உண்டு.

23. ஆனைக்கா அகிலாண்டேசுவரி

ராமனுக்கும் சீதைக்கும் மிதிலையில் திருமணம் நடக்கிறது. அவர்களது மணக்கோலத்தைப் பாடுகிறான் கவிச்சக்கரவர்த்தி கம்பன்.

மன்றலின் வந்து மணித் தவிசு ஏறி

வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து

இன்துணை அன்னமும் எய்தி இருந்தார்

ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தே

என்பது பாட்டு. இந்தப் பாட்டைப் படிக்கும் போதெல்லாம் என் உள்ளத்தில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. எப்படி ராமன் சீதை இருவரும் போகமும் யோகமும் ஒன்றிய நிலையில் இருந்தார்கள்? எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் எண்ணுவேன் நான். இந்தச் சந்தேகம் என் உள்ளத்தில் மட்டுமே எழவில்லை. அன்னை பார்வதிக்குமே எழுந்திருக்கிறது. ஆகவே யோகம் போகம் அவற்றின் உண்மைகளைப்பற்றி ஒரு சந்தேகத்தையே கிளப்பி, அதற்கு விடையை இறைவனிடமே கேட்டிருக்கிறாள். அவரும் உடனே அதற்கு விடை சொல்லவில்லை. 'நீ பூலோகம் சென்று அங்குள்ள ஞானத்தலத்தை அடைந்து தவஞ்செய். அங்கு நான் வந்து உனக்கு உபதேசம் செய்து உன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைக்கிறேன்' என்று உத்தரவு போட்டிருக்கிறார். இறைவன் கட்டளைப்படியே ஞானபூமியை நாடிவருகிறாள் அன்னை. காவிரிக்கரையிலே முனிவர்களெல்லாம் இருந்து தவம் செய்யும் ஒரு சோலையைக் கண்டு அங்கு தவம் செய்ய முனைகிறாள். இன்பத்தைத் தருகின்ற முத்தியின் தன்மையைத் தெரிந்து கொள்ள வந்தவள் ஆதலின் இனிய சுவை உடைய நீரையே திரட்டி லிங்கத் திருவுரு அமைத்துக் கொள்கிறாள்.

அந்த அப்புலிங்கத்துக்கே அபிஷேகம் முதலியன செய்து ஆராதனை பண்ணுகிறாள். இவள் தன் தவத்துக்கு இரங்கி அண்ணல் இந்தக் காவிற்கு வந்து சந்தேகத்துக்கு விளக்கம் கூறுகிறார். அவர் கூறும் விளக்கம் இதுதான். 'உலகங்கள் எல்லாம் என் அருள் வழியே நடப்பன. நடனத்தைப் பிறருக்குக் கற்பிக்க விரும்பும் நடன ஆசிரியன் முதலில் தானே நடனம் ஆடிக்காட்டுதல் போல, உலக மக்களுக்கு யோக நிலையையும் போக நிலையையும் பயிற்றுவிக்க நானே நடத்திக் காட்ட வேண்டியிருக்கிறது. உலகில் உள்ள ஆன்மாக்களெல்லாம் போகத்தை நுகர உன்னை மணந்து தழுவிப் போசியாகவும், அதே சமயத்தில்யோகசித்தி பெற்றுயோகியாகவும் மாறுகிறேன்' என்கிறார். ஆம்! யோக நிலையில் இருக்கும் இறைவன் போகியாகவும் காட்சி தரும் ரகசியம் இதுதான் என்று அன்னை அறிகிறாள். இந்த விளக்கத்தை அன்னை அகிலாண்டேசுவரி பெற்ற இடம் தான் திரு ஆனைக்கா. அந்த ஆனைக்காவுக்கே செல்கிறோம் நாம் இன்று.

ஆனைக்கா காவேரிக்கரையில், காவேரிக்கும் கொள்ளிடத்துக்கும் இடையில் உள்ள தீவில் உள்ள தலம். திருச்சி ஜங்ஷனிலிருந்து வடக்கே நாலுமைல் தொலைவில் இருக்கிறது. ஸ்ரீரங்கம் ஸ்டேஷனில் இறங்கி, கிழக்கே நாலு பர்லாங்கு நடந்தால் கோயிலுக்கு வந்துசேரலாம். ஆனைக்காவை, திருவானைக்காவல் என்றும் திருவானைக் கோயில் என்றும் மக்களும் நெடுஞ்சாலைப் பொறியாளர்களும் அழைப்பார்கள், ஆனைக்கா என்றால் யானை வதிந்த காடு என்றுதான் பொருள். அதனாலேயே அத்தலத்தை கஜாரண்யம் என்றும் புராணங்கள் கூறும். இத்தலத்துக்கு ஏன் ஆனைக்கா என்று பெயர் வந்தது என்று தெரியத் தலவரலாற்றைக் கொஞ்சம் படிக்கவேணும்.

கைலையிலுள்ள இரண்டு கணநாதர்கள் ஏதோ சாபம் பெற்ற காரணத்தால் யானையாகவும் சிலந்தியாகவும் வந்து பிறக்கிறார்கள் இந்த ஞானபூமியிலே. இருவரும் அன்னை அகிலாண்டேசுவரி ஸ்தாபித்த அப்புலிங்கத்தை வழிபடுகிறார்கள். லிங்கமோ ஒரு நல்ல நாவல் மரத்தடியில் காவிரிக்கரையில் இருக்கிறது. ஆற்றுத் தண்ணீரைத் தன் துதிக்கையாலே மொண்டு கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கிறது யானை. மரத்தின் தழைகள் இறைவன் மேல் விழாதவாறு நூல் பந்தல் இடுகிறது சிலந்தி. சிலந்திக்கு யானைமீது கோபம். ஆதலால் சிலந்தி யானையின் துதிக்கையுள் நுழைந்து கபாலம் வரை ஏறி யானையைக் கடிக்கிறது. யானை வேதனை தாங்கமாட்டாமல் தன் துதிக்கையை ஓங்கி அடிக்கிறது. அதனால் சிலந்தியும் மடிகிறது. யானையும் துடிதுடித்து விழுந்து இறக்கிறது.

ஆனால் இவர்கள் இருவரது பக்தியையும் மெச்சி, இவர்களுக்கு முத்தி அளிக்கிறான் இறைவன். முத்தி பெற்ற யானையின் ஞாபகார்த்தமாகவே இத்தலம் ஆனைக்கா ஆகிறது. சிலந்தி மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாகப் பிறக்கிறது. அந்தப் பிறவியிலும் யானை மீது கொண்டிருந்த பகையை மறக்காமல், யானை ஏற இயலாத மாடக் கோயில்களாகவே எழுபது கட்டுகிறான் சோழமன்னன், எழுபது கோயில்களில் படி ஏற இயலாத யானையும் ஒரு கோயிலைத் தன்னுடையதாக -ஆனைக்காவாகவே - ஆக்கிக் கொள்கிறது. இத்தனையும் கூறுகிறார் நாவுக்கரர்.

சிலந்தியும் ஆனைக்காவில்

திருநிழல் பந்தல் செய்து

உலந்து அவண் இறந்தபோதே

கோச் செங்கணானுமாக

கலந்தநீர் காவிரிசூழ்

சோணாட்டு சோழர் தங்கள்

குலந்தனில் பிறப்பித்திட்டார்

குறுக்கை வீரட்டனாரே

என்று திருக்குறுக்கை என்னும் தலத்தில் பாடுகிறார்.

இனி, கோயிலுள் செல்ல முனையலாம். நல்ல தென்னஞ்சோலைக்கு நடுவே கோயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குக் கீழ்ப்புறத்திலே உள்ள ஊர்களின் பெயரே, திரு வளர்ச்சோலை, உத்தமர்சேரி என்று. இந்தப் பெயர்களைச் சொல்லும்போதே நா இனிக்கும். இந்தக் கோயிலுக்கு ஐந்து பிரகாரங்கள். மேற்கேயிருந்து கிழக்கு நோக்கி வரும்போது முதல் இரண்டு பிராகாரங்களிலும் உள்ள கோபுர வாயிலைக் கடந்துதான் வரவேண்டும். அந்தப் பிரகாரங்களில் மக்கள் குடியிருக்கும் வீடுகள் நிறைந்திருக்கும். மூன்றாம் பிரகாரத்திலிருந்து தான் கோயில் மண்டபங்கள் ஆரம்பமாகின்றன, என்றாலும், நான்காம் பிரகாரத்து மதில்தான் பெரிய மதில். இந்த மதிலையே திருநீற்று மதில் என்று கூறுகிறார்கள்.

விசாரித்தால் இம்மதில் கட்ட மன்னன் முனைந்த போது, சித்தர் ஒருவர் தோன்றி வேலை செய்தவர்களுக்கெல்லாம் திருநீற்றையே கூலியாகக் கொடுத்திருக்கிறார். அத்திரு நீறே பின்னர் ஒவ்வொருவர் கையிலும் பொன்னாக மாறியிருக்கிறது. இப்போதும் கோயிலில் நமக்குக் கொடுக்கும் திருநீறெல்லாம் பொன்னாக மாறுகிறது என்று மட்டும் ஆகிவிட்டால் கோயிலுக்கு வருவார் தொகையே பெருகிவிடாதா?).

ஏகபாத திரிமூர்த்தி

இந்த மதிலை எல்லாம் கடந்து வந்தால் வட பக்கம் ஆயிரக்கால் மண்டபத்தைக் காண்போம். அதற்கு எதிரே ஒரு பெரிய மண்டபத்தை அடுத்துத் திரி மூர்த்திகள் கோயில். அங்கு சென்று படி ஏறினால் ஓர் அதிசயம் காத்து நிற்கும், ஆம்! பிரும்மா, விஷ்ணு, சிவன் எல்லோருமே லிங்கத் திருவுருவிலே தனித் தனி கோயிலில் இருப்பார்கள். இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். அதனையே ஏகபாத திரிமூர்த்தி என்று கூறுவார்கள். இத்திரிமூர்த்திகளையும் வணங்கியபின் துவஜஸ்தம்ப மண்டபத்துக்கு வருவோம். அந்த மண்டபம் பிரும் மாண்டமான மண்டபம். அம்மண்டபத்தை நான்கு பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தூணுக்கும் மேல் எட்டுச் சிங்கங்கள் மண்டபத்தையே தாங்கி நிற்கும். மேலும் இத்தூண்களில் எல்லாம் தலவரலாறுகளைத் தெரிவிக்கிற சிற்ப வடிவங்கள் உண்டு. இவற்றையெல்லாம் கண்டு அதிசயித்த பின்னரே அடுத்த சோமாஸ்கந்த மண்டபத்துக்குச் சென்று அந்தப் பிரகாரத்தைச் சுற்ற வேணும். அப்படிச் சுற்றி வரும்போது கீழ்ப்புறம் கருவறை மேல் கட்டப்பட்ட விமானத்தை ஒட்டி வெண்நாவல் மரம் ஒன்று விரிந்து பரந்திருக்கும். இதனை இரும்பு அழி போட்டுப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள்.

இங்கு சம்பு முனிவர் இருந்து தவம் செய்திருக்கிறார். இந்த மரத்தின் அடியிலேயே இறைவன் வதிவது காரணமாக இத்தலத்துக்கே சம்புகேசுவரம் என்ற பெயரும் நிலைத்திருக்கிறது. இதனையும் கடந்து மேற்கு நோக்கி வந்தே கருவறை வாயில் செல்லவேணும். இறைவன் மேற்கே பார்க்க லிங்க வடிவில் மிகத் தாழ்ந்த இடத்தில் இருக்கிறார். அவர் சந்நிதிக்குமுன் ஒன்பது துவாரங்கள் கொண்ட ஒரு கல் பலகணி உண்டு. அதன் வழியாகத் தரிசித்த பின்னரே தென்பக்கம் உள்ள வாயில் வழியாக அந்தராளம் செல்லவேணும். அங்குநான்கைந்து பேர்கள் நிற்பதே மிக்க சிரமம். ஆதலால் முன் சென்றவர் எல்லாம் வெளிவரும் வரையில் காந்திருந்தே பின் சென்று வணங்குதல் கூடும். இங்கோ எப்போதும் நீர் பொங்கிக் கொண்டேயிருக்கும். அர்ச்சகரும் தண்ணீரை எடுத்து வெளியே கொட்டிக் கொண்டே யிருப்பார். அன்னை பிடித்தமைத்த அப்புலிங்கம் அல்லவா, அங்கு நீர் பொங்கி வழிவதில் வியப்பு என்ன? இப்படி அப்பு வடிவிலும், லிங்க வடிவிலும் உள்ள இறைவனை வணங்கி வெளியே வரும் போது,

தென்னானைக் காவானை தேனைப்

பாலை, செழுநீர்த்திரளைச்

சென்று ஆடினேனே

என்று நாவுக்கரசரோடு சேர்ந்து நாம் பாடிக்கொண்டே வரலாம்.

இனி நாம் கிழக்கு நோக்கி நிற்கும் அகிலாண்டேசுவரி சந்நிதியை நோக்கி விரையலாம். இத்தலத்திலேயே இறைவனாம் அப்பு லிங்கத்தைவிட அருள் பாலிக்கும் பெருமை உடையவள் அகிலாண்டநாயகிதான். அவள் 'அகிலாண்டகோடி ஈன்ற அன்னையே என்றாலும் பின்னரும் கன்னி என மறை பேசும் ஆனந்த ரூப மயில்.' ஆதலால் மற்றப் பிரகாரங்களை எல்லாம் கடந்து அவள் சந்நிதிக்கே வந்து சேரலாம். அவளை எதிர்நோக்கி இருப்பவர் சங்கராச்சாரிய சுவாமிகள் ஸ்தாபித்த விநாயகர். அன்னையின் வடிவம் நல்ல கம்பீரமான வடிவம், கருணை பொழிகின்ற திருமுகம். வணங்கும் அன்பருக்கெல்லாம் அட்டமா சித்திகளை அருளுகின்றவள். இவ்வன்னையைத் தாயுமானவர் வணங்கியிருக்கிறார், பாடியிருக்கிறார்.

அட்டசித்தி நல் அன்பருக்கு அருள

விருது கட்டிய பொன் அன்னமே!

அண்டகோடி புகழ்காவை வாழும்

அகிலாண்டநாயகி என் அம்மையே

என்பது அவரது பாட்டு. இந்த அம்மையே இறைவனைப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததாக வரலாறு. அதனால் இன்றும் உச்சிக்காலப் பூஜையின்போது இந்த அம்மன் கோயில் அர்ச்சகர் பெண் வேடந்தரித்து இறைவனைப் பூஜிக்கிறாராம்! ஆம், திருவாரூரில் அர்ச்சகர் தேவேந்திரனைப்போல ராஜகம்பீர உடை அணிந்து தியாகராஜரைப் பூஜிப்பது போல. இந்த அப்புலிங்கம் என்னும் அமுதலிங்கரும், அன்னை அகிலாண்டநாயகியும் தங்கள் சொத்தைப் பராமரித்துக் கொள்வதிலே மிக்க அக்கறை உடையவர்கள் என்றும் தெரிகிறது. அதற்கு ஒரு சிறு கதையும் இருக்கிறது. அக்காலத்தே உறையூரிலிருந்து அரசாண்ட சோழ மன்னன் ஒருவன், இந்த அன்னையையும் அத்தனையும் வழிபட வந்திருக்கிறான் தன் மனைவியுடன். மனைவியின் கழுத்தில் கிடந்த முத்தாரத்தை இறைவனுக்கு அணிந்தால் அழகாயிருக்குமே என்று எண்ணியிருக்கிறான்.

இந்த எண்ணத்தோடேயே வருகிற வழியில் காவிரியில் நீராடி இருக்கிறார்கள் அரசனும் அரசியும், குளித்து எழுந்தால் அரசி கழுத்தில் இருந்த முத்தாரத்தைக் காணோம். கழுத்திலிருந்து நழுவி ஆற்றில் விழுந்திருக்கிறது. தேடிப்பார்க்கிறான் அரசன்; கிடைக்கவில்லை. பின்னர் சோர்வுடனேயே கோயிலுக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். சந்நிதியில் வந்து சேர்ந்தபோது அங்கு இறைவனுக்குத் திருமஞ்சனம் ஆட்டுகிற நேரமாக இருந்திருக்கிறது. காவிரியிலிருந்து குடத்தில் நீர் கொண்டுவந்து திருமுழுக்கு நடக்கிறது. என்ன அதிசயம்! அந்தக் குடத்துக்குள்ளிருந்து முத்தாரம் இறைவன் முடிமேவேயே விழுகிறது. மன்னனும் அரசியும் இறைவனது அளப்பரிய கருணையை வியக்கிறார்கள்.

வழக்கமாக எல்லாச் சிவன் கோயில்களிலும் நடக்கும் திருவிழாக்கள் இக்கோயிலில் உண்டு. இத்துடன் பங்குனி மாதம் சித்திரை நாளில் பஞ்சப்பிரகார உற்சவம் என்று ஒன்று சிறப்பாக நடைபெறும். அன்று ஒரு வேடிக்கை; இறைவன் பெண் வேடத்தோடும் இறைவி ஆண் வேடத்தோடும் திருவீதி உலா வருவர். ஏன் இந்த வேடம் இவர்கள் அணிகிறார்கள் என்பதற்கு ஒரு புராண வரலாறு உண்டு, பிரமன் தான் படைத்த பெண்ணொருத்தியின் அழகிலே மயங்கி நிறை அழிகின்றான். அதனால் படைத்தல் தொழிலே செய்ய முடியாமல் திணறுகிறான். தன் தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்புப் பெறத் தவம் செய்கிறான். தவத்துக்கு இரங்கிய இறைவன் இறைவியோடு பிரமன் முன்பு எழுந்தருள்கிற போதுதான் இப்படி வேடம் தரித்து வந்திருக்கிறார்கள். ஆம். இறைவனுக்கு ஒரு சந்தேகம், இந்தப் பிரமன் இறைவியின் அழகைக் கண்டு மோகித்தால் என்ன செய்வது என்று. இந்த வேடத்தில் இவர்களைக் கண்ட பிரமன் வெட்கித் தலைகுனிகிறான். பின்னர் அவன் விரும்பிய வண்ணமே அருள் பெறுகிறான். இந்தச் சம்பவத்தை நினைவூட்டவே இந்தப் பஞ்சப் பிரகார உற்சவம், அதில் இந்த வேடம்!

இத்தலத்துக்கு சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரும் வந்திருக்கிறார்கள். சம்பந்தர் இத்தலத்தில் இருந்து கொண்டே கயிலாயம், மயேந்திரம், ஆரூர் முதலிய தலங்களையும் நினைத்திருக்கிறார்; பாடியிருக்கிறார்.

மண்ணது உண்ட அரிமலரோன் காணா வெண்ணாவல் விரும்பு மயேந்திராரும்

கண்ணது ஓங்கிய கயிலையாரும்

அண்ணல் ஆரூரர் ஆதி ஆனைக்காவே

என்பது அவரது தேவாரம். செழு நீர்த்திரளாம் அப்பு லிங்கரை அப்பர் பாடியதைத்தான் முன்பே கேட்டிருக்கிறோமே. சுந்தரரும்,

அறையும் பூம்புனல் ஆனைக்

காவுடை ஆதியை, நாளும்

இறைவன் என்று அடி சேர்வார்

எம்மை ஆளுடையாரே.

என்று பாடிப் பரவியிருக்கிறார். இப்பாடல்களை யெல்லாம் பாடிக்கொண்டே கோயிலை வலம் வரலாம்; வெளியேறியும் வரலாம்.

இக்கோயிலில் நூற்று ஐம்பத்து நான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகளை ஆராய்ந்து இந்தக் கோயிலைக் கட்டியவர்கள், நித்திய நைமித்தியங்களுக்கும், நந்தா விளக்குகளுக்கும் நிபந்தங்கள் ஏற்படுத்தியவர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். பிற்காலத்து சோழர், பாண்டியர், ஹொய்சலர், விஜயநகர மதுரை நாயக்க மன்னர்களைப் பற்றி எல்லாம் பலப்பல கல்வெட்டுக்கள், ஹொய்சல மன்னர்களைப் பற்றிய கல்வெட்டுகள் அதிகம். கடந்த 1960-ம் வருஷம் சிறப்பாகக் குடமுழுக்கு விழா நடந்திருக்கிறது. காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்ய சுவாமிகளே இருந்து நடத்தி வைத்திருக்கிறார்கள்.